Tuesday 25 July 2017

அகப்பட்டவனிடம் காட்டுகிறோம்

தோழியொருவர், காணொளியொன்றை அனுப்பியிருந்தார், அதில் ஒரு பெண்மணி இரு பக்கமும் இரு குழந்தைகளை (ஆண் மற்றும் பெண்), ஆறு ஏழு வயது இருக்கலாம், கையில் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க முயற்சி செய்கிறார், இதில் சிறுவன் சட்டென்று அம்மாவின் கையை விட்டுவிட்டு கொஞ்சம் முன்னே செல்ல, வழக்கம் போல சாலையில் கண்மண் தெரியாமல் பறக்கும் ஏதோ ஒரு இரு சக்கர வாகனமொன்று அவனை மோதி நெடுந்தூரம் இழுத்துச்செல்கிறது, பைக்கில் வந்த இளைஞர்கள் நிற்காமல் சென்றுவிடுகிறார்கள், அவர்கள் சிறுவனை மோதியபின்னும் கூட வேகத்தை குறைக்கவில்லை! ஒருவேளை உங்களில் யாரேனும் ஒருவர் அந்தக்காணொளியை பார்க்க நேர்ந்திருந்தால் அந்த சிறுவன் எப்படியிருக்கிறான் என்று தயவுசெய்து விசாரித்துச் சொல்லுங்கள்!
அவ்வப்போது எந்த விபரமும் இல்லாமல் விபத்துக்குறித்த காணொளிகள் இப்படி வந்துவிழும்போது மனம் கனத்துப்போகிறது!

நம்முடைய மக்களுக்கு ஊழலைப்பொறுத்துக்கொள்ள முடியும், காவல்துறையின் அடக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் சாலையில் செல்லும்போது சிக்னலுக்காக காத்திருக்கும் அந்த சில நிமிடங்களை மட்டும் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்பதுதான் காலக்கொடுமை!

சமீபத்தில் ஒரு இளைஞனிடம் வேலைக்காக நேர்காணல் செய்தபோது, வண்டியோட்டும்போது ஹெல்மெட் அணிவது பற்றிக்கேட்க, "ஹெல்மெட் இருக்கு ஆனா அதைப்போட்டா தலைமுடி கொட்டிடும்" என்றான், கேள்விகள் தொடர்ந்தபோது, "நான் ஹெல்மெட் அணியாமல் வண்டியொட்டினால், விபத்து ஏற்பட்டால் காவல்துறைக்கு என்ன நஷ்டம்" என்றான், பல இளைஞர்களின் அறிவு இந்த அளவில்தான் இருக்கிறது, ஒரு சாலையில் பைக்கின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டாலும் மோதிய வாகனத்தின் உரிமையாளாரோ ஓட்டுனரோ படும் அவஸ்தைகளும், காவல்துறையின் கெடுபிடிகளும், விபத்து நடந்தால் பெரிய வாகனமே காரணம் என்ற ஓட்டைச் சட்டமும், திமுதிமுவென்று விபத்தை வியாபாராமாக்கும் கூட்டமும், பெற்றவர்களின் ஆற்றாமையும் என்று எதுவுமே இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு பொருட்டில்லை!

பல வருடங்களுக்கு முன்பு மீர்சாகிப்பேட்டையின் நெரிசலான சாலையில் ஒரு கல்லூரி பேருந்து மெதுவே சென்று கொண்டிருக்க, முழுப்போதையில் ஒரு முதியவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு குறுக்கே வர, பேருந்து சட்டென்று நின்றுவிட்டாலும், பேருந்தின் மீது மோதியதில், சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவரின் மண்டையுடைந்து, மூளை வெளியே வந்து வீழ்ந்தது, சாலையோரத்தில் நின்றிருந்த என் கண்முன்னே நடந்த இந்த விபத்தின் பாதிப்பிலிருந்து நான் மீண்டு வர சில வருடங்களானது!

விபத்து, அது நிகழும்போது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது, விபத்தினால் சாலையில் நெரிசல், ஆம்புலன்ஸ் முன்னேற முடியாமல் யாருக்கோ பாதிப்பு, ஏதோ ஒரு அவசரத்துக்காக, தேவைக்காக சாலையில் நிற்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு பாதிப்பை ஒரு விபத்து ஏற்படுத்திவிட்டுதான் செல்கிறது!
ரியாலிட்டி ஷோக்களில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும், யார் எப்படி என்று அலசி ஆராயும் நமக்கு, சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வோ, எச்சரிக்கையுணர்வோ இல்லை, குழந்தைகள் நம் கையைப் பிடித்துக்கொள்வதற்கு பதில் குழந்தைகளின் கையை சாலையை கடக்கும்போது நாம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச எச்சரிக்கையுணர்வு இருந்திருந்தால் கூட அந்தச் சிறுவனுக்கு விபத்து ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை!

இன்று அலுவலகம் வரும் வழியில், மந்தைவெளியில் ஒரு கார் திரும்ப, தவறான வழியில் குறுக்கே வந்த பைக் இளைஞன் காரை மோதி கீழே விழுந்து, பின்பு அதே வேகத்தில் எழுந்து அந்த ஓட்டுனரை கைநீட்டி அடித்தான், செய்த தவறை உணராமல் ஒரு முதியவருடன் மல்லுக்கு நின்ற அந்த வீரம் புல்லரிக்க வைத்துவிட்டது, அதிகார மையத்திடம் காட்ட முடியாத காழ்ப்பை, வெறுப்பை, எதிர்ப்புக்குரலையெல்லாம் நாம் அகப்பட்டவனிடம் காட்டுகிறோம், வேறென்ன சொல்வது?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!