Tuesday, 8 November 2016

கீச்சுக்கள்!

நீர், நிலம், காற்று, பூமி, வனம், வானம் என்று எதில் பிரச்சனை என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்திற்கும், நடந்த குற்றங்களுக்கு விடை தேடவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், ஒரு செய்தியை அறிந்து கொள்ளவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பொது நல வழக்கு தேவைப்படுகிறது!
வருங்காலத்தில் நீதிமன்றமே சட்டமன்றமாகவும், பாராளுமன்றமாகவும் ஆகலாம்! தேர்தலும், ஓட்டுகளும் என்ன சாதித்தன?

---------------

உண்பது, கழிவுகளை அகற்றுவது, குழந்தை பிறப்பின் வழி என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான், காணாத கடவுளின் பெயரால், விதைக்கப்பட்ட வன்மத்தின் பெயரால் பல நூறு ஹிட்லரை உருவாக்கி வைத்திருக்கும் மதம், எந்த மதமாய் இருந்தாலும் அது அழிந்து போகட்டும்! தீவிரவாதிகளை அழிக்காத மதம் மனித இனத்துக்கு எந்த நன்மையும்
செய்யப் போவதில்லை!

------------------------------

அன்பில்லாமல் அளிக்கப்படும் உணவும்
நம்பிக்கையில்லா நட்பும் உறவும்
சுயமரியாதை இழந்து வாழும் வாழ்க்கையும்
வாழும் போதே மரணத்தையும் நரகத்தையும் காட்டுபவை!

------------------

மனமொத்த அன்பும் தோழமையும்
இணைந்த வாழ்க்கைத்துணை
இல்லறத்தை அழகாக்கும்
அதிகாரமும் நீதியும்
அழகாய் கைக்கோர்க்கும்
நல்லறம்
இந்த மண்ணில்
வாழ்தலை இனிமையாக்கும்
முன்னது பலருக்கு வாய்ப்பதில்லை
பின்னது இன்னமும்
யாருக்கும் வாய்க்கவில்லை!

-----------------------------------

சாலையில் எருமையொன்று (உண்மையில் எருமைதான்), அந்தப் புறம் இருந்து இருபக்கமும் பார்த்து பார்த்து வர, இந்தப் புறம் மித வேகத்தில் சென்று கொண்டிருந்த வாகன வரிசையில் இருந்து நானும் கவனித்தேன்!
சரியாய் அது இந்தப் புறம் வருகையில் நானும் எருமையும் நேருக்கு நேர், வண்டியை மெதுவாக நிறுத்த, அதுவும் கொஞ்சம் வேகமாக நடையைப் போட்டது, அத்தனை வேகமாகச் செல்லும் எருமையை இதற்கு முன்பு பார்த்ததில்லை, (போக்குவரத்து விதிகளை மதிக்கும் விலங்குகளில் இனி எருமையையும் சேர்த்துக் கொள்ளலாம்)

சடாரென்று வேகமாய்ப் பைக்கில் வந்த ஒருவர், முன்னே தேங்கி நிற்கும் வாகனத்தை மதியாமல் வேகமாய் முந்தி (ஓவர் டேக்) முன்னே செல்ல, வேகமாய் நடந்து கொண்டிருந்த எருமை மாடு, துள்ளி ஓடியது மறுபுறம்! ஓவர் டேக் செய்து முன்னே வந்தவர், திடீர் அதிர்ச்சியில் நிதானம் தவறி வண்டியில் இருந்து நடுரோட்டில் கீழே விழுந்து எழுந்தார்!
இ. அ. நீ யாதெனில்: சென்னை வாழ் எருமைகள் வேகமாய் ஓடுகின்றன, மற்றதெல்லாம் உங்கள் கற்பனைக்கு!
-------------------------

இனி நம்மிடம் பெற அல்லது ஆக வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை என்ற நிலையில் சில சந்தர்ப்பவாத நட்புகளும் உறவுகளும் தள்ளிப்போகும், யாரிடம் அடுத்து காரியம் ஆக வேண்டி இருக்கிறதோ அடுத்து அங்கே சென்று அது வழிந்துக்கொண்டும் இளித்துக்கொண்டும் இருக்கும்!
அவரின் குணங்களைப் புரிந்துக் கொண்டே பழகிவிட்டால், பச்சோந்திகளைப் பற்றி கவலையுற வேண்டியதில்லை!

----------------------

பிள்ளைகள் நிறைந்திருக்கும் வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அவளின் பாடு திண்டாட்டம்தான்
நட்டாம தீர்ப்புச்சொல்லு என்று சோர்ந்துப் போகும் விழிகளை வலுக்கட்டாயமாக திறந்து, பரபரவென பஞ்சாயத்துக்கூட்டி, சந்து சந்தாய் சென்று அடிவாங்கிய வடிவேலு கணக்காய் ஆக்கியப்பின், மம்மி ஐ லவ் யூ மம்மி என்று பாராட்டு பத்திரம் வாசித்து, அந்நியனாய், அம்பியாய், ரெமோவாய் பெர்பார்மன்ஸ் காட்டும் பிள்ளைகளைப் பார்த்து காய்ச்சல் பயந்து பம்மிக்கொள்கிறது!  

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!