Tuesday, 8 November 2016

ஆண்மையின் தவறான புரிதல்

#ஆண்மையின்_தவறான_புரிதல்
 
சமீபத்தில் ஒரு பெண் கணவரின் கடிதம் என்ற பெயரில், சராசரி ஆண்களின் கீழ்மையான மனநிலையை வெளிப்படையாய், சில வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார், ஒரு பெண் இப்படி எழுதலாமா என்றதோடு, அவரின் உள்நோக்கம், வெளிநோக்கம் என்ற விமர்சனங்களையெல்லாம் காண நேர்ந்தது!

உண்மையில் இந்த ஆண்கள் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசுவார்களா? அப்படியென்றால் எப்படிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அப்படிப் பேசுவார்கள்? எந்த மட்டத்தில் உள்ளவர்கள் அப்படிப் பேசுவார்கள்?, யோசித்துப் பார்த்தால், பெண்களிடம் கேளுங்கள் என்று சொல்வேன்! ஆமாம், தினந்தோறும் வீட்டில் வதைபடும், பேருந்தில் வதைபடும், சாலையில் வதைபடும், பணியிடத்தில் வதைபடும் பெண்ணினத்துக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு, "தே...." என்றும், "தே பையன்" "தே மூ" என்றும் யாரை நோக்கி கூறினாலும், அதில் உள்ள குறிப்பு அந்த ஆணையோ பெண்ணையோ பெற்றவளையே குறிக்கிறது!

எப்போதும் பெண்மையைக் கொண்டு பெண்ணையே தூற்றும் போது, இதைப் பற்றிப் பெண்கள் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?

சாலையில் செல்லும்போது, திடீரென்று, ஏதோ ஒரு போர்னோ (நிர்வாண) படத்தை நம் காலடியில் போடுவார்கள், பெண்கள் ஆடை அணிந்து வாகனத்தில் செல்லும்போது, பயணிக்கும்போது, அவளுக்கே தெரியாமல், அவள் நெகிழ்ந்திருக்கும் ஆடையை அல்லது இவர்களுக்கு உவப்பில்லாத (அப்படிச் சொல்லிக்கொள்வார்களே ஒழிய, அதை ரசிக்கத் தவற மாட்டார்கள்) ஆடையை அணிந்திருந்தால், கலாச்சாரம் என்று அதைப் பொதுவெளியில் போட்டு விமர்சிப்பார்கள், அவ்வப்போது தம் நடுவிரலை காட்டி அசிங்கமாய் யாரோ ஒரு பெண்ணிடம் தம் வக்கிரத்தை வெளியிடுவார்கள்!

ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால், தம் மீது தவறு இருந்தால், உடனடியாகத் தரக்குறைவான வார்த்தைகளில் பெண்ணையும் அவளைப் பெற்றவளையும் (கவனிக்கப் பெற்றவனை அல்ல) இகழ்வார்கள்! "ஓ + ஆத்தா" என்ற வார்த்தை மிகச் சகஜமாய்ப் பெரும்பாலான ஆண்களின் வாயில் இருந்து வரும், பெண்ணிடம் என்று இல்லை, சக ஆண்களிடமும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!

"ஓத்தா" என்பதைப் பிரித்து எழுதினால் அதிலும் "ஆத்தா" என்று பெண்ணை இகழும் பதமே வருகிறது!
இந்த வார்த்தைகளை எழுதுவது நாகரீகம் இல்லை என்றாலும் வேறு எப்படி இதைச் சொல்வது?

பொதுவெளியில் ஒரு ஆண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னைச் சார்ந்த அல்லது சாராத யாரோ ஒரு பெண்ணிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசும்போது அந்தப் பெண்ணின் சுயம் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்? திருப்பி அதே போல் பேச வேண்டுமா? எழுதவதே தவறு என்று சொல்லும்போது, பேசினால் என்ன மாதிரி விமர்சனம் பெண்ணுக்கு வரும்? அப்படியே பேசினாலும் கூட, பெண்ணை இகழும் வார்த்தைகளுக்கு ஆண் பதம் என்ன?
 இதுவரை நாம் கேட்டறியவில்லை!

பொதுவெளியில் இப்படிப் பேசும் ஆண்களை, கீழ்மட்ட ஆண்கள்தான் என்று எண்ணிவிட வேண்டாம், "பீப் சாங், சூப் சாங்" எழுதிய நடிகர்கள் எல்லாம் அரசாங்கப் பள்ளியில் படிக்கவில்லை, தனியார் பள்ளிகளில் படித்த மரியாதைதான் அவர்கள் பாடல்களின் அடித்தளம்! அரசாங்கப் பள்ளி, தனியார் பள்ளி, படித்த பெற்றோர் படிக்காத பெற்றோர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் மட்டுமே ஆண்களின் வார்த்தை பிரயோகங்களுக்குப் பெரும் அடிப்படை இல்லை! ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்பவர் தன் மனைவியை, மகளை, சகோதரியை, உறவுகளை,நட்பை எப்படி நடத்துகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதைத்தான் அவரின் ஆண் வாரிசு கற்கிறது, பள்ளியில், கல்லூரியில், அந்த ஆண் வாரிசின் சக ஆண் நட்புகளைப் பொறுத்து அவர்களின் வார்த்தை அகராதி, வன்மத்தின் அகராதி மேலும் உருப்பெறுகிறது, வளர்ப்பும் சூழலும் ஆணை, ஓர் பெண்ணின் மீதான அவன் வார்த்தைப் பிரயோகத்தை வடிவமைக்கிறது!

இதில் மோசமான பகுதி என்னவென்றால், அதை யாரும் கண்டிப்பதில்லை, ஆண் "ஆடையின்றித் திரிந்தால்", "பெண்ணை வன்புணர்ச்சி செய்தால்", "சிறுவயது பெண்ணைத் திருமணம் செய்தால்", "குடித்தால்", "புகைத்தால்", "கொலை செய்தால்", "திருடினால்", "விபத்து ஏற்படுத்தினால்", "பெண்ணைத் தரக்குறைவாகக் கிண்டல் செய்தால்", "பெண்ணின் விடியோவை எடுத்துக் கிழவி என்று கிண்டல் செய்தால்", "அந்த ஆண்ட்டி சூப்பர் பிகர்" என்று வக்கிரமான பதிவு போட்டால், எப்படி எதை ஆண் பெண்ணுக்கெதிராய்ச் செய்தாலும், அவையாவும் வெறும் "செய்தியே" ஆணின் வக்கிரம் விவாதப்பொருளாவதில்லை, ஆணின் மோகம், புகழ் தாகம், விளம்பர மோகம், வளர்ப்பு, கீழ்த்தரமான எண்ணம், அவனின் ஒழுக்கம் எதுவுமே விவாதம் இல்லை, அந்தச் செய்தி மட்டுமே பிரதானம்!

இதையெல்லாம் ஒரு பெண் செய்தால்? பெண் குடித்துவிட்டுக் காரோட்டி விபத்து ஏற்படுத்தினால், விபத்தைத் தாண்டி "அந்தப் பொண்ணு.." "பெண்" தான் செய்தி, பெண் குடிக்கலாமா? பெண் புகைக்கலாமா? பெண் ஆணின் கையைப் பிடித்து இழுக்கலாமா? பெண் வெளிப்படையாய் ஆணை விமர்சித்து, அதே தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து விமர்சிக்கலாமா?, பெண் ஆண்களை "அந்த அங்கிள் மொக்கை பிகர்" என்று சொல்லலாமா?, பெண் அலங்கோலமாய்த் திரியலாமா? இப்படி அரிதாய் நடக்கும் எந்த நிகழ்வென்றாலும், செய்தி என்பது அங்கே "பெண்" மட்டும்தான்!

சில தெருக்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அப்படியொரு வார்த்தைகளில் இகழும் போது, தன் மனைவியைத் தானே விலைமகள் என்ற பொருளில் உரத்துக் கூறி கீழ்நிலைக்குச் செல்பவனிடம், அவளின் வாழ்க்கை அவனுக்கு மனைவி என்ற உறவா அல்லது பணம் இல்லாத விலைமகள் என்ற உறவா என்ற சந்தேகம் வருவதுண்டு, மனைவியை இகழும் ஆண், தன் அம்மாவை எப்படி நினைத்துக் கொள்வான், தன் மகளை எப்படிப் பார்ப்பான் என்ற சந்தேகங்களும் அதையொட்டி வருவதுண்டு!

உளவியல் ரீதியாக இது ஆணுக்கு அதிர்ச்சி, பெண்ணின் கல்வியை முழுதாய் மறுக்க முடியவில்லை, பணியிடத்தில் அவளின் வளர்ச்சியைச் சகிக்க முடியவில்லை, எதையும் தடுக்க முடியாதபோது, பெண்ணின் மீதான ஆணின் அதிர்ச்சி, காழ்ப்பு, அவள் செய்தியாகும் போது, அவளையே செய்தியாக்கி வடிகால் ஏற்படுத்திக் கொள்கின்றனர்!

அந்தச் சில ஆண்களுக்கு மட்டுமே இது, "ஆண்களே அடுத்த முறை, மிகக் கீழ்த்தரமாகப் பெண்ணைப் பற்றி எழுதும்போது, அல்லது சாலையில், பொதுவெளியில், வீட்டில் பேசும்போது, ஒரே ஒரு நிமிடம் உங்களைப் பெற்றவளையும், சகோதரியையும், மகளையும், மனைவியையும் நினைத்துக் கொள்ளுங்கள், "தே ..." "ஓ ..." என்று எங்கோ யாரோ ஒருவரின் பெண்ணை நீங்கள் இகழும் போது, நீங்கள் ஒரு சரியான பெற்றோரால் வளர்க்கப்படவில்லை, உங்கள் நட்பு வட்டம் கீழ்தரமானது, உங்கள் கல்வி நிலை அடிமட்டம் என்றுதான் நீங்களே உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும் அந்த நிலை மிகப்பரிதாபம்தான்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...