Tuesday, 8 November 2016

மக்கள் ஆட்சி

மாணவிகளின் மரணத்திற்கு மனித உரிமை ஆணையம் லாரிகளின் இயக்கத்தின் விதிமுறைகளைப் பற்றி, இது போன்று ஐந்து ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எத்தனை என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
மறுபுறம் போக்குவரத்து அதிகாரிகள் வேகத்தடை மற்றும் பேருந்துகள் நிற்க ஏற்பாடுகள் செய்தனர் என்று செய்தி சொல்கிறது

கும்பகோண மகாமக நெரிசல், பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகியது, பேருந்து ஓட்டையில் விழுந்து குழந்தை இறந்தது, மின்தூக்கியில் சிக்கி பள்ளியில் குழந்தை இறந்தது, நீச்சல் குளத்தில் சிறுவன் இறந்தது, சொட்டு மருந்துக்குப் பின் குழந்தைகள் இறப்பது, அரசாங்க மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தைகள் இறப்பது, ரயில்வே நிலையத்தில் மற்றும் பிற இடங்களில் சி.சி.டிவி கேமாரக்கள் இயங்காதது, பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து குழந்தை இறந்தது என்று வரிசையாய் ஒவ்வொரு செய்தியையும் பாருங்கள், உயிர்ப்பலிகளுக்குப் பின்னரே அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விழுத்தெழுவார்கள், நீர்வாகச் சீர்கேடுகளும் பாதுகாப்பு ஓட்டைகளும் அப்போதுதான் அவர்களுக்கு தெரியவரும்! 

இதுபோன்ற சீர்கேடுகளை, குறைபாடுகளை அவர்கள் அமைச்சர்களின் பாதுகாப்பு விஷயத்தில் விபத்து நடந்தபின் "அடடா இப்போதுதான் தெரிந்தது" என்று இதுபோலவே மெத்தனமாய் இருந்து உயிர்ப்பலிகளுக்காக காத்திருப்பார்களா?

இந்தியாவில்தான் சோதனை எலிகளாக மக்கள், ஒரு மரணம் நிகழ வேண்டும் இங்கே எந்தவொரு மாற்றத்திற்கும்!

அந்த வகையில் இன்னமும் இங்கே சில மரணங்கள் மிச்சமிருக்கிறது, அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்,

இரயிலில் பேருந்தில் அவசர கால சிகிச்சை வசதி குறைபாடுகள் அதனால் ஏற்படவிருக்கும் மரணங்கள்

பள்ளிகளில் பிள்ளைக்களுக்கிடையே நிகழும் வன்முறைகள், பள்ளிகளின் மெத்தனம்

கல்லூரி வளாகத்தில் வகுப்பறையில் பெண்களைக் கொல்லும் கொடூரம், பாதுகாப்பு குறைபாடுகள்

வருடந்தோறும் மதிப்பெண் குறைவால் மாணவர்களின் தற்கொலைகள், மறுகூட்டல் என்னும் பெயரில் நடக்கும் கட்டண கொள்ளை
பல ஊர்களில் இன்னமும் திறந்தவெளியே கழிப்பிடமாக உபயோகிக்கும் கொடுமைகள் அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாலியில் தொந்தரவுகள்

சிகப்பு விளக்கை மதிக்காமல், தலைக்கவசம், ரியர் வியூ மிரர், சீட் பெல்ட் அலட்சியம், தடுப்புகளைத் தாண்டி வரும் வாகனங்களின் சாகசம், ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டுப்பேருக்கு மேல் குடும்பமே பயணிக்கும் ஆபத்தான பயணங்கள்,

அமைச்சர்களின் வருகையில் சாலையே ஸ்தம்பிக்கும் நிலை, ஒரு வழிப்பாதையில் விரையும் வாகனங்கள், கண்டுகொள்ளாத அதிகாரிகள், சிக்கி அல்லப்படும் அவசர ஊர்திகள்

தனிப்பட்ட பகையில் ஏற்படும் கொலைகளுக்கு, சாதி மத சாயம் பூசி கொள்ளையடிக்கும் அமைப்புகள், நிகழும் வன்முறைகள், மரணங்கள்
சாலையோர பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் வெயிலில் சுருண்டு விழும் மனிதர்கள், மரணங்கள்

சாலையில் ஆபத்தான கார், பைக் பந்தயங்கள், உயிர்ப்பலி ஏற்படுத்தும் தற்குறி தறுதலைகள்

போலி மருந்துகள், கலப்பட உணவுகள், தொடர் சோதனை செய்யாத மெத்தனம்

இப்படியே நீங்களும் பட்டியலிடலாம், முன்கூட்டியே அரசு எந்திரம் பாதுகாப்பு அமைப்புகளை தொடர் சோதனைகளை பலப்படுத்தலாம்
வதந்திகளுக்கு விரைந்து செயலாற்றி கடமை செய்யும் அரசும், அதிகாரிகளும் போல, உண்மையான செய்திகளுக்கும் பாதுகாப்பு குறைபாடுகளில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கும், மற்ற துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் பணியாற்றினால், இது உண்மையிலேயே மக்கள் ஆட்சிதான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!