Thursday 16 April 2020

கண்காணிப்பும்_எதிர்வினையும்

#கண்காணிப்பும்_எதிர்வினையும்
1. 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி ஆட்டோ டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், கண்காணிப்பு கேமரா மூலம் இரண்டு டிரைவர்கள் கைது, மேலும் சிலரை காவல்துறை தேடுகிறது

2. எலியட்ஸ் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடி, நடைபாதையை அசுத்தமாக்கிய இளைஞர்களை கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்து சாஸ்திரி நகர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் அவர்களை வைத்தே நடைபாதையை சுத்தப்படுத்தி நூதனமாக தண்டனை தந்திருக்கிறார்

3. சேலத்தில் பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் நோக்கி வந்த பள்ளி வாகனம் கொன்றிருக்கிறது!

இந்த மூன்று செய்திகளிலும் முக்கியமான விஷயம் “கண்காணிப்புத்தான்”. காவல்துறை நகரெங்கும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறது, ஆனால் போக்குவரத்து காவல்துறையின் இருப்பும் நடமாட்டமும் குறைந்து வருகிறது (தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே), கேமராக்களை நிறுவிவிட்டு, அதை தொடர்ந்து கண்காணித்து குற்றத்தை தடுக்காமல், வெறும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டும் பயன்படுத்திய குறைபாட்டின் உதாரணம் தான் முதல் செய்தி, அதற்கு மேலும் சொல்ல வேண்டுமென்றால் நகரம் முழுக்க சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்கிறது, அதிலும் அரசுப்போக்குவரத்து வாகனங்களை காட்டிலும் அதிக விதிமீறல்களை உபேர், ஃசுவிங்கி, சோமேட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் செய்கிறார்கள், “ப்ச் கேமராதானே?” அவ்வளவுதான் இந்தக் கேமராக்களின் மீதான கணிப்பு! ஆன்லைனில் கேமராக்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சிறுமியை குற்றம் நிகழும்முன்னே காப்பாற்றியிருக்கலாம்தானே?
இரண்டாவது செய்தியில், குப்பையைப்போட்டவரை மெனக்கெட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் குப்பையில் கிடந்த கேக் பெட்டியின் முகவரி வைத்து கண்டுபிடித்து, நூதனமாய் தண்டனை வழங்கி திருத்தியதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, மற்றவர்கள் அலட்சியமாய் கடக்கும் விஷயத்தை சிரத்தை எடுத்து சீர்செய்யும் இதுபோன்றவர்களால் தான் நாட்டில் இனி மாற்றம்
மெல்ல சாத்தியமாகும்!

மூன்றாவது செய்தியிலும், முக்கிய பங்கு கண்காணிப்புத்தான், பள்ளிக்கு குழந்தைகள் வரும்போது, ஒன்று பெற்றவர்கள் வகுப்புவரை சென்றுவிட வேண்டும் அல்லது அதை அனுமதிக்காத பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும், பள்ளி வேன்களில், ஆட்டோக்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு பெரும்பாலும் கேள்விக்குறிதான், நம்முடைய நாட்டில் பாதுகாப்பு என்பது ரியாக்டிவ்(reactive) தான், எதிர்வினைதான், அதாவது எதுவும் நிகழ்ந்த பின்னரே வருத்தப்பட்டு செயலாற்றுவது, 250 கிலோ வெடிபொருட்களை கொண்டுவந்து இராணுவ வீரர்களை கொல்லும்வரை தூங்கிவிட்டு பின் எதிர்வினையாற்றுவதும் ஒரு நல்ல உதாரணம்! அங்கே தொடங்கி சாலையில் குழந்தைகளை கடத்துவது வரை நம் கண்காணிப்பு என்பது எதிர்வினையாற்ற மட்டுமே!

அதுதான் ஓட்டுப்போடுவதிலும் நிகழ்கிறது, ஓட்டுப்போடும் போது பணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அதைச் செய்துவிட்டு,பின் 5 வருடம் குத்துதே குடையுதே என்று அவதியுற்று மீண்டும் அதையே செய்கிறோம்!
எதிர்வினையோ இல்லை முன்கூட்டியே யோசித்து செயல்படுவதோ, எதையும் சிறப்புற செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறை வாழும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!