Wednesday 15 April 2020

தேர்தல்_என்பது_எதுவரை?!

அந்தப்பெண் மாலையில் வேலை முடித்து தன் இருசக்கர வாகனத்தில் அண்ணா மேம்பாலத்தின் மேலேறி, அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படி நிற்கும் காவலர்களை தாண்டி நுங்கம்பாக்கம் செல்ல இடதுபுறம் திரும்புகிறார், பின்னேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் தோள்பட்டையைப் பற்றி இழுத்து கழுத்தில் இருந்த 8 பவுன் தாலியையும், இன்னுமொரு சங்கிலியையும் பறித்துச்செல்கின்றனர், காவல்துறை அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படியே நிற்கிறது, காட்சி மாறி காவல்துறை புகார், நீதிமன்றம் என்று நகர்கிறது, தோழியின் செயினை வாங்கி, திருடனைப் பிடித்து கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் காட்டி, வழக்கை முடித்து, காவல்துறை வேறு ஒரு வழக்கில் மீட்டெடுத்தாகச் சொல்லி 4 பவுன் கல் வைத்த சிறு சிறு நகைகளைக் கொடுத்து வழக்கு முடிந்ததாக ஆவணப்படுத்துகிறார்கள், இதில். வழக்கின் செலவாக, தவிர்க்க முடியாத “லஞ்ச” வகையில் 50 ஆயிரத்துக்கும் மேல் செலவாக, கிட்டதட்ட 11 பவுன் இழப்பிற்கு கிடைத்தது 3.5 பவுன் நகை, அதுவும் 50 ஆயிரம் இழப்பு, கழுத்தில் காயம், மனவுலைச்சல்!
இன்னொரு பக்கம் பிரபல ஐடி அலுவலங்கள் நிறைந்த சாலை, பட்டப்பகலில் பைக்கில் இருவர் நடத்திக்கொண்டிருந்த பெண்ணிடம் கைபேசியை பறித்துச்செல்கின்றனர், சிசிடிவி கேமரா இருந்தும் 20 ஆயிர பேரத்தில் வழக்குப்பதிய காவல்துறை மறுக்கிறது, உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச்செல்ல, அது மறுபடியும் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கே விசாரணைக்கு அனுப்பப்படுகிறது!
இன்னொரு புறம், அரசாங்க அதிகாரிகளால் சான்றிதழ் தரப்பட்ட கட்டிடம் இடிந்து விழுகிறது, கடன் வாங்கியர்கள் தாள முடியாத சுமையில் சிக்குகிறார்கள், அதிகாரிகள் வழக்கம் போல உலா வருகிறார்கள், இப்படி ஒவ்வொரு துறையிலும் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் கற்பனை என்றே வைத்துக்கொள்ளுங்கள், நாள்தோறும் இந்தக்கற்பனை காட்சிகள் நிதர்சனத்தில் தமிழ்நாடு முழுக்க பரவலாக, குறிப்பாக சென்னையில் அதிகமாக நிகழ்கிறதா இல்லையா? எல்லா வழக்குகளும் தீர்க்கப்பட்டால் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்கிறதே ஏன்?

ஊழல்களை விட்டுவிடுவோம், வழிப்பறி? ஒவ்வொரு வழிப்பறியிலும் திருடன் பிடிபட்டால் திருட்டு ஏன் தொடர்கிறது? திருடினால் பிடிபடுவோம் என்று தெரிந்தும் ஏன் திருடுகிறார்கள்? உண்மையில் திருடர்கள் பெரும்பாலும் பிடிபடுவதேயில்லை, மாட்டிக்கொண்டால் ஒரு திருடன் பல வழக்கு, மாட்டாத வரை (சம்பந்தபட்டவர்களின் கருணை இருக்கும்வரை) பல திருட்டுகள், அதே திருடர்கள் இல்லையா?

சாதாரண வழிப்பறிக்கொள்ளையின் பின்னே இருக்கும் அரசியலே மோசமாக கட்டுகட்டான பணத்துடன் மறைந்த கண்டெயினர் லாரிகள் வரை தொடர்ந்தது! இப்படி சிறிதும் பெரிதுமாய் எத்தனை நடந்தாலும் மக்கள் எதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல்தானே வளர்ந்து இன்று எத்தனை எளிதாக இராணுவத்தின் இழப்பை தேர்தல் களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது?

ஒவ்வொரு அடியிலும் லஞ்சமும் ஊழலும் கரையானைப்போல தேசத்தை அரித்துக்கொண்டிருக்கும்போது, நம் வீட்டின் கதவுகள் பத்திரமாய் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்! ஒரு பன்முகம் கொண்ட தேசத்தில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், காட்டை அழித்து சிலை எழுப்பி, ஒரு மதத்தை வியாபார பொருளாக்கி மதக்கூட்டமென்ற பெயரில் நடத்தும் சாமியாரின் நிகழ்ச்சிகளுக்குச்செல்கின்றனர், இதில் மக்கள் யாரிடம் போய் நீதி கேட்பார்கள்?
தேர்தல் வைத்து, ஆட்சி அதிகாரம் கொடுத்தும், நாட்டை பொதுநல வழக்குகளே காப்பாற்றுகிறது, பொதுநல வழக்குகளில் தீர்ப்பாகும் போது, மக்களின் நலனில் மெத்தனமாய் இருந்த அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தானே? யாரைப்பற்றி புகார் சொல்கிறோமோ அவர்களிடமே மீண்டும் செல்லவேண்டும், யாரை ஊழல் செய்தவர்கள் என்று ஒருமுறை ஒதுக்குகிறோமோ அவரையே பித்தனுக்கு எத்தன் மேல் என்று அடுத்தமுறை வாக்களித்து அரியணையில் அமர வைக்கிறோம், “கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர்” என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் அவர்களே, இதில். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலில் திளைக்கும் அதிகார வரம்பு அப்படியே இருக்கும், இதில் மாற்றம் என்பது எப்படி வரும், ஏமாற்றத்தைத் தவிர?

கல்வி தொடங்கி சுடுகாடு வரை ஊழல், வழிப்பறி திருட்டுத்தொடங்கி அரசியல் வரை திருடர்கள், இதில் இப்போதைய தேர்தல் மாற்றம் கூட யார் குறைவாய் ஊழல் செய்வார்கள் என்பதில்தானே தவிர நேர்மையான ஒரு ஆட்சிக்காக அல்ல!

எத்தனைக் கொள்ளையடித்தாலும் அதை பரிபூரணமாய் அனுபவித்து சாகும்போதும் அதை எடுத்துச்சென்றவர் யாருமில்லை, எத்தனைதான் அன்பைப்பற்றி பேசினாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு செத்தப்பிறகு ஊர்மெச்ச படையலிடும் பிள்ளைகளைப்போல, இயற்கை, “மரணம் நிதர்சனம், அதுவும் உங்களைப்போன்றவர்களுக்கு (ஊழல்வாதிகளுக்கு) கொடூர மரணம் நிச்சயம்” என்று எத்தனை முறை நிரூபித்தாலும் கொள்ளைகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன!
ஏதோ ஒரு தலைமுறை மாற்றத்தை முன்னெடுக்கும் என்று நம்புவோம், அதுவரை வரும் தேர்தலில் மாற்றமா ஏமாற்றமா என்பதை ஆட்சி மாற்றமே உணர்த்தும்!
#தேர்தல்_என்பது_எதுவரை?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!