பசிக்கும் போது உணவை,
தாகத்திற்கு நீரை,
பரிதவிப்பில் அரவணைப்பை,
இருக்கும் வரை
கொடுத்துவிட்டுப் போகும்
இயற்கையும், அன்பும்!
அதன் மரணத்தை
மட்டும் நீங்கள் வேகமாய்
செதுக்குகிறீர்கள்
மரக்கட்டையில் லாபமும்,
இலைகளில் குப்பையும்,
கணக்கிடும் மனதிற்கு
உதிர்ந்த விட்ட பிறகே
வெயில் உறைக்கும்
வெட்டி வீழ்த்திய பின்பே
தாகம் எடுக்கும்!
மரம் கனி தரும்,
நிழல் தரும்,
வீடு தரும், படகு தரும்
பாடங்களில் கூட அதுதான்
தரும் - நீங்கள் தருவதற்கு
ஏதுமில்லை!
மரணத்தை விரும்பாத
உங்கள் குலம் -
மரணித்தபின்தான்
இயற்கையை யாசிக்கும்,
பரிதவித்து மாண்ட
உயிர்களையும் நேசிக்கும்!
விந்தை மனிதர்தாம்
நீவிர்!
No comments:
Post a Comment