Tuesday, 8 November 2016

ஸ்பெயின் 2

ஒருநாள் முழுதும் ஸ்பெயின் நகர வீதியில் நடந்து நடந்து கைபேசியில் எடுத்த புகைப்படங்கள்! அற்புதமான வீதிகளும், சுத்தமான சாலைகளும், அழகிய துறைமுகமும், நிறைய உணவு விடுதிகளும், நிறைய வகை மதுபானங்களும் (அங்கே போய் நான் லெமன் ஜூஸ் தான் குடிச்சேன்னு சொன்னா நம்பனும்!) பலவூர் நாட்டு மக்களும் என மிகக் கொண்டாட்டமாய்ப் போனது அந்தப் பொழுது!

உணவென்று வரும்போது மட்டுமே என் நிலைமை திண்டாட்டமானது, கடல் உணவுகளையாவது சாப்பிடலாம் என்று நினைத்தபோது, பாதி வெந்த உயிரினங்களை அதன் முழு வடிவத்தில் தட்டில் பரப்பிய போது, பல வருடங்களாக இவைகளைச் சாப்பிடும்போது வராத துக்கம் எல்லாம், மொத்தமாய் வந்து தொண்டையில் வந்து அடைத்துக் கொண்டது, இதையெல்லாம் அம்மா கிட்டே கொடுத்தா எவ்வளவு அழகாச் சுத்தம் பண்ணி மசாலா போட்டு வறுத்துத் தருவாங்க என்று நினைத்து வந்த துக்கம் அது!) எல்லாவற்றையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, மிஞ்சியிருந்த சாதத்தின் அளவைப் பார்த்தால் ஒரு மூன்று தேக்கரண்டி அளவு இருந்தது! அப்படியே பச்சை மீன் வாசம் வந்ததால் சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு, அந்தப் பொழுது உணவை ஒரு ஐஸ் கிரீமில் முடித்தேன்!

குழந்தைகளை வைத்து யாரும் பிச்சையெடுக்கவில்லை, ஆனால் "என் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள், எனக்கு வேலையில்லை, உதவுங்கள் என்று அவர்களின் புகைப்படத்தை வைத்துக் கைக் கூப்பி, அதைத் தரையில் வைத்து, அதன் மீது தலையை வைத்து விழுந்து உதவிக் கேட்கிறார்கள்! மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ஸ்பெயின் நகர மக்கள் உதவும் குணம் அதிகம் கொண்டவர்கள் என்று என்னுடன் வந்த ஒரு டச்சு நாட்டவர் சொன்னார்!

புகைப்படங்களைக் கொண்டு பிச்சையெடுப்பவர்களைக் கடந்தால், தன் உருவத்தையே முழுதாய் மாற்றிக் கொண்டு, விதவிதமான கதாபாத்திரங்களாய்த் தன்னை உருமாற்றி, அந்தத் துறைமுக வீதி வழியே நிற்கிறார்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் விரும்பும் சில்லறையை அவர்களின் உண்டியலில் போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம், நானும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்!

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு இந்தத் துறைமுக வழியேதான் பயணத்தைத் துவங்கினாராம், அவர் நினைவாகச் சிலை வைத்திருக்கிறார்கள், மிகப்பிரமாண்டமாய் இருக்கிறது அது, கைபேசியில் ஒரு ஷாட்டில் அடைக்க முடியவில்லை!

துறைமுக மேம்பாலத்தில் நடந்தபோது, கீழே ஓடிய, பரந்தக் கடலைப் பார்த்தபோது, நீச்சல் தெரியாதது நினைவுக்கு வந்தது, அந்த மரப்பாலத்தில் அத்தனை மனிதர்களும் இருசக்கர வாகனங்களும் ஏறியபோது, நம் ஊர்ப் பாலங்களின் தரத்தின் நினைவில் அந்தப் பாலத்தை விட மனது பயத்தில் ஒரு மெல்லிய ஊசலாட்டம் போட்டது!

அப்படியே கடந்து பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நுழைந்தோம், கொளுத்தும் வெயிலில் என்னுடைய அப்போதையத் தேவை ஒரு ஜோடிக் காலுறைகள், வாங்கி அணிந்தபின்தான் நடக்க முடிந்தது, அதுவரை அந்த வெயிலில் பாதங்கள் தீய்ந்து கொண்டிருந்தது!

உடன் வந்தவர்கள் கடைகளில் நுழைய, நானும் மற்றொருவரும் ஓரமாய் நின்று மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க, எதிரே இருந்த நகரும் படிக்கட்டுகளில் இருந்து ஒரு பெண் கதறி கதறி அழுது கொண்டே வர, "அந்தப் பொண்ணு ஏன் இப்படித் தேம்பி தேம்பி அழுவுறா, ஐயோ பாவம்" எனக் கூற அருகே இருந்த அமெரிக்கர், "லவ் பிரேக் அப் ஆகியிருக்கும்" என்றார் (ச்சே...எல்லா ஊருலேயும் இந்த ஆம்புளைப் புள்ளைங்களுக்குப் பொண்ணுங்களே அழ வைக்கறேதே வேலையா போச்சு, மனதுக்குள் திட்டிக் கொண்டேன் :-p

இங்கேயும் பெண்கள் கண்கலங்கிப் பார்த்ததுண்டு, ஆனால் அந்தப் பெண் சுற்றுப்புறம் சூழ்நிலை என்று எதையும் நோக்காமல் அத்தனை சத்தமாய் அழுதுக் கொண்டிருந்தாள், (யாரும் அவளைத் தேறுதல் படுத்துவது போல் காணோம்) நான் ரொம்ப வருத்தப்படுவதை அறிந்த நண்பர், "அதெல்லாம் சரியாயிடும், இன்னொரு பாய் பிரெண்ட் கிடைச்சா சரியாய் போய்டும்" என்றார்! "அந்தப் பொண்ணு அதுக்குதான் அழறா என்று என்ன நிச்சயம், வேறு ஒரு பிரச்சனையா கூட இருக்கலாம்தானே?" என்றேன், "ம்ம் சரிதான்" என்று ஆமோதிக்க, ஒருதலைக் காதலுக்கே அரிவாளைத் தூக்கும் நம்ம ஊரு பையன்களின் வீரத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் தோன்றிய அதைப் பற்றிய கற்பனையில் மனம் செல்ல, சென்றவர்கள் வர, அங்கிருந்து மீண்டும் நடந்தே உணவகத்துக்குச் சென்றோம்!

ஹார்ட் ராக் கஃபே என்ற பிரபலமான உணவகம் மற்றும் மதுபான விடுதிக்குள் நுழைந்தேன், தன்னுடைய பத்துப் பன்னிரண்டு வயது மகனுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் அப்பா தனக்குப் பியர் வாங்கிக் கொண்டு அமர்ந்தார்!

எல்லா வயதிலும் ஆட்கள் இருந்தாலும், சிறியவர்களுக்கு அங்கே எந்த வித மதுபானத்தையும் அவர்கள் தரவில்லை, அது சட்டம் என்றார்கள்! விதவிதமான பெயர்களில் எத்தனை விதமான பானங்கள் என்று எலுமிச்சை, புதினாவும் கலந்த ஒரு நீரை அருந்திக் கொண்டு மற்றவற்றை வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்!

உடன் வந்த சக அமெரிக்க அலுவலகத் தோழி, குழந்தைகளுக்குச் சில பரிசுகளை வாங்க வேண்டும் என்று கடையில் நுழைய, அங்கே எல்லாம் இந்திய முகங்கள், அடடா நம்ம ஊரு போல இருக்கிறதே என்று நுழைந்து, உடைந்த இந்தியில் பேசினால் அந்தக் கடையிலிருப்பவர்கள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்கள் என்று தெரிந்தது!

ஒரு பாகிஸ்தானிய ஊழியர் இந்திய முகத்தைப் பார்த்தப் பரவசத்தில் வாங்கும் பொருட்களுக்குத் தள்ளுபடித் தர, அமெரிக்கத் தோழிக்கு மிகுந்த ஆச்சரியம், அந்தச் சில நிமிடங்களில் தன்னுடைய நாடு குடும்பம், குழந்தை என்று சொல்ல ஆரம்பிக்க, கடல் கடந்து வரும் மனிதர்களுக்குத் தம் மண்ணின் நினைவுகளைப் பகிரக் கிடைக்கும் எந்த வினாடியும் அவர்களுக்குப் பரவசத்தைத் தரும் என்று நேரில் மீண்டும் உணர்ந்து கொண்ட தினம் அது! மிக மரியாதையாக "அண்ணா!" என்று விளித்து, என் உடைந்த இந்தியில் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன், ஒன்றும் புரியாமல் திருத் திருவென என் அருகில் விழித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற அது போதுமானதாய் இருந்தது!

அழகான நகரத்தில் ஒரு சிறிய ஆபத்தும் இருக்கிறது, ஒரு பெண் நிர்வாணமாய்ப் போனால் கூட அங்கே எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் உங்கள் மணிபர்ஸை, அல்லது கைப்பையை அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கவனிக்காமல் செல்வீர்களேயானால், அது வேறொரு கைக்குப் போகும் அபாயம் இருக்கிறது! இங்கே வழிப்பறித் தவிர்க்க நமக்குக் கவனம் அவசியம்!

விமான நிலையத்தில் கூட உங்கள் பொருட்கள் பாத்திரம் என்று அரைமணிக்கொருதரம் அறிவிப்புச் செய்து கொண்டே இருக்கிறார்கள்!
நான்கு மொழிகளை அரசு மொழிகளாகக் கொண்டிருக்கிறது, இருபத்திரண்டு மொழிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது என்று அந்த ஊர் மனிதர் ஒருவர் சொன்னார், விமான நிலையத்திலும் நான்கு மொழியில் அறிவிப்புச் செய்கிறார்கள்!

அழகிய நகரத்துக்கு ஒரு திருஷ்டிபோல் திருட்டுக் குற்றங்கள்!
கண்ணில் ஒரு காவல்துறை நண்பரைக் கூடக் காண முடியவில்லை, ஒரு வழியாய் இரண்டு பேர்களைக் கண்டேன், அவசரமாய் அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன், அவர்களை விட அவர்களின் புல்லட் அட்டகாசமாய் இருந்தது, ஒரு காளைமாட்டின் ஆகிருதியுடன் அது இருந்தது, ஆண் பெண் என இருபாலாருக்கும் ஒரே மாதிரி வாகனம் தான்! இருந்தாலும் எங்க ஊருப் போலீசுக்குக் கொடுத்து இருக்கிற சூப்பர் சைக்கிள் மாதிரி ஆகுமா என்று தோன்றியது, ஒருவேளை அவர்கள் காவல்துறையின் சைக்கிளைப் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? இங்கே ஒன்றுமே செய்யாதா எல்லா அரசியல்வாதிகளுக்கு இன்னோவாவும், திருடனைப் பிடிக்கவேண்டும் என்று பணிக்கப் படும் கடைநிலைக் காவலர்களுக்குச் சைக்கிளும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எங்கேனும் யாரும் சிலாகிக்கலாம்!

வீதியில் கலைஞர்கள் ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தாவிக் குதிக்கிறார்கள், ஒலிம்பிக்கில் பார்த்ததை வீதியில் பார்க்க முடிகிறது, ஒரு சில நிமிடங்கள் அதைக் காணொளிப் பதிவாக எடுத்தேன்! பிறகு பழமையான ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்துக்குச் சென்றேன், நிமிர்ந்துப் பார்த்துக் கழுத்துதான் வலித்தது, அத்தனை பெரிதாய் இருக்கிறது, துண்டுத் துண்டாய் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது! அதன் வாயிலிலும் பிச்சைக் எடுக்கிறார்கள், "கோவிலுக்குச் சிலர் பிச்சையெடுக்க, வெளியேவும் சிலர் பிச்சையெடுக்கிறார்கள்" என்று எங்கோ படித்த வாக்கியம் நினைவில் வந்து போனது!

சில இளைஞர்கள் சேர்ந்து, புதுவிதமான நடனம் ஆடி, காசு கேட்கிறார்கள், அதையும் ஒரு சில நிமிடங்களே காணொளிப் பதிவாக எடுத்து வைத்துக் கொண்டேன்!

இறுதியாக உணவுச் சுற்றுலா என்று ஒருவரிடம் அழைத்துச் செல்ல, நல்ல பசியோடு அதற்கெல்லாம் செல்லக் கூடாது என்று அலுத்துக் கொள்ள வைத்த சிறிய பயணம் அது, ஸ்பெயினைப் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விவரங்களை ஒருவர் அரைமணிநேரத்துக்கு மேல் ஓரிடத்தில் சொல்லி, ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார், அங்கே உணவு வந்ததும் அதைச் சாப்பிடவிடாமல் மீண்டும் அந்த நகரத்தைப் பற்றி அரைமணிநேரத்துக்கு மேல் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, சாப்பிடச் சொன்ன போது, உணவு ஆறிவிட்டிருந்தது! எங்களோடு ஒரு சீனத் தம்பதியும், ஒரு வயதான அமெரிக்கத் தம்பதியும் எங்கள் எதிரே அமர்ந்திருந்தனர். ருமேனியா, அமேரிக்கா, ஸ்பெயின், ஹாலந்து, சீனா, கனடா, இந்தியா, மலேஷியா என்ற அற்புதமான பலவேறு நாட்டுக் கலவையில் அமைந்தது அந்தச் சந்திப்பு!

என் எதிரே இருந்த முதிய பெண்மணிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும் என்றும் தோன்றியது, அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, கணவர் உதவி செய்து கொண்டிருந்தார், தனக்கு அல்சர் இருப்பதாகவும் சாப்பிடுவதற்கு முன் ஏதோ மாத்திரை சாப்பிடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை விழுங்கிய அந்தப் பெரியம்மா, பசியால் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, சற்றுக் குளிரில் நடுங்கிக் கொண்டு பரிதாபமாய் (பசியில் மட்டும் வரும் ஒரு பரிதாப லுக் அது) முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க, சட்டென்று அவர், "நீ ரொம்ப அழகாயிருக்கே, உன் முகம் ஓவியம் மாதிரியிருக்கு, உனக்கு மூணுக் குழந்தைதானே?" என்றார், (பசி வந்தா பரிதாபமா முகத்தை வெச்சுக்குறே என்ற அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது), அடடா கடல் கடந்து ஒருவர் புகழ்கிறாரே என்று சற்றுப் பரவசம் ஏற்பட்டாலும், மூன்று குழந்தைகள் என்று சொன்னதில் திகில் வந்தது, "இல்லை இல்லை எனக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குழந்தைகள், அதுவே போதும்" என்று அவசரமாக மறுத்தேன், "நிச்சயமா உனக்கு மூணாவது குழந்தை வேண்டாமா?" என்றார், இப்போது பசிப் போய்க் கிலிப் பிடித்துக் கொண்டது, ஏதோ அரச மரத்துக் குறி ஜோசியர் மாதிரி அந்தப் பெரியம்மா பேசவும்!

பிறகு, அவர் இந்தியாவைப் பற்றியும், இங்கே அவர் ஒரு சாமியாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றும், இந்தியச் சித்த மருந்துகள் மேல் தனக்கிருக்கும் அபார நம்பிக்கையைப் பற்றியும் விவரித்தார், அந்த முதிய வயதிலும் அவர்கள் இருவரும் கப்பலில் உலகச் சுற்றுலா செல்வதற்காகப் பார்சிலோனா வந்திருப்பதாகச் சொல்ல, ஐம்பது அறுபது வயதிலேயே வயசாகிவிட்டது முடங்கிக்கிட எனும் இந்திய வாழ்க்கை முறைகள் மனதை வருத்தியது!

அவர்களுக்குச் சித்த மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைத் தந்து, அவர்கள் பயணம் சிறக்க வாழ்த்தி, சோர்வாய் இருப்பதாய்ச் சொல்லி, நானும் அமெரிக்கத் தோழியும் அந்த உணவுச் சுற்றுலாவில் இருந்து கழண்டுக் கொண்டோம்!

அப்படி இப்படி என்று ஒரு காற்றைப் போல அந்த ஒருநாள் அலைந்தேன், நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றுப் போனது, பலமணி நேரம் பயணம் செய்து, ஸ்பெயின், ஜெர்மனி கடந்து, சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கி, நிலையத்தின் உள்ளே நடந்து வந்த போது, "நடைபாதையில் பான் பராக் எச்சில் சுவரோரத்தில் வழிந்தும், பெயர்ந்துப் போன நடைபாதைகளும், அட்டைப்பெட்டியைப் போல இம்மிகிரேஷன் கௌண்டர்களில் யாருக்கோ டெண்டர் கொடுத்து வாங்கிய டப்பா காமெராக்களும், சுவற்றில் கண்ணாடிகளில் போட்டிருந்த ஒட்டுக்களும் நம் ஊர் மணத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது!!

ஆழ்ந்து சுவாசித்தேன், மழைப் பெய்து கொண்டிருந்தது! எப்படியானாலும் சென்னை!!!
#ஸ்பெயின் #Spain_2

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...