Thursday, 31 October 2013

மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்


பல்வேறு தளங்களில் சமூக அக்கறை அற்ற ஒரு பெருங்கூட்டம், சாதி சொல்லி, மதம் சொல்லி, விளையாட்டு திறன் காட்டி, காட்சி மாயை காட்டி அரசியல் தலைவர்கள் ஆகிறார்கள், ஏதோ ஒரு பொதுசேவகன் தப்பித் தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், இருக்கவே இருக்கிறார்கள் குண்டர்களும் தொண்டர்களும் முற்று புள்ளி வைக்க!

சமூகத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைக்கும் வரை, நீதி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும்! இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப் பட்டவர்கள்?

இவர்களை எடுத்துக் கொள்வோம;

 1. நடிகர்கள் நடிக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் திறமையைக் காட்ட வேண்டும், ஒரு பொருளின் தரத்தைப் படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள முடியாத கல்வித்தரத்தில், குறைகளை எதிர்த்து எளிதில் குரல் கொடுக்க முடியாத சமூகத்தில், உருவாக்கிய விஞ்ஞானியோ, உபயோகிக்கும் பாமரனோ கொடுக்க முடியாத உத்தரவாதத்தை எந்தப் பொருளுக்கும் இவர்கள் எப்படிக் கொடுக்கிறார்கள்?

2. பட்டா இல்லாத நிலங்களை வாங்கச் சொல்லுகிறார்கள், கரியமில வாயு நிறைந்த பானத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள், வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டால் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்துப் பின்னே வருவார்கள் என்கிறார்கள்..............

3. கூவி கூவி விற்கும் நிலத்தில், ஏதோ ஒரு விவசாயியின் மறைந்திருக்கும் கண்ணீர் தெரிவதில்லை, நம் நீரை உறிஞ்சி, அதில் சந்ததி கொல்லும் விடம் கலந்து விற்பது தெரியவில்லை, நம் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்து ஆண்கள் பின்னே செல்பவர்களா என்ற சூடு உணர்ச்சிக் கூட இல்லை, பணத்துக்காக ஒரு கூட்டமும், அறியாமையில், ஏதோ ஓர் இயலாமையில் மற்றொரு கூட்டமும் இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

4. அடுத்துத் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள்;

ஒரு கல்லை எறிந்து கூட்டத்தில் எளிதில் கலகம் உண்டாக்கி கட்சி மோதல் செய்கின்றனர்,

ஓர்  ஊர்வலத்தில் ஒரு சிலையின் மேல் செருப்பை வீசி எறிந்து, மதக் கலவரம் உண்டாக்குகின்றனர்,

தனிப்பட்ட ஒரு விரோதத்தை, ஏதோ ஒரு வன்மத்தை தீர்க்க, ஏதோ ஓர் ஆதாயம் பெற, சாதிக் கலவரமாக மாற்றம் செய்கின்றனர், யாரோ ஒருவரை கொலை செய்கின்றனர், ஏதோ ஒரு காதலை கொலைக்களமாக மாற்றுகின்றனர், ஏதோ ஒரு கூட்டத்தில் அப்பாவிகளைக் கொல்ல வெடி வைக்கின்றனர், அந்தப் பற்றி எறியும் நெருப்பில் அரசியல் செய்கின்றனர், ஆட்சி நெருக்கடி செய்கின்றனர்.....

5. இப்படியான நெருக்கடியில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், இன்னொரு பலி கேட்கும் வன்மத்தை உருவாக்குகிறது, சாதிய அமைப்பு வலுப்பெறுகிறது, வாய்ச்சொல் வீரர்கள் போலி சாமியார்களாகவும், உடல் பலம், அமைப்புப் பலம் கொண்டவர்கள் ரௌடிகளாகவும் உருவாகின்றனர்....

6.ஒவ்வொரு நிகழ்வும் வாக்குச் சாவடியில் விழும் வாக்குகளை மாற்றி அமைக்கிறது!

7. மக்கள் எல்லோரும் தெளிவுப் பெற நல்ல கல்வி அவசியம்! ஆனால் கல்வியின் திசை இங்கே மாற்றி அமைக்கப்படுகிறது, அடித்தட்டு மக்களுக்கு அதுவும் மறுக்கப்படுகிறது, படித்தவன் சுயநலவாதியாகவும், படிக்காதவன் உணர்ச்சியின் குவியலாகவும் மாறிப்போகின்றனர், இரண்டுமே ஒரு சமுதாயத்திற்கு நல்லதில்லை!

8. இப்படிப்பட்ட கல்வித்தரம் அமைந்த சமுதாயத்தில் குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடக்கின்றன, நீதி, பணம் ஆடும் ஆட்டத்தில் தள்ளாடி தள்ளாடி சில வேளைகளில் வெல்கிறது, பல நேரங்களில் குமுறிக் குமுறி சாகிறது!

9. பயப்படும் மக்களைத் திசை திருப்பி, கேள்வி கேட்க துணியாவண்ணம் ஒரு நெருப்பை அவ்வப்போது கொளுத்திபோட்டால் போதும், உணர்ச்சி வசப்படுபவனைச் சாதி கொண்டு மதம் கொண்டு, இனம் கொண்டு கட்டிபோட்டால் போதும், படித்தவனுக்கு மேலும் வசதி, ஆதாயம், இல்லை ஒரு மிரட்டல் போதும்....

10. திரைகாட்சியின் மாயையில் ஒரு பக்கமும், அச்சம் தரும் சமூக அமைப்பில் மறுபுறமும் இந்தத் தலைமுறைகள் தள்ளாடி கொண்டிருக்கிறது, சாதி மத, கட்சி அமைப்புகளில் பழைய தலைமுறைகள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது, கேள்விக் கேட்கும் திறன் இன்றி வருங்காலத் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.....

11. யாரோ ஒரு சாமியார் கனவில், புதையல் இருக்கும் சேதி தெரிந்தது என்பதற்காக, விண்வெளியில் ஏவுகணை செலுத்தி சாதனை செய்யும் ஓர்  அரசு, பொருட் செலவு செய்து புதையல் தேடுகிறது! நல்ல வாழ்க்கைச் செய்திகளை மட்டும் விட்டு விட்டு, மதங்களைக் கூட மூளைச்சலவைக்குதான் பயன்படுத்துகின்றனர்

12. இலவசம் என்று வருவதெல்லாம் மக்கள் பணமே, யாரும் அவர் பணத்தைத் தந்து எதையும் இலவசமாய்த் தரவில்லை என்ற உணர்வும் இல்லை, மக்கள் பணத்தை மக்களுக்காக என்று செலவு செய்து தரும் பொருட்களும் தரமானதாய் இல்லை!

13. 2G, 3G என்று ஊழல் பட்டியல் படிப்பதோடு சில  பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விடுகிறது.

14. வேலை வெட்டி இல்லாமல் லுங்கியை மடித்துக் கொண்டு, காதல் செய்பவன், சாராயம் குடித்துக் கொண்டு, பெண்ணை இழிவு படுத்திக் கானாப் பாடல் பாடிக்கொண்டு திரிபவன், ஒற்றை விரலில் பத்துப் பேரை சுழற்றி அடித்துத் துவசம் செய்து கொண்டு இருப்பவன் எல்லாம் பெரும் வீரன் என்றும், பொழுது போக்கு என்ற பெயரில் வன்முறையையும், விடலைபருவக் காதலை புனிதமெனவும் காட்டி பள்ளிக்கூடக் குழந்தைகளை, இளைஞர்களை வழி மாற்றி, திரைப்படமும் தன் சமூகக் கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.

15. பகுத்தறிவு கொண்ட மனிதன் உண்மையில், சாதிக்காக, தன் முன்னேற்றத்தை சாய்த்துக் கொள்வதில்லை, மதத்துக்காகத் தன் மரணத்தை நிர்ணயிப்பதில்லை, எந்த ஓர்  அரசியல் தலைவனும் ஒரு தொண்டனுக்காகத் தீக்குளித்ததில்லை.....

16. அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனிடம் அன்பு காட்டியே வருகிறான், சாதி மதங்களைக் கடந்த ஒரு பிணைப்பில் இயைந்து வாழ்கிறான், இருந்தும் ஆய்ந்து அறியும் திறன் இல்லாமல், சக உயிரிடத்தில் அன்பு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வெறும் பொருட்களில் நிரம்பி விடும் ஒரு கலாச்சரமாக, காட்சி மாயையில் மனம் நிரம்பி விடும் ஒரு சூதாக, வெறும் உணர்ச்சிக் கூப்பாட்டில் தணிந்து விடும் விடுதலையாக நீர்த்துப் போகிறது....

17. இப்போதும், அந்த ஆப்பிள் மரம், அவனுடைய பொம்மைகளுக்காக அதன் கனிகளைத் தந்தது, பின் அவனுடைய வீட்டிற்காக, தன் கிளைகளைத் தந்தது, பின் அவன் சுற்றுலா செல்லும் கனவை நிறைவேற்ற, படகு செய்யத் தன் உடலினை தந்தது, கடைசியில் அவன் சாயத் தன் வேரினால் அவனைத் தாங்கியது என்ற பாடம் தான் பிள்ளைகளுக்குப் பாடத்திட்டத்தில் இருக்கிறது, ஒருநாளும் மரங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, அவைகளில் வாழும் உயிர்களைப் பற்றி , அவைகளின் உணர்வுகளைப் பற்றி, எதையும் கேள்விக்  கேட்டுத் தெளிய வேண்டும் என்ற அடிப்படையையும் நம் கல்விமுறை போதிப்பதேயில்லை,....

18. பெரும் பாடத்திட்ட சூழ்ச்சியில் நாம் பணம் செய்யும் எந்திரங்களாக, எல்லாவற்றையும் உணராமல் அசைப் போடும் மாடுகளாக, ஓட்டிற்குப் பின்னே, பிரியாணி ஆகும் ஆடுகளாகவே வாழ்கிறோம்!

காத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5355234.ece



No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...