காய்ந்த மரமாய் நிற்கும்
மனிதரிடம் கதைத்து -
செவிவழிக் கரைத்திடும்
சுமைதனை விட
கனி ஈன்று
கனிவுடன் நிற்கும்
மரமே மரமே - என்
மனவழிக் கசிந்திடும்
வலியினை உரைப்பேன்
உன்னிடமே, நீயும் கேளாய்
மரமாய் நீ நில்
மருந்தும் வேண்டாம்
உனையே வருத்தி
கிளை முறிக்க வேண்டாம்
பூவோ காயோ
இலையோ கனியோ
எதுவும் வேண்டாம்
உன் இலைகளில் சொட்டும்
ஒரு பனித்துளிப் போதும் - என்
இமைகளைக் கழுவி
விழிகளைத் திறந்து
அது வெளிச்சம் காட்டும்
உன் கிளைகள் தாலாட்டும்
மெல்லிய சாமரம் போதும் - என்
சுவாசத்தில் நுழைந்து,
திணறும் மூச்சுக்குழலை
அது திறந்திட உதவும்
கல்லாய், மண்ணாய்
மரமாய் நிற்கும்
மனிதர்களிடையே நாளையும்
நான் வாழ்ந்திடல் வேண்டும்,
மரமே மரமே நீயும் கேளாய்!
ரசனையான வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteThank you திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete