Tuesday 8 November 2016

நீயும் இந்தியனே!

குண்டும் குழியுமான ரோடுகளில்
பயணிக்கும்போது
சாலைகள் இல்லாத பாதைகளில்
உருளும் போது
சமையல் எரிவாயு உருளைக்கு
அதிகப்பணம் கொடுக்கும்போது
தீபாவளி, பொங்கலென்று
அரசு வருமானம் உள்ளவனுக்கும்
உழைத்த பணத்தை
உவப்பில்லாமல் தரும்போது

அவசர ஊர்தியின் பயணத்தையும் கூடத்
தேங்கவைக்கும் மந்திரிகளின்
அலுவல் செல்லும் போலி அவசரத்தைக்
காணும்போது
யாரோ ஒரு பெண்ணின் உறவுகளை
சாராயக்கடை வாசலில்
வீதியெங்கும் கடக்கும்போது
அரசு அலுவலகங்களில்
பிச்சைக்காரர்களைப் போல்
மக்களை நடத்தும் படித்த முட்டாள்களை
நோக்கும்போது
சாதியென்றும் மதமென்றும் நம் சக மனிதர்கள்
தாக்கப்படும்போது
விரும்பமில்லா மொழியைத்
தலையில் திணிக்கும் போது
எளிதில் நடந்துவிடும் குற்றத்தில்
நீதியை வேண்டினால் மட்டும்
நடையாய் நடக்க வைக்கும்
சட்ட அமைப்பின் சிலந்திக்கூட்டில்
சிக்கும்போது
மழை வெள்ளத்தில்
உயிர்களும் பொருட்களும்
அடித்துச்செல்லப்படும்போது
பார்க்கும் திசையெங்கும்
மழலைகள் பிச்சைக்காரர்களாய்
குழந்தைத் தொழிலாளர்களாய்த்
திரியும் போது
கல்வியும் மருத்துவமும்
பணத்தின் வசம் வாழும்போது
போராடுபவர்கள் தேச விரோதியெனச்
சித்தரிக்கப்படும் போது
மீண்டும் ஒருவனோ ஒருத்தியே வந்து ஒட்டுக்கேட்கும்போது
ஏதோ ஓர் இலவசத்தைப் பெற்றுக்கொண்டு
இத்தனையையும் கடக்கமுடிந்தால்
#நீயும் இந்தியனே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!