Tuesday 8 November 2016

கெமிஸ்ட்ரி வேண்டும்

ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்!
ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன் இந்த நாட்டில் சட்டம் ஊமையாய் வேடிக்கைப் பார்க்கிறது??

குழந்தைகள் காணமல் போகின்றன, நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் பொதுநல வழக்கு போடுகிறார், பின் நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது!

குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் இருக்கிறது, பாலியல் கல்வியறிவு இன்னும் பள்ளிகளில் சட்டபூர்வமாக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், சிறுமிகளையும் கதாநாயகி ஆக்கி, ஆபாச பாடல்களுக்கு, அசிங்கமான நடனங்களை அவர்களை ஆடச் செய்கிறார்கள், பாலுறவு குறித்தப் பாடல்களை, காதல் என்ன என்றே அறியாதப் பிள்ளைகளை, குரல் வேட்டை, பாடல் போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தையின் மனதை பெற்றவர்களும் மற்றவர்களும் சீரழிக்கிறார்கள்!
அந்தப் பாடலில் குரலில் தாபம் வேண்டும், ஆடலில் இன்னும் கெமிஸ்ட்ரி வேண்டும் என்று நடுவர்கள் குழந்தைகளைப் பிஞ்சிலேயே பழுக்க வைக்க முனைகிறார்கள்!

ஸ்மார்ட் போன்களைக் கையில் கொடுத்து, உலகத்தையே காட்டி, படிப்பில் ஆர்வமில்லாத, ஓடியாட விரும்பாத தலைமுறையை வளர்க்கிறார்கள்!
சூப் சாங், பீப் சாங் என்று குப்பைகளாய் எழுதி நடிகன் என்றும் இசையமைப்பாளர் என்றும் அறியப்படுபவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள், "அடிடா அவளை, வெட்றா அவளை" என்று பாடல்களுக்கும் குழந்தைகளை ஆடப் பாட மேடையேற்றி, பின்னாளில் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு தலைமுறையை வளர்க்கிறார்கள்!

"அவளை இன்னைக்கு கொன்னுடனும்", ""அவனுக்கு பாலுல போதை மாத்திரை கலந்து இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு நடக்கணும்" இப்படியே இலக்கியமான அற்புதமான காட்சிகள் வசனங்கள் நிறைந்த நாடகங்களை குழந்தைகளோடு அமர்ந்துகொண்டு பெற்றவர்களும் பெரியவர்களும் பார்க்கிறார்கள்!

குழந்தைகளைப் பற்றிய கவலையின்றி, அவர்கள் முன்னிலையிலேயே தகப்பன்கள் புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், பின் தன் மகனுக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சில ஆசிரியர்கள் காமசூத்திரத்தை பாடமாக எடுக்கிறார்கள், படிக்கச் செல்லும் பிள்ளைகள் சில ஆசிரியரின் குறைந்தப்பட்ச கண்டிப்பைக் கூட தாங்க முடியாமல் கத்தி எடுத்து கொலைச் செய்கிறார்கள்!
சாலையில் செல்லும் போது, தன் தலைக்கு கவசம் அணியும் ஆணோ பெண்ணோ, தகப்பனோ தாயோ தன்னுடனே அழைத்துச்செல்லும் பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவிப்பதில்லை, மெதுவாய் கீழே விழுந்தால்கூட தலையில்தான் பெரும்பாலும் அடிபடும், குடும்பத்தோடு பயணம் செய்த ஒருவன், தன் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தான், பின்னே மனைவி, அவளுடன் சற்றே வளர்ந்த குழந்தை, பைக்கின் பெட்ரோல் டேங்க் மேலே சிறிய குழந்தையொன்று, நுங்கம்பாக்க சாலையில் ஒரு வளைவில் திரும்புகிறான், இரவு நேரம், ஒரு நீண்ட பள்ளத்தை வேகத்தடுப்பு அமைப்பதற்காகத் தோண்டி, அந்த வேலையை மற்றொரு நாள் முடிப்பதற்காக வழக்கம் போலவே பொதுமக்களின் உயிரின் மேல் அலட்சியம் காட்டும் போக்கில் அப்படியே விட்டுச்செல்ல, சரியாக அந்தப்பள்ளத்தில் அவன் வண்டியைத் திருப்ப முன்னேயிருந்த பிஞ்சு கீழே விழுகிறது, தலையில் கல் பட்டு அங்கேயே உயிர் பிரிகிறது, குழந்தைகளின் பாதுகாப்பில் கோட்டைவிட்டது இங்கு எல்லோருமே!

குற்றம் நடந்தபின்னே பெற்றவர்கள் துடிக்கிறார்கள், ஒரு குற்றம் நடந்தபின்னே அதில் உள்ள ஓட்டைகளை சட்டம் ஆராய்கிறது, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்கிறது! குற்றம் நடந்தது என்ன என்று மீடியாக்கள் சீறிப்பாய்கிறது!

சாராயத்துக்காகவும், காசுக்காகவும், காமத்துக்காகவும், உறுப்புகளுக்காகவும், அரசியலுக்காகவும், கட்சி அபிமானத்துக்காகவும் வதைபடுகிறார்கள் , உயிர்விடுகிறார்கள் பிள்ளைகள்! சுமந்துப்பெற்றாலும், அறிவில்லாத, பொறுப்பில்லாத, சுயநலம் மிகுந்த, ஆற்றலில்லாத, அன்பில்லாத, அக்கறையில்லாத பெற்றவர்களிடமும் உடலாலும் உள்ளத்தாலும் துன்பம் அனுபவிக்கிறார்கள்!

இன்னமும் ஆதிகால சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க ஒவ்வொரு குற்றம் நடக்கவும் , அதிலிருந்தே பாடம் கற்று அதை அடைக்கவும் மேதைகள் காத்திருக்கிறார்கள்!

புதிய மருந்துகளை செலுத்தி சோதிக்க வதவதவென்று பிள்ளைகள் பெறுவது அவசியம், படிப்போ ஆரோக்கியமோ எதிலும் கவலையற்று ஒட்டுப்போட அவர்கள் இருந்தால் போதும், அடியாளாக உருமாற கீழ்மட்ட குழந்தைகள் அவசியமென்று இருக்கும் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தின் கல்வி மற்றும் மருத்துவத்துடன் பிள்ளைகள் வளர்கிறார்கள்!

இத்தனை மடமைகளையும் தாண்டி, இந்தப்பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம், அதுவரை அவர்களைச் சிதைக்காமல் அந்த அலகு வேல், முருகவேல் காக்கட்டும், ஐந்துமுறை தொழுதெழும் கருணைக்காக அல்லா காக்கட்டும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தர் காக்கட்டும்! இன்னும் நம் குலசாமிகள் அத்தனைபேரும் நம் அறியாமையிலும் , போதையிலுமிருந்தும் அவர்களைக் காக்கட்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!