Saturday 21 March 2015

விட்டத்து பல்லி!



உடன்பயின்ற நாட்களில்,
நண்பனொருவன் விளையாட்டாய் 
புத்தகத்தைப் பறித்துக் கொண்டு  
ஓடுகையில்,
பிடிக்க எத்தனித்து
கால் தடுக்கித் தடுமாறி
தள்ளாடிய ஓர்நாள்,
சட்டென்று
கரம் பிடித்து நிறுத்தினாய்!
பற்றிய கரத்தினை விடாமல்
சீருடையில் தூசு தட்டி
சில நொடிகள் கண்களை ஊடுருவி
விழி அகற்றி விலகி ஓடினாய்!

பிறந்தநாள் பொழுதொன்றில்
புத்தகத்தில் நான் லயித்திருக்க
அன்று மட்டும் நண்பர்கள் தவிர்த்து
வீட்டினுள் நுழைந்து,
எப்போதும் போல் விட்டத்தை நோக்கினாய்,
அங்கிருந்த பல்லியை
பூனை துரத்திவிட்டதென்ற
என் கேலிப்பேச்சுக்கு மறுப்பில்லாமல்
சிறுபுன்னகையுடன் தலைகுனிந்தாய்,
ஊதா நிறத்தில் சிலபூக்களும்
சிலபரிசுகளுமாய்
பிறந்தநாள் வாழ்த்துசொல்லி
ஒரு நொடிக் கைப்பிடித்து விழிநோக்கி
மீண்டும் விட்டம் வெறித்தாய்,
அதற்குபின் நீ அதிகம் பேசி
நான் கேட்டதேயில்லை
எப்போதும் வாய்மூடி, தொடர்ந்தாய்!

பின்தொடர்ந்த உன் பார்வைகள்
எப்போதும் ஒரு குழப்பப் போர்வையை
எனக்குள் போர்த்திச் சென்றது
பட்டம் பெற்று வருடங்கள்
கடந்து சென்றாலும்,
காணும்போதெல்லாம்,
ஒரு தேடல் பார்வையும்
மௌனமுமாய்க் கடந்து சென்றாய்,
என்னதென்ற என் கேள்விக்கு
இன்னதென்று ஒருபோதும் பதிலில்லை
வெவ்வேறு பரிணாமத்தில் வீசிய
அந்த வெற்றுப் பார்வையைத் தவிர!

ஏதோ ஒரு தெருவில்
நீ என் பெயர் கொண்ட
பெண்ணைத் தொடர்வதாய்
உன் தமக்கைச் சொன்னபோது
மெல்லியதான ஒரு புன்னகை
எனக்குள் பூத்தது
விட்டத்தில் தேடி இப்போது
விட்டதைத் தேடுகிறாய்!

முயற்சிகள் தோல்வியுற்று
பெற்றோரின் விருப்பத்தில்
பெயரறியாப் பெண்ணை நீ மணந்ததாய்
நண்பனிடம் கூறிச் சென்றாய்,
உன் முதல் பெண் மகவை
என் பெயரின் முதல்பாதியை
சொல்லி நீ அழைத்த தருணத்தில்
அச் சாலை வளைவில்,
மீண்டும், என்னைக் கடந்தாய்!
சட்டென்று சூழ்ந்த மௌனமேகத்தில்
உன் விழித்திரைகளில் நீர்
மௌனம் கலைக்கும் நோக்கில்
பாப்பா அழகுடா என்றேன்,
மனசில் இருக்கும் உருவம் அழகுடி
அதனால் என்று சட்டென்று கூறி
உதடு கடித்துப் பார்வை திருப்பினாய்!
வாழ்க்கை விட்டத்திலில்லை
தரையில் இருக்கிறது என்று
கொதித்தெழுந்த என் கோபத்தில்,
அடிபட்டப்  பார்வையுடன்
ஆற்றாமையில் விழிநோக்கினாய்,
உன் விழி வழி வந்த
விட்டத்து  பல்லி
இப்போது என் மூளையில்
சுற்றுகிறது மௌனமாய்!!!



 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!