Monday 2 March 2015

குடியும்_குடியும்‬

அந்தப் பெண்ணைக் கொஞ்ச நாட்களாகத் தெரியும், எப்படி வந்ததென்றே தெரியாமல் ஒரு குடிப்பழக்கம், கல்லூரி நட்பில் விளையாட்டாய் ஆரம்பித்தது, பிறகு வீட்டிலேயே குடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது, தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டவளை, அவளின் வருமானத்தை மட்டும் நம்பி இருந்த பெற்றோரால் வழி நடத்தவும் முடியவில்லை.
முதலில் தோழிகளின் வற்புறுத்தலால் ஆரம்பித்துப் பின்னாளில் அவளுக்கென்று கிடைத்த சுவாரசியமான காரணங்களால் வளர்ந்து கொண்டே போகிறது என்று அவளுடைய பெற்றோர்கள் அலுத்துக்கொண்டனர், தோழிகளின் கண்ணில் பட்ட அவள் மாமன் மகனின் மேல் மையலைப் பேசிபேசியே ஏற்றிவிட்ட தோழிகளால், அவனையே திருமணம் செய்யப் பிடிவாதம் பிடித்திருக்கிறாள், உறவில் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்ட மாமன் மகனையும், பெற்றோர் உற்றார் சேர்ந்து எப்படியோ திருமணம் செய்து வைத்துவிட்டார்கள், மகளின் குடிபழக்கத்தை மறைத்து.
மாமனை திருமணம் செய்தால் குடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று சத்தியம் செய்ததால், இருக்கும் சொத்தெல்லாம் உனக்குத்தான் என்று மாமனை வளைத்துப் பிடித்துத் திருமணமும் செய்தாயிற்று.
ஒருநாளில் ஒழுங்காய் இருந்தவளுக்கு, கணவன் வெளியே சென்றதும் மீண்டும் குடிக்கும் ஆசை தலைதூக்கி இருக்கிறது, லேசாய் ஒரு பெக் என்ற கணக்கில் முதலில் ஆரம்பித்து, பின்பு தினமும் குடிப்பது தொடர்கதை ஆகி இருக்கிறது, மாமனுக்கும் அதிர்ச்சி, எப்படியோ மனைவியைத் திருத்தப்பார்த்தும் அவனால் முடியவில்லை, ரெண்டு பெரும் சேர்ந்தே குடிப்போம் மாமா என்று சொன்னவளை என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை, ஊரில் இல்லாத அதிசயமா மாப்பிள்ளை, சொத்தெல்லாம் அவள் குடித்தே அழித்துவிடாமல் பார்த்துக்கங்க என்று சொல்லி, வீட்டிலேயே குடிக்கவும் வழி வகைச் செய்திருக்கின்றனர், இதற்கிடையில் அவர்களுக்கு எப்படியோ ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது, ஆனால் சற்றே மூளைவளர்ச்சிக் குன்றியக் குழந்தை
சொத்து முழுதும் செலவு செய்தாலும் சரியாக்க முடியாத ஒரு நிலை, இப்போது அவளுக்கு அதுவும் குடியைத் தொடர ஒரு காரணமாயிற்று, கணவனால் வீட்டையும் பார்த்துக்கொண்டு மனநிலைப் பிறழ்ந்தக் குழந்தையையும் கவனித்துக் கொண்டு, வெளியே வேலையும் செய்து கொண்டு (எத்தனை சொத்து இருந்தாலும் அதனைக் காப்பாற்றவும் உழைப்பு தேவைதானே?) அவன் கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து கொண்டு வருகிறான்....அசந்த நேரத்தில் ஒருநாள் அவள் குடி அதிகமாகி, ஆடைகள் அலங்கோலமாக வாசலில் விழுந்து கிடக்க
நண்பனுடன் வந்தவன் அதிர்ச்சியுற்றான், அதன் பின் நண்பனின் கைங்கரியத்தால், குடிகார மனைவியின் பெருமை எல்லோருக்கும் பரவ, அவனால் வெளியே தலைகாட்டவும் முடியவில்லை, மனநிலை பிறழ்ந்த குழந்தையை வைத்துக் கொண்டு, பெரியவர்களின் கட்டமைப்பை மீறவும் முடியாமல் இயைந்து வாழவும் முடியாமல், அவளைத் திருத்தவும் முடியாமல், நீ என்னைச் சொத்துக்க்காகத்தானே கட்டிக்கிட்டே, உன்னாலத்தாண்டா நான் குடிக்கிறேன் என்றும், இப்படிப் பட்ட குழந்தையை எனக்கு ஏன் கொடுத்தான் ஆண்டவன் என்றும், சாம்பாரில் உப்பில்லை என்பது வரை ஒவ்வொரு காரணமாய்ச் சொல்லி அவள் குடித்துக் கொண்டே இருக்க அவன் வாழ்க்கை நரகமாகிக்கொண்டே இருக்கிறது......இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்?
யோசித்துச் சொல்லுங்கள், அவள், அவன் யார் என்று நான் விரைவில் சொல்லுகிறேன்!
















நேற்றைய பதிவில், ஒரு பெண்ணுடைய குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி எழுதி இருந்தேன், உண்மையில் அவள் என்பதை அவன் என்றும், அவன் என்பதை அவள் என்றும் நீங்கள் படித்திருக்க வேண்டும்.....ஒரு மாற்றம் வேண்டியே அப்படி எழுதினேன். பொதுவில் இந்தப் பதிவில் நான் எழுதியவை அனைத்தும் நீங்கள் தினம் தினமோ, ஏதோ ஒரு பொழுதிலோ, உங்கள் குடும்பத்திலோ அல்லது அண்டை அயலிலோ கண்டிருக்கக் கூடும், கடந்திருக்கக் கூடும், சகித்திருக்கக் கூடும்.
மறுவாழ்வு மையத்துக்கு அல்லது விவாகரத்து என்பது வரை உங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்தீர்கள், ஆனால் உண்மையிலேயே தமிழ்நாடு குடிமகன்களால் நிறைந்து கொண்டிருக்கிறது, கூடிய விரைவில் குடிமகள்களாலும் நிறையக் கூடும். இதைப் பற்றிச் சிந்திக்க அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை. பெண்ணின் உடைப்பற்றி, காதலர் தினம் பற்றிச் சர்ச்சை எழுப்பும் எந்தக் காலச்சாரக் காவலனும், குடியைப் பற்றிக் கவலைப்படவில்லை, அதனால் வீழும் குடும்பங்களைப் பற்றியோ, சிதையும் குழந்தைகளைக் கனவுகளைப் பற்றியோ, அல்லல்ப்படும் பெண்களைப் பற்றியோ, அதிகரித்துக் கொண்டே போகும் சாலை விபத்துக்களைப் பற்றியோ கவலையே இல்லை.
குடிக் காக்க வேண்டிய அரசு, குடி விற்று, குடிகளைச் சிதைக்கிறது.......இதைப் பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. குடிக்கும் ஆண்கள், ஒருவேளை தங்கள் வீட்டு பெண்களும் குடிக்க ஆரம்பித்தால் குடும்பம் என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும்.
ஆண்களே உங்களின் எந்தக் கவலையும் குடியினால் தீரப்போவதில்லை, கவலைகளுக்குப் பயந்து, உங்களைச் சிதைத்துக் கொள்வதற்குப் பதில், நீங்கள் ஆக்கப் பூர்வமாய்ச் சிந்தித்துச் செயல்படலாம்....., அல்லது, கவலைகளைக் மறக்க, கடக்க, குடித்துக் குடித்துச் சாவதுதான் உங்கள் விருப்பம் என்றால், குடிக்காமல் உங்கள் உடல் உறுப்புக்களைச் சிதைக்காமல், செத்துப்போங்கள், உங்கள் உடல் உறுப்புக்களாவது பிறர் உயிர் காக்கப் பயன்படட்டும். குடிகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்து கொண்டிருக்கும் சாராய வணிகத்திற்கு லாபம் சேர்க்க உழைக்காமல், அந்த ஒரு குவார்ட்டர்க் காசை ஒரு வறியவனுக்கு யோசிக்காமல் கொடுத்து நீங்கள் உதவி செய்துவிட்டுப் போகலாம்!
‪#‎குடியும்_குடியும்‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!