Monday, 2 March 2015

போக்குவரத்து விதிமீறல்கள்






மாத இறுதியில், திரும்பும் வண்டியெல்லாம் பாய்ந்துப் பிடித்து, சோதனை செய்து, அபராதம் வசூலித்து ஓய்ந்த பின்,
மாத தொடக்கத்தில், முழுதாய் சன்பிலிம் போட்டுக் கருப்படித்து, கடந்து சென்ற காரையும், தலைக்கவசம் அணியாமல் இருவர் மூவர் என அருகிலேயே வேடிக்கைக் காட்டிக் கொண்டு சென்ற இளைஞர்களையும், சிக்னலை மதியாமல் சென்ற டெம்போவையும், மதிய நேரத்தின் ஆயாசத்தில் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாய்ப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த போக்குவரத்துக் காவல் அதிகாரியைப் பார்த்தப்போது ஏனோ டிஸ்கவரிச் சானலில், மேய்ந்து கொண்டிருந்த மானை, ஓய்வாய் படுத்துக் கொண்டிருந்த சிங்கம், அசட்டையாய் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது....

மாசக் கடைசி வராமலா போய்டும், பிக்காளிப் பயலுவா, அப்போ கவனிச்சுக்குறேன் கலக்க்ஷனை.....வடிவேல் பாணியில் அதிகாரியின் மைண்ட் வாய்ஸ் கேக்கலையா பாய்ஸ்?!
-----------------------------------------------------------



ஒரு வயது குழந்தையைக் கூட இரு சக்கர வாகனத்தில், மிக அசட்டையாய் முன்னால் அமரவைத்து, செல்போனில் பேசியபடி செல்லும் தகப்பன்,
டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு, தன்னுடைய எட்டு வயது மகனை வண்டியின் பின்னே அமரவைத்து, தாறுமாறாய் நெடுஞ்சாலையில் ஓட்டி, விபத்தைச் சந்தித்து, மகனைக் காயப்பட வைத்த தறுதலை,
நான்கு வயது பேத்தியை ஸ்கூட்டியின் முன்னே அமரவைத்து, பின்னே அமர்ந்து இருந்த இளைஞனிடம் பேசிக்கொண்டே, சிக்னலை மதியாமல் முன்னே சென்று ஒரு லாரி ஓட்டுனரின் புண்ணியத்தில் தப்பித்த ஒரு தாத்தா,
குடும்பத்தையே இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஒரு திருப்பத்தில் எதிர்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, தன் இரண்டு வயது குழந்தையைப் பறிக்கொடுத்த பரிதாபத்துக்கு உரியவன், புகைப்பிடித்துக் கொண்டே வாகனங்களை ஒட்டி, அந்தச் சாம்பலை பின்னே வருபவர்களின் கண்ணில் தூவும் முட்டாள்கள்,
தாண்டும் இடத்தை விட்டு வண்டிகளுக்குச் சிக்னல் போட்ட சமயத்தில் சாலையின் குறுக்கே விரையும் புத்திசாலிகள், தலைக்கவசம் அணியாமல், ஒரு சின்னத் திருப்பத்தில் டெம்போ இடித்துக் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த மீண்ட நண்பன்........
விபத்துக்கள், விபத்துக்கள், விபத்துக்கள்!
விபத்துக்கள் சாலையில் மட்டுமல்ல வீட்டிலும் நிகழ்கின்றன, பெரும்பாலும் அசட்டையால், சில வேளைகளில் கவனக்குறைவால்.......

குறைந்தப்பட்சம் குழந்தையை அழைத்துச் செல்லும்போது கூடப் போக்குவரத்து விதிகளை மதிக்காத தகப்பன்களும் தாய்களையும், உறவுகளையும் அடைந்த குழந்தைகள் என்ன வரம் வாங்கி வந்திருக்கும்?
 







No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!