நினைவலைகள் - தோழி
-------------------------------------
எங்கிருக்கிறாய் நீ
சூழும் பொய்களின்
கைகளில் எனை விட்டு
நீ எங்குச் சென்றாய்?
எங்கிருக்கிறாய் நீ
வட்டத்திற்குள் இருந்து
சாரல் பொழிந்திடும் சில
மரங்கள் உண்டு -
மழைப் பெய்திட உன்னை
எதிர்நோக்குகிறது மனம்
எங்கிருக்கிறாய் நீ?
தேங்கி நின்ற
கண்ணீரில் இருப்பது
தூசியா, துயரமா
உனையன்றி யாரறிந்தார்
மற்றுமொரு தாய்மை
கண்டிட விழையுது தினம்
எங்கிருக்கிறாய் நீ?
பலநாள் கண் திறவாமல்
கிடக்க, கரம் பற்றி மீட்டாய்
உயிர் கொடுத்த உன் ஸ்பரிசம்
வேண்டி தவிக்கிறது இக்கரம்
எங்கிருக்கிறாய் நீ?
ஒவ்வொரு முறையும்
பிழைத்து விழிக்கையில்
உனக்காகவே இந்த விழிப்பென்று
நினைவில் நிற்கிறாய் நிதம்!
எங்கிருக்கிறாய் நீ?
பேதங்கள் சாய்த்திடவில்லை
கடிகாரத் தேவையுமில்லை
ஒரு பணக் கணக்கும் இல்லை
நிரந்தர மனப்பிணக்கும் இல்லை
கண்கள் மறைத்த பொய்களில்லை
கரம்பற்றி உணராதா உண்மைகளில்லை
யாருக்கும் வாய்த்திடா வரம்
எங்கிருக்கிறாய் நீ?
எப்போதும் நாமும்
மழையும்
இப்போது நானும்
மழையும் மட்டும்
எங்கிருக்கிறாய் நீ?
தொலைவில் உன் மூச்சுக் காற்று
இதோ இன்றும் நான் சுவாசிக்கிறேன்
காற்றில் தேடுகிறது என் உயிர் நாளும்!
No comments:
Post a Comment