Tuesday, 18 September 2012

பெண்



நித்தம் நித்தம் எத்தனை சோதனைகள்,
அரிதாரம் கொண்ட அவதாரங்கள்,
வேடம் பூண்ட பாசங்கள்.....

அவளுக்கு கனவுகள் ஆயிரம்
கற்பனைகள் கோடி, - ஆனால்
அவள் இருப்பதோ
ஒரு சிறிய வட்டதிற்குள்!

அவள் அதில் வாழ்க்கையை
முடித்து கொண்டால், அவளே
பத்தினி தெய்வம்!

சட்டம் விதித்த
சமுதாயத்திற்கு வட்டமில்லை
ஒரு எல்லையில்லை!

அவள் அடங்க வேண்டியவள்,
பருவ வயது வரை பெற்றோருக்கு,
இளமை வரை கணவனுக்கு
துடிப்பு வரை குழந்தைகளுக்கு!

அவள் அடங்க வேண்டியவள்தான்
உண்மைக்கு மட்டும்!

அவள்,
தான் ஒரு பறவை என்றாள்
பறவைக்கு ஒரு துணை வேண்டும்,
சொன்னது ஒரு விலங்கு!

அவள்,
தன் மனம் விரிந்த வானம் என்றாள்
அதை
நிர்மூலப்படுத்திய பின்
தெளிவாக உள்ளது என்றது
ஒரு சூரியச் சிறுமை!

அவள்,
தன் இதயம் ஒரு கோவில் என்றாள்
கோவிலில் உள்ளவர்களின்
பசியாற்று முதலில்
கொக்கரித்தது ஒரு கூட்டம்!

அவள்,
இப்பூமியை ஒப்ப
பொறுமை கொண்டவள்தான்
ஆனால் - மனித
மனக்கழிவுகளை
இனியும் சுமக்க
அவளிடம் இடமில்லை!

அவள்,
கண்ணகிதான்,
ஆனால் - தினம்
ஒரும் பரத்தையுடன்
கூடிவிட்டு வரும்
கணவனை ஏற்று கொள்ள
அவள் இயந்திரம் இல்லை!

அவள்,
சீதைதான் - அதற்காக
சந்தேகத் தீயில் வெந்துசாக
அவள் தயாரில்லை!

அவள்,
கருணை உள்ளம் கொண்டவள்தான்
ஆனால் - துரோகிகளை
ஏற்று கொள்ளும்
சரணாலயமாக அவள் விரும்பவில்லை!

அவள்
தாய்மை கொள்பவள்தான்
ஆனால் - பேய்களை
படைக்க அவள் ஒருபோதும் விரும்பியதில்லை!

அவள்,
பெண்தான்
நீங்கள் தரும் சுதந்திரத்தை
ஏற்று கொள்ள அவள் அடிமையில்லை!

அவள்,
திறமை நிறைந்தவள்தான்
உங்கள் அழிவுகளுக்கு
துணை போக
அவள் முடிவெடுக்கவில்லை!

அவள்
கலையுள்ளம் கொண்டவள்தான்
உங்கள் முன்னேற்றத்திற்கு
துணை வர - என்றுமே
தயங்கியதில்லை!

அந்த தாய்புறா
பருந்தாக மாறும்முன்
அவளை நீங்கள்
சாந்தப்படுத்துங்கள்.....

அந்த சகோதரத் தென்றல்
புயலாக மாறும்முன்
உங்கள் சுவாசத்தை
சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்!

அந்த காதல் பூமி
எரிமலையாக குமுறும்முன்
அவள் மேல் சுமத்திய
வீண்பழிகளை
அகற்றி விடுங்கள்.....

அந்த தோழமை வானம்
சுருங்கும் முன் - உங்கள்
மாசுகளை அகற்றிவிடுங்கள்..

அந்த குடும்ப கண்ணகி
மாதவியாகும் முன் - நீங்கள்
ராமனாகி விடுங்கள்!

அந்த குழந்தையுள்ள சீதை
உங்களை தீயில் இறக்கும் முன்
உங்கள் மனதின்
குளிர்ச்சியில் அவளை
அமர்த்திவிடுங்கள்...

அந்த பெண் பேயாகும் முன்
நீங்கள் அவளின்
தாயாகுங்கள்!

அந்த பெண் ஆயுதம்
தாங்கும் முன் - நீங்கள்
அவளை அன்பால் தாங்குங்கள்!

உங்களின் அன்பு
அந்த சூரியனை
சந்திரனாக மாற்றட்டும்
உங்களின் உண்மை
அந்த நெருப்பு மலரை
குறிஞ்சி மலராக மாற்றட்டும்!

அவள்,
அந்த பெண்
அந்த பெண்ணின் பெண்மையை
அந்த பெண்மையின் மேன்மையை
நீங்கள் உணர்ந்தால்

உலகம் அவளுடையதாகும்
அவள்
உங்களுடையவள் ஆவாள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!