Thursday, 16 April 2020

சாலை

இன்று தரமணியின் சுங்கக்கட்டண சாலைக்கு முன்பு இருந்த இருளில் ஒரு முதியவர் சாலையில் விபத்தில் சிக்கி அமர்ந்திருக்க, காரை நிறுத்தி “ஆம்புலன்ஸூக்கு கால் பண்ண வேண்டுமா?” என்று அருகில் இருந்தவர்களை கேட்கும்போதே முதியவரை சரியாக கவனித்தேன், அவரின் உடல் முழுக்க இரத்தம், கால் பாதமொன்று துண்டாகி தனியே கிடந்தது, முதியவர் தன் இரு கைகளையும் தடவிக்கொண்டிருந்தார், அவர் பெரும் அதிர்ச்சியில் சமைந்திருப்பது புரிந்தது, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களும் அருகிலேயே இருந்தது, முதிய வயதில் நடமாடும் போதே பெற்றவர்களை பாரமாக நினைக்கும் காலத்தில் இந்த முதியவர் தன் காலையும் இழந்து என்ன செய்வார் என்ற கனத்தச் சிந்தனையில் பயணம் தொடர்ந்தேன்! 

சோழிங்கநல்லூரில் இருந்து தரமணியின் மத்திய கைலாஷ் வரையிலுமான நெடுஞ்சாலையில் வழிநெடுக மின்விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை, பகல் நேரத்தில், இரவு நேரத்தில் சாலையை கடக்க, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி குதித்து தற்கொலை முயற்சி செய்வதில் சென்னைவாசிகளுக்கும் வெளியூர் பயணிகளுக்கும் அலாதி விருப்பம், மக்களின் சாகும் ஆசையை செவ்வனே நிறைவேற்றும்
பொருட்டு, அந்தச் சாலை நெடுகிலும் போக்குவரத்து காவல்துறையும் இல்லை, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு சாலையின் விளக்குகள் பற்றிய கவலையில்லை, அது வேறு ஒரு கண்ட்ராக்டர் வேலையாக இருக்கும்!
போக்குவரத்து காவல்துறையின் பக்கத்தில் பலமுறை புகார் செய்தும், இங்கே நட்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை, சாலை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் விபத்துகளை தடுக்காது என்று அதிகாரிகளுக்கு புரிய வேண்டும்!

வாசலில் எறும்புகள் மண்துகள்களை பரப்பி சிறு புற்று எழுப்பியிருந்தால் அதைப்பற்றிய கவலையின்றி வாசல் கூட்டித்தள்ளுவது போல, மொத்தத்தில் இந்த நாட்டில் மோசமான சாலைகளின் கட்டமைப்பில், சட்டத்தின் விதிமீறல்களில், அலட்சியத்தில் மக்கள் உயிரிழக்கும்போது அவ்வளவுதானே என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடந்துகொள்கிறார்கள், ரெயிலில்செல்லும் ஒரு அமைச்சருக்கு கூட ஓராயிரம் காவல்துறை சாலையில் அணிவகுக்கும் மாநிலத்தில், அதன் தலைநகரின் வீதிகளில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!😡😞

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...