Monday, 17 July 2017

நமக்கு_அரசியல்_வேண்டாம்!

பயணப்படும் பகுதி நிலம் என்றாலும் மலை என்றாலும், சமீபத்தில் பார்த்தது வறண்ட நிலையைத்தான், பெரும் மழையை அருட்பெரும் கொடையாக கருதி, நீர்நிலைகளை பராமரித்துக் காப்பாற்றாமல் அதை மரணங்களின் ஓலமாக மாற்றிய தமிழக அரசு, இப்போது யானைகள் நீர் தேடி அலையும் காட்சிகளையும், பறவைகள் உணவின்றி மடியும் காட்சிகளையும், மனிதர்கள் தண்ணீர் லாரிகளின் பின்னே ஓடும் காட்சிகளையும் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த அவர்களின் சாதனைகளாக மாற்றிக்கொள்ளலாம்!

விவசாயம் நலிந்துப்போய் கிடப்பதும், உணவுகள் கலப்பட உணவாக மலிந்து கொட்டிக்கிடப்பதும், இருக்கும் எஞ்சிய தஞ்சைப் போன்ற நிலப்பகுதிகளிலும் ஏனைய தமிழக இடங்களிலும் மத்திய அரசு அபாயகரமான அளவில் நீர்வலம் அழித்து, உறிஞ்சி, மக்களின், பிற உயிர்களின் வாழ்வாதாரம் அழிக்க, மீத்தேன் என்றும், நியூட்ரினோக்கள் என்றும், அணுவுலைகள் என்றும் பெயர் சூட்டி செயல்படுத்தும் திட்டங்களுக்கு, ஒத்துழைத்த, அனுமதி அளித்த திராவிட கட்சிகளின் மீது தாங்கொண்ணா கோபமே மேலிடுகிறது!

இப்போதும் கூட பதவிக்காக, சேர்த்து வைத்த சொத்துக்களுக்காக இன்னமும் இவைகளை ஒழிக்காமல் மக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்து மக்களையே விரோதிகளென காட்சியமைக்கும் செயல்களை எல்லாம் காணும்போது வரலாற்றில் ஹிட்லர்கள் எல்லாம் தோற்றுப்போய் விடுவார்கள் என்றே தோன்றுகிறது!

மழை பெய்யும் போதெல்லாம் அதை வீணாக்கி, பெருகும் ஆறுகளை குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிக்காமல் நீர் வளங்களை சேதமாக்கும் முதலாளிகளும், அரசும், மக்களும் இந்தப் பூமியில் தண்டிக்கப்பட வேண்டிய கடும் குற்றவாளிகள்!

கடும் வெயிலில், கொட்டகை அமைத்து, தன் மீது வெயில் படாமல் நிழலில் நின்றுகொண்டு ஒரு முதல்வர் மரம் நட அதை கைதட்டி பார்க்கும் இந்த மக்களின் அறியாமையின் பரிசு, ஓட்டுக்கு காசாக, இலவசப் பொருட்களாக திரும்பி வருகிறது, ஆட்சியாளார்களின் கேலிக்கூத்துக்கள் தொடர அதுவே வழிவகை செய்கிறது!

ஒரு ஆற்றின் நீரை இரு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத கையாலாகாத மத்திய அரசு தான், ஒரே வரி என்று சில மாநிலங்களில் அதிக வரி பிடுங்கி பிற மாநிலங்களுக்கு ஈந்து கண்துடைப்புச் செய்கிறது!
அரசு எந்தத்துறையில் இருந்தாலும் சேவை சரியில்லை, மக்கள் எத்தனை வரி கட்டினாலும் நாட்டின் நிர்வாகம் செம்மைப்படுவதில்லை, டிஜிட்டல் இந்தியா என்று முழங்கினாலும் மக்களின் அறியாமை நீங்கவில்லை, சுவச் பாரத் என்று புதிய இந்தியா பிறந்தது என்றாலும் இன்னமும் கழிவறை இல்லாமல் இருக்கும் கிராமங்கள், நகரப் பகுதிகள் அப்படியே இருக்கின்றன, பிரதமரின் உடைகள் ஒளிர்ந்தாலும், ஏழைகளுக்கு கோவணமே மிச்சமிருக்கிறது, நாட்டின் மந்திரிகளும் பிரதமரும் ஊர் சுற்றிக்கொண்டு, உலகம் சுற்றிக்கொண்டு இருந்தாலும்கூட உள்ளூர் மக்களுக்கு அதே ஓட்டைப் பேருந்துகளும்,
அழுக்கடைந்த ரயில்களும்தான் வாய்த்திருக்கிறது இந்தப் புதிய இந்தியாவில்!

சில நூறு ஆட்சியாளர்கள், கோடிக்கணக்கான மக்களை இன்னமும் ஏய்த்துப் பிழைப்பதற்கு யார் காரணம்? பிரதானக் காரணம் மக்கள் பணிகளில் "அரசு வேலை" என்ற கெத்துக்காட்டி அமர்ந்திருக்கும் அதிகாரிகள், அந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத அரசு ஊழியர்கள், தங்களின் வேலைகள் நடக்க இவர்களுக்கு பணம் தரும் மக்களும் தானே?!

இந்த தேசத்தில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள், ஒன்று எந்த பிரச்சனைக்கும் ஆட்படாதவர்கள், அதாவது அரசால், ஊழியர்களால் பெரிய அளவில் பாதிக்கபடாதவர்கள், அல்லது மற்றவர்களுக்கு வாரி இறைக்க வேண்டிய சில்லறைகள் இவர்களுக்கு பொருட்டில்லை, இவர்கள் எப்போதும் மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் நேர்மறைச் சிந்தனைப் பற்றி போதிப்பார்கள், நாட்டுக்காக "பிறர்" தங்களுடைய வளங்களை, உயிர்களைத் தந்தால் என்ன என்று திண்ணை நியாயம் பேசுவார்கள், பெரும்பாலும் கட்சி, சாதிச் சார்புடையவர்கள், தங்களுடையப் பிள்ளைகள் படித்து எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் சராசரிகளும் கூட!

இரண்டாவது, பிரச்சனைக்கு ஆட்படுபவர்கள், போராடி பார்ப்பார்கள் அல்லது போராடித் தோற்பார்கள், அவ்வப்போது குரல் கொடுத்து, பெரும்பாலும் ஒதுங்கி, வெறுத்துப்போய் கிடப்பவர்கள்!
மூன்றாவது, தனக்கென்றாலும், பிறர்க்கென்றாலும் முன்னே நின்று போராடுபவர்கள், நன்றியைக்கூட எதிர்ப்பார்க்காமல் நதியைப் போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள் (நிச்சயம். அரசியல்வாதிகள் அல்ல)
மக்கள் இத்தனை வகையாய் பிரிந்தாலும் ஆட்சியாளர்கள் இரண்டே வகை, நேர்மையாளர்கள், ஆட்சி செய்பவர்கள், ஆமாம் இன்னமும் இந்தியாவில், தமிழ்நாட்டில் நேர்மையாளர்கள் ஆட்சி செய்யவில்லை, அது நிகழாத வரை மக்கள் மந்தையாகிய நமக்கு சினிமா போதும், சாராயம் போதும், சாதி போதும், மதம் போதும், எங்கோ யானைகள் செத்து மடிந்தால், யாரின் பிள்ளையோ வெட்டப்பட்டால், யாரின் பெண்ணோ வன்புணர்ச்சி செய்யப்பட்டால், எந்த மரமோ கருகினால், எந்த மலையோ குடையப்பட்டால், எந்த ஆதிவாசியோ துரத்தப்பட்டால், யாரோ ஊழல் செய்தால், எது நடந்தால் நமக்கென்ன? நமக்கு அரசியல் வேண்டாம்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...