Monday 21 November 2016

சில்லறை வணிகமும் அட்டைகளின் உலகமும்!



நடைபாதையில் இருக்கும்
கீரைக்கட்டு ஆயாவுடன்
தண்ணீரின் மலர்ச்சி உண்டு
சுப்புவின் காய்கறி கடையில்
கத்தரிக்கும் வெண்டைக்குமிடையேயான
பேரத்தில் இலவசமாய்
கருவேப்பிலையும் கொத்தமல்லியும் உண்டு

ஊரின் விளைச்சல் நிலத்தில்
இருந்து மொத்தக் கொள்முதலாய்
ஒரு கோணிமூட்டையில்
துவரையும் சில நேரங்களில்
வெங்காயமும் கொண்டு வரும்
மணியின் விற்பனைப்பொருட்கள்
அவனின் அக்கா ஆயா அத்தை
அழைப்பில் விற்று தீர்வதுண்டு

பெட்டிக்கடை வாசலில்
சிகரெட்டும் நொறுக்குத்தீனியும்
வாங்கித் தீர்க்கும் இளைஞர்கள்
கடவுளாய் கோபால அண்ணனுக்கு
தெரிவதுண்டு
டீக்கடை பெஞ்சுகளில்
டீயோடு வடையும் பஜ்ஜியும்
சுடச்சுட அரசியலும்
அலசப்படுவதுண்டு

சின்னதாய் அழகு நிலையம்
வைத்திருக்கும் பார்வதி
புருவ திருத்தலின் இருபது
ரூபாய்க்குக் கடன் சொல்லும்
பெண்களையும்
வாடிக்கையாளர்களாய்
ஏற்றுக்கொள்வதுண்டு
கடற்கரையோர ரமணின்
கடையில் வஞ்சிரமும்
கடமாவும்
வாய்கிழியப் பேசிய பேச்சின்
சுவரசியத்தில்
அலுப்பில்லாமல் குழம்பில்
கொதிப்பதுண்டு

சில்லறைத் நீர்த்துப்
போன உலகத்தில்
ஆன்லைனில் சிலவற்றை
ஆர்டர் செய்து
அத்தனை மனிதர்களையும்
இழந்து
முகம் தெரியாப் பெரும்
வணிக முதலாளிகளின் கடைகளில்
பதப்படுத்தப்பட்ட
பாக்கெட்டுகளின்
காலாவதித் தேதிகளை
மட்டுமே பார்த்து
விலையைப் பற்றிய அபிப்பிராயம்
பேச முடியாமல்
கூடையில் அள்ளிப்போட்டு
வரிசையில் நிற்கிறேன்
கடன் அட்டைத் தேய்க்கும்
பெண்ணும் கூட
பில்போடும் எந்திரத்தை
விட்டு பார்வையை அகற்றவில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!