Tuesday, 25 July 2017

கணக்கொன்றே எஞ்சியிருக்கிறது



உணவென்றெழுதினால்
தீராத பசி போல
அன்பென்று
மௌனத்தில்
அடைக்காப்பதும்
சம்பிரதாய
வறட்டு வார்த்தைகளை
பிய்த்தெரிவதும்
துன்பியலேயன்றி
அன்பாகுமோ
பூமியிலே?!

வெடித்து கிடக்கும்
செம்மண் பூமியில்
தூறிவிட்டுச் செல்லும்
மழைபோலே
காலமெல்லாம்
எதிர்நோக்கும் உறவிடம்
கடிகாரத்தின் கணக்கில்
வார்த்தைப் பிச்சையிட்டு
உறவாடுதல்
காதலாகுமோ
மனிதப்பிறவியிலே?!
காற்றில் ஈரமிருக்கிறது
சிதை எரிக்கும்
தணலில்
கருணையிருக்கிறது
மழையில்
தாய்மையிருக்கிறது
இந்த மாந்தர்களின்
மனதில்தான்
எல்லாவற்றிற்கும்
கணக்கொன்றே
எஞ்சியிருக்கிறது,
சுணக்கமாய்
கூட்டிக்கழித்தல்
மட்டுமே
சுவைக்கூட்டுமோ
இவ்வாழ்க்கையிலே?!

அன்பெனப்படுவது


Image may contain: one or more people

#அன்பெனப்படுவது
ஓயாத கடலலைப்போல,
தீராத காற்றைப்போல
மாறாத தாய்மையைப்போல
பிறழாத வாக்குப்போல
எப்போதும்
உடன் நிற்பது
அதனினும் மேலாய்
அன்பெனப்படுவது
எப்போதும்
அன்பாய் இருப்பது,
வேறொன்றுமில்லை
எடுத்துக் கூற!!!

மெல்லிய_மனங்கள்





கடன் கட்ட
மறுத்து ஏய்த்தவன்
பிறரை வார்த்தையால்
காயப்படுத்திச் சென்றவன்
அன்பென்ற பெயரில்
வஞ்சித்து சென்றவன்
அனிச்சம் போன்ற மனதை
சவால் விட்டுக் கொன்றவன்
பிறர் பொருளை
வழிப்பறி செய்தவன்
ஒர் உயிரை
இரக்கமின்றி களவாடியவன்
ஓர் உடலை
விருப்பமின்றி சூறையாடியவன்
வாய்கூசாமல் பிறர் மீது
அவதூறு பரப்புவன்
என்று
அத்தனை நல்ல மனிதர்களும்
மிகுந்த திறமைசாலிகளாய்
கொஞ்சமும் உறுத்தலின்றி
வாழ்க்கையை
அதன் எல்லா சுவைகளுடனும்
வாழ்வாங்கு வாழ
எங்கோ திறமையற்று
இவர்களிடம்
ஏமாந்த கூட்டம் மட்டும்
அவ்வப்போது தாளாமல்
செத்து வீழ்கிறது!!!

அகப்பட்டவனிடம் காட்டுகிறோம்

தோழியொருவர், காணொளியொன்றை அனுப்பியிருந்தார், அதில் ஒரு பெண்மணி இரு பக்கமும் இரு குழந்தைகளை (ஆண் மற்றும் பெண்), ஆறு ஏழு வயது இருக்கலாம், கையில் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க முயற்சி செய்கிறார், இதில் சிறுவன் சட்டென்று அம்மாவின் கையை விட்டுவிட்டு கொஞ்சம் முன்னே செல்ல, வழக்கம் போல சாலையில் கண்மண் தெரியாமல் பறக்கும் ஏதோ ஒரு இரு சக்கர வாகனமொன்று அவனை மோதி நெடுந்தூரம் இழுத்துச்செல்கிறது, பைக்கில் வந்த இளைஞர்கள் நிற்காமல் சென்றுவிடுகிறார்கள், அவர்கள் சிறுவனை மோதியபின்னும் கூட வேகத்தை குறைக்கவில்லை! ஒருவேளை உங்களில் யாரேனும் ஒருவர் அந்தக்காணொளியை பார்க்க நேர்ந்திருந்தால் அந்த சிறுவன் எப்படியிருக்கிறான் என்று தயவுசெய்து விசாரித்துச் சொல்லுங்கள்!
அவ்வப்போது எந்த விபரமும் இல்லாமல் விபத்துக்குறித்த காணொளிகள் இப்படி வந்துவிழும்போது மனம் கனத்துப்போகிறது!

நம்முடைய மக்களுக்கு ஊழலைப்பொறுத்துக்கொள்ள முடியும், காவல்துறையின் அடக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் சாலையில் செல்லும்போது சிக்னலுக்காக காத்திருக்கும் அந்த சில நிமிடங்களை மட்டும் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்பதுதான் காலக்கொடுமை!

சமீபத்தில் ஒரு இளைஞனிடம் வேலைக்காக நேர்காணல் செய்தபோது, வண்டியோட்டும்போது ஹெல்மெட் அணிவது பற்றிக்கேட்க, "ஹெல்மெட் இருக்கு ஆனா அதைப்போட்டா தலைமுடி கொட்டிடும்" என்றான், கேள்விகள் தொடர்ந்தபோது, "நான் ஹெல்மெட் அணியாமல் வண்டியொட்டினால், விபத்து ஏற்பட்டால் காவல்துறைக்கு என்ன நஷ்டம்" என்றான், பல இளைஞர்களின் அறிவு இந்த அளவில்தான் இருக்கிறது, ஒரு சாலையில் பைக்கின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டாலும் மோதிய வாகனத்தின் உரிமையாளாரோ ஓட்டுனரோ படும் அவஸ்தைகளும், காவல்துறையின் கெடுபிடிகளும், விபத்து நடந்தால் பெரிய வாகனமே காரணம் என்ற ஓட்டைச் சட்டமும், திமுதிமுவென்று விபத்தை வியாபாராமாக்கும் கூட்டமும், பெற்றவர்களின் ஆற்றாமையும் என்று எதுவுமே இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு பொருட்டில்லை!

பல வருடங்களுக்கு முன்பு மீர்சாகிப்பேட்டையின் நெரிசலான சாலையில் ஒரு கல்லூரி பேருந்து மெதுவே சென்று கொண்டிருக்க, முழுப்போதையில் ஒரு முதியவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு குறுக்கே வர, பேருந்து சட்டென்று நின்றுவிட்டாலும், பேருந்தின் மீது மோதியதில், சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவரின் மண்டையுடைந்து, மூளை வெளியே வந்து வீழ்ந்தது, சாலையோரத்தில் நின்றிருந்த என் கண்முன்னே நடந்த இந்த விபத்தின் பாதிப்பிலிருந்து நான் மீண்டு வர சில வருடங்களானது!

விபத்து, அது நிகழும்போது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது, விபத்தினால் சாலையில் நெரிசல், ஆம்புலன்ஸ் முன்னேற முடியாமல் யாருக்கோ பாதிப்பு, ஏதோ ஒரு அவசரத்துக்காக, தேவைக்காக சாலையில் நிற்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு பாதிப்பை ஒரு விபத்து ஏற்படுத்திவிட்டுதான் செல்கிறது!
ரியாலிட்டி ஷோக்களில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும், யார் எப்படி என்று அலசி ஆராயும் நமக்கு, சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வோ, எச்சரிக்கையுணர்வோ இல்லை, குழந்தைகள் நம் கையைப் பிடித்துக்கொள்வதற்கு பதில் குழந்தைகளின் கையை சாலையை கடக்கும்போது நாம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச எச்சரிக்கையுணர்வு இருந்திருந்தால் கூட அந்தச் சிறுவனுக்கு விபத்து ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை!

இன்று அலுவலகம் வரும் வழியில், மந்தைவெளியில் ஒரு கார் திரும்ப, தவறான வழியில் குறுக்கே வந்த பைக் இளைஞன் காரை மோதி கீழே விழுந்து, பின்பு அதே வேகத்தில் எழுந்து அந்த ஓட்டுனரை கைநீட்டி அடித்தான், செய்த தவறை உணராமல் ஒரு முதியவருடன் மல்லுக்கு நின்ற அந்த வீரம் புல்லரிக்க வைத்துவிட்டது, அதிகார மையத்திடம் காட்ட முடியாத காழ்ப்பை, வெறுப்பை, எதிர்ப்புக்குரலையெல்லாம் நாம் அகப்பட்டவனிடம் காட்டுகிறோம், வேறென்ன சொல்வது?!

கீச்சுக்கள்

சம்பாதிக்கும் பணத்தில் வரிகள் பிடிங்கி, எல்லாமும் "வெள்ளைப்பணமாய்" இருந்தாலும், அதை எடுத்து செலவு செய்வதற்கு காரணமும் அதற்கு ஆதாரமும் கேட்கிறது வங்கிகள்! இது சுதந்திர இந்தியா இல்லை, மக்களை சுரண்டிக்கொண்டேயிருக்கிற இந்தியா!
எத்தனை வரிகள், எதற்கெல்லாம் வரிகள்? இத்தனை வரிகள் இத்தனை கெடுபிடிகள் செய்தும் இந்தியா அதே இந்தியாவாக, தமிழ்நாடு அதே நாசமாய் நலிந்துக்கொண்டிருக்கும் நாடாகத்தானே இருக்கிறது? மக்களுக்கு மட்டுமே இரும்பின் பிடி, மற்றப்படி அதே ஊழல் அதிகாரிகள், அதே அமைச்சர்கள், அதே அடக்குமுறைகள்!
அரசர்கள் பரவாயில்லை என்று பிரிட்டிஷ் ஆட்சி நினைக்க வைத்தது, பிரிட்டிஷ் அரசே பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைக்க வைத்தது, காங்கிரஸே தேவலைடா சாமீ என்று பாஜக நினைக்க வைக்கிறது, மற்றப்படி இந்தியாவிற்கு இன்னமும் விடியலில்லை!

********************

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, சாலை விபத்தில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம், இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தால் தமிழ்நாட்டின் முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் செயல்படுவார்கள்?
#Tamilnadu #Chennai #Roadsafety

**********************

சாதியின், மதத்தின் பெயரில் கண்மூடித்தனமாக மோசமான ஆட்சியாளர்களை ஆதரிப்பதென்பது, நான்கு ஒற்றுமையான மாடுகளை, சிங்கத்தின் இரைக்காக, தனக்காக மிஞ்சும் எச்சிலுக்காக வஞ்சித்து ஏமாற்றிய நரியின் கதை போல் மக்களுக்கு ஏமாற்றமாக முடிந்துவிடும்! மக்களே மாடுகள், அவர்களை பிரிக்கும் நரியின் சூழ்ச்சியே சாதியும் மதமும் அதைச்சார்ந்த கலவரங்களும், இதில் உண்டு கொழிக்கும் கிழட்டுச் சிங்கங்களே அரசியல்வாதிகள்!

***********************

மௌனத்தை புரிந்துகொள்ள
பேரன்பு வேண்டும்!


*******************

நயன்தாரா நகைக்கடைக்கோ வேறு எதற்கோ வந்தபோது கூடிய கூட்டத்தை கண்டு, இந்த சினிமா மோகம் இருக்கிறதே என்று பொங்கியவர்களையும் கூட டிவி நிகழ்ச்சி விட்டுவைக்கவில்லை என்பதுதான் காலத்தின் அழகிய முரண், ஒரு தேர்ந்த டிவி வியாபாரி நடிக நடிகயரை கொண்டு மக்களை எளிதில் வளைப்பது போலவே அத்தனை எளிதில் நம்மை வளைத்துவிடுகிறார்கள்/விடுவார்கள் ஆட்சியாளர்கள்! சில முரண்கள் நகைப்புக்குரியது!

********************


டிவி சீரியல்களில், ரியாலிட்டி ஷோக்களில் "மூழ்கிய" வீடுகளில் உள்ள குழந்தைகள் நல்லதை கற்பதுமில்லை, ஆரோக்கிய உணவுகளை உண்பதும் இல்லை!

**********************




Count your blessings than disappointments, I keep telling myself, until I see the GST charges! Sucking people's blood!

*********************



நாட்டின் வளத்தை காப்பாற்ற மக்கள் போராடும்போது அவர்களை கைது செய்யும் அரசென்பது உண்மையில் தேச விரோத அரசு!

***********************

மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம், நாக்கு!
சிலர் அதைக்கொண்டு உயிர்ப்பிக்கிறார்கள்
ஒருசிலர் அதைக்கொண்டு நேசிப்பவர்களின் உயிரை எடுத்துவிடுகிறார்கள்!


****************************

கமல்

தெர்மாக்கோலில் அணைக்கட்டி
இருக்கும் அணைகளை மண்மேடாக்கி
ஆறுகளில் மணல் கொள்ளையடித்து
ஆறுகளை பட்டா போட்டு
பாலில் கலப்படம் செய்து
நாடு முழுக்க சாராயக்கடைகளைத் திறந்து
துண்டு பிரசுரங்கள் தருபவரை
குண்டர் சட்டத்தில் தள்ளி
வறட்சிக் காலத்தில் மரங்கள் நட்டு
மழைக்காலத்தில் நீரை சாலைகளில் வீணாக்கி
மழைவெள்ளத்தை திறந்து மக்களை பிணமாக்கி
தண்ணீரைப் பெறாமல் திறந்துவிடாமல்
விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி
மாணவர்களை நீட் தேர்வில் ஏமாற்றி
விளைநிலங்களை மத்திய அரசுக்கு தாரைவார்த்து
தமிழகத்தை கூடங்குளம் மீத்தேன் என்று கூறுப்போட்டு
முன்னாள் முதல்வர் சிறையில் இருந்தபோது கண்ணீர்விட்டு
அவரே மர்மமாய் இறந்தபோது கூவத்தூரில் கூத்தடித்து
கோவையில் மதக் கலவரங்கள் உண்டாக்கி
தலித் என்று வேட்பாளர்களை சிறுமைப்படுத்தி
இன்னமும் பின்தங்கிய கிராமம் போல் நகர சாலைகளை நரகமாக்கி
ஓரே வரி என்று பொய்சொல்லி பகல் கொள்ளையடித்து
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாக
உலகம் சுற்றி
இப்படி எந்த உள்ளூர் சாதனைகளையும்
உலக சாதனைகளையும்
நம் அரசியல்வாதிகளுக்கு இணையாய்
நிகழ்த்தி
பொதுச்சேவை செய்யாத கமலுக்கு
நம் தமிழக மற்றும் மத்திய
தலைவர்களைப் பற்றி பேச
எந்த தகுதியும் இல்லையென்று
வன்மையாக கண்டித்து
வெளிநடப்புச் செய்கிறேன்!

ஆழ்கடல்_மனது



உனக்கு
ஆற்றொண கோபம்
வரும்
எனக்கு
தாங்க முடியா ஆற்றாமை
பெருகும்


உன் காரியங்களுக்காக
எனக்களித்த நேரத்தை
நீ தவறுவதுண்டு
நான் உனக்காக
காரியங்களைத்
தள்ளிப்போடுவதுண்டு

உன் பணிகளுக்கிடையே
நீ என்னை மறந்துபோவாய்
என் அயர்ச்சியிலும்
நான் உன் நினைவில்
தொலைந்து போவேன்
அதையும் நீ
அப்படியாயென்று
எளிதாய் கடந்துபோவாய்

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை
துவண்டுப்போகும்
என் மனதைப் பற்றிய
கவலையின்றி
நீ என்மீது கட்டவிழ்த்ததுண்டு
துவண்டுப்போய் நின்றாலும்
உனக்கு புன்னகையைப்
பரிசளிக்க
நான் வேதனைகளை
மறைத்ததுண்டு

நான் வாக்கு தவறியதில்லை
உனக்கு என் ஆசைகளைப்
பற்றிய எந்த நினைவுமில்லை

உன் நலத்தில்
நான் உன் தாதி
என் நலமறிய விழையா
நீ என் காதல்
என்பதே ஒரு விநோத சேதி

மனதால் இணைந்த
மணத்தில் வீசும் என் சாமரம்
ஒருநாள் ஓய்ந்துப்போகும்போது
நெடுமரமாய் என் கல்லறையில்
நின்று நீ என்ன செய்வாய்
என்பதே பெரும்
கவலையெனக்கு!
#ஆழ்கடல்_மனது

மதிமயக்கம்

அந்தக் கவிஞரின்
பக்கத்தில் அதைப்படித்தவர்கள்
முதலிரண்டு வரியைப்
படித்துவிட்டு
அற்புதம் என்று
பதிலுரைத்தார்கள்
தலைப்பை மட்டும்
படித்தவர்கள்
உங்களைப் போல
வருமா என்று புகழாரம்
சூட்டினார்கள்
கடைசி பத்தியின் கீழே
வேறு பெயரை கண்டவர்கள்
ஓஹோ இது யார்
என்றார்கள்
அது யாரோ ஒரு
பெண்ணென்று அறிந்ததும்
வெண்பாவின் இரண்டாவது
வரிகள் சரியில்லை
என்றார்கள்
இன்னும் சிலர்
இதை நீங்கள் திருத்தம்
செய்யலாம் கவிஞரே என்றார்கள்
மேலும் சிலர்
இதைக் கட்டுரையாய்
சமைத்திருக்கலாம்
கதையாய் மாற்றியிருக்கலாம்
என்று ஆலோசனைகள்
கூறினார்கள்
கவிதை சமைத்தவள்
இறுதியாய் வந்து நின்றாள்
"வெண்பாவின் தொனியென்று
கழுத்தை முறிக்க முடியாது
புகழாரம் கேட்க
பாலினத்தை மாற்றமுடியாது
ஒரு சார்பு பொய்யான
நேர்மறை கூற்றுக்காக
பிறர் தோளின் பின்னே
ஒளிய முடியாது
இது என் குழந்தை
இதன் உறுப்புகளைச் சிதைக்கும்
நோக்கமில்லையென்று
நன்றி நவின்று
விலகிச் சென்றாள்!

Monday, 17 July 2017

ரஞ்சனின்_சக்தி

Image may contain: one or more people

நான் சக்தி
அவன் ரஞ்சன்
பிள்ளைப் பருவத்தில்
தொடங்கி
உடன் பயின்ற
மற்ற நண்பர்களின்
திருமணம் வரையும்
தொடர்ந்த நட்பில்
ஒருநாள் அவன்
காணாமல் போனான்

உணவுன்னும் வேளையில்
எனக்குமுன்பே
என் உணவை தின்று தீர்ப்பவன்
"சாரிடா, காலையிலிருந்து
ஏதும் சாப்பிடலே"
என்று அவன் தலைகுனியும்
வேளையில்
"அச்சச்சோ இருடா"
என்று
பக்கத்தில் இருக்கும்
மகேஷின் உணவை
பிடுங்கி பங்குவைக்க
"நீ எனக்கு அம்மாடீ"
என்று
கலங்கி நின்றவன்,
ஒருநாள்
காணாமல் போனான்!

பாடம் படிக்கும்
வேளையில்
சாலையில்
நடந்து செல்லும்
நேரத்தில்
விழிகளால் துரத்தியவன்
மழைப்பெய்த நாளொன்றில்
அவனின் புத்தகப்பையை
என் தலைக்கு அணையாக
தந்தவன்
"அடேய் லூசு,
புக் நனையும்டா"
என்ற தருணத்தில்
"உன் கண்ணுல மழைநீர்
இறங்குதுடா சக்தி
என்னமோ அதைப்பார்க்க
எனக்குச் சக்தியில்லை"
என்றவன்
அன்பில் கரைந்தவன்
அவன் அன்பில்
காலத்தை
உறைய வைத்தவன்
உன்னதமான நண்பன்
ஒருநாள்
காணாமல் போனான்

பிறந்தநாளில்
நண்பர்கள் புடைசூழ
சந்தோஷ் காதணி தர
கவிதா புத்தகம் தர
நீலா அழகியதொரு
கவிதைப்புனைய
ஏதும் தராமல்
என் விழிகளையே
நோக்கியிருந்தான்
"அட ஏன்டா கிறுக்கா
உனக்கென்ன ஆச்சு?"
என்ற மணிக்கு
"ஒன்னுமில்லடா ஏதோ
தலைசுத்துற மாதிரியிருக்கு"
என்ற காரணங்களை
அடுக்கி தப்பித்தவன்
மாலையில் வீடுதேடி
வந்திருந்தான்
அவன் கைகளில்
வயலெட் பூக்கள்
வயலெட் நிறத்தில்
தலைக்கச்சுகளும்
கைப்பையும் மற்றும்
எல்லாமும்,
பிடித்த நிறம்
இவனுக்குத் தெரிந்தப்படி
எந்த ஐயத்தில்
நானிருக்க
தேடித்தேடி வாங்கிய
பொருட்களை
என் மடியில் வைத்தான்
"என்ன ஆச்சு உனக்கு
எதுக்கு இவ்வளவு,
இது ஜஸ்ட் என்
பிறந்தநாள் ரஞ்சன்"
என்று மறுத்துரைக்க
"ஹாப்பிப் பர்த்டே சக்தி"
என்று பெயரையே
உருப்போட்டுக்
கொண்டிருந்தவன்
ஏதும் சொல்லாமல்
நேரம் போக்கி
சட்டென்று ஒர் நொடியில்
கரங்கள் பிடித்து
விழி நோக்கி
"யாரையும் நம்பாதே சக்தி"
என்றவன்
ஏன் சொன்னான்
என்று பின்னாளில்
நான் அறியும்முன்பே
ஒருநாள்
காணாமல் போனான்

அத்தனைபேரும்
அரட்டையடிக்க
சில மாணவிகள்
அவன் பின்னே திரிய
எதிலும் சேராதவன்
அவன்
விழிகளை மட்டும்
என் முதுகில் பதித்திருந்தவன்
குறுகுறுப்பில்
திரும்பிப் பார்க்கும்
வேளைகளிலெல்லாம்
புன்னகையைப் பரிசளித்தவன்
பரீட்சை முடிந்து
இருவரும் வேறுவேறு
கல்லூரிச் சேர்ந்தாலும்
தினம்தோறும் சாலையிலோ
வீட்டிலேயோ சந்தித்தவன்
பார்வையில் வெளிச்சத்தை
தந்தவன்
என் நண்பன் ரஞ்சன்
ஒருநாள்
காணாமல் போனான்

காலம் புரட்டிப்போட்ட
திசையில்
வாழ்க்கைச்செல்ல
நான் ரஞ்சனை
மறந்திருந்தேன்
அவரவரவர் திருமணம்
முடிந்து
நண்பர்கள் புடைசூழ
எத்தனை அழைப்புகள்
வந்தாலும்
சந்திக்கும் வாய்ப்புகளை
அறவே மறுத்தவன்
ஆமாம்
ரஞ்சன்
காணாமலே போனான்

முதல் கரு வயிற்றில்
உதிக்க
மருந்துவமனையின்
சோதனைக்கூடத்தில்
காத்திருந்த வேளையில்
ஒரு கரம் தோள் தொட்டது
"நீ சக்திதானே?"
என்ற குரலில்
ரஞ்சனின் பரிவு கலந்திருந்தது
செவிலியாய் நின்ற
அவனது சகோதரியின்
சாயலில்
நான் மறந்திருந்தவன்
நினைவடுக்கில் மீண்டுவந்தான்
அவன் நலம் விழைய
"அவன் இன்னமும்
கல்யாணம் செஞ்சுக்கலே"
"எந்தப் பொண்ணைப்
பார்த்தாலும் அவபேர்
சக்தின்னு இருக்கணுமாம்!"
வரிசையாய் அடுக்கியவரின்
விழிகளில் இருந்தது
கோபமோ ஆதங்கமோ
நினைவடுக்கில்
எழும்பி நின்றவன்
மனதில் ராட்டினங்களை
சுற்றிச் சென்றிருந்தான்

எப்படியோ அவன்
கைபேசி எண் பெற்று
தன் முயற்சியில்
சற்றும் மனந் தளாராத
விக்கிரமாதித்தன் போல
அவனைத் திருமணம்
செய்ய வற்புறுத்திய
என் துன்புறுத்தலில்
அவன் திருமணம்
நடந்துவிட்ட செய்திவந்தது
அழைப்பனுப்பாத
அவனை
நினைவடுக்கில்
காணாமல்
போனாவனென்றே
சொல்லி வைத்தேன்

ஆண்டுகள் பல கழிந்து
ஒருநாள்
அழைத்திருந்தான்
"சக்தி" என்றழைத்து
ஊமையானான்
"ஏன் நீ சொல்லல?"
என்ற எனக்கு
"எதைச் சொல்லவில்லை?"
என்று அவன் கேட்டுவிடும்
அபாயமுணர்ந்து
"எப்படி இருக்கே,
உன் மனைவி எப்படியிருக்காங்க?"
நான் கேள்வியின் திசைமாற்ற
"சக்தி" என்றழைத்தான்
மறுபடியும்
"என்னடா?" என்று கோபம் கூட்ட
"அவபேரும் சக்திதாண்டி!"
என்றான்
"ஏண்டா!"
எனக் குரலுடைய
"மனைவி பேர் சக்திதான்
ஆனா நான்
சக்தின்னு கூப்பிடுறது
என் சக்தியைத்தான்!"
அழைப்பைத் துண்டித்த
காணாமல் போனவனால்
நான் முற்றிலும்
தொலைந்துப்போனேன்!

கண்ணீரில் காணாமல்
போகும் கதையாவும்
காற்றில் மிதக்கிறது
ரஞ்சனின் சக்தியும்
சக்தியின் ரஞ்சனும்
போல
காலம் பல கதைகளை
தன்னுள் ரகசியமாய்
பொதித்து வைத்திருக்கிறது
நான் சக்தி
அவன் ரஞ்சன்
காணாமல் போனவன்
பெயரைத் திருடிக்கொண்டு
போனதில்
நான் பெயரற்றவளாகி
சக்தியற்று நின்றேன்!

கனவுகளின் பெட்டகம்

நினைவில் தேக்கிவைத்த
சிலநாள்
நிதர்சனங்களை
நிரந்தர கனவுகளாக்கி
வாழ்கிறேன்
கனவுகளின் பெட்டகம்
கரைகின்றது
அன்பே
விரைந்தோடி வா!!!

வரி

வரிகளால் இந்த தேசம்
அரசியல்வாதிகளை
செல்வந்தர்களாகவும்
மக்களை
பிச்சைக்காரர்களாகவும்
மாற்றுகிறது!

ஹிட்லர்_எனும்_தொடர்கதை











உலகம்
ஏதோ ஒரு
மூலையில்
ஒரு ஹிட்லரை
தோற்றுவித்து
கொண்டேயிருக்கிறது

அப்போதெல்லாம்
அந்த தேசத்தில்
மக்கள் அதிகமாய்
வரி கட்டுவார்கள்
தன் வீட்டு சன்னல்
உடைபடும்வரை
போராட மாட்டார்கள்
புறம் பேசுவார்கள்
பெண்களை இகழ்வார்கள்
சாதியில் பிரிந்திருப்பார்கள்
சுயசாதியிலும்
காழ்ப்புணர்ச்சி
கொண்டிருப்பார்கள்
மதமென்று மதம்
பிடித்திருப்பார்கள்
மக்களிடம்
அதிகாரிகள்
அமைச்சர்கள்
ஆணவமாய் பேசுவார்கள்
மக்கள் சுயமரியாதை
இழப்பார்கள்
விவசாயத்தை நசுக்குவார்கள்
மரங்களை வெட்டுவார்கள்
ஒரு சார்பு மக்கள்
கேளிக்கைகளில்
மூழ்கிக்கிடப்பார்கள்
மறுசார்பு மக்கள்
போராட்டங்களில்
செத்து வீழ்வார்கள்
தனிமனித ஆராதனைகளை
பெருக்குவார்கள்
குற்றங்களுக்கு அஞ்சமாட்டார்கள்
பூமியில் எதையும்
மிச்சம் வைக்க மாட்டார்கள்
மழை மேகங்களை
விரட்டிவிடுவார்கள்

மந்தைகளின் கூட்டத்தில்
ஹிட்லர்கள் மிதப்பாய்
திரியும்
அந்தக் கால கட்டத்தில்
மழையில் முளைத்த
சில காளான்கள்
அப்போது பூத்த பிஞ்சுகள்
மாற்றத்திற்கான
புரட்சி செய்யலாம்
பூமியை புணரமைக்கலாம்
அப்போதெல்லாம்
ஹிட்லர்களுக்கு
விஷம் குடிக்கும்
அவகாசம் கூட
கிடைக்காமல் போகலாம்!

#ஹிட்லர்_எனும்_தொடர்கதை

வேடிக்கை_மனிதர்கள்

உட்லண்ட்ஸின்
லெதர் ஷூ அணிந்து
மனைவிக்கு
காஞ்சிபுரத்தில்
பட்டுகள் வாங்கி
தொழுவத்தில்
மடிவற்றிய மாட்டை
அடிமாடாக விற்றுவிட்டு
அவ்வப்போது
காட்லீவர் ஆயில்
மாத்திரைகள்
சாப்பிட்டு வந்த
அம்பி
மாட்டுக்கறி சாப்பிடாதே
என்று கோஷமிட்டு
வந்தான்
தொழுவத்தில்
எஞ்சியிருந்த மாடுகள்
அம்மா என்றழைத்தன
மனிதர்களின் அலப்பறைகளைத்
தாளமுடியாமல்!

நீ_நான்_மழை

Image may contain: outdoor
"ஒவ்வொரு
மழைத்துளியிலும்
ஒரு கவிதைத்
தோன்றுகிறதே
ஒருவேளை
உன்னை சந்தித்த
முதல்நாளும்
மழைப்பெய்ததாலா?"
என்கிறேன் நான்

"ஒவ்வொரு
மழைநாளும்
எனக்கு சிலிர்ப்பூட்டும்
மழையெய்யும்
போதெல்லாம்
குழந்தையின்
குதூகலத்தில்
நீ என்னை
இறுக அணைத்து
முத்தமிடுவாயே!"
என்கிறாய் நீ
"குளிர்ச்சியில்
செம்மைபடருமா?!"
என்று கன்னம்
தொட்டு
வார்த்தைகளின்
வாசல் அடைக்கிறாய்
மௌனம் சூழ்ந்த
எல்லா
மழைநாளிலும்
நீயும் நானும்
கரைகிறோம்
வெளியே வெட்கமாய்
கரைகிறது மழையும்!
#நீ_நான்_மழை

நமக்கு_அரசியல்_வேண்டாம்!

பயணப்படும் பகுதி நிலம் என்றாலும் மலை என்றாலும், சமீபத்தில் பார்த்தது வறண்ட நிலையைத்தான், பெரும் மழையை அருட்பெரும் கொடையாக கருதி, நீர்நிலைகளை பராமரித்துக் காப்பாற்றாமல் அதை மரணங்களின் ஓலமாக மாற்றிய தமிழக அரசு, இப்போது யானைகள் நீர் தேடி அலையும் காட்சிகளையும், பறவைகள் உணவின்றி மடியும் காட்சிகளையும், மனிதர்கள் தண்ணீர் லாரிகளின் பின்னே ஓடும் காட்சிகளையும் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த அவர்களின் சாதனைகளாக மாற்றிக்கொள்ளலாம்!

விவசாயம் நலிந்துப்போய் கிடப்பதும், உணவுகள் கலப்பட உணவாக மலிந்து கொட்டிக்கிடப்பதும், இருக்கும் எஞ்சிய தஞ்சைப் போன்ற நிலப்பகுதிகளிலும் ஏனைய தமிழக இடங்களிலும் மத்திய அரசு அபாயகரமான அளவில் நீர்வலம் அழித்து, உறிஞ்சி, மக்களின், பிற உயிர்களின் வாழ்வாதாரம் அழிக்க, மீத்தேன் என்றும், நியூட்ரினோக்கள் என்றும், அணுவுலைகள் என்றும் பெயர் சூட்டி செயல்படுத்தும் திட்டங்களுக்கு, ஒத்துழைத்த, அனுமதி அளித்த திராவிட கட்சிகளின் மீது தாங்கொண்ணா கோபமே மேலிடுகிறது!

இப்போதும் கூட பதவிக்காக, சேர்த்து வைத்த சொத்துக்களுக்காக இன்னமும் இவைகளை ஒழிக்காமல் மக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்து மக்களையே விரோதிகளென காட்சியமைக்கும் செயல்களை எல்லாம் காணும்போது வரலாற்றில் ஹிட்லர்கள் எல்லாம் தோற்றுப்போய் விடுவார்கள் என்றே தோன்றுகிறது!

மழை பெய்யும் போதெல்லாம் அதை வீணாக்கி, பெருகும் ஆறுகளை குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிக்காமல் நீர் வளங்களை சேதமாக்கும் முதலாளிகளும், அரசும், மக்களும் இந்தப் பூமியில் தண்டிக்கப்பட வேண்டிய கடும் குற்றவாளிகள்!

கடும் வெயிலில், கொட்டகை அமைத்து, தன் மீது வெயில் படாமல் நிழலில் நின்றுகொண்டு ஒரு முதல்வர் மரம் நட அதை கைதட்டி பார்க்கும் இந்த மக்களின் அறியாமையின் பரிசு, ஓட்டுக்கு காசாக, இலவசப் பொருட்களாக திரும்பி வருகிறது, ஆட்சியாளார்களின் கேலிக்கூத்துக்கள் தொடர அதுவே வழிவகை செய்கிறது!

ஒரு ஆற்றின் நீரை இரு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத கையாலாகாத மத்திய அரசு தான், ஒரே வரி என்று சில மாநிலங்களில் அதிக வரி பிடுங்கி பிற மாநிலங்களுக்கு ஈந்து கண்துடைப்புச் செய்கிறது!
அரசு எந்தத்துறையில் இருந்தாலும் சேவை சரியில்லை, மக்கள் எத்தனை வரி கட்டினாலும் நாட்டின் நிர்வாகம் செம்மைப்படுவதில்லை, டிஜிட்டல் இந்தியா என்று முழங்கினாலும் மக்களின் அறியாமை நீங்கவில்லை, சுவச் பாரத் என்று புதிய இந்தியா பிறந்தது என்றாலும் இன்னமும் கழிவறை இல்லாமல் இருக்கும் கிராமங்கள், நகரப் பகுதிகள் அப்படியே இருக்கின்றன, பிரதமரின் உடைகள் ஒளிர்ந்தாலும், ஏழைகளுக்கு கோவணமே மிச்சமிருக்கிறது, நாட்டின் மந்திரிகளும் பிரதமரும் ஊர் சுற்றிக்கொண்டு, உலகம் சுற்றிக்கொண்டு இருந்தாலும்கூட உள்ளூர் மக்களுக்கு அதே ஓட்டைப் பேருந்துகளும்,
அழுக்கடைந்த ரயில்களும்தான் வாய்த்திருக்கிறது இந்தப் புதிய இந்தியாவில்!

சில நூறு ஆட்சியாளர்கள், கோடிக்கணக்கான மக்களை இன்னமும் ஏய்த்துப் பிழைப்பதற்கு யார் காரணம்? பிரதானக் காரணம் மக்கள் பணிகளில் "அரசு வேலை" என்ற கெத்துக்காட்டி அமர்ந்திருக்கும் அதிகாரிகள், அந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத அரசு ஊழியர்கள், தங்களின் வேலைகள் நடக்க இவர்களுக்கு பணம் தரும் மக்களும் தானே?!

இந்த தேசத்தில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள், ஒன்று எந்த பிரச்சனைக்கும் ஆட்படாதவர்கள், அதாவது அரசால், ஊழியர்களால் பெரிய அளவில் பாதிக்கபடாதவர்கள், அல்லது மற்றவர்களுக்கு வாரி இறைக்க வேண்டிய சில்லறைகள் இவர்களுக்கு பொருட்டில்லை, இவர்கள் எப்போதும் மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் நேர்மறைச் சிந்தனைப் பற்றி போதிப்பார்கள், நாட்டுக்காக "பிறர்" தங்களுடைய வளங்களை, உயிர்களைத் தந்தால் என்ன என்று திண்ணை நியாயம் பேசுவார்கள், பெரும்பாலும் கட்சி, சாதிச் சார்புடையவர்கள், தங்களுடையப் பிள்ளைகள் படித்து எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் சராசரிகளும் கூட!

இரண்டாவது, பிரச்சனைக்கு ஆட்படுபவர்கள், போராடி பார்ப்பார்கள் அல்லது போராடித் தோற்பார்கள், அவ்வப்போது குரல் கொடுத்து, பெரும்பாலும் ஒதுங்கி, வெறுத்துப்போய் கிடப்பவர்கள்!
மூன்றாவது, தனக்கென்றாலும், பிறர்க்கென்றாலும் முன்னே நின்று போராடுபவர்கள், நன்றியைக்கூட எதிர்ப்பார்க்காமல் நதியைப் போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள் (நிச்சயம். அரசியல்வாதிகள் அல்ல)
மக்கள் இத்தனை வகையாய் பிரிந்தாலும் ஆட்சியாளர்கள் இரண்டே வகை, நேர்மையாளர்கள், ஆட்சி செய்பவர்கள், ஆமாம் இன்னமும் இந்தியாவில், தமிழ்நாட்டில் நேர்மையாளர்கள் ஆட்சி செய்யவில்லை, அது நிகழாத வரை மக்கள் மந்தையாகிய நமக்கு சினிமா போதும், சாராயம் போதும், சாதி போதும், மதம் போதும், எங்கோ யானைகள் செத்து மடிந்தால், யாரின் பிள்ளையோ வெட்டப்பட்டால், யாரின் பெண்ணோ வன்புணர்ச்சி செய்யப்பட்டால், எந்த மரமோ கருகினால், எந்த மலையோ குடையப்பட்டால், எந்த ஆதிவாசியோ துரத்தப்பட்டால், யாரோ ஊழல் செய்தால், எது நடந்தால் நமக்கென்ன? நமக்கு அரசியல் வேண்டாம்!

தோழன்

செம்மஞ்சள் பூக்கள்
குளித்திருக்க
பூனைகள் சாளரங்களில்
ஒண்டியிருக்க
புற்கள் நம்பிக்கையோடு
எட்டிப்பார்க்க
சாலைகளில்
நேற்றைய கசடுகள்
நீங்கியிருக்க
காய்ந்திருந்த
ஒற்றைப்பனையில்
நனைதலைப் பற்றிய
கவலையின்றி
அந்தக் காகம்
மட்டும் அமர்ந்து
கதைத்துக்கொண்டிருந்தது
அதே மழையில்!
காகத்தின் நம்பிக்கையில்
பனைத் துளிர்க்கலாம்
நாளை!

பெரும்_காட்சிப்பிழை_மனிதர்கள்

சில காட்சிகள்
காட்சி ஒன்று:

திண்டிவனம் அல்லது திண்டுக்கல், இரண்டில் ஏதோ ஒன்று, ஒரு விபத்து நடக்கிறது, நல்ல போதையில் இரு இளைஞர்கள் சாலையின் தடுப்பில் இடித்துக்கொண்டு விழுகிறார்கள். அவ்வழியே போகும் இருவர், அவர்களை அரசு மருத்துவமனைக்குத் தங்களுடைய காரில் அழைத்துச்செல்கிறார்கள். ஒருவருக்கு மண்டையுடைந்து ரத்தம் கொட்டுகிறது, இன்னொருவருக்குச் சில சிராய்ப்புகள். அரசாங்க மருத்துவர் வருகிறார், உதவியாளரை அழைத்து மண்டையுடைந்தவனுக்குத் தையல் போட சொல்கிறார், அழைத்து வந்தவர்கள் பதறுகிறார்கள், அவனுக்குப் பிற சோதனைகள் தேவையில்லையா என்று கேட்க, தன் கோட் பாக்கெட்டில் வைத்த கையை எடுக்காத மருத்துவர், "இம் இருக்கட்டும், அதெல்லாம் இங்கே கிடையாது, சாயந்திரம் வரைக்கும் பார்க்கலாம்" என்கிறார்!

காட்சி இரண்டு

ஒரு கால் டாக்ஸி ஓட்டுநர், இரவு பதினோரு மணி அளவில், அலுவலகத்தில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துச்சென்று வியாசர்பாடியில் அவரின் வீட்டில் விட்டு திரும்புகிறார், நடுவில் போதையில் நான்கு இளைஞர்கள் அவரை மறிக்கிறார்கள், கையில் இருக்கும் காசைக் கொடுத்துவிட்டுப் போகும்படி மிரட்ட, ஒருவன் அவற்றின் வாழ்வின் ஆதாரமான செல் போனை எடுத்துக்கொள்கிறான், இரவு பணிக்கு அப்போது தான் வந்ததாகச் சொல்லும் ஓட்டுநர் தன்னிடம் நூறு ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், அதுவும் தன் உணவுக்காக என்று சொல்ல, அந்த இளைஞர்கள் அதைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், பின் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அவர் கைபேசியை வாங்கிக்கொண்டு வெளியில் வர, அங்கே ரோந்தில் இருக்கும் காவலர்களிடம் புகார் அளிக்கிறார், "யோவ் உன்னே ஏன் அந்தச் சந்தில் போய் இறக்கி விடச் சொன்னது, ரோட்டியிலேயே இறக்கி விட வேண்டியதுதானே, நூறு ரூபாயோட போச்சுன்னு நினைச்சிட்டுப் போய்யா வேலைய பார்த்துட்டு" என்கிறார் காவல்துறை அதிகாரி

காட்சி மூன்று:

கொடைக்கானல் அல்லது ஊட்டி, ஏதோ ஓர் ஊராட்சி என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் தன் நிலத்துக்குப் பட்டாவுக்காக அந்த அலுவலகத்துக்குச் செல்கிறார், படித்தவர், நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் மாற்றிப் போட்டு அமர்கிறார். உடன் ஓர் ஊழியர் வந்து இப்படியெல்லாம் கால் மேல் கால் போட்டு இங்கே அமரக்கூடாது என்கிறார், சிறிய அளவில் வாக்குவாதம் வருகிறது. அவரை அனுப்பிவிட்டு, பத்துநாளுக்கு மேல் வருமாறு பணித்துவிட, பட்டா வேண்டி வந்தவருக்கு, சில ஆவணங்கள் இல்லாததால் பட்டா வழங்க முடியவில்லை என்று கடிதம் வருகிறது, மீண்டும் அதே அலுவலகத்துக்குச் செல்கிறார், குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது, தான் எல்லா ஆவணங்களைக் கொடுத்ததும் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்கிறார், பின் உரிய புகாரின் விசாரிப்புக்கு பிறகு பல நாட்கள் கழித்துப் பட்டா வருகிறது அதைத் தொடர்ந்து மற்ற ஆவணங்கள் மறுக்கப்படுகிறது, அதே நடையாய் நடக்கிறார், அவரின் கால் மேல் கால் போட்ட குறை அவரைத் துரத்துகிறது!

காட்சி நான்கு:

ஏதோ ஒரு நகரத்தின் காவல்துறை, சாலையில் நடந்துக்கொண்டிருந்த போது ஒருவன் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துத் தன் கைப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகப் பெண் ஒருவர் புகாரளிக்க, "நீ ஏன் அங்கே போனே, உனக்கு என்ன வேலை, எங்க தாலிய இருக்கவே வருவீங்க, வீட்டுல இருக்கறதுக்கென்ன?" என்கிறார் ஓர் அதிகாரி

காட்சி ஐந்து:

தன் பெண்ணைக் காணோம் என்று ஒருவர் புகாரளிக்க, "யோவ் எவன் கூடான்ன ஓடி இருக்கப் போது, போய்ப் பாரு" எங்க, "சார் என் புள்ளைக்குப் பத்து வயசுதாங்க ஆவுது" என்று தகப்பன் பதற, "ஆமா, பெத்துப்போட்டுட்டு சரியாய் பார்த்துக்காம எங்க உசுரே வாங்குங்க", இதற்கு மேல் வேண்டாம், எடிட் செய்துகொள்வோம்.

காட்சி ஆறு:

சாலையில் குழந்தையை மயக்கத்தில் ஆழ்த்தி ஒரு கும்பல் பிச்சையெடுக்கிறது, ஒரு பெண் சைல்ட் ஹெல்ப் லைனுக்குப் போன் செய்கிறார், வருகிறேன் வருகிறேன் என்பவர்கள் இரண்டு மணிநேரமாகியும் வரவில்லை, அடுத்து விடாது அங்கிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கிறார், "அட போம்மா வேலைய பார்த்துகிட்டு.." என்று அலட்சியப்படுத்துகிறது காவல்துறை
இந்தக் காட்சிகள் நிஜமாகவோ கற்பனையாகவோ நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உருவகம் செய்து கொள்ளலாம். எல்லா இடத்திலும் நிறைந்திருப்பது மனிதர்கள்தான், ஒருவனுக்குச் சாலையில் அடிபடும்போது, விடாது ஹாரன் அடித்து மனிதர்கள் முன்னேறிச் செல்கிறார்கள், ஒரு பெண்ணை ஒருவன் கையைப் பிடித்து இழுக்கும்போது, சிலர் வேடிக்கைப் பார்க்கிறார்கள், சிலர் வீடியோவில் பதிகிறார்கள், ஒரு காவல்துறை ஒருவனிடம் அடாவடியாக நடந்துக்கொள்ளும் போது பலர் வேடிக்கைப் பார்க்கிறார்கள், ஒரு அலுவலகம் ஒருவனை மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தும்போது, சிலர் பரிதாப்படுகிறார்கள், சிலர் தள்ளி நிற்கிறார்கள், ஒரு குழந்தையோ, ஒரு பெண்ணோ காணாமல் போனாலோ, கடத்தப்பட்டாலோ எல்லோரும் முன்தீர்மானம் அவளின் ஒழுக்கத்தில் நிறைவேற்றுகிறார்கள், பெற்றவர்களுக்கு அறிவுரைச் சொல்கிறார்கள், ஒரு குழந்தை எங்கோ வதைக்கப்படும்போது அதையும் வீடியோவில் பதிகிறார்கள், எல்லோரும் இங்கே கலாச்சாரப் போதனை "மட்டும்" செய்கிறார்கள், :கருணையைச் சிறிது கடனுக்குத் தருகிறார்கள்"!

"யார் கையிலோ குழந்தைகள், யார் கையிலோ அதிகாரம், யார் கையிலோ ஆட்சி, யார் கையிலோ நம் ஒழுக்கத்தின் தீர்மானங்கள், யார் கையிலோ நம் பாதுகாப்பு!" - இப்படி இருக்கும் இந்தத் தேசத்தில், எப்போது நாம் ஒவ்வொருவரும் "மனிதராக" மாறுகிறோமோ, அப்போது உடுத்தியிருக்கும் குர்த்தா பிரதமர் என்றும், கட்டியிருக்கும் வேட்டி முதலமைச்சர் என்றும், அணிந்திருக்கும் சீருடை அரசுப் பணி என்றும் நினைக்கும் அதிகாரத்தின் பிம்பங்கள் உடையும், "கருணை என்ற ஒன்றும்" "மனிதம் என்ற ஒன்றும்" விழிக்கும், அதுவரை அடுத்தவரின் குருதியும் வேர்வையும் நமக்கு வேடிக்கைதான்!

ஒன்று நிச்சயம், "உதவி என்பது ஒவ்வொருவருக்கும் தேவை , இன்று அவனுக்கு நாளை உனக்கு, பதவி, பணம் எல்லாம் தாண்டி!"

இந்தியாவும்_சீனாவும்_சோ_கால்ட்_தேசப்பற்றும்!!

சீனாவைப் புறக்கணிப்போம் என்று காணொளிகள், செய்திகள் பரபரவென பறக்கிறது, நிச்சயமாக புறக்கணிப்போம், எனக்கு தெரிந்ததை நானும் புறக்கணிக்கிறேன்! அதற்கு முன்னால் ஒரே இரவில் நோட்டுகளை செல்லக்காசாக்கி, உச்சநீதிமன்றத்தை குழப்பி ஆதாரை கட்டாயமாக்கி, ஒரே அடியாக ஜிஎஸ்டி யை அதிரிபுதிரியாக அமலாக்கி, அவ்வப்போது புதிய இந்தியா என்று விளம்பரத் தூதராகவும் பிரதமராகவும் சுற்றுலாத்துறை பிரதிநிதியாகவும் அவதாரமெடுக்கும் மாண்புமிகு பிரதமருக்கு சீனாவின் இறக்குமதியை, ஏற்றுமதியை தடைசெய்ய அல்லது குறைந்தபட்சம் சீனாவின் இறக்குமதிகளுக்கு அதிகபட்ச வரியைக் கூட வசூலிக்க முடியாதா? சர்வதேச அமைப்புகளின் சட்டப்படி, இந்தியா சந்தையை திறந்து வைத்திருக்கும் ஒப்பந்தப்படி முடியாது என்பதுதான் உண்மை!

இந்த தேசப்பக்தி என்ற கூற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கொஞ்சம் உண்மையை பார்ப்போம், ஒருவேளை இந்தியா, சீனாவை புறக்கணித்தால் சீனாவுக்கு குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்படும். சீனா இந்தியாவுக்கு 70 + பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது, அதே சமயத்தில் இந்தியா சீனாவுக்கு 11+ பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது, கிட்டத்தட்ட 60 பில்லியன் அளவுக்கு இடைவெளி, இந்த இடைவெளியை சீனா சரிசெய்து கொள்ளும், இந்தியாவால் உடனே முடியாது!

சாதாரண உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், இந்த ஃபேஸ் புக் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள், டிவிட்டர் என்பீர்கள், அது இல்லையென்றால்? குகுளில் தேடி, விவரங்களை படித்து, வர்த்தக ஒப்பந்த விதிகளை படிக்கிறேன், புத்தகங்களை தரவிறக்கம் செய்து ஆராய்கிறேன், இதெல்லாம் இல்லையென்றால்? சீனாவுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை, அமெரிக்காவின் மார்க் இல்லையென்றாலும், சுந்தர் பிச்சை குகுளை நிறுத்தினாலும், சீனா பிழைத்துக்கொள்ளும், சீனர்கள் தேசப்பக்தர்கள், இந்தியர்கள் இல்லை என்ற இன்னொரு மாயையும் உலவுகிறது, சீனாவின் தேசப்பக்தியெல்லாம் கடுமையான சட்டதிட்டங்களால் வருவது, மற்றப்படி மக்களாய் உவந்து ஏற்றுக்கொள்வது அல்ல, இந்தியாவின் தேசப்பற்றென்பது, அத்தனை ஊழல்களையும், அடக்குமுறைகளையும் தாண்டி மக்களுக்கு இன்னமும் ஜனநாயகம் என்ற அமைப்பில், இந்திய தேசத்தின் பற்றுதலில் இன்னமும் ஊஞ்சாலாடிக் கொண்டிருப்பது!
சீனா வின் வர்த்தக விதிமுறைகள் வேறு, ஒருவன் புதிதாய் ஒன்றை கண்டுப்பிடித்தாலும், மூன்று வருடங்களுக்குள் அந்த ட்ரேட் சீக்ரெட் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும், மலிவுவிலை என்பதன் ரகசியத்தில் இதுவும் ஒன்று!

இன்று உலக நாடுகள் ஏன் அத்தனை உறபத்திக்கூடங்களையும் இந்தியாவில் அமைக்க ஆர்வம் காட்டுகின்றன? யோசித்துப்பாருங்கள், ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, ஒரு காரை உற்பத்திசெய்து சந்தைக்கு கொண்டுவர 39090 கேளன்ஸ் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது, ஒரு கேளன் என்பது 3.79 லிட்டர் தண்ணீர், நீங்களே கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள், இது தவிர டயர்களுக்கு தனி! சீனா முதல் மேற்கத்திய நாடுகள் வரை தன் நாடுகளின் வளத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், தன் தேசத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு இந்தியா போன்ற வளம் நிறைந்த தேசத்தில் கழிவுகளை இறக்குமதி செய்ய வேண்டும், வளங்களை உறிஞ்ச வேண்டும், அவ்வளவே!

இந்தியா தன்னிறைவு பெறாத நாடு, உணவு உற்பத்தியைக் கூட இன்னமும் நாம் சீர் செய்யவில்லை, அதை குறைந்தபட்சம் பாதுகாக்கவும் நமக்கு வழியில்லை! ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இந்தியா பெரும் அளவில் சீனாவையே நம்பியிருக்கிறது, சில உதாரணங்கள், கைபேசி உற்பத்திக்கு தேவையான பாகங்கள் சீனாவின் ஹூயுவேய் என்ற நிறுவனத்திடமிருந்து இறக்குமதியாகிறது, ஆப்பிள் போன்கள் மற்றும் இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் சில போன்களும் சீனாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது, சீனா இல்லையென்றால் இந்த கைபேசிகள் இல்லை, மான் கீ பாத் என்று முழங்கும் டெல்லியின் யமுனா நதிக்கரையில் தயாராகும் மேம்பாலத்திலும் சீனாவின் கைவண்ணம் இருக்கிறது, மருந்துகள் சீனாவில் இருந்து இறக்குமதியாகிறது!

இப்படி எல்லா வகையிலும் சீனாவோடு பின்னிபிணைந்திருக்கும் இந்தியாவில், வேறு என்னதான் வழி என்றால் "தன்னிறைவு" பெறுவது, உலக நாடுகளிடம் முடிந்த அளவு நம் தேவைகளுக்கு சாராமல் இருப்பது!
"மேக் இன் இந்தியா" என்பது இங்கே செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, முதலாளிகளை உருவாக்குவது, ஆனால் வெளிநாட்டு முதலாளிகள் இங்கே வந்து, வளங்களை உறிஞ்சி, குறைந்த விலையில் உற்பத்தி செய்து, கொள்ளை லாபத்தை ஏற்றுமதி செய்துக்கொள்வது மேக் இன் இந்தியா ஆகிவிட்டது!

"சீனப் பொருட்களைத் தவிருங்கள், இந்தியர்களாய் வாழுங்கள்" என்ற கூக்குரலெல்லாம் சீனாவை ஒன்றும் செய்துவிடாது, ஒன்றை தெரிந்துக்கொள்வோம், தேசபக்தி என்பது சாமான்யர்களுக்கு மட்டுமல்ல, முதலாளிகளுக்கும், ஆள்பவர்களுக்கும் அவசியம் இருக்கவேண்டியது, அதுவும் அளவுக்கதிகமாக இருக்கவேண்டியது, கசப்பான உண்மை என்னவெனில்;

"வியாபாரிகள்
வியாபாரிகளாய் இருக்கிறார்கள்,
அரசியல்வாதிகள்
ஊழல்வாதிகளாய் இருக்கிறார்கள்,
சாதிக்கட்சிகள்
சாதிய வெறி கொண்டவர்களாய்
இருக்கிறார்கள்,
மதவாதிகள்
கொலைகாரர்களாய் இருக்கிறார்கள்,
நடிக நடிகையர்கள்
கலைஞர்களாய் இருக்கிறார்கள், இவர்களையெல்லாம் நம்பும்
சாமான்ய மனிதன் மட்டும்
தேசப்பக்தனாய் இருக்க
நிர்ப்பந்திக்கப்படுகிறான்!"

இந்த உண்மை மாறாத வரை ஶ்ரீலங்கா முதல் சீனா வரை நம்மை மிரட்டிப்பார்க்கும், நம்மிடமே விற்று நம் காசிலேயே நம்மைக் கொல்லும்!

இந்திய ஜனநாயகம்

ஊழல்களை,
மக்கள் விரோத
காரியங்களை
அரசுப் பதவிகளில்
எளிதாக்கி,
நியாயங்களை,
தர்மத்துக்கான
கோரிக்கைகளை
நீதிமன்ற வாசல்களில்
கடினமாக்கி
மாற்றி வைத்திருப்பதுதான்
இந்திய ஜனநாயகம்!

மெல்லிய மனங்கள்

கடன் கட்ட
மறுத்து ஏய்த்தவன்
பிறரை வார்த்தையால்
காயப்படுத்திச் சென்றவன்
அன்பென்ற பெயரில்
வஞ்சித்து சென்றவன்
அனிச்சம் போன்ற மனதை
சவால் விட்டுக் கொன்றவன்
பிறர் பொருளை
வழிப்பறி செய்தவன்
ஒர் உயிரை
இரக்கமின்றி களவாடியவன்
ஓர் உடலை
விருப்பமின்றி சூறையாடியவன்
வாய்கூசாமல் பிறர் மீது
அவதூறு பரப்புவன்
என்று
அத்தனை நல்ல மனிதர்களும்
மிகுந்த திறமைசாலிகளாய்
கொஞ்சமும் உறுத்தலின்றி
வாழ்க்கையை
அதன் எல்லா சுவைகளுடனும்
வாழ்வாங்கு வாழ
எங்கோ திறமையற்று
இவர்களிடம்
ஏமாந்த கூட்டம் மட்டும்
அவ்வப்போது தாளாமல்
செத்து வீழ்கிறது!
#மெல்லிய_மனங்கள்

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!