Wednesday 15 April 2020

போங்கடா_டேய்!

#போங்கடா_டேய்!
ஓட்டு கேட்டு போகும்போது
ஸ்னைப்பர் துப்பாக்கியால்
நீங்கள் சுட்ட உயிர்கள் தெரிகிறதா?

சாலைகளுக்காக நிலங்களை பறிகொடுத்தவர்களின்
கண்ணீர் கேட்கிறதா?
பசுக்களின் பெயரால்
உங்கள் மதவெறியை தீர்த்துக்கொண்டு
பசுக்களின் இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம்
பெற்ற வியாபார தந்திரம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ்நாட்டுக் கல்வியை ஆழப்புதைக்க நீட்டுக்கு
கையெழுத்திட்ட உங்கள் கூன் முதுகு ஞாபகத்தில் எழுகிறதா?
நாடுதோறும் சாராயக்கடைகள் திறந்து
அப்பன்களை குடிகாரன்களாக ஆக்கியதில்
தற்கொலை செய்துக்கொண்ட
பெண்கள் அவர்தம் பிள்ளைகளின்
அவலக்குரல் கேட்கிறதா?

பிஞ்சுகளையும் பெண்களையும் கொடூரமாக
அரசியல் வாரிசுகள் அல்லைக்கைகள் சிதைக்க
சிதைந்துப்போன அந்தச் சடலங்களின்
கூக்குரல்கள் காதில் விழுகிறதா?

நாள்தோறும் ஏழைகள் நலிந்துக்கொண்டிருக்க
கந்துவட்டிக் கொடுமையில்
உங்கள் கண்டுகொள்ளா தன்மையில்
உயிரோடு எரிந்துப்போன குடும்பத்தின்
சிதைகளின் நெருப்புச் சுடுகிறதா?

எதிர்த்தவர்கள் என்ற காரணத்திற்காக
எழுத்தாளர்களை சுட்ட குண்டுகளின்
வெடிச்சத்தம் கேட்கிறதா?
காப்பர் ஏற்றுமதிக்கு
ஒரு மாவட்டத்தின் காற்றை
நச்சாக்கிய நெடி மூக்கில் ஏறுகிறதா?

ரஷ்ய அணுக்குப்பைகளுக்கு மீண்டும்
ஒரு நிலத்தின் மக்களை விரட்டியடித்த காட்சி
மனதில் எழுகிறதா?
மகிழ்ச்சியான மக்களின் பட்டியலில்
இந்தியா அடிமட்டத்திற்கு செல்ல
அதானிகள் அம்பானிகள் அகர்வால்கள் மட்டும்
உலக பணக்கார வரிசையில்
முன்னேறிய முரண் புரிகிறதா?

சாதரண இந்துக்கள் இஸ்லாமியர்கள்
கிறிஸ்தவர்கள் எல்லாம் மனிதர்களாக வாழ
திடீரென இந்துக்களை பயங்கரவாதிகளாய்
மாற்றிய உங்கள் முட்டாள்தனம் உறைக்கிறதா?

எல்லா ஏழைகளுக்கும்
வங்கிக்கணக்குக்கொடுத்து அவர்களின்
சில்லறைகளை சுரண்டிக்கொண்டு
மல்லையாக்களை மோடிக்களை
கோடிகளோடு ஓடவிட்ட கேடித்தனம்
நினைவடுக்கில் இருக்கிறதா?

ராணுவம்வரை நீண்ட சவப்பெட்டி ஊழலும்
விதர்பாவின் மர்மக்கொலைகளும்
மர்மமாக முடிந்த ரகசியம் புரிகிறதா?
ஆட்சிக்காலம் முழுமையும்
அரசனாக தரையில் கால் பதியாமல்
காலம் முடியும் நேரத்தில் சோக்கிதாராக
மாறிய வேடிக்கை விநோதம்
காணக்கிடைக்கிறதா?

உங்களுக்கு எதுவும்
புரியாது தெரியாது கேட்காது
எங்களுக்கும் மறதி குலத்தொழில்தான்
நீங்கள் சுடுகாட்டில் நின்றுகூட
ஓட்டுக்கேட்கலாம்
பொய்கள் சொல்லலாம்
நாங்கள் திருடனுக்கும் கொலைகாரனுக்கும்
மாறி மாறி ஓட்டுப்போட்டு மரித்துபோவோம்!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!