எனது என்னுடையதென்று
ஏந்திக் கொண்டிருக்கும்
எதுவும் எனதில்லை
பொருளென்றாலும் உயிரென்றாலும் !
பொருட்கள் கைமாறிப் போகும்
உயிர்கள் திசை மாறிச் செல்லும்,
அன்பை விதைத்து
அன்பை எதிர்நோக்கும், எம்செயல்
விதையை விதைத்து
விருட்சத்தை எதிர்நோக்கும்
கேலிகூத்தேதாம்
எங்கோ விதைக்கிறேன்
எங்கோ வளரும் யாருக்கோ நிழல்தரும்
முதாதையர் விதைத்ததும் உடனில்லை
முப்பாட்டன் விதைத்ததும் இன்றில்லை
நேற்று நான் விதைத்து முளைத்த
செடியும் மரமும் கூட நீதி சொல்கிறது
கனியும் இல்லை நிழலும் இல்லை
எதிர்பாராததே அன்பென்கிறது!
நான் கனி வேண்டி நிற்கவில்லை
எனினும் விழுந்துக் கிடக்கும் நிழலையும்
மறைத்து விந்தை செய்து,
பாதையை மறித்துப் பரிகாசம் காட்டி,
என்றோ அன்பில் முளைத்த ஒன்று
இன்று கருணையற்றுத் தீய்க்கிறது!
அப்படியே எரிந்து கொண்டிருந்த
சாலையில்,
துவண்டு நின்ற என்னிடம்,
எஞ்சி இருக்கும் கருணையில்
தாழ வந்த கிளையிலிருந்து
தூது வந்த ஓர் இலை சொன்னது,
"யாம் மரங்கள் இல்லை மனிதர்கள்! "
வெறித்து நோக்குகிறேன் வெறுப்பில்லை
மனிதர்கள் அடர்ந்தக் காட்டில்
நான், நின்று தனித்துத் தணிந்து!