Tuesday 8 November 2016

நிகழ்வுகள்!

மத்திய கைலாஷின் சிக்னலில், ரைட் இண்டிகேட்டர் போட்டு யு டர்ன் எடுக்க, வாகனத்தின் நீளத்திற்கேற்ப, சாலையின் தடுப்புச் சுவரை விட்டுக் கொஞ்சம் தள்ளி திருப்ப, பாம் பாம் என்ற அலறலில், தடுப்புச் சுவற்றுக்கும் வாகனத்துக்குமான, சிறிய இடைவெளியில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து மோதி சாலையில் விழுந்தார் ஒரு பைக் ஒட்டி, ஒருவேளை சிறிய வாகனமாய் இருந்திருந்தால் தடுப்புச் சுவற்றை ஒட்டி திருப்பியிருப்பேன், நிச்சயம் இதே வேகத்தில் அவர் தடுப்பைச் சுவற்றில் நசுங்கியிருப்பார். கீழே இறங்கினால், மிகக்கனமான ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார், சட்டென்று எழுந்துவிட்டார். 
 
அந்தக் குறுகிய இடைவெளியில் யு டர்ன் செய்ய முந்திய அவர், பதட்டத்தில், "நீங்க ஏன் யு டர்ன் செய்யுறீங்க" என்று கேட்க, "இப்போ நீங்க என்ன செஞ்சீங்க?" என்று பதில் கேள்வி கேட்க அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. முன்னே ஒரு சிறிய தடுப்பைக் காவல்துறை அடைத்திருந்தது, அதற்கடுத்த வளைவில்தான் திரும்ப முடியும். அவரும் அப்படியே திரும்ப வந்து, கிடைத்த இடைவெளியில் அத்தனை வேகத்தில் நுழைய, திரும்பி நின்றுக்கொண்டிருந்த வாகனத்தில் மோதியதால் விழுந்த அளவில் எழுந்துக்கொண்டார். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய, "இன்னும் சின்ன இடைவெளியில் லாரி திரும்பும்போது திரும்பிடாதீங்க, பார்த்துப் போங்க" என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு விதியை நொந்து கொண்டு திரும்பி சென்றேன்!

சென்னையில் சாலைவிதிகளை மனிதர்கள் புறந்தள்ளி வெகுகாலம் ஆகிவிட்டது, ஒரு ரயில்நிலையத்தில் ஒருவன் ஒரு பெண்ணைப் பட்டப்பகலில் வெட்டிக்கொல்ல, அவனா இவனா என்று தடுமாறும் நீதியில், அலட்சியமான கண்காணிப்பு முறைகளில், அடுத்தடுத்துப் பெண்கள் ஆண்களால் சர்வ சாதரணமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், துளிர் விட்டுப்போவது என்று பெரியவர்கள் இதைத்தான் சொல்வார்கள், பயம் விட்டுப் போதல், சட்டத்தின் மீது!

இதைப்போலவே சாலைகளிலும், ஒருவழிப்பாதையில் முதலில் ஓரமாய் ஒதுங்கி மெதுவாய் வந்தவர்கள், இப்போதெல்லாம் ஒருவழிப்பாதையிலேயே இருவழிப்பாதையில் வருவதைப் போல மிக வேகமாய் நேர் எதிரே வருகிறார்கள்!
ரியர் வியூ மிரர் என்பதையே எதற்கு என்று பாதிப்பேர் கழட்டி வைத்துவிட்டும், ஒரு சாரார் அதைச் சாலையைக் கீழ் நோக்கிக் கவிழ்த்து வைத்தும் பறக்கின்றனர்!

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சிக்னலிலும் ஷேர் ஆட்டோக்களும், வேன்களும் சர்வ சுதந்திரமாய் நிற்கும், எந்தக் காவல்துறையைக் கண்டும் அவர்கள் அஞ்சுவதில்லை!
பார்களில் இருந்து உயர்தரக் கார்கள் முழுப் போதையில் சர்ரென்று சாலையில் விரையும், அவர்களுக்கும் பயமில்லை!
அவரவர் தரத்துக்கு அவர்களின் பணம் பேசும், அல்லது பலம் பேசும்!
ஒரு விபத்து, ஓர் உயிர் பலி எல்லாம் சட்டத்திற்குப் பத்தோடு ஒன்று பதினொன்று, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கே அது வாழ்நாள் மனஉளைச்சல், யாரோ ஒருவரின் இறப்பு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே அசைத்துவிடும்!

இருந்தாலும், இந்தியாவின் சாலைகளில் தினந்தோறும் கழைக்கூத்து நடக்கிறது, வீரர்கள் தலைக்கவசம் இல்லாமல் விரைகிறார்கள், நான்கு முதல் ஏழு பேர் வரை ஒரு பைக்கில் சாகசப் பயணம் செய்கிறார்கள். சிலநொடிகள் விழும் சிகப்பு விளக்குக்கு நிற்க வேண்டி இருக்கும் நேரத்தை வீணடிக்கக் கூட முடியாமல் அவர்கள் எந்திரமாய்ப் பறக்கிறார்கள், பேருந்துகளை ஒருபுறம் கவிழ்த்துவிடும் அளவில் பயணிகள் இழுக்க, நடத்துனர் சாமர்த்தியமாகப் பூவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டு விரைகிறார், சாலை பரிசோதனையில் தோற்றுப் போன கார்களில் குடும்பங்களில் ஊர்வலம்!

நடைபாதைகள் என்பது கடைகளை விஸ்தரிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் என்ற சட்ட மாற்றம் ஏற்பட்டு வெகுநாளாகி விட்டது, யாரையும் கேள்வி கேட்க ஓட்டரசியல் பயம் கொள்கிறது, ஒரு ஆம்புலன்ஸ் இந்த வீதிகளில் வந்தால் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை!
பலகோடியில் பிரதமர் பயணிக்க அதிநவீன விமானம் வாங்கும் நாட்டில், இன்னும் கடைக்கோடியில் செம்மண் சாலைகளும், பெருநகரங்களில் ஒரு தூறலுக்கே பல்லிளிக்கும் பாவப்பட்ட சாலைகளும், ஒரு அடைமழையில் வெள்ளத்தில் இடிந்து விழும் பாலங்களும், அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களும் நகரத்தின் நிலையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது!

ஜனாதிபதி முதல் அமைச்சர் வரை பயணிக்கும் சாலைகள், எப்போது அவர்கள் வருவதால் மட்டுமே, சில இடங்களில் சாலைகள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
ஒருவேளை நாளை இந்தியா வல்லரசானால், அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை ஹெலிகாப்டரிலேயே பறக்கலாம் என்றால், சாலைகள் மக்களுக்கு எதற்கு?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!