Thursday, 5 December 2013

குடி

பெயரில் பாதியை பெண்ணைப் போற்றும் பெயராகக் கொண்ட ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் ஒரு சமீபத்திய புதினத்தைப் படிக்க நேர்கையில், ஒரு பெரும் அதிர்ச்சியே கிடைத்தது!

குடிக்க விரும்பும் ஆண் மீது எந்தத் தவறும் இல்லை, இன்றைய காலக்கட்டத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்று, அவன் குடித்தால் என்ன? யாருடைய கையையும் பிடித்து இழுத்து வன்முறை செய்யவில்லையே, ஆணின் தவறுகளைச் சகித்துக் கொள்ள முடியாத பெண்களுக்கு வாழ்வில் எந்த மதிப்பும் கிடையாது, ஆகா ஓஹோ என்று, குடித்து விட்டு வாந்தி எடுத்து, தன்னிலை மறக்கும் கதாநாயகனை உத்தமனாகவும்........

குடிப்பது ஒரு பெரும் குற்றம், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு, ஒரு குடும்பம் சிதைந்து போவதற்கு அதுவே காரணம், குடிப்பவனைச் சகித்துக் கொண்டால், எல்லாத் தவறுகளையும் சகிக்க வேண்டி வரும், அதனால் தனக்கு வரப்போகும் கணவன் குடிக்கக் கூடாது என்று ஆசைப்படும் கதாநாயகியை அடங்காப்பிடாரியாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாய் ஒரு பெண் பேசுவது தவறு என்றும், குடித்தால் என்ன, நன்றாகப் படித்திருக்கிறான், சம்பாதிக்கிறான், அவனை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதாநாயகி மறுக்கும் ஒரு குடிகாரனை அவளுடைய தங்கையே மணந்து கொள்வது போலவும், குடும்பமே குடித்தால் என்ன, அதுதான் சரி என்று போற்றுவது போலவும், குடிகாரனை மறுத்த பெண் பெரும் திமிர் பிடித்தவள் என்றும், அவள் தனியாய் நிராகரிக்கப்பட்டு நிற்பது போலவும் கதையைக் கொண்டு சென்று முடித்து இருக்கிறார்.....

இவரின் கதைகள் தொலைகாட்சியில் நெடுந்தொடராகவும் வந்ததாகக் கேள்வி.....இவரை டாஸ்மாக் வியாபாரம் இன்னும் பெருக, மொத்த தமிழ்நாட்டு மக்களையும் குடிகாரர்களாக்க, ஒரு கொள்கைப் பரப்பு செயலராக நியமித்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது!

# ஆகவே ஆண்களே, நீங்கள் குடித்து, வாந்தி எடுத்து, தெருவில் அலங்கோலமாக விழுந்து கிடந்தால் அதில் தவறேதும் இல்லை, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு அவர்களும் குடிகரார்கள் ஆனால் தவறேதும் இல்லை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டி யாரேனும் இறந்தால் தவறேதும் இல்லை, ஒரு குடிகாரன் காமுகனாகி ஒரு பெண்ணைச் சீரழித்தாலும் தவறேதும் இல்லை, அவள் உங்கள் பெண்ணாய் இருந்தாலும்......

ஆகவே.......குடியுங்கள், நாட்டின் வருமானத்தைப் பெருக்குங்கள்!
feeling annoyed.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!