Saturday, 7 November 2015

மரணத்தை விரும்பும் மனிதர்கள்!

http://images.indianexpress.com/2015/06/old-age.jpg
திடீரென்று ஒரு நாளில் என் அம்மாவின் நினைவு தப்பிப் போனது, உறவுகள் குழந்தைகளுக்குத் துணையாய் வீட்டில் இருக்க, கணவர் வெளியூர் பயணம் சென்றிருக்க, உதவுவதற்கு நட்புகள் தயாராய் இருந்தாலும், யாரையும் அழைக்க முடியா ஒரு மனநிலையில் ஒரு விடிகாலை வேளையில் அம்மாவை ஒரு குழந்தையை அழைத்து செல்வது போல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அவசர சிகிச்சைப் பிரிவு அச்சமூட்டுகிறது, ஒருவர் மாற்றி ஒருவர் என அம்மாவின் முந்தைய மருத்துவச் சிகிச்சைகளின் விவரங்களை கேட்டுக்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்பாவை இழந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. கண்களில் அச்சமே துயரமாய் மாறி வழிகிறது, இந்த மருத்துவமனையை விட்டு நான் அனாதையாய்ச் செல்வேனோ எனப் பெரும் துக்கம் ஒன்று தொண்டையை இறுகப் பற்றுகிறது!

"இப்போ ஒன்னும் சொல்ல முடியாது" என்கிறார் பெரிய மருத்துவர், முந்தைய ஓர் அறுவைச் சிகிச்சையின் பின்விளைவென மனதில் ஒரு குரல் ஒலிக்க, அவசரமாய் மருத்துவரை மறித்து மருத்துவக் குறிப்புகளைச் சொல்லி, அந்த மருத்துவரை வரச் சொல்லுங்கள் என்கிறேன். பின் சிகிச்சை முறைகள், பல்வேறு மருத்துவர்கள், பரிசோதனைகள் என ஒவ்வொரு நாட்களும் ஒரு யுகமாய்க் கழிகிறது.  எப்படியோ குணமடைய வைத்து அம்மாவை அழைத்து வந்து விட்டாலும் அந்த மருத்துவமனை நாட்கள் ஒரு பெரும் பாடத்தை எனக்குப் போதித்தது!

பழைய நினைவுகளை இழந்து விட்ட அம்மாவுக்கு என்னைத் தவிர யாரையும் அடையாளம் தெரியவில்லை. "வீட்டிற்குச் செல்ல வேண்டும், கதவு ஏன் திறந்திருக்கிறது, வா போகலாம்" என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை!

அம்மாவைப் பிடித்து வைக்க உடலில் பலமில்லாமல், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் உணவைப் புகட்ட நான் மருத்துவரையோ அல்லது செவிலியரின் உதவியையோ நாட வேண்டி இருந்தது. அவர்கள் சொன்னால் மட்டுமே உணவை சாப்பிட்டு, கொஞ்சம் நகர்ந்ததும் என் மீதே துப்பி விடுவதும், யார் யார் மீதோ கொண்ட ஆற்றாமையை, அவர்களை நானாக கற்பனை செய்து கொண்டு வெளிப்படுத்த, பெரும் பாரமாய் ஒரு நாள் கழிந்த பிறகே “என் அம்மா இப்போது அம்மா அல்ல தள்ளாமையில் இருக்கும் குழந்தை” என்று மனதார ஈடுபட்டப் பிரார்த்தனையில் தோன்றியது!

அந்த நிமிடமே அம்மாவிடம் சென்று , "இங்கே பாரு அம்மா வந்திருக்கேன்" என்று தொடங்கி என் இரண்டு பிள்ளைகளுக்கு எப்படிக் கொஞ்சிக் கெஞ்சி உணவைப் புகட்டுவேனோ அப்படியே என் அம்மாவை நடத்தியபோது அந்த நொடியில் அந்த நிமிடத்தில் நிகழ்ந்தது அந்த மாற்றம். அம்மா பூரணமாய் உணவை, மருந்துகளை உட்கொண்டார். அடுத்த நாள் காலை அம்மாவின் நினைவுகள் மீண்டது. அம்மாவை மீண்டும் எனக்கு அம்மாவாக காலம் திருப்பிக் கொடுத்தது!

ஒரு பயங்கரக் கனவைப் போலத் தோன்றும் அந்த மருத்துவமனை நிகழ்வுகள் மனதில் தோன்றும்போதெல்லாம் அம்மாவைப் போல் அப்பாவைப் போல் தள்ளாமையில் இருக்கும் முதியவர்களின் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை!

மங்களத்தின் மகளைச் சீந்துவார் யாருமில்லை, ஓர் இருட்டுப் படிந்த அந்தப் பத்துக்குப் பத்து அறையில், மங்களத்தின் மகளைப் போல் இன்னும் சில பெண் குழந்தைகள் அறையைப் பகிர்ந்திருந்தனர். ஏதோ ஒரு குழந்தையின் கட்டிலின் மேல், ஒரு பூனை சாதுவாய் அமர்ந்திருந்தது! ஓடி வந்து என்னை வரவேற்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களை அள்ளி அணைத்துக் கொஞ்சும் நிலையிலும் நான் இல்லை. இருட்டுப் படிந்த அந்த அறையில், தன் அந்திம காலத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அந்த முதிய குழந்தைகளைப் பார்த்தபோது, என்னுடைய கால்கள் வலுவிழந்து தோய்ந்தது. ஆமாம் அவர்கள் எல்லோரும் குழந்தைகள்தாமே?

உடல் சுருங்கி, தன்னுடைய எண்பதுகளில் தள்ளாமையில் முடங்கிப் போன குழந்தைகள், பிள்ளைகள் பெற்று, சீராட்டி, பாராட்டி வளர்த்து, அவர்களுக்குச் சிறகு முளைத்ததும், இவர்கள் சிறையில் முடங்கிப் போனார்கள்!
தன்னுடைய தொண்ணுறுகளில் கட்டிலில் படுத்திருந்த ஒரு தாயின் கரங்களைப் பற்றுகிறேன். மங்கிய விழிகளின் ஓரம் கண்ணீர் மட்டுமே வற்றாமல் இருக்கிறது. என்னில் அவர்களின் மகளைத் தேடலாம், இல்லை மகனைத் தேடலாம், இல்லை ஏதோ ஓர் உறவின் வரவை நோக்கியதாக அந்த விழிகளின் நீர் இருக்கலாம்!

அந்தப் பூனை என்னைக் கவர்கிறது, கொஞ்சம் கூட அசையாமல் அவர்களின் அருகிலேயே அது இருக்கிறது.
 “அவங்களை விட்டு அது போறதில்லைமா” என்று விடுதி நிர்வாகி சொல்கிறார். “கொஞ்சம் வெளிச்சம் உள்ள அறையில் இவங்களை வெச்சு இருக்கலாமே” என்ற என் கேள்விக்கு, “என்னம்மா செய்யறது, பாருங்க எத்தனை பேர்? நடமாடுற அவங்களுக்கு ஓர் அறையும் இவங்களுக்கு ஓர் அறையும்தான் இப்போதைக்கு எங்களால முடிஞ்சது. இந்தக் கட்டிடத்தைக் கூட நாங்க சீக்கிரம் காலி செய்யணும், பார்க்கணும்” என்கிறார்!
சில அடிப்படை உதவிகளைத் தாண்டிப் பெரிதாய் எதுவும் எங்களாலும் செய்திட முடியவில்லை. அவ்வப்போது உதவியோடு, அருகில் அமர்ந்து அவர்களின் ஏக்கங்களையும், துயரங்களையும் அமைதியாய் கேட்கத்தான் முடிந்தது!

எங்கோ இருக்கும் மகனே மகளே, உங்களின் தாயோ தந்தையோ வாசலில் வருவோர் போவோரில் உங்கள் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது உங்களின் உணர்வுகளை எட்டவில்லையா? இதோ உழைத்துக் களைத்துப் பஞ்சு பொதி போல் ஆகிவிட்ட இந்தக் கரங்களின் வெதுவெதுப்பை நீங்கள் உணரவில்லையா, இந்தப் பழைய புடவையில் அம்மாவின் வாசனை, தாய்மையின் வாசனை அது உங்களுக்குப் பரிவினைத் தூண்டவில்லையா? இப்போதும் கூட உங்கள் நலனை மட்டுமே போற்றுகிறது பெற்றவரின் உள்ளங்கள் என்று அலை அலையாய் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடையேதும் இல்லை!

ஒரு காணொளிக் கண்டேன், தன்னுடைய வயது முதிர்ந்த தந்தையை ஒருவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான், அப்பாவுக்கு எல்லா வசதியும் கொண்ட அறையைத் தேர்வு செய்கிறான். அப்போது அவனுக்கு அவன் மனைவியிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது. “என்னங்க சேர்த்துட்டிங்களா?” என்ற கேள்விக்குப் பிறகு “ஏங்க பண்டிகைக்கெல்லாம் அனுப்பிட மாட்டங்களே?” என்ற சந்தேகத்தை எழுப்பும் மனைவி, உடனே அவனுக்கொரு சமாதானமாக “இல்லைங்க அவருக்குச் சுகர் இருக்கு, ஸ்வீட் சாப்பிட ஆசைப்படுவார் அப்புறம் சிரமம்!” என்று வாழைப்பழத்தில் ஊசியைச் சொருகுவது போல் அழகான விளக்கம் தருகிறார்.

பேசிக்கொண்டே அவன் வரும்போது, தன் தந்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறான். தந்தை விலக அவரிடம், உங்களுக்கு என் தந்தையை முன்பே தெரியுமா என்று கேட்க “ஆமாம் பல வருடங்களுக்கு முன்பு அவர் இந்த ஆசிரமத்தில் இருந்து ஓர் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்தார்” என்று சொல்வதுடன் முடிகிறது அந்தக் காணொளி!

உண்மையில் மனைவி சொல்லைத் தட்ட முடியாமல் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுகிறார்களா என்று யோசித்தால் பெரும்பாலம் கிடையாது. பிள்ளைகளுக்கும் மனதின் அடி ஆழத்தில் தம் பெற்றோர் பாரமாய்ப் போய்விடும் வேளையில் உறவின் நெருக்கடி அதை உறுதிப் படுத்துகிறது, அவ்வளவே!

தாம் பெற்ற பிள்ளையோ பெண்ணோ அல்லது தத்தெடுத்த பிள்ளையோ பெண்ணோ, சில வேளைகளில் பாசம் என்பது பாரமாய்ப் போகிறது. பாரமாய் போகும்போது உறவும் கனக்கிறது. சிலர் வீதியில் அதைத் தட்டிக் கழிக்கிறார்கள், சிலர் முதியோர் இல்லத்தில்!

முதியோர் இல்லங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது, குறைந்தபட்சமாக 2 முதல் அதிகபட்சமாக 130 வரை மாநிலத்துக்கு மாநிலம் எண்ணிக்கை மாறுபடுகிறது! முதியோருக்கும் நமக்கும் என்ன பிரச்சனை? பொருளாதாரமா? தள்ளாமையா? இயலாமையா? இல்லை மனமின்மையா?

ஒரு கதை நினைவுக்கு வருகிறது, ஒரு பழங்குடி கதையிது! முன்னொரு காலத்தில் முதியவர்களை மலையுச்சிக்கு கொண்டு சென்று தள்ளிவிட்டுக் கொன்று விடும் வழக்கம் இருந்தது. ஒரு முதியவரை அப்படிக் கொன்று விட முயலும் சமயத்தில், தந்தையின் கண்ணீர் மகனின் இதயத்தை உலுக்க அவரைக் கொன்று விடாமல் ஒரு குகையில் வைத்துப் பாதுகாக்கிறான். அப்போது நாட்டில் பஞ்சம் வருகிறது ஒரு நெல் கூட இல்லை. மகனின் குறையைக் கேட்டத் தந்தை கூரை வேயப்பட்ட தங்கள் குடிலில் மேலுள்ள வைக்கோலை எடுத்து மீண்டும் உதறுமாறுச் சொல்ல அதிலிருந்து எஞ்சி இருந்த நெல் மணிகள் நிலத்தில் சிதறி மாயம் போல் வயலில் விளைந்து அடுத்த நாள் அறுவடைக்குத் தயாராய் நிற்கிறது. செய்தியறிந்த மன்னன் நேரில் வந்து உண்மை அறிந்து கொள்கிறான். அன்று முதல் முதியோர் பாரமில்லை இனி யாரும் அவர்களை கொல்லுதல் கூடாது என்று தடை செய்கிறான் என்று முடியும் கதை,

எந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்தாலும் நம்மால் இவற்றில் சிலவற்றை நம் பெற்றவர்களிடம் செய்ய முடிந்தால்? செய்து பாருங்களேன்:

1. நம்மைப் பெற்றவர்களின் குணங்கள் நம் பொறுமையைச் சோதித்தால், நம் பிள்ளைகளை நினைத்துக்கொள்ளுவோம். குழந்தைகளிடம் நாம் காட்டும் கருணையையும் பொறுமையையும் அவர்களிடம் காட்டலாம். கொஞ்சம் பிடிவாத குழந்தைகள் தாம் அவர்கள் என புரிந்துக்கொள்ளுவோம்.

2.  தினம் ஓர் அரைமணி நேரமாவது அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்கலாம். தீர்ப்பேதும் வாசிக்க வேண்டாம். முழுதாய்க் கேட்பது போதுமானது!

3.  அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை அவர்களின் தேவைக்கேற்ற அளவுக்காவது சாத்தியப்படுத்துவோம். ஒவ்வொன்றிக்கும் அவர்கள் நம் கையை எதிர்ப்பார்க்க வேண்டாமே!

4. அவ்வபோது அவர்களை அழைத்துக் கொண்டு கோவில், பூங்கா என்று வெளியில் செல்லலாம்.

5. வருடத்திற்கு ஒரு முறையேனும் நம் கையால் அவர்களுக்குப் பிடித்த உடையையோ பொருளையோ வாங்கித் தரலாம்.

6. பிறந்தநாள் போன்ற முக்கிய நாட்களை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துச் சொல்லலாம்.

7. முக்கிய நிகழ்வுகளில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, கருத்துக்களையாவது கேட்போம்!

8.  உடல் மட்டும்தான் சுருங்குகிறது, உள்ளம் அல்ல என்பதை நினைவில் கொள்வோம். அவர்களின் விருப்பத்தை அவர்களே தீர்மானிக்கட்டும்!

9.  ஒருவரின் மாமியார் மாமனார் இன்னொருவரின் தாயும் தந்தையும் என்பதை நினைவில் கொள்ளலாம். பரஸ்பர மரியாதை என்பது இருவருக்கும் பொது என்று சாத்தியப்படுத்தலாம்!

10.  இயலாமையில் வரும் கோபத்தை கோபமென்று கருதி பொறுமைக் காக்கலாம். வன்மமென்று கருதாமல் அதைக் கடந்து போகலாம்!
இவற்றில் எல்லாவற்றையுமோ, சிலதையோ எதைச் செய்தாலும் முதியோர் இல்லங்கள் என்பது பிள்ளைகள் இல்லாதவர்களுக்கும் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும் மட்டுமே என்று சட்டம் இயற்றி, அரசாங்கமே காப்பகங்கள் அமைத்து முதியோர்கள் நலம் பேணும் ஒரு நாள் வர வேண்டும். அதுவரை இந்த கொடுமைகள் தொடரத்தான் செய்யும்!

பிறக்கும் போது ஒரு குழந்தைக்கு எதுவும் தெரிவதில்லை. உயிருள்ள உணர்வுள்ள ஒரு பொம்மையை போன்றே குழந்தை என்பது பெற்றவர்களின் கைகளில் தவழ்கிறது. வளர்ந்து, வாழ்ந்து, சுருங்கிப் போகும் வயதில் முதியவர்களும் குழந்தைகள்தாமே. இயலாமையில் உழல்பவர்களை, கொஞ்சம் கூட கருணையில்லாமல் நடைபாதையிலும், கோவில்களிலும், முதியோர் இல்லங்களிலும் தொலைப்பவர்கள் எப்போதும் இளமையுடன் இருக்கப் போகிறார்களா?

ஒரு தனியார் மருத்துவ ஆய்வு முதியோர் இல்லங்களில் சாகும் முதியவர்கள் நோயினால் அல்ல பெரும் ஏக்கத்தினால், தனிமையினால் தங்கள் மரணத்தைத் தாங்களே விரைந்துத் தேடிக்கொள்கிறார்கள் என்று சொல்கிறது.
தற்கொலை இல்லை என்றாலும் இதுவும் ஒரு தற்கொலை தாமே? தவிக்க விட்டு சாகடிப்பதும் கொலைதானே?

http://www.pratilipi.com/read?id=4998994631589888&page=6

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!