Monday 10 August 2015

நல்லவர்களே, நாலும் தெரிந்தவர்களே.......

சில தினங்களுக்கு முன்பு, பெண்களின் மீதான விமர்சனம் குறித்து, கமல் , நயன்தாரா என்று தொடங்கும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.
திவ்யா, பவித்ரா , என்ற வரிசையில் மீண்டும் மீண்டும் தவறை விடுத்துப் பெண்களை மட்டுமே விமர்சிக்கும் போக்கை எத்தனை எழுதினாலும் எதுவும் மாற்றிவிடப் போவதில்லை என்று உணர்கிறேன், ஒரு புத்தகம் வெளியிட்டாலும் கூட இது எதுவும் மாறிவிடப் போவதில்லை. தனி நபர் தாக்குதல் நடத்தும் இந்த ஆண் பிள்ளைகளையும், புறம் பேசிப் பெண்களைக் கீழாய்ப் பேசும் பெண்களையும் உண்மையில் திருத்த வேண்டியது அவர்கள் வீட்டில் உள்ளவர்கள்தாம்.

பெண்கள் சரியாய் உடையுடுத்திப் போனால் என்ன என்று ஒருவரும், ஆண்கள் ஒழுங்காய் உடையணிவதால் தான் பெண்கள் ஆண்களைக் கற்பழிப்பதில்லை என்று ஒருவரும், பெண்களே உங்களுக்குக் காதலும் கத்திரிக்காயும் எதற்கு என்ற ரீதியில் ஒருவரும், பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி இப்போது செய்தியில் உள்ள பவித்ராவில் தொடங்கி எல்லாப் பெண்கள் வரை பெண்களின் நடத்தையை விமர்சித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் ...

ஆமாம், குடித்துவிட்டுப் பெண்கள்தான் குடும்பத்தைச் சீரழிக்கிறார்கள், தனியே குடித்துவிட்டுத் தன்னிலை மறந்து உறுப்புத் தெரிய ஆடைகள் களைந்து, சேற்றில் விழுந்த பன்றியைப் போல விழுந்துக் கிடக்கும் ஆடவர்களைஎல்லாம் பெண்கள்தாம் வன்புணர்ச்சி செய்கிறார்கள், வீதியில் தனியே செல்லும் சிறுவர்களை எல்லாம் பெண்களே வன்புணர்ச்சி செய்து கொன்று குவிக்கிறார்கள், தன்னைக் காதலித்து ஏமாற்றியவனைப் பெண்களே நடுவீதியில் நிற்க வைத்து, குத்திக் கொல்கிறார்கள், தனக்குக் கிடைக்காதவன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாதென்று அமிலம் ஊற்றி ஆண்களின் முகத்தைச் சிதைக்கிறார்கள்.....இன்னும் எத்தனை சொல்வீர்கள்???

பெண்களோ ஆண்களோ தவறு செய்தால், மன்னிப்பதோ தண்டிப்பதோ குடும்பம் சட்டத்தைச் சார்ந்தது, விமர்சிக்கும் உங்களுக்குத் தவறை விமர்சிக்கும் அளவுக்குச் சுதந்திரம் இருக்கலாம், ஆனால் செவி வழி செய்தியாகப் பத்திரிகை வழி செய்தியாகக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் தனி நபர் உணர்வுகளையோ நடத்தையையோ அல்லது அதைச் சார்ந்து எல்லாப் பெண்களையோ பொதுப்படையாக விமர்சிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை

ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது என்று தவறை விடுத்துப் பெண்களைக் கேலிப் பொருளாக்கி உணர்வுகளைக் காயப்படுத்தி மகிழும் சிலர், தன் மனைவியின் புகைப்படத்தைப் போட்டு என் இல்லத்தரசி என்று சிலாகித்து எழுதினாலும் பேசினாலும், அதில் வெறும் உறவு மட்டுமே இருக்கிறதே தவிர, அறம் என்று ஒன்றுமே இல்லை, அடுத்தவரின் மகளையோ மனைவியையோ காதலியையோ, சகோதரியையோ, தாயையோ இழிந்துப் பேசிவிட்டு உங்கள் மனைவியைப் புகழ்ந்துப் பேசி, நீங்கள் செய்வது உண்மையில் வெளிவேஷமே, அதே வரிசையில் மகளின் புகைப்படத்தைப் போட்டு என் தேவதை என்று நீங்கள் கொண்டாடினாலும், அந்தத் தேவதைக்குக் கிடைத்திருக்கும் தகப்பன் எப்படிபட்டவன் என்று பின்னாளில் அந்தத் தேவதைக் காதலில் விழும் நாளில் தெரிந்து கொள்ள நேரிடும்.....

உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் தேவதைகளாகக் கொண்டாடிக் கொள்ளுங்கள் அவர்களுக்குச் சேவகம் செய்யும் தூதனாக இருந்து கொள்ளுங்கள், மற்ற பெண்களை நீங்கள் சக உயிராகப் பார்த்தால் மட்டும் போதும், உங்கள் விமர்சன மிருகத்தைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள்.
(இது போன்ற நிகழ்வுகளில் தெரியும் சிலரின் உண்மை முகங்கள், நட்பின் பட்டியலில் இருந்து அவர்களை நீக்குவதற்கு ஏதுவாகுகிறது) நன்றி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!