Tuesday, 8 November 2016

தம்பி நீ கீழே இருந்தது போதும், மேல வந்துடு ராசா!

"ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களைத் தடுக்க முயன்ற காவலரின் கால் உடைந்தது, தவறி விழுந்த இளைஞர்கள் படுகாயம், வாகன ஓட்டிகள் மறியல், பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலகல்!" என்று செய்தி
சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவரின் பதிவாக, "ஹெல்மெட் அணியாவிட்டால் என்ன, அவன் மண்டைதானே உடையப்போகுது, காவல்துறைக் கண்டுகொள்ளக் கூடாது!" என்று ஒரு கோரிக்கை
மற்றொருபுறம் "பெருகும் விபத்துக்கள், காவல்துறையின் நடவடிக்கை என்ன?" என்று பொதுவழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றத்தின் கேள்வி!

காவல்துறை மீது எப்போதும் போலப் புகார்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஹெல்மெட் அணியாமலேயே இளைஞர்கள் செல்லட்டும், ஆனால் அவர்களாகவே பிற வாகனங்களின் மீது இடித்து விழுந்தாலும், அல்லது பிற வாகனங்கள் அவர்களின் வாகனங்கள் மீது இடித்து அவர்கள் விழுந்தாலும், அவர்கள் மண்டையுடைந்துக் காயமோ மரணமோ ஏற்பட்டால், மோதிய மற்றொரு வாகனத்தை வழக்கில் இருந்து விடுவிக்குமா சட்டம்?
"இருவேறு வாகனங்கள் மோதினால் பெரிய வாகனத்தின் மீதுதான் தவறு" என்ற ரீதியில் தான் இங்கே வழக்குகள் நடக்கும், சாலையில் மக்களும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி, கிடைத்த வாகனத்தை அடித்து நொறுக்குவார்கள்!

"தலைக்கவசம் அணிந்தாலும் இறக்கிறார்கள்!" என்று ஒரு கும்பல் வாதம் செய்யும், பெரிய விபத்துக்கள் ஏற்படும்போது அதைத் தவிர்ப்பதற்கில்லை, எனினும் ஒரு சிறிய மோதலில் கூட நிலைகுலைந்துச் சாலையில் விழும் பைக்கோட்டிகள் தலையில் அடிபட்டு இறந்துபோவதுதான் அதிகம்!

பல வருடங்களுக்கு முன்பு என் பள்ளி நண்பனொருவன், குடும்பச் சூழ்நிலையில் பள்ளி இறுதியாண்டை மட்டும் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றான், தந்தை இறந்துவிட மனநிலை சரியில்லாத மூத்த தமைக்கையின் பொறுப்பையும் அவனே எடுத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும், மனைவியும், அம்மாவும் என ஒரு குடும்பத்தை அந்த வேலையைக் கொண்டே நிர்வகித்து வந்தான், எப்போதும் நிறுவனப் பேருந்தில் செல்லும் அவன், அன்றொருநாள், உடன் பணிபுரிந்த ஒருவனின் அழைப்புக்கிணங்க அவனுடன் பைக்கில் சென்றிருக்கிறான், ஒட்டியவன் தலைக்கவசம் அணிந்திருக்க இவனுக்குத் தலைக்கவசம் இல்லை, ஓட்டுபவருக்கு மட்டுமே தலைக்கவசம் என்பது இங்கே எழுதப்படாத விதிதானே? அந்த விதிதான், பின்னால் வந்த லாரியின் மூலம் நண்பனின் விதியை முடித்தது, வண்டியோட்டியவன் உயிர்பிழைக்க, பின்னால் இருந்தவன் தலையில் அடிபட்டு இறந்து போனான்!

அவன் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றபோது, மனநிலை சரியில்லாத அக்கா, பாசத்துடன் எங்களுடன் பேசியபோது, எல்லோருக்கும் கண்ணீர் வந்தது, மனைவி அதிகம் படிக்கவில்லை, ஒரு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் சாமர்த்தியமும் இல்லை, எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவிட்டு வந்தோம், அவனின் மனைவி குழந்தைகளோடு அவளின் அம்மா வீட்டிற்குச் சென்று விட, அவனின் தமக்கையை ஏதோ ஒரு காப்பகத்தில் அவர்கள் சேர்த்துவிட்டதாக அறிந்தோம், ஒரு சின்ன விபத்து, ஒரு சின்ன அலட்சியம், ஒரு சகோதரியை அனாதையைப் போல் எங்கோ ஒரு காப்பகத்தில் விட்டது, இரண்டு சிறிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, எல்லோருக்கும் ஒரு மீளாத் துயரைத் தந்துவிட்டுச் சென்றது!

"ஹெல்மெட் போடேன்" என்று சில நண்பர்களிடம் சொன்னாலும், "அட பக்கத்துக்குத் தெருதான்", "எனக்கு ஒன்னும் ஆகாது", "தலைமுடிக் கொட்டிடும்!"...இப்படி வியாக்கியானம் பேசும் நண்பர்களிடம் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும், அவர்களின் பாதுகாப்புக்கு வேண்டுதல் வைப்பதைத் தவிர?

ஒருவர் நான் நெடுஞ்சாலையில் சரியாய் சிக்னலில் இடதுபுறம் திரும்ப, வலதுபுறம் போக வேண்டியவர் அதிவேகமாய் வந்து ஓட்டுனரின் இருக்கையை இடித்து விழுந்தபோது, அந்தச் சத்தத்தில் அவர் மண்டையுடைந்து இறந்துவிட்டாரோ என்று பதட்டம்தான் எனக்கு முதலில் இருந்தது, நல்லவேளையாகத் தலைக்கவசம் அணிந்திருந்தார், பைக்கோட்டிகள் இப்படி வந்து விழும்போது, அவர்களால் எத்தனை பேருக்கு மனஉளைச்சல், பொருட்செலவு?

சென்னையில் ஓர் இடத்திற்கு, பேருந்தில், ஆட்டோவில், ரயிலில், ஷேர் ஆட்டோவில், ரிக்க்ஷாவில், கால் டாக்ஸியில் அல்லது நடந்தும் கூடச் செல்லலாம், அத்தனை வாகனங்கள் இருக்கிறது, இருந்தாலும் பெட்ரோல் டேங்கின் மீது ஒரு குழந்தை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு குழந்தை, அம்மாவின் கையில் ஒரு குழந்தை என்று ஒரு குடும்பமே பைக்கில் செல்லும் காட்சிகள் சாலையில் சர்வசாதாரணம்!

சில மாதங்களுக்கு முன்பு கோட்டூர்புரத்தில், அண்ணா நூலகத்தைத் தாண்டி, கிண்டிச் செல்லும் திருப்பத்தில் உள்ள சிக்னலில், மூன்று லேன்கள் கொண்ட சாலையில் கார்கள் வரிசையாய் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்க, "டமார்" என்று அடுத்தடுத்து வாகனம் மோதிய சத்தம், ஒரு சிகப்பு நிற டாடா இண்டிகா கார் ஒன்று, இடதுபுறம் நின்றிருந்த என் காரின் பின்புறம் மோதி, பின் அப்படியே ஒடித்து அடுத்த வரிசையில் இருந்த இன்னோவாவை உடைத்து, பின்பு அதற்கு அடுத்த வரிசையில் இருந்த ஒரு மாருதியை இடித்து நின்றது, யாரோ ஒரு ஓட்டுநர், எந்த வரிசையில் காரை நிறுத்துவது என்று தெரியாமல், அத்தனை வேகமாய்ச் சட் சட்டென்று மூன்று வாகனங்களைச் சேதப்படுத்தி நிறுத்தினார், எல்லோரும் இறங்கிச் சண்டையிட, அந்த இடத்தில் குழந்தைக் குட்டிகளோடு ஒருவேளை இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தால் நிச்சயம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றே தோன்றியது!

யோசித்துப் பாருங்கள், இப்படி வாகனம் ஓட்டத்தெரியாமல் ஒட்டி, சட்டென்று இடித்துவிடுபவர்களை என்ன செய்யமுடியும், கோபமுற்று அடிப்பதோ, அந்த வாகனத்தை அடித்து நொறுக்குவதோ, விபத்தில் போன உயிரை மீட்காது! அதுவும் பெற்றோரின் அலட்சியத்தில், ஒரு பேருந்து செலவை அல்லது ஆட்டோ செலவை குறைக்க,குடும்பத்தையே பைக்கில் அத்தனை அலட்சியமாய்க் கூட்டிச்செல்லும் குடும்பத்தலைவர்கள் தாமே முதலில் கொலைகாரர்கள்?

நம்முடையைச் சாலைகள் சரியில்லை, நம்முடைய விதிமுறைகளை வகுத்தவர்களுக்கே எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சொல்லும் சட்டம், அதைச் சார்ந்த அரசுதான், பார்க்கிங் வசதியுடன் பார்களை நடத்துகிறது, "பாருக்கு" வருபவன் வாகனத்தில் வருகிறான், குடித்துவிட்டு அந்த வாகனத்தில் தான் வீட்டுக்குச் செல்கிறான், காவல்துறை என்ன செய்யும்? அவர்களுக்கே இது குழப்பம்தான்!

முதன்முதலில் விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளைத் தானம் செய்த மாணவன் செய்ததும் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஒட்டியதுதான், அந்த விபத்து உடல் உறுப்புத் தானம் பற்றிய விழிப்பை ஏற்படுத்தியது, ஆனால் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவு ஏனோ இன்னும் வரவில்லை!

பதினெட்டு வயது நிரம்பாத பிள்ளைகள் ஸ்கூட்டர்களை ஒட்டிக்கொண்டு செல்வது தினசரி நிகழ்வு, அது அவர்களின் பெற்றவர்கள் தந்தது என்றால், அவர்கள் அன்பற்றவர்களாகத்தானே இருக்க முடியும் ?
கணவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றால் அமைதியாய் இருக்கும் மனைவி அன்பற்றவளாகத்தானே இருக்க முடியும்? மனைவியைப் பிள்ளைகளைத் தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தில் அழைத்துச் செல்லும் கணவன் அன்பற்றவனாகத்தானே இருக்க முடியும்? இது எல்லாம் இல்லை, எத்தனை சொன்னாலும் கேட்பதில்லை என்றால், அவர்களைக் காவல்துறைக் கண்டிக்காமல் என்ன செய்யும்? கண்டிக்கும் காவல்துறைக்குப் பணத்தைக் கொடுத்து தப்பிக்க நினைப்பவர்கள், மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்தால், அட கடவுள்தான் என்ன செய்வார், "தம்பி நீ கீழே இருந்தது போதும், மேல வந்துடு ராசா!", என்றுதான் சொல்வார்!

உலகத்திலேயே சிறந்த ஓட்டுநராக நாம் இருந்தாலும், நம் சாலைகள் சிறந்த சாலைகள் இல்லை, நம் சட்டம் சிறந்த சட்டம் இல்லை, நம் சாலையில் செல்பவர்கள் எல்லாம் சிறந்த ஓட்டுநர்களும் இல்லை, குடிக்காத "குடிமகன்களும்" "குடிமகள்களும்" இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், குடும்பத்திற்கு ஏற்படும் மீளாத்துயரைக் கொஞ்சம் கற்பனை செய்துபார்த்தால் அடுத்த முறை வாகனம் எடுக்கும்போது தலைக்கவசத்தையும் எடுப்பீர்கள், உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் பயணிப்பவர்களுக்கும் சேர்த்து!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!