Tuesday, 8 November 2016

சென்னை போக்குவரத்து

உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையான "தி குளோபல் ரிப்போர்ட் ஆன் அர்பன் ஹெல்த்" தின் படி, சாலை விபத்துகளில் மாண்டுபோவர்களின் பட்டியலில், சியாரா என்ற பிரேசிலின் நகரத்துக்கு அடுத்துச் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது!
இதற்காகச் சென்னைவாசிகளாக இன்றே நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம், ஏனெனில் இந்த விபத்து நாளை நமக்கும் நடக்கலாம், நாம் இல்லாமல் போகலாம்!

அரசாங்கம் இல்லையென்றாலும், அதிகாரிகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அறுபது சதவீத விபத்துகள் நம்மாலேயே குறைக்கப்படலாம்! அது என்ன என்ன என்று நமக்கே தெரியும்! 

1. சிக்கனலை மதிப்பது
2. சாலை வரிசைகளை மதிப்பது
3. தலைக்கவசம் அணிவது
4. மித வேகம்
5. பதினெட்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மோட்டார் வாகனங்களை
கொடுக்காமல் இருப்பது. சைக்கிளை தந்தாலும் அவர்களை நெடுஞ்சாலைகளில் கவனமாய் இருக்கச் சொல்வது
6. கனரக வாகனங்களின் முறையான தணிக்கைகள்
7. நடைபாதைகளில் வீடுகளை விஸ்தரிப்பது, கடைகளை விஸ்தரிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்
7. உங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் பைக்கில் இருவர் மூவராக ரேஸில் பறப்பது போன்ற சாகசங்களைக் கண்காணித்து அறிவுறுத்துவது என நிறைய இருக்கின்றன நாம் செய்வதற்கு!

பொதுவான விதிகளை விடுத்து, ஒரு பைக்கில், ஓட்டும் ஆணோ பெண்ணோ மட்டும் தலைக்கவசம் அணிந்து, குழந்தைகளுக்கு, அல்லது பின்னால் இருப்பவர்களுக்குத் தலைக்கவசம் இல்லாமல் செல்வது எப்படிப்பட்ட அக்கறை என்று புரிவதில்லை! ஒருவேளை கீழே விழுந்தால், ஓட்டுநர் மட்டும் தப்பித்துக் குடும்பம் சாகலாம் என்ற எண்ணமா?

நாள்தோறும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது சாலைகளில். பைக் ஓட்டிகள் நடைபாதைகள் ஓட்டுகிறார்கள், சாலைத் தடுப்புச் சுவர் குட்டையாய் இருந்தால் அதன் மேல் ஏறி ஓட்டுகிறார்கள், இன்னமும் அவர்கள் வரிசையாய்ச் செல்லும் வாகனங்களின் மேல் பறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

விதிமுறைகளை மீறி தினந்தோறும் லட்சணக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் பறக்கிறது, அதிகாரிகள் ஓரமாய் நிற்கிறார்கள், மாத கடைசியில் சில அபராதங்கள் விதிக்கப்படுகின்றன! பொதுவாய் சீர்கெட்டு இருக்கும் சாலைகள் மழை நேரத்தில் முழுதும் காணாமல் போகிறது (ஊரே காணாமல் போனது கடந்த வருடம்)!

இந்தச் சாலைகளின் நிலைகளும், போக்குவரத்தும் சீர் செய்யப்பட மிக முக்கியமான பிரமுகர்களுக்குச் சாலைகளில் இடைஞ்சலோ, விபத்தோ அல்லது, ஏதோ ஒரு பொதுநல வழக்கோ தேவைப்படலாம், அதுவரை, நம்முடைய கவனத்தாலும் பிறருடைய கருணையாலும் தான் நாம் வீடு திரும்ப வேண்டும்!
#சென்னை #போக்குவரத்து

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...