Saturday 28 March 2015

வணங்குகிறேன்!

"இந்தியாவில் செய்தது" (மேட் இன் இந்தியா) என்று முதலாளிகளை ஊக்குவித்து இந்தியாவைத் தலைநிமிரும் செயல்களை விடுத்து,

எப்போதோ ஆரம்பித்து மலிவான சீனப் பொருட்களால் உள்ளூர் சந்தை அழிந்ததைப் பற்றிக் கவலைக்கொள்ளாமல்,

மேலை நாடுகளின் குப்பைகளையெல்லாம் இறக்குமதி செய்யும் கொள்கலனாக இருப்பதைக் கொஞ்சமும் மாற்றாமல்,

ஏற்கனவே கூலிகளாய் ஆகிவிட்ட விவசாயிகளை, நிரந்தரக் கூலிகளாக்கவும், எஞ்சி மிஞ்சி இருக்கும் நிலங்களையும் கையகப்படுத்தவும் சட்டம் இயற்றி,

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் காலத்திலும் புராண பாடல்களையே பாடிக்கொண்டு,

ஆடையின்றித் திரியும் வறியவர்கள் நிறைந்த நாட்டில், பத்துலட்ச ரூபாய்க்கு ஆடைஅணிந்து கொண்டு, அதையும் அவசரமாக ஏலம் விட்டு நாடகமாடி,

பன்மொழிப் பேசும் மக்களின் ஓட்டுக்களை வாங்கி அரசு அமைத்துவிட்டு, இந்தி மட்டுமே பிரதானமென்று முழங்கிக்கொண்டு,

 பாலியல் வன்முறைகள் பெருகும் நேரத்தில், பெண்கள் ஒழுங்காய் இருந்தால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று பழமைக் கருத்துப் பேசும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு,

சுவிஸ் வங்கியில் பணமுதலைகளின் கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்து பிரித்துக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, முதல் காரியமாக மக்களுக்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தி, ஏகப்பட்ட குளறுபடிக்குப்பின், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று அறிக்கை விட்டுக் கொண்டு,

அவ்வபோது ராணுவத்தின் படைபலத்தைப் பற்றிப் பெருமைப் பேசி, நாட்டின் ஒரு பகுதியாய் இருக்கும் தமிழ்நாட்டில் மீனவர்கள் ஒரு சிறுத்தீவினால் கொல்லப்படுவதும் கைது செய்வதுமாக இருக்க அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், அத்தீவிற்கே சென்று சர்வாதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு வரும் பெருந்தன்மைக்கும் எனப் பட்டியலில் அடங்கா சேவையாற்றி,

 ஒரு பாரத ரத்னா வழங்கியமைக்காகவும், முதல் வரியில் சொன்ன "மேட் இன் இந்தியா" என்னும் நிலைமாறி, கம் (வாங்க) மேக் இன் இந்தியா, எங்கள் நிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள், எங்கள் வளங்களைச் சுரண்டிக் கொள்ளுங்கள், எங்கள் உழைப்பை எடுத்துக்கொள்ளுங்கள், அணுவுலை அமையுங்கள், ஆஸ்பெஸ்டாஸ் கொட்டுங்கள், உங்கள் மருந்துகளுக்கு எங்களைச் சோதனை எலிகளாக்கிக் கொள்ளுங்கள், என்று இந்திய கூலிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க,

"அயராது சுற்றுப்பயணத்தில் இருக்கும் மாண்புமிகு அரசை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !"

1 comment:

  1. நச்சுன்னு சொன்னீங்க...அமுதா...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!