குழந்தைகளுக்காக
மற்றும் உங்களுக்காக :
1. காய்ச்சல் என்பது வியாதி அல்ல,
உடலில் ஏற்பட்ட ஏதோ ஓர் அழற்சிக்குத் தீர்வாக, உடல் ஏற்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பே
காய்ச்சல், உள்ளிருக்கும் வைரஸையோ பாக்டிரீயாவையோ கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான்
உடற்சூடு! எனினும் அழற்சிக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு மருந்துக் கொடுக்கும்
பொழுதே காய்ச்சல் விடைபெறும்.
2. காய்ச்சலால் உடல் வலியும், உடல் சோர்வும் ஏற்படும்.
பாரசிடமால் மாத்திரைகள், உடல் வலி, காய்ச்சல் இரண்டையும் போக்கும் மருந்து.
பெரும்பாலான ஜுரம், சாதாரண வைரஸ் கிருமிகளால் வரும், இந்த வகை வைரஸ் காய்ச்சல் நான்கு
ஐந்து நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும், இவற்றுக்கு, பாரசிடமால் மட்டுமே போதுமானது.
3. மூன்று நாளுக்கு மேலும் காய்ச்சல் இருந்தால், வெறும்
பாரசிடமால் மட்டுமே தீர்வாகக் கொடுத்துக் கொண்டிருப்பது தவறு. மருத்துவரின் அறிவுரைப்படி,
பரிசோதனைகள் செய்வது நலம் ! மலேரியா, டைபாய்ட், டெங்கி (டெங்கி , வேறு வகையான காய்ச்சல்கள்
என்று எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள, ரத்த, மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்து எதுவும் இல்லை
என்று உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம் !
4. பாரசிடமால் மருந்தை, ஒவ்வொரு கிலோ
உடல் எடைக்கும் பத்து மில்லி கிராம்
என்ற அளவில் (10mg/1kg), 6 மணிக்கொருமுறை என்ற விகிதத்தில், 24 மணிநேரத்தில் 5 முறைக்கும்
குறைவான முறை மட்டும் கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ எடைக் கொண்டவர், ஒருமுறை எடுத்துக்கொள்ளும் பாரசிடமால்
மருந்தின் அளவு ஐநூறு மில்லி கிராம்
(500mg) அளவில் இருக்கலாம் , அறுபத்தைந்து என்றால் அறுநூற்றி ஐம்பது. குழந்தைகளுக்குத்
திரவ நிலையில் உள்ள சிரப் (syrup) கொடுக்கலாம், பாட்டிலில் குழந்தைகளின் உடல் எடையைக்
கொண்டு அளவுமுறை இருக்கும், அதைத் தெரிந்து கொண்டு கொடுத்தல் நலம்!
5. அதிகமான சூட்டில் உடல் தகித்துக்
கொண்டிருந்தால், ஈரத்துணியை நெற்றி, நெஞ்சு மற்றும் தொடையில் வைத்து, சூடு தணியும் வரை ஒற்றி எடுக்கலாம்,
இதை டெபிட் (Tepid) ஸ்பாஞ்சிங் என்று சொல்லுவார்கள் அல்லது ஸ்பாஞ் பாத் என்று சொல்லலாம்.
உச்சந் தலை, கைகள் , பாதங்களைத் தவிர்த்து விடுதல் நலம். ஒருபோதும் மிகவும் குளிர்ந்த
(ஐஸ்) நீரை உபயோகப்படுத் தாதீர்கள் .
6. மருத்துவர் குறிக்கும் அளவுக்கு
மேல், தொடர்ந்து பாரசிடமால் உபயோகிப்பது கல்லீரலை
பாதிக்கும் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது, குழந்தைகளின்
கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அழற்சியும், பின்விளைவுகளும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
7. குழந்தைகளுக்கு வயிற்று உபாதையால்
காய்ச்சல் வருகிறது என்று தெரிந்தால், தொடர்ந்து பேதியோ வாந்தியோ இருந்தால், இரண்டு
வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பால், சர்க்கரை, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்கள்,
கீரைகள், இறைச்சி, மீன் வகைகள் தவிர்த்து, வயிற்றுப்போக்கு நிற்கும்வரை, தயிர் சாதம்,
கஞ்சி , பழ ஜூஸ் ,மோர் போன்ற திரவ உணவு வகைகள் மட்டுமே கொடுக்க வேண்டும்”
8. உப்பு, சர்க்கரை கரைசல் அல்லது “ORS – Oral
Rehydration solution” பௌடரைத் தகுந்த இடைவெளியில் அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டுவது
அவசியம், நீர் இழப்பை இது சரி செய்யும்
9. பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்கு
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது zinc டானிக்கை சக்தி இழப்பை ஈடுகட்ட ஒருவேளை தரச்சொல்லுவார்கள்
10. சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன்
ஆண்ட்டிப் பயடிக்ஸை நாடுவது நல்லதல்ல , மருத்துவர் தரும் சாதாரணச் சளி மருந்துப் போதும்,
அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.
11. சுக்கு, மிளகு, சேர்ந்த காஷாயமும்,
துளசி , ஓமவல்லி அல்லது கற்பூர வள்ளி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி,
கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது தேன் கலந்து, காலையும் மாலையும் என இருவேளைகள் மூன்று
அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்
12. குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்திக்
காய்ச்சிக் கொடுப்பதாலும் , சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும்
டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை, தவிர்க்கலாம்
13. டெங்கி மற்றும் பிற காய்ச்சலுக்கு
மருத்துவர் பரிந்துத்துரைத்த மருந்துகளுடன் நிலவேம்புக் கஷாயமும் பப்பாளி இலைச்சாறும்
பரிந்துரைக்கும் அளவுகளில் கொடுப்பது நல்லது, குறிப்பாக, மலேரியா ஜுரத்திற்கு வலிமையான
மருந்துகள், மலிவு விலையில் கிடைக்கின்றன.
(Dengue - “டெங்கி” தான் சரியான உச்சரிப்பு. இங்கே, எல்லோரும் தவறாக “டெங்கு” என்று
உச்சரிக்கிறார்கள்.!)
14. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கும்,
குடலில் ஏற்படும் அழற்சிக்கும் அதனால் ஏற்படும் காய்ச்சலுக்கும், போதிய அளவு நீர்,
மோர், பழச்சாறுப் போன்றவைகளை அடிக்கடி
உட்கொள்ளும்போது, சிறுநீர்ப் பாதையின்
வழியாகவும், மலக்குடலின் வழியாகவும் தொற்றுக்கள் வெளியேறும், மற்ற தொற்றுகளுக்கு மருந்தே
நிவாரணி
15. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்,
காலை 10 மணி முதல் 3 மணிவரையிலான வேளையில் பத்து நிமிடமேனும் சூரிய ஒளி உடலில் படவேண்டும்.
இது வைட்டமின் D குறைபாட்டைத் தவிர்க்கும். இந்தச் சத்து உடலில் கால்சியத்தை இருத்திக்கொள்ள
உதவுகிறது. வைட்டமின் த குறைபாடு ஏற்படும்
போது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து தேவைப்படும் கால்சியத்தை உங்கள்
உடல் எடுத்துக் கொள்ளாது, விளைவுகள் உங்கள் எலும்புகளின் பலவீனத்தில் தெரியவரும்.
16. குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்,
எலெக்ட்ரானிக் உபகரணங்களுடனான அவர்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள் , அல்லது, முற்றிலும்
தவிர்த்து விடுங்கள். ஆளுக்கொரு சாதனத்துடன் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் , நீங்கள்
எப்போதும் மருத்துவரே கதி என்றுதான் இருக்கக் கூடும்
17. குழந்தைகளின் உடலில் குறைந்தபட்சம்
அரைமணியில் இருந்து ஒரு மணிநேரமாவது சூரிய வெளிச்சம் படுவது அவசியம்,
18. வீட்டில் வெளியில் என்று எப்போதும்
குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருந்தால் உடலின் சமன்பாடு பாதிக்கப்படும்! வியர்ப்பது நல்லது!
19. சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டபின்
கைகளைச் சுத்தமாகக் கழுவச் செய்யுங்கள். வெளியில் சென்று வரும்போதும், மலம் கழித்தபின்னரும்
கை கால்களைச் சுத்தமாகக் கழுவும் வழக்கத்தை
ஏற்படுத்துங்கள்.
20. பழம், பழச்சாறு, போன்றவைகளை உணவுக்கு
முன்பு கொடுத்தால் அல்லது உணவிற்கு முன்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது,
அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும். உணவுடன் பழங்களை உண்பதைக் காட்டிலும், இந்த முறையில்
எடுத்துக்கொள்ளும் போது, ஜீரணம் எளிதாகி
தேவையான சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளும்
21. ஆண் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல்
சமயம் தவிர்த்து, தொடர்ந்து துளசி
தருவதைத் தவிர்த்திட வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள் .
22. கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும்
தவிர்த்திடல் நலம் , நாள்பட்ட உபயோகம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று
ஆங்கில மருத்துவம் சொல்கிறது.
23. வேப்பிலைப் புகை, பூண்டு, கற்பூரம்
, எலுமிச்சைப் புல் சாறு , கொசு வலையடித்தால் , வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக
வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்
24. காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால்,
மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில்
நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக் கொண்டு
இருக்க வேண்டும் .
25. எல்லாவற்றுக்கும் மேல், சோர்ந்துப்
போய் இருக்கும் குழந்தைக்கு நல்ல உணவும் , நீரும் , உங்கள் அருகாமையும் , மருந்துகளைப்
பற்றிய உங்கள் தெளிவும் அவசியம் , அதனுடன் சரியாகும் நல்லதே நடக்கும் என்ற உங்கள் நம்பிக்கையும்
மிக மிக அவசியம்!
26. இறுதியாக நீங்கள் உண்பதைத் தான்
உங்கள் குழந்தைகள் உண்பார்கள் , உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் காட்டும் அக்கறையைத்தான்
குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் !
27. எந்நேரமும் அழுது கொண்டிருப்பதும்,
சண்டையில் மூழ்குவதும் வம்பு பேசுவதும்
மன நலனிற்கு ஆரோக்கியமற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் உங்கள் மனநலனையும் உடல் நலனையும்
மட்டுமல்ல அது குழந்தைகளின் மனநலனையும் பின் உடல் நலனையும் பாதிக்கும்!
28. எந்த வேலையையும் புலம்பிக் கொண்டே
செய்வதும் , அக்கறையற்று, சோம்பி இருப்பதும் உங்கள் குழந்தைகளின் செயல் திறனையும் பாதிக்கும்
29. ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன்
ஒப்பிடாமல், வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல, குழந்தைகளும் பந்தயக் கருவிகள் அல்ல, மகிழ்ச்சியுற
வாழ்வதற்கே என்று புரிந்துக்கொண்டு குழந்தைகளின் மன நலனிற்கும், ஆரோக்கியமான உணவு,
சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின்
உடல்நலத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்
30. நோய் நாடி நோய் முதல் நாடி என்ற
திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்
இவை
எல்லாவற்றுக்கும் மேலாக வரும்முன் காப்பது சாலச் சிறந்தது! உங்கள் ஆரோக்கியம் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு
அடித்தளம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், உங்கள் குழந்தையே உங்களின் பெரும்செல்வம்!
வாழ்க
வளமுடன்!!!