Monday, 22 December 2014

சுயநலச் சுதந்திரம்!


 உன் விருந்தை முடித்துக்கொண்டு
என் உணவைத் தட்டிவிட்டாய்
உன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு
என் உதடுகளைப் பூட்டிவிட்டாய்
மலர்களையுனக்கு நான் பரிசளிக்க
உன் முட்களால் எனக்கு மாலையிட்டாய்

சுமைகளைச் சுமந்து உன்னையும்
நான் சுமக்க,
என்னை ஒருபோதும் சுமக்காத
உனக்கு, நான் ஒரு
சுமையாகிப் போனேன்,
உணர்வுகள் மொத்தமும் உனக்கே
உரிமைபட்டதைப் போல் நீ சீறி
விழும் வேளைகளில்,
உணர்வற்று மரத்துப்போகும் என்
வலியும் கூட ஓர் உணர்வுதானே அன்பே?

மௌனமே மொழியாய் மருகி
நின்றபோதிலும்,
முயன்றுத் தோற்று வார்த்தையில்
வர்ணம் கூட்டும் போதிலும்,
எப்போதும் மாறாது உன்னிறம்!

என்றோ ஒருநாள்,
நான் தேய்ந்தொழிந்துப் போகையில்
அமாவாசை இரவில் நிலவினைத் தேடும்
குழந்தையைப் போல் நீ நிற்கக்கூடும்,
அப்போதும்
ஒரு வெளிச்சக் கீற்றை உனக்காக
உன் வாசலுக்கு அனுப்பி வைப்பேன்
இனியும் எப்பொழுதும் நீ நீயாகவே இரு
உனக்கேனும் நிலைக்கட்டும்
அந்த சுயநலச் சுதந்திரம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!