Monday 17 July 2017

இந்தியாவும்_சீனாவும்_சோ_கால்ட்_தேசப்பற்றும்!!

சீனாவைப் புறக்கணிப்போம் என்று காணொளிகள், செய்திகள் பரபரவென பறக்கிறது, நிச்சயமாக புறக்கணிப்போம், எனக்கு தெரிந்ததை நானும் புறக்கணிக்கிறேன்! அதற்கு முன்னால் ஒரே இரவில் நோட்டுகளை செல்லக்காசாக்கி, உச்சநீதிமன்றத்தை குழப்பி ஆதாரை கட்டாயமாக்கி, ஒரே அடியாக ஜிஎஸ்டி யை அதிரிபுதிரியாக அமலாக்கி, அவ்வப்போது புதிய இந்தியா என்று விளம்பரத் தூதராகவும் பிரதமராகவும் சுற்றுலாத்துறை பிரதிநிதியாகவும் அவதாரமெடுக்கும் மாண்புமிகு பிரதமருக்கு சீனாவின் இறக்குமதியை, ஏற்றுமதியை தடைசெய்ய அல்லது குறைந்தபட்சம் சீனாவின் இறக்குமதிகளுக்கு அதிகபட்ச வரியைக் கூட வசூலிக்க முடியாதா? சர்வதேச அமைப்புகளின் சட்டப்படி, இந்தியா சந்தையை திறந்து வைத்திருக்கும் ஒப்பந்தப்படி முடியாது என்பதுதான் உண்மை!

இந்த தேசப்பக்தி என்ற கூற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கொஞ்சம் உண்மையை பார்ப்போம், ஒருவேளை இந்தியா, சீனாவை புறக்கணித்தால் சீனாவுக்கு குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்படும். சீனா இந்தியாவுக்கு 70 + பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது, அதே சமயத்தில் இந்தியா சீனாவுக்கு 11+ பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது, கிட்டத்தட்ட 60 பில்லியன் அளவுக்கு இடைவெளி, இந்த இடைவெளியை சீனா சரிசெய்து கொள்ளும், இந்தியாவால் உடனே முடியாது!

சாதாரண உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், இந்த ஃபேஸ் புக் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள், டிவிட்டர் என்பீர்கள், அது இல்லையென்றால்? குகுளில் தேடி, விவரங்களை படித்து, வர்த்தக ஒப்பந்த விதிகளை படிக்கிறேன், புத்தகங்களை தரவிறக்கம் செய்து ஆராய்கிறேன், இதெல்லாம் இல்லையென்றால்? சீனாவுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை, அமெரிக்காவின் மார்க் இல்லையென்றாலும், சுந்தர் பிச்சை குகுளை நிறுத்தினாலும், சீனா பிழைத்துக்கொள்ளும், சீனர்கள் தேசப்பக்தர்கள், இந்தியர்கள் இல்லை என்ற இன்னொரு மாயையும் உலவுகிறது, சீனாவின் தேசப்பக்தியெல்லாம் கடுமையான சட்டதிட்டங்களால் வருவது, மற்றப்படி மக்களாய் உவந்து ஏற்றுக்கொள்வது அல்ல, இந்தியாவின் தேசப்பற்றென்பது, அத்தனை ஊழல்களையும், அடக்குமுறைகளையும் தாண்டி மக்களுக்கு இன்னமும் ஜனநாயகம் என்ற அமைப்பில், இந்திய தேசத்தின் பற்றுதலில் இன்னமும் ஊஞ்சாலாடிக் கொண்டிருப்பது!
சீனா வின் வர்த்தக விதிமுறைகள் வேறு, ஒருவன் புதிதாய் ஒன்றை கண்டுப்பிடித்தாலும், மூன்று வருடங்களுக்குள் அந்த ட்ரேட் சீக்ரெட் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும், மலிவுவிலை என்பதன் ரகசியத்தில் இதுவும் ஒன்று!

இன்று உலக நாடுகள் ஏன் அத்தனை உறபத்திக்கூடங்களையும் இந்தியாவில் அமைக்க ஆர்வம் காட்டுகின்றன? யோசித்துப்பாருங்கள், ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, ஒரு காரை உற்பத்திசெய்து சந்தைக்கு கொண்டுவர 39090 கேளன்ஸ் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது, ஒரு கேளன் என்பது 3.79 லிட்டர் தண்ணீர், நீங்களே கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள், இது தவிர டயர்களுக்கு தனி! சீனா முதல் மேற்கத்திய நாடுகள் வரை தன் நாடுகளின் வளத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், தன் தேசத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு இந்தியா போன்ற வளம் நிறைந்த தேசத்தில் கழிவுகளை இறக்குமதி செய்ய வேண்டும், வளங்களை உறிஞ்ச வேண்டும், அவ்வளவே!

இந்தியா தன்னிறைவு பெறாத நாடு, உணவு உற்பத்தியைக் கூட இன்னமும் நாம் சீர் செய்யவில்லை, அதை குறைந்தபட்சம் பாதுகாக்கவும் நமக்கு வழியில்லை! ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இந்தியா பெரும் அளவில் சீனாவையே நம்பியிருக்கிறது, சில உதாரணங்கள், கைபேசி உற்பத்திக்கு தேவையான பாகங்கள் சீனாவின் ஹூயுவேய் என்ற நிறுவனத்திடமிருந்து இறக்குமதியாகிறது, ஆப்பிள் போன்கள் மற்றும் இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் சில போன்களும் சீனாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது, சீனா இல்லையென்றால் இந்த கைபேசிகள் இல்லை, மான் கீ பாத் என்று முழங்கும் டெல்லியின் யமுனா நதிக்கரையில் தயாராகும் மேம்பாலத்திலும் சீனாவின் கைவண்ணம் இருக்கிறது, மருந்துகள் சீனாவில் இருந்து இறக்குமதியாகிறது!

இப்படி எல்லா வகையிலும் சீனாவோடு பின்னிபிணைந்திருக்கும் இந்தியாவில், வேறு என்னதான் வழி என்றால் "தன்னிறைவு" பெறுவது, உலக நாடுகளிடம் முடிந்த அளவு நம் தேவைகளுக்கு சாராமல் இருப்பது!
"மேக் இன் இந்தியா" என்பது இங்கே செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, முதலாளிகளை உருவாக்குவது, ஆனால் வெளிநாட்டு முதலாளிகள் இங்கே வந்து, வளங்களை உறிஞ்சி, குறைந்த விலையில் உற்பத்தி செய்து, கொள்ளை லாபத்தை ஏற்றுமதி செய்துக்கொள்வது மேக் இன் இந்தியா ஆகிவிட்டது!

"சீனப் பொருட்களைத் தவிருங்கள், இந்தியர்களாய் வாழுங்கள்" என்ற கூக்குரலெல்லாம் சீனாவை ஒன்றும் செய்துவிடாது, ஒன்றை தெரிந்துக்கொள்வோம், தேசபக்தி என்பது சாமான்யர்களுக்கு மட்டுமல்ல, முதலாளிகளுக்கும், ஆள்பவர்களுக்கும் அவசியம் இருக்கவேண்டியது, அதுவும் அளவுக்கதிகமாக இருக்கவேண்டியது, கசப்பான உண்மை என்னவெனில்;

"வியாபாரிகள்
வியாபாரிகளாய் இருக்கிறார்கள்,
அரசியல்வாதிகள்
ஊழல்வாதிகளாய் இருக்கிறார்கள்,
சாதிக்கட்சிகள்
சாதிய வெறி கொண்டவர்களாய்
இருக்கிறார்கள்,
மதவாதிகள்
கொலைகாரர்களாய் இருக்கிறார்கள்,
நடிக நடிகையர்கள்
கலைஞர்களாய் இருக்கிறார்கள், இவர்களையெல்லாம் நம்பும்
சாமான்ய மனிதன் மட்டும்
தேசப்பக்தனாய் இருக்க
நிர்ப்பந்திக்கப்படுகிறான்!"

இந்த உண்மை மாறாத வரை ஶ்ரீலங்கா முதல் சீனா வரை நம்மை மிரட்டிப்பார்க்கும், நம்மிடமே விற்று நம் காசிலேயே நம்மைக் கொல்லும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!