நண்பன் ஒருவன், ஒரு பெண் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில்,
அவளின் காதலனால் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அனுப்பி வைக்க, தெரியாமல் அதைப்
பார்த்துத் தொலைத்து, மனம் கசந்துபோனது.
காதல் என்றில்லாமல், பல
திருமண உறவுகளும் கூட இந்த மனநிலையைத்தான் கொண்டிருக்கிறது, தன்னுடன் வாழ
வராத கணவனைக் குடும்பத்துடன் எரித்துக் கொன்ற பெண், தன்னுடன் வாழ வராத
மனைவியைக் குழந்தையுடன் கொலை செய்த ஆண், காதலிக்கும் மகளைக் கொலை செய்த
தந்தை, காதலுக்காகப் பெற்றோரை கொலை செய்த பிள்ளைகள் என்று செய்திகள் வந்த
வண்ணம்தான் உள்ளன
இந்தக் காதல் என்றால் என்ன? ஒருவரை பிடித்திருத்தல் என்பது என்ன? அவர் நலமுடன் வாழ நினைப்பது, அதுதானே காதல், அன்பு எல்லாம்?
இந்தப்
பிள்ளைகள் எல்லாம் ஏன் தோல்வியில் துவண்டு போகிறார்கள்? ஒருவர்
ஏமாற்றினால், பிடிக்கவில்லை என்று அறிந்தால் ஏன் அதை ஏற்றுக் கொள்ள
முடியாமல் தவிக்கிறார்கள், ஏன் ஓர் உயிரை சிதைக்கும் அளவுக்குத்
துணிகிறார்கள்? எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது
என்ற மனநிலை.
இங்கே காதலும் உறவுகளும் மனதுடன் சம்பந்தப்பட்டது,
மனதில் ஏற்பட்ட பிரிவை, சரி செய்ய முடியா விட்டால், அதை ஏற்றுக் கொண்டு சரி
செய்வதோ பிரிவதோ குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து அமைய வேண்டும்,
இந்திய
திருமணப் பந்தங்கள், குழந்தைகள் என்ற ஆணி வேரினால் கட்டப்பட்டிருக்கிறது,
கருத்து வேறுபாடு ஏற்படினும், மனமொத்து வாழும் தம்பதிகளை விட, குழந்தைகளின்
வருங்காலம் கருதிச் சேர்ந்து வாழ்பவர்களே அதிகம், குழந்தைகள் ஒரு காரணம்
என்றால், சமூகம், பணம், செல்வாக்கு,பெற்றோர், உறவினர்கள், மிரட்டல்,
மரியாதை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் என்று பல காரணங்களாலும் உறவு
நீடிக்கிறது ...எந்த குழந்தைகளுக்காக இந்த உறவு காக்கப்படுகிறதோ, உண்மையில்
பல வேளைகளில், இப்படிச் சகித்துக்கொண்டு வேறுபாட்டுடன் வாழும் தம்பதிகளின்
குழந்தைகளின் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி,
திரைப்படம், இணையம் என்று குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள
வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, ஆனால் அவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள்
என்பதைத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது....
காதல் ஒரு
கெட்டவார்த்தை என்ற ரீதியில் குழந்தைகளுக்குப் போதித்து விட்டு,
குடும்பத்துடன் காதல் சார்ந்த திரைப்படங்களுக்கே குழந்தைகளை அழைத்துச்
சென்று காண்பிப்பது, பெரியவர்களுக்கு மரியாதையைத் தர வேண்டும் என்று
போதித்து விட்டு, வீட்டில் இருக்கும் பெரியவர்களைப் பெருசு , கிழவி என்ற
ரீதியில் பேசுவது, உறவுகளை மதிக்க வேண்டும் என்று போதித்து விட்டு,
வீட்டுத் தொலைக்காட்சியில் எல்லா உறவுகளும் சதி செய்யும் என்ற ரீதியில்
மனம் சிதைக்கும் தொலைகாட்சித் தொடர்களைக் குழந்தைகளுடன்
பார்ப்பது.............போதனைகளு
ம் நடத்தையும் வேறு வேறு என்றால், குழந்தைகளின் மனநலம் குற்றவாளியின் மனநலம் போல் ஆகும். விதையைப் பொறுத்தே வளர்ச்சி !
கொலைகளுக்கான
தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், ஆனால் இவற்றிக்கான அடிப்படைக்
காரணம், எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மனது,
காதல் காதல் காதல்,
காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று புனையப்பட்ட நம் சமூகம். ஒருவர்
ஏமாற்றப்பட்டால், ஏமாற்றியவரைக் கொல்லுதல் என்று பொருள் கொண்டதோ?
விதைக்கும்
நிலம் மலடானால், அதில் மாற்று யோசிக்கும் சமூகம், காதல் வளர்த்த மனம்
ஏமாற்றபட்டால், மாற்றி மனதைத் தேற்ற ஏன் கற்றுக் கொடுக்கத் தயங்குகிறது?
திருமணம் என்றாலும் கூட எதற்காகவோ சகித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும் ,
எந்தக் கட்டாயமும் இல்லாத, உள்ளார்ந்த அன்பினால் நம்பிக்கையினால் அமைந்த
காதல் தோற்றுப் போகுமென்றால், ஏதோ ஒரு புறம் அந்த அன்புப் பொய்த்துப்
போனதென்றுதானே அர்த்தம்? பொய்த்துப் போன ஒன்றை வலுகாட்டயமாகத் திணிப்பதால்
அது மீண்டும் காதல் ஆகுமா ? மீண்டும் உறவு மலருமா?
இருவர்
காதலித்தால் தான் அது காதல், அமரக்காவியம் என்றாலும் தோற்றுப்போயின்
அமைதியாய் இருக்க வேண்டும், எத்தனையோ இருக்கிறது வாழ்க்கையில்,
பெற்றவர்கள், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது, குறைந்தபட்ச
அன்பும் இல்லாத வறியவர்கள், பெற்றவர்கள் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள்
...நம்மைச் சுற்றி எத்தனையோ உயிர்கள் இருக்கிறது, , ஏமாற்றத்தைச்
சகித்துக்கொண்டு எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள், வீடில்லாமல்
உணவில்லாமல் சரியான ஆடையில்லாமல் வீதியில் பிச்சைக் கேட்கும் மனிதர்களும் ,
குப்பையில் இருப்பதை எடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் உயிர்களும் கூட
வாழத்தான் நினைக்கிறார்கள், யாரையும் கொன்று, தானும் சாக
விரும்பவில்லை......
அது வேறு இது வேறு என்று நினைக்கலாம்
உண்மைதான்,
உடலால் வாழ்தல் வேறு உள்ளத்தால் வாழ்தல் வேறு, உண்மையான காதல் என்றும்
பிரியாது, காதலுக்குக் காரணமே இருக்கக் கூடாது, இருந்தாலும் ஒத்தக்
கருத்தில்லாமல் காதலித்தாலும் ஒருவருக்கு ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ளும்
மனப்பாங்கு இருந்துவிட்டால் அதில் பிரிவு வருவதில்லை!
அட இந்தக் காதலைச் சுற்றி என்னதான் நிகழ்கிறது?
அதீதமாய்க்
காதலிக்கும் யாரோ ஒருவர் தங்களை மாற்றிக்கொள்வதில் தான் பெரும்பாலும்
காதல் வாழ்கிறது, இப்படி எதுவுமே இல்லாமல், காரணமாய் வரும் காதல் காரணம்
தீர்ந்து போனதும் நீர்த்துப் போகும் அல்லது முறிந்துப் போகும்! காரணம் பணம்
என்றால், பணம் இல்லாவிட்டால் காதல் மரித்துப்போகும், காரணம் காமம்
என்றால், தீர்ந்ததும் இதுவும் முறிந்துப் போகும், திரைப்படம் போலவே, ஒரு
பாடலில் வாழ்க்கை மாறிவிடுவது போல், திருடன் திருந்தி நல்லவன் ஆவது போல்,
திரையில் மயங்கி, ஒருவரை திருத்திவிடலாம் என்று காதலித்தாலும் அது முறிந்து
விடும், இப்படியே பல உண்டு, யாரையும் காதலிக்க எதுவும் காரணமாய் இருக்கக்
கூடாது, ஆனால் கண்மூடித்தனமான கற்பனையோ நம்பிக்கையோ காதல் ஆகாது!
சரி இந்தக் காதல் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
எப்படி
இருந்தாலும் தீர்க்க முடியாத பிரிவு என்று வந்துவிட்டால், அது உடைந்த
கண்ணடித்தான் , கண்ணாடியைச் சிதைப்பதோ இல்லை ஓட்ட வைப்பதோ இல்லை வதைப்பதோ
வேண்டாத வேலை!
இழந்ததற்கு நீதி வேண்டும் என்று நினைத்தால் அதற்கான
வழிமுறைகளைத் தேட வேண்டும், உடல் தேவைக்காக ஒருவன் ஒருத்தியை ஏமாற்றினால்,
பணத்திற்காக ஒருத்தி ஒருவனை ஏமாற்றினால் சட்டத்தை நாட வேண்டும் (சமூகமும்
பத்திரிக்கைகளும் பெண்ணைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை மாற்றிக்
கொள்ளும் நிலையும் வர வேண்டும்) அதை விடுத்து ஆசிட் வீச்சும் கொலைகளும்
இழந்தக் காதலை நரகக்தில் கூடச் சேர்க்காது!
ஓர் ஆண் பெண்ணைக்
காதலிக்கிறான், அப்பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்கிறான், ஒரு பெண்
ஆணைக் காதலிக்கிறாள், அவன் குடும்பத்தையே திருமணம் செய்து
கொள்கிறாள்,அவனுக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள், முன்னதில் ஆண் கொடுத்து
வைத்தவன், பின்னதில் பெண் நிர்ப்பந்திக்கபட்டவள், பெண்ணுக்காக ஆண்
மாறினால் அந்த ஆண் அவளை அதீதமாய்க் காதலிக்கிறான் என்று அறிக, ஆணும்
பெண்ணும் பரஸ்பரம் புரிந்துக்கொண்டு அவரவர் சுயத்தை இழக்காமல், காலத்தின்
சூழலின் பொருட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் என்றால்
அங்கே காதல் கடைசி வரை வாழ்கிறது தெரிந்துக்கொள், என்று காதலைப் பற்றி என்
தந்தை எடுத்துக் கூறியது நினைவுக்கு வருகிறது , எப்படி இருந்தாலும்
வாழ்வதுதானே காதல்?
சரியான புரிதலில் சரியான மனப்பக்குவத்தில்
இருக்கும் பருவத்தில் வரும் காதலே நீடித்து நிற்கும், அடுத்தவரின் தயவில்
வாழ்க்கையை நடத்தும் நிலையில், கல்வியில் கருத்தைப் பதிக்க வேண்டிய வயதில்
வரும் காதல் தேவையில்லாதது, அப்படியே வரினும் , சுயமாய் நிற்கும் வரை,
காதலாய் அது நீடித்திருக்குமானால் பெற்றவர்கள் சரியான வழிக்காட்டி
ஆதரிக்கலாம்.
காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் பிறகு
கொல்லுதல், ஆசிட் வீசுதல், வன்கொடுமை செய்தல், இகழ்தல் என்று இருக்கும்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது, காதல் என்றால் அன்பு செய்தல் மட்டுமே,
இந்த உண்மையான காதலைத் தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை, புத்தகத்தை,
அல்லது நாடகத்தை என்று எதையும் காண வேண்டாம், முதியோர் இல்லத்தைச் சென்று
பாருங்கள், பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள், வேண்டாத ஒரு பொருளைப்போல்
பெற்றவர்களை ஒத்துக்கி வைத்தாலும், “எங்கே இருந்தாலும் எம்புள்ளைங்க நல்லா
இருக்கணும்” என்று சொல்லும் அந்தக் காதலில் காதலைக் கற்றுக்கொள்ளாமல்
நீங்கள் வேறு எதில் காதலைக் கற்றுக்கொள்வீர்கள்?
பெற்று வளர்த்து
ஆளாக்கியப் பிறகு, இறுதிக் காலத்தில் நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது
அவர்களுக்கு வராத அந்தக் கோபம், யாரோ ஒருவர் பெற்று ஆளாக்கிய பெண்ணிடம்,
சிறிதுகாலமே பழகி, பிறகு அவள் ஏமாற்றிவிட்டால் என்று கொல்வதற்கும், உங்களை
இத்தனை நாள் ஆளாக்கிய பெற்றவர்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூடப்
புரிந்துக்கொள்ளாமல், சிறிதுக் காலமே பழகி உங்களை ஏமாற்றிய ஒருவருக்காக,
உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதற்கும் பெயர், காதலா?
காதல்
என்பது தாய்மை உணர்வு கொண்டு இருக்க வேண்டும், தந்தையின் அரவணைப்பு இருக்க
வேண்டும், எல்லா உறவுகளின் உணர்வுகளின் சங்கமமாய் இருக்க வேண்டும், காதல்
என்பது வாழ்தல், வாழ்தலுக்குக் காதல் அவசியம், காதல் போயினும் வாழ்தல்
அவசியம்!!
http://www.pratilipi.com/read?id=4946718139351040