Friday 27 November 2015

சமூக வலைதளத்திலும் 'சமூகம்' நாடும் சாதியர்கள்!

சமூக வலைதளத்திலும் 'சமூகம்' நாடும் சாதியர்கள்!
-----------------------------------------------------------------------------------------

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, சமூக வலைத்தளங்கள் இல்லை, எங்களுக்குத் தெரிந்தது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியுமே!

அப்போதும் இப்போதும் நண்பர்களுக்கிடையே சாதியைப் பற்றி மதத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை, இப்போது சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன்கள், பல்வேறு செயலிகள் என்று தகவல் தொடர்பு முன்னேறிக்கொண்டே இருக்கிறது! இங்கே நட்புப் பட்டியலில் சேர்ந்தபின் சிலருக்கு ஒருவரின் சாதி என்ன என்று உள்பெட்டியில் கேள்விகள் வருகிறது, சாதிச் சங்கங்களிடம் இருந்து அழைப்புகள் வருகிறது, ஒருவேளை முன்பின் தெரியாத ஒருவரிடம் நட்புப் பாராட்டும்போது குறைந்தபட்சம் சாதியைத் தெரிந்துகொண்டால் பாதுகாப்பு என்று நினைக்கிறார்களா? அல்லது சுயநலப் பலன் என்று கருதுகிறார்களா?

முன் எப்போதும் இல்லாத அளவுக்குச் சாதியின் புழக்கம் பொதுத் தளங்களில் இப்போதெல்லாம் அதிகமாய்த் தெரிகிறது! சரி இந்தச் சாதியைத் தெரிந்து கொண்டு நாம் என்னதான் செய்யப்போகிறோம்? தேர்தலில் நிற்பவன் நம் சாதியென்றால், ஓட்டுப்போட்டு அவனை வெற்றிப்பெறச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்,அவனால் அவன் சமூகத்தின் விவசாய , பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடிகிறதா? 
அரசியலை விட்டுவிட்டு சற்று சில பொது விஷயங்களைப் பார்ப்போம்.

பெயரின் பின்னேயும் முன்னேயும், சாதியை பலமாய்ப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் , சாதிப் போற்றுபவர்கள் சற்று வெளியே வந்து பார்க்கவும் ;

> வீதியில் பிச்சை எடுப்பவர்கள் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும்,
> சமுதாயத்தில் அலைகழிக்கப்படும் திருநங்கைகள் சிலர் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும் ,
> கடத்தப்பட்டுக் கொடுமை செய்யப்பட்டுப் பிச்சை எடுக்க வைக்கபட்டிருக்கும் குழந்தைகள் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும் ,
> அமிலம் வீசிச் சிதைக்கப்பட்ட பெண்களில் சிலர் உங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இருக்கக் கூடும் ,
> குரூர அரசியல் சதியில் எரிக்கப்பட்ட தொண்டர்கள் உங்கள் சாதியாய் இருந்திருக்கக் கூடும் ,
> அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் முடங்கிப் போகும் விவசாயிகளும், முதலாளிகளும் கூட உங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இருக்கக் கூடும் ,
> முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் முடங்கிப் போகும் உயிர்களும் வளர்ந்து கொண்டிருக்கும் தளிர்களும் நிச்சயம் உங்கள் சாதி ரத்தத்தைக் கொண்டிருக்கும்,
சாதி முக்கியம் என்று கருதும் நீங்கள் இவர்களுக்கு அல்லது இந்த நிகழ்வுகளுக்கான மாற்றமெனச் செய்தது என்ன ?

நூற்றுக்கணக்கில் சாதிகள் இருக்கிறது, மதங்கள் இருக்கிறது, இவை பல கோடிக்கணக்கில் இருக்கும் மனிதர்களை ஆட்சி செய்கிறது, சில நூறு தலைவர்கள் பலகோடி மக்களின் அடிமைத்தனத்தைச் சாதியின் பெயரில் சுரண்டி நம்மைப் பிரித்தாளுகிறார்கள்!

பிரித்து வைத்து ஆட்சி செய் என்ற ஆங்கிலேயே கொள்கைக்கும் , பெருகி இருக்கும் சாதிச் சங்கங்களின் அடிப்படையில் மக்கள் தாமாகவே பிரிந்து நிற்பதற்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றுமில்லை!

கருப்பாய் இருப்பவர் எல்லாம் கீழ்சாதி வெளுப்பாய் இருப்பவர் எல்லாம் மேல்சாதி போன்ற மடத்தனங்களும், நம் சாதியைச் சேர்ந்தவன் தப்புச் செய்து இருக்க மாட்டான் என்ற கிறுக்குப் பிடிவாதங்களும் இன்னமும் நம்மில் நிறைந்திருக்கிறது! ஆண்டவன் அடிமைபட்டவன் என்று யாருமில்லை, மனிதர்கள் மிருகங்கள் என்று மட்டும் நீங்கள் வகைப் பிரிக்கலாம்!

யார் சொன்னது என்று நினைவில் இல்லை, ஆனால் விஷயம் மட்டும் நினைவில் இருக்கிறது,
"என்னால் ஒரு காட்டில் இருக்க முடியும், அங்கே எனக்கு எது சிங்கம், எது புலி , எது நரி எது முயல் என்று தெரியும், ஆனால் இந்த மனிதர்களுக்கிடையே அவர்களின் குணங்களில் எது கொடூரச் சிங்கம், சாதுவான முயல், தந்திர நரி என்று அறிவதுதான் சிரமமாய் இருக்கிறது!" என்று சொன்னதாய் ஒரு கூற்றைப் படித்திருக்கிறேன்.

உண்மைதானே? நம் சாதி என் சாதி எது என்று கண்டுவிட முடியும், ஆனால் இந்தச் சாதிக்குள், யார் மனிதன் யார் மிருகம் என்பதை எது தீர்மானிக்கிறது , எப்படிக் கண்டுப்பிடிப்பது?

ஆணும் பெண்ணும் ஒன்றாய்ச் சென்றால் அவர்கள் காதலர்களாய் அல்லது கணவன் மனைவியாய் மட்டுமே தெரியும் நம் கண்களுக்கு ஒரு சாதியைச் சேர்ந்தவனில் யார் சிங்கம் யார் புலி யார் நரி யார் பசு என்று எப்படித் தெரியும் ?

* உங்கள் சாதியைச் சேர்ந்தவனிடமே கோடி ரூபாய் பணம் கொடுத்து உங்களைக் கொல்லச் சொன்னால் உங்களை அவன் கொன்று விட மாட்டானா ?
* உங்கள் சாதிப் பெண்கள் என்று தெரிந்தால் மட்டும் நீங்கள் உங்கள் கண்களைக் கீழே சுழற்றாமல் அவள் முகத்தில் உள்ள கண்களில் மட்டும் நிலை நிறுத்துவீர்களா ?
* நீங்கள் நொடிந்துப் போகும் சமயத்தில் வட்டியில்லாமல் உங்கள் சாதி, கடன் கொடுக்குமா, அல்லது வாங்கிய கடனை ஏமாற்றாமல் திருப்பிக் கொடுப்பீர்களா ?
சொல்லுங்கள் எதில் தனித்திருக்கிறது சாதி?

பெண்ணைக் காதலித்து மோசம் செய்பவன் எல்லாச் சாதியிலும் இருக்கிறான், பணத்துக்காக ஆணைக் காதலிப்பதாய் நடிக்கும் பெண்களும் எல்லாச் சாதியிலும் உண்டு, பணத்துக்காகக் கொலை செய்பவன் எல்லாச் சாதியிலும் உண்டு , உறவுகளில் பொய்மை எல்லாச் சாதியிலும் உண்டு!

குற்றம் அற்ற சாதி என்று எதுவும் இல்லை , ஆண்டவன் அடிமைபட்டவன் என்று எவனும் இல்லை!

இறுதியாக ஒரு கதை, நண்பர்கள் பகிர்ந்தது, இருவேறு நண்பர்கள், ஒருவன் மிகப்பெரும் செல்வந்தன், ஒருவன் ஏழை, அவனுடன் பணிபுரிகிறான். இருவரும் ஒன்றாய் மேற்கொண்ட ஒரு பயணத்தில் ஒரு தீவில் தொலைந்துப் போகிறார்கள், அவர்கள் இருவரும் தனித்தனியாக இறைவனிடம் வேண்டுவது என்று முடிவு செய்கிறார்கள்

செல்வந்தன் இருந்த பக்கம் அவன் வேண்டியபடி அழகான மங்கையும், உணவும் , உடையும் எல்லாம் வருகிறது, ஏழை இருந்த பக்கம் ஒன்றுமே இல்லை, அவன் மீண்டும் மீண்டும் சோர்ந்து போகிறான் , செல்வந்தனோ, நண்பனுக்குக் கடவுளின் கருணைக் கொஞ்சமும் இல்லை , அவன் இப்படியே போகட்டும் என்று செருக்குக் கொள்கிறான், இறுதியில் செல்வந்தனின் பக்கம் ஒரு கப்பல் வருகிறது, அவன் அதில் அந்தப் பெண்ணுடனும் பொருட்களுடனும் பயணத்தைத் தொடங்க முற்படுகிறான், வானத்தில் இருந்து அசரிரீக் கேட்கிறது , உன் நண்பனை உன்னுடன் அழைத்துப்போ என்கிறது குரல் , அதற்குச் செல்வந்தன், அவன் ஏழை , இப்போதும் கூடக் கடவுள் எனக்கு நான் கேட்டதைத்தான் தந்தார், அவனுக்கு இல்லை இப்படிப்பட்ட துரதிரிஷ்டம் கொண்டவனை நான் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்க , அப்போது குரல் சொன்னது "உன் நண்பன் இதுவரை தனக்காக எதுவுமே வேண்டவில்லை , சுகபோகத்திலேயே வாழ்ந்துவிட்ட தன் நண்பன் துயரத்தைத் தாங்க மாட்டான் அதனால் கடவுளே அவன் வேண்டுவதை மட்டும் அவனுக்கு ஏமாற்றாமல் கொடுத்துவிடு " என்று அவன் வேண்டியதால் மட்டுமே நான், சுயநலத்துடன் நீ கேட்டவைகளைக் கொடுத்தேன், இப்போதாவது நண்பனை அழைத்துச் செல் " கேட்ட நண்பன் வெட்கித் தலைகுனிந்தான் என்று முடியும் கதை

நம் ஒவ்வொருவருக்கும், படிப்பு , தகுதி ,செல்வம் , நிறம் , சாதி , மதம் என்று எதையும் பாராமல் நம் நலன் வாழப் பிராத்திக்கும் ஓர் இதயம் கிடைத்துவிட்டால் அதுதான் மேல்சாதி, பரஸ்பர அன்பை , நட்பை, உதவியை எந்தப் பிரதிபலனும் நோக்காது மனிதர்களிடம் பகிரும் அத்தனை பெரும் மேல்சாதியே , சாதியைக் கொண்டு அரசியல் லாபமீட்டி , சாதியைக் காட்டி மனிதம் கொல்லும் அத்தனை பேரும் கீழ் சாதியே !

சாதியில் ஏற்படும் மரணங்களுக்கும் , சாராயத்தில் ஏற்படும் கீழ்மைகளுக்கும் அளவே இல்லை , எந்தப் புள்ளி விவரக் கணக்கும் புண்ணியமில்லை

எல்லாம் கடந்து, இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்ச நேரம் தங்கிவிட்டுப் போக வந்திருக்கும் மனிதர்கள்தாம் நாம் , வீசும் காற்றும் பொழியும் மழையும் விளையும் பயிரும் சாதிக்கொன்றென இல்லை , எந்தச் சாதித் தலைவனும், மதத் தலைவனும், அரசியல்வாதியும் சாதிக்கென, மக்களுக்கெனத் தீக்குளித்ததில்லை , போதும் மரணங்கள் வன்முறைகள் கொஞ்சம் மனிதராய் வாழ்ந்து பாருங்கள்!

சாதி என்பது மதம் என்பது தீக்குச்சிகளைப் போல, மனிதர்களின் பக்குவப்படாத எளிதில் தூண்டிவிடக்கூடிய உணர்வுகளே போதும் அவைகள் பற்றிக் கொள்ள, பற்றி எரிந்து ஊரை எரிக்க, உயிர்களை எரிக்க, தீக்குச்சியின் தேவைகள் அழகிய விடியலுக்கில்லை, கதிரொளிப் போதும், மனங்கள் விடியட்டும்!

சாதி, மத, பேதம் கடந்த சமூகத்தை உலகளாவிய அளவில் உருவாக்கும் நோக்கத்தால்தான் சமூக வலைதளங்கள் என்று நினைத்திருந்தேன். அதில் உள்ள சமூகம் என்ற பதம், சாதியைக் குறிப்பதாக மாற்றிவிடுவார்களோ நம் தமிழ் கூறும் நல்லுலகம் என்ற அச்சம் இப்போது என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறது. உங்களை?

1 comment:

  1. நல்ல அலசல்... உண்மைதான்... தற்போது சமூகம் என்றாலே சாதியைத்தானே குறிக்கிறோம்...
    எங்க ஊர்ல எங்க சமூகம் மட்டுமே இருக்கு என்ற பேச்சுக்கள் எங்க பகுதியில் அதிகம்...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!