Thursday, 2 April 2020

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க_வேண்டும்?

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க வேண்டும்?
--------------------------------------------------------------


ஜின்னாவின் பிரிவினைக்குப்பிறகு, இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகளை வளர்த்தெடுத்தார்கள், காஷ்மீரை பலவந்தமாக ஆக்கிரமித்தார்கள், அந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி பல நூறு பேரை கொன்றுக்குவித்தார்கள், நாசகார சக்திகள், சோ எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள்! நிற்க!
கொஞ்சம் வரலாற்றின் உள்ளே சென்று சில முக்கிய விஷயங்களை பார்ப்போம், இங்கிலாந்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில் உருவானது இந்த பிரிவினை, இதில் ஜின்னா மட்டுமல்ல காந்தியின் பங்கும் இருக்கிறது, உண்மையில் முதன்முதலில் ஒன்றுபட்ட இந்தியாவில் இந்து முஸ்லிம் பேதமில்லாமல் லட்சக்கணக்கில் (ஜாலியன் வாலாபாக் உதாரணம்) கொன்று குவித்தது இங்கிலாந்து, உலகப்போரில் இந்தியா இவ்கிலாந்துக்கு துணையாக கூட்டணி சேர்ந்து அதே கொன்றுக்குவித்தலை செய்தது, ஆனால் கோடிக்கணக்கில் நம் மூதாதையர்களை இரக்கமின்றிக் கொன்று நம் வளங்களை கொள்ளையடித்து இன்றும் மிச்சமிருக்கும் பராம்பரிய மேல்தட்டு குணத்துடன் “ப்ளடி இந்தியன்” என்று நடத்தும் இங்கிலாந்தில் இந்த பெரும்பாலான டேஷ் பக்தர்களின் பிள்ளைகள் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருப்பார்கள்!
உலகப்போரின் சமயத்தில் இருந்து இன்றுவரை இந்தியாவுக்கு நண்பனாய் ரஷ்யா நிற்க, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போரில், இந்தியாவுக்கு நிகராக ஒரு வலிமையை வளர்க்க, அமெரிக்க தேர்ந்தெடுத்த நாடுதான் பாகிஸ்தான், தீவிரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள், இந்த அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டியில் இந்த தேஷ் பக்தர்களின் பிள்ளைகள், தலைமுறைகள் பல துறைகளில் மத்திய மட்டத்தில் இருந்து மேல்பட்ட பதவிகள் வரை அமர்ந்திருக்கும், அவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை, “ச்சே இந்தியாவா, நோ வே!” தேஷ் பக்தர்களின் வாரிசுகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன், மற்றவர்களை அல்ல!

அடுத்து சீனா, சீனப்பட்டாசுகள் தொடர்ந்து சீப்பு வரை வாங்குவது தேசத்துரோகம் என்று முழங்கும் பக்தர்களின் வாரிசுகள் இங்கேயும் உண்டு என்பது வேறு விஷயம், ஆனால் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி சிலையை, தேசப்பக்தர்களின் தலைவர் “மேக் இன் இந்தியா” என்று முழங்கிவிட்டு, 3000 கோடியை மட்டும் சீனர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து முடித்தார், வல்லபாய் பட்டேல் ஆன்மா கூட இதை ஏற்றுக்கொண்டிருக்காது! இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தியாகிறது! அடுத்து பசு வதை என்ற பெயரில் உள்நாட்டில் மனிதர்களை கொன்றுக்குவித்து, சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்துக்கு வந்தது, தெய்வமென கும்பிட்டுவிட்டு அதன் இறைச்சியை பதப்படுத்திய உணவுகளாக விற்பதும், காலணிகளாக மாற்றி ஏற்றுமதி செய்வதிலும் தேஷ் பக்தர்கள் உண்டு!

இதெல்லாம் சில உதாரணங்களே, வரலாற்றின் போர் பக்கங்களையும், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அரசியலின் மோசமான சதிராட்டங்களை எழுதினால் இந்தக்கட்டுரை நீண்டுவிடும், ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, அவர்கள் அரசியலையும் தேசத்தையும் குழப்பிக்கொள்வதில்லை, நாம் ஐந்து வருடமே நாட்டுக்கு ஊழியம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, அவரின் மோசமான திட்டங்களை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் என்று கூறுகிறோம், அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கொதிக்கிறோம், உண்மையில் நாட்டை நேசிக்கும் ஒருவன்தானே தன் நாடு மோசமான நிலைக்கு போவதைக்கண்டுத்துடிப்பான், பதறுவான், அந்த பதற்றம் தானே “போர் வேண்டாம்” என்ற வேண்டுதலோடு, தேர்தலுக்காக எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான அரசியலைச்சாடுகிறது?
அழகான இந்த நாடு, தேர்தல் சதிராட்டத்துக்காக சில முதலாளிகளின் லாபத்துக்காக யுத்த பூமியாவதை எந்த உண்மையான குடிமகனும் விரும்பமாட்டான், இராணுவத்தில் இருப்பவர்களின் உயிர்களும் மனித உயிர்கள்தான், அவர்கள் நாட்டைக்காப்பதற்காகவும், நீங்கள் மிக்சர் தின்றுக்கொண்டு, “போர் என்றால்...ப்ளா ப்ளா” என்று எழுதும் சுதந்திரத்திற்காகவும் இரவு பகல் பாராமல் உண்மையான தன் தேசப்பற்றை எல்லையில் உயிரைக்கொடுத்து நிரூபித்து இருக்கிறார்கள், உங்கள் மதவாத கட்சிகள் இந்து மதத்தின் வேறு எந்த மதத்தின் பிரதிநிதிகள் அல்ல, இந்தியாவைத் துன்பப்படுத்திய பல நாடுகளில் உங்கள் வளம் கொழிக்க உறவுக்கொண்டு, அடுத்தவரின் தேசப்பற்றைப் பேச உங்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை!

இந்தியா எல்லா வளமும் நிறைந்த ஒரு பன்முக கலாச்சார நாடு, பாகிஸ்தான் நம் அண்டை நாடு, தீவிரவாதத்தை ஒழித்து அவர்களும் நிம்மதியான வாழ்க்கையைப்பெறட்டும்!
வாழ்க பாரதம்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...