Monday 17 July 2017

பெரும்_காட்சிப்பிழை_மனிதர்கள்

சில காட்சிகள்
காட்சி ஒன்று:

திண்டிவனம் அல்லது திண்டுக்கல், இரண்டில் ஏதோ ஒன்று, ஒரு விபத்து நடக்கிறது, நல்ல போதையில் இரு இளைஞர்கள் சாலையின் தடுப்பில் இடித்துக்கொண்டு விழுகிறார்கள். அவ்வழியே போகும் இருவர், அவர்களை அரசு மருத்துவமனைக்குத் தங்களுடைய காரில் அழைத்துச்செல்கிறார்கள். ஒருவருக்கு மண்டையுடைந்து ரத்தம் கொட்டுகிறது, இன்னொருவருக்குச் சில சிராய்ப்புகள். அரசாங்க மருத்துவர் வருகிறார், உதவியாளரை அழைத்து மண்டையுடைந்தவனுக்குத் தையல் போட சொல்கிறார், அழைத்து வந்தவர்கள் பதறுகிறார்கள், அவனுக்குப் பிற சோதனைகள் தேவையில்லையா என்று கேட்க, தன் கோட் பாக்கெட்டில் வைத்த கையை எடுக்காத மருத்துவர், "இம் இருக்கட்டும், அதெல்லாம் இங்கே கிடையாது, சாயந்திரம் வரைக்கும் பார்க்கலாம்" என்கிறார்!

காட்சி இரண்டு

ஒரு கால் டாக்ஸி ஓட்டுநர், இரவு பதினோரு மணி அளவில், அலுவலகத்தில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துச்சென்று வியாசர்பாடியில் அவரின் வீட்டில் விட்டு திரும்புகிறார், நடுவில் போதையில் நான்கு இளைஞர்கள் அவரை மறிக்கிறார்கள், கையில் இருக்கும் காசைக் கொடுத்துவிட்டுப் போகும்படி மிரட்ட, ஒருவன் அவற்றின் வாழ்வின் ஆதாரமான செல் போனை எடுத்துக்கொள்கிறான், இரவு பணிக்கு அப்போது தான் வந்ததாகச் சொல்லும் ஓட்டுநர் தன்னிடம் நூறு ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், அதுவும் தன் உணவுக்காக என்று சொல்ல, அந்த இளைஞர்கள் அதைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், பின் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அவர் கைபேசியை வாங்கிக்கொண்டு வெளியில் வர, அங்கே ரோந்தில் இருக்கும் காவலர்களிடம் புகார் அளிக்கிறார், "யோவ் உன்னே ஏன் அந்தச் சந்தில் போய் இறக்கி விடச் சொன்னது, ரோட்டியிலேயே இறக்கி விட வேண்டியதுதானே, நூறு ரூபாயோட போச்சுன்னு நினைச்சிட்டுப் போய்யா வேலைய பார்த்துட்டு" என்கிறார் காவல்துறை அதிகாரி

காட்சி மூன்று:

கொடைக்கானல் அல்லது ஊட்டி, ஏதோ ஓர் ஊராட்சி என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் தன் நிலத்துக்குப் பட்டாவுக்காக அந்த அலுவலகத்துக்குச் செல்கிறார், படித்தவர், நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் மாற்றிப் போட்டு அமர்கிறார். உடன் ஓர் ஊழியர் வந்து இப்படியெல்லாம் கால் மேல் கால் போட்டு இங்கே அமரக்கூடாது என்கிறார், சிறிய அளவில் வாக்குவாதம் வருகிறது. அவரை அனுப்பிவிட்டு, பத்துநாளுக்கு மேல் வருமாறு பணித்துவிட, பட்டா வேண்டி வந்தவருக்கு, சில ஆவணங்கள் இல்லாததால் பட்டா வழங்க முடியவில்லை என்று கடிதம் வருகிறது, மீண்டும் அதே அலுவலகத்துக்குச் செல்கிறார், குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது, தான் எல்லா ஆவணங்களைக் கொடுத்ததும் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்கிறார், பின் உரிய புகாரின் விசாரிப்புக்கு பிறகு பல நாட்கள் கழித்துப் பட்டா வருகிறது அதைத் தொடர்ந்து மற்ற ஆவணங்கள் மறுக்கப்படுகிறது, அதே நடையாய் நடக்கிறார், அவரின் கால் மேல் கால் போட்ட குறை அவரைத் துரத்துகிறது!

காட்சி நான்கு:

ஏதோ ஒரு நகரத்தின் காவல்துறை, சாலையில் நடந்துக்கொண்டிருந்த போது ஒருவன் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துத் தன் கைப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகப் பெண் ஒருவர் புகாரளிக்க, "நீ ஏன் அங்கே போனே, உனக்கு என்ன வேலை, எங்க தாலிய இருக்கவே வருவீங்க, வீட்டுல இருக்கறதுக்கென்ன?" என்கிறார் ஓர் அதிகாரி

காட்சி ஐந்து:

தன் பெண்ணைக் காணோம் என்று ஒருவர் புகாரளிக்க, "யோவ் எவன் கூடான்ன ஓடி இருக்கப் போது, போய்ப் பாரு" எங்க, "சார் என் புள்ளைக்குப் பத்து வயசுதாங்க ஆவுது" என்று தகப்பன் பதற, "ஆமா, பெத்துப்போட்டுட்டு சரியாய் பார்த்துக்காம எங்க உசுரே வாங்குங்க", இதற்கு மேல் வேண்டாம், எடிட் செய்துகொள்வோம்.

காட்சி ஆறு:

சாலையில் குழந்தையை மயக்கத்தில் ஆழ்த்தி ஒரு கும்பல் பிச்சையெடுக்கிறது, ஒரு பெண் சைல்ட் ஹெல்ப் லைனுக்குப் போன் செய்கிறார், வருகிறேன் வருகிறேன் என்பவர்கள் இரண்டு மணிநேரமாகியும் வரவில்லை, அடுத்து விடாது அங்கிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கிறார், "அட போம்மா வேலைய பார்த்துகிட்டு.." என்று அலட்சியப்படுத்துகிறது காவல்துறை
இந்தக் காட்சிகள் நிஜமாகவோ கற்பனையாகவோ நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உருவகம் செய்து கொள்ளலாம். எல்லா இடத்திலும் நிறைந்திருப்பது மனிதர்கள்தான், ஒருவனுக்குச் சாலையில் அடிபடும்போது, விடாது ஹாரன் அடித்து மனிதர்கள் முன்னேறிச் செல்கிறார்கள், ஒரு பெண்ணை ஒருவன் கையைப் பிடித்து இழுக்கும்போது, சிலர் வேடிக்கைப் பார்க்கிறார்கள், சிலர் வீடியோவில் பதிகிறார்கள், ஒரு காவல்துறை ஒருவனிடம் அடாவடியாக நடந்துக்கொள்ளும் போது பலர் வேடிக்கைப் பார்க்கிறார்கள், ஒரு அலுவலகம் ஒருவனை மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தும்போது, சிலர் பரிதாப்படுகிறார்கள், சிலர் தள்ளி நிற்கிறார்கள், ஒரு குழந்தையோ, ஒரு பெண்ணோ காணாமல் போனாலோ, கடத்தப்பட்டாலோ எல்லோரும் முன்தீர்மானம் அவளின் ஒழுக்கத்தில் நிறைவேற்றுகிறார்கள், பெற்றவர்களுக்கு அறிவுரைச் சொல்கிறார்கள், ஒரு குழந்தை எங்கோ வதைக்கப்படும்போது அதையும் வீடியோவில் பதிகிறார்கள், எல்லோரும் இங்கே கலாச்சாரப் போதனை "மட்டும்" செய்கிறார்கள், :கருணையைச் சிறிது கடனுக்குத் தருகிறார்கள்"!

"யார் கையிலோ குழந்தைகள், யார் கையிலோ அதிகாரம், யார் கையிலோ ஆட்சி, யார் கையிலோ நம் ஒழுக்கத்தின் தீர்மானங்கள், யார் கையிலோ நம் பாதுகாப்பு!" - இப்படி இருக்கும் இந்தத் தேசத்தில், எப்போது நாம் ஒவ்வொருவரும் "மனிதராக" மாறுகிறோமோ, அப்போது உடுத்தியிருக்கும் குர்த்தா பிரதமர் என்றும், கட்டியிருக்கும் வேட்டி முதலமைச்சர் என்றும், அணிந்திருக்கும் சீருடை அரசுப் பணி என்றும் நினைக்கும் அதிகாரத்தின் பிம்பங்கள் உடையும், "கருணை என்ற ஒன்றும்" "மனிதம் என்ற ஒன்றும்" விழிக்கும், அதுவரை அடுத்தவரின் குருதியும் வேர்வையும் நமக்கு வேடிக்கைதான்!

ஒன்று நிச்சயம், "உதவி என்பது ஒவ்வொருவருக்கும் தேவை , இன்று அவனுக்கு நாளை உனக்கு, பதவி, பணம் எல்லாம் தாண்டி!"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!