Monday 21 November 2016

காமம் மட்டுமே போதுமே!

ஒரு வீட்டில் பணத்தையும் நகையையும் பாதுகாக்கும் அளவுக்கு இருக்கும் அக்கறையையும், பயத்தையும் நாம் பிள்ளைகளைப் பாதுகாப்பதில், வழிநடத்துவதில் காட்டுகிறோமோ என்றால் அது மிகப்பெரும் கேள்விக்குறியே!

பெரிய ஷாப்பிங் மால்களில், அம்மாவும் அப்பாவும் கடைகளில் கவனம் கொண்டிருக்க, பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறேன், சட்டென்று யாரோ ஒருவன் ஒரு குழந்தையை வாய்பொத்தி அழைத்துச் சென்றால் கூட நமக்குத் தெரியப்போவதில்லை!

மின்தூக்கிகளின் அருகில், எஸ்கேலேட்டர்களில் அம்மா அப்பா பின்னே நிற்க, பிள்ளைகள் முன்னே ஓடும், எல்லாவற்றிலும் சென்சார் சரியாக இயங்குகிறதா என்று நமக்கு எவ்வளவு உறுதியாகத் தெரியும்?

சாலையில் குழந்தைகளை எப்புறம் கைப்பிடித்து அழைத்துச் செல்வது என்று தெரியாமல் கூட, சில பெற்றவர்கள் இருப்பது வேதனை!

எப்போதோ ஒரு கதைப் படித்தேன், மிகப்பெரும் செல்வந்தனானத் தந்தையிடம் ஒரு குழந்தை அவன் ஒரு மணிநேரத்தில் என்ன சம்பாதிப்பான் என்று கேட்கிறது, அந்த ஒரு மணிநேரக் காசுக்கு, சில ரூபாய்கள் குறைய அதை அவனிடம் பெற்றுக்கொண்டு, மொத்தமாய்ப் பணத்தை அவனிடம் தந்து, என்னுடன் ஒரு மணி நேரம் பேச முடியுமா அப்பா என்று கேட்கிறது! இன்று நமக்கு எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது, ஆனால் குழந்தைகளிடமும், நேசிப்பவர்களிடம் நேரம் செலவிட நமக்கு நேரமில்லை, அதிலும் நேரக்கணக்குப் பணக்கணக்கெல்லாம் சொல்லி வேதனைப்படுத்துவது மட்டுமே நாம் செய்யும் சாதனை!

ஆண் பெண் இருவரும் வேலைக்குச் சென்று ஈட்டும் பணமெல்லாம் பிள்ளைகளுக்கென்றால், அந்தப் பிள்ளைகளின் மேல் உள்ள அக்கறை ஏன் நமக்குச் சிதறிப்போகிறது?

"சீரியல் பார்க்கும் நேரத்தில் அம்மா சோறு போட மாட்டாள்" என்று வரும் துணுக்குகளைக் காணும் போது வேதனையே மிஞ்சுகிறது, இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா என்ற அதிர்ச்சிதான் எழுகிறது, அதில் என்ன நகைச்சுவை இருந்துவிடப் போகிறது? என் அம்மாவுக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிறது, இப்போதும் நான் சாப்பிடும் போது, அவர் என்ன நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எனக்குத் தண்ணீர் முதற்கொண்டு எடுத்துவைப்பார், நானே எனக்குவேண்டியத்தைச் செய்துகொள்ள முடியும், எப்போதும் என்னைத் தடுத்து, அவர்தான் இப்போதும் அந்த வேலையைச் செய்வது, குறை என்று என்னிடம் சொல்வதற்கு என் அம்மாவுக்கு ஒரு பட்டியல் நீளும், ஆனால் உள்ளூர உறைந்திருக்கும் அன்பை இப்போதும் இதன் வழியே வெளிப்படுத்த தவறுவதில்லை அவர்! அம்மா என்றால் அம்மா தானே? பிள்ளைகளை வயிற்றைக் காயப்போட்டு, சீரியல் பார்க்கும் அம்மாக்கள் நிச்சயம் இருக்க முடியாது, அப்படி இருந்தால் அங்கே அடிப்படையில் ஏதோ தவறு இருக்கின்றது என்றே பொருள்!

விவாகரத்தாகித் தனியே வசிக்கும் ஒரு தோழிக்குப் பள்ளிச் செல்லும் வயதில் இரு குழந்தைகள், வேலைக்குச் செல்லும்போது, ஒருவரை வீட்டில் அமர்த்திவிட்டுப் போவது வழக்கம், அப்படி அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண் ஒருநாள் வீட்டில் இருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு ஓடிவிட, என் குழந்தைகள் பத்திரமாய் இருந்ததே போதும் எனக்கு என்றாள், பின் தெரிந்த ஒருவரை, பணிக்கு அமர்த்தி, குழந்தைகள் உறங்கும் நேரம் இரவு பணிக்குச் சென்று, காலையில் அரைகுறையாய்த் தூங்கி, குழந்தைகளுக்கு வேண்டியது செய்து, குழந்தைகளுக்கென வாழ்பவள், படித்துப் பணியில் இருக்கும் பெண்ணுக்கு இருக்கும் அன்பும் அக்கறையும் குழந்தைகள் பாதுகாப்பில் இருக்கும் ஜாக்கிரதை உணர்வும், வீட்டில் பணிக்குச் செல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இருக்காதா, நிச்சயம் இருக்கும்! எனினும் பிள்ளைகளுக்கு எவ்விதத்தில் ஆபத்து ஏற்படலாம் என்று பகுத்தறியும் திறமை, சில அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கு இல்லாததே நிறைய விபத்துகளுக்குக் காரணமாகிவிடுகிறது!

பால்கனியில் இருந்து குழந்தை விழுவது, சாலையில் தனியே விளையாடித் தொலைந்துப் போவது, அக்கம் பக்கம் விளையாடச் சென்று பாலியல் வன்கொடுமைக்கோ, கடத்தலுக்கோ ஆளாவது, வீட்டில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து இறந்துப் போவது , நாணயங்களை விழுங்கி இறப்பது, வீட்டில் இருக்கும் டிவி தலையில் விழுந்து இறப்பது, காய்ச்சலின் அறிகுறிகளைச் சரிவரக் கவனிக்காமல், நாள்பட்டக் காய்ச்சலில் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துபோவது, பேருந்து ஓட்டையில், மின்தூக்கியில், நெரிசலில், ஆழ்துளை கிணற்றில்...இப்படி யோசித்துப் பாருங்கள், நிறையச் சம்பவங்கள் பெற்றவர்களின், மற்றவர்களின் அலட்சியமான போக்கால், ஆபத்து நிகழும், பாதுகாப்பில்லை என்று பகுத்தறியும் ஆற்றல் இல்லாததால் தான் பெரும்பாலும் நிகழ்கின்றன!

அதிலும் கணவன் கொடுமை என்று கிணற்றில் குதித்து, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, அல்லது தன்னைத் தானே எரித்துக் கொண்டு சாவது, பிள்ளைகளை ஆனதைக்காளாக்கிச் சாகும் பெண்களின் செய்திகளைப் படிக்கும் போது, அவர்கள் மனதளவில் ஒரு பிள்ளைக்குத் தாயாகக்கூடிய தகுதியே இல்லாமல் தான் பிள்ளை பெற்றிருக்கிறார்கள் என்று எப்போதும் தோன்றும்!

பார்க்கும் மாப்பிள்ளையிடம் பணமிருக்கிறதா, வேலையிருக்கிறதா, என்ன பழக்கம் என்று பெண்ணைப் பெற்றவர் பார்ப்பதுண்டு, ஆனால் தன் பெண்ணிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா, கல்வி இருக்கிறதா, வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் துணிவிருக்கிறாதா என்று பார்ப்பதில்லை!
"என்ன ஆனாலும் உன் புருஷன், சகிச்சுக்கோ, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, குடிச்சா என்ன அடிச்சா என்ன, கல்யாணம் தான் வாழ்க்கையின் அவசியம்", என்று பெண்களை வளர்க்கும் பெற்றோர், கொஞ்சம் அவளுடைய கல்விக்குச் செலவழித்து, அவளுடைய தன்னம்பிக்கையை வளர்த்து, கல்யாணத்திற்கெனச் செலவு செய்யும் பணத்தை அவள் தன் சுய முயற்சியில் சொந்தக் காலில் நிற்கும் தொழிலுக்கோ கல்விக்கோ செலவு செய்யலாம், மனமுதிர்ச்சி கொண்ட பெண் ஒரு சிறந்த மனைவியாகவும் தாயாகவும் திகழ்வாள்!

பெண்ணுக்குப் பணமிருக்கிறதா, சொத்திருக்கிறதா, அழகிருக்கிறதா என்று பார்க்கும் சமூகம், பெண்ணுக்கு நல்லகல்வியும், தெளிந்த அறிவும் துணிவும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும், (ஆண்களுக்கும் கூட!) அழகும் பணமும் கரைந்துப் போகும், தெளிந்த சிறந்த அறிவும், அன்பும் மட்டுமே வாழ்க்கைக்கு அழகூட்டும்!

இந்த முகப்புத்தகத்திலேயே, யாரோ ஒருவரின் ஏதோ ஒரு பதிவிற்கு (சரியாய் நினைவில் இல்லை) ஒரு பெண், தன்னுடைய ஏழோ எட்டோ வயதுடைய பிள்ளையை ஹாஸ்டலில் தங்கவைத்திருப்பதாகவும், வீட்டில் எனக்குப் போரடிக்கிறது, நான் என்ன செய்யலாம் என்று ஒருவரிடம் பொதுவெளியில் கேட்டிருந்தார், குழந்தை வளர்ப்பு இன்று இத்திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, பிள்ளை உடன் இருந்தால் தொல்லை, தொலைவில் இருந்தால் போரடிக்கிறது!

குழந்தைகளின் உணவு, ஆரோக்கியம், கல்வி என்பதில் பெற்றவர்களுக்கு இருக்கும் அக்கறை அதன் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும், சேர்த்தப் பணம் கூடச் செல்லாததாகிவிடும், இதோ அப்படித்தான் ஆகியிருக்கிறது, பெற்ற பிள்ளைகள் தான் நம் உலகை அழகாக்குகின்றனர், குழந்தைகளின் மீது கவனம் செலுத்த முடியாவிட்டால், அதுவரை நாம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்துவிடலாம், கருத்தில்லாத பெற்றவர்களுக்குக் காமம் மட்டுமே போதுமே வாழ்க்கைக்கு?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!