பாலியல் பலாத்காரம்
குழந்தைக்கோ, குமரிக்கோ
வரிக்கு வரி
வார்த்தைக்கு வார்த்தை
விவாதிக்கப்பட்டு, அலசப்படுகிறது
அந்த பெண்களின் ஒழுக்கமும்
குடும்பமும்....
குற்றம் செய்தவர்கள்
உத்தமர்களா என்ன?
பாலியல் தொழிலாளியின்
முகம், மொத்தமாய் ஒரு
இரவில் பிடிபட்ட நாளில்
ஒரு பெரும் குற்றவாளியின்
முகமாக சித்தரிக்கபடுகிறது!
படுத்து எழுந்தவன் சாமியின்
தூதனா என்ன?
கன்னியோ கணவனை
பிரிந்தவளோ, ஓடி போனவள்
மனங்கெட்டவளாகவே
வாழ்த்தப்படுகிறாள்!
நெருக்கித் தள்ளியவன்
நல்லவனா என்ன?
நாடு வீதியோ நடுக் கூடமோ
பெண்ணின் உடல் மீதான
வன்கொடுமைக்கு காரணம்
அவள் நடத்தையும் உடையுமே
கொடுமை செய்த கனவான்கள்
தேவ தூதர்களா என்ன?
ஒரு தலை பட்சமாய் காதலித்து
எங்கோ ஒருவன்
அதிசயமாய் உயிர்
துறந்தால் - அது
ஏதோ ஒரு திமிர் பிடித்த
பெண்ணினால் மட்டுமே
காதல் வன்முறை செய்தவன்
தியாக தீபமா என்ன?
ஆணுக்கு நிகராய் அவனை
விட அதிகமாய் உழைத்தாலும்
பெண்ணின் முன்னேற்றம்
அவள் அழகை கொண்டே
அமைந்தது என்கிற அவதூறு
சொல்கின்ற முட்டாள்கள்
விளக்கு பிடித்தார்களா என்ன?
உடல் கிளர்ச்சியினால்
பலாத்காரம் செய்யப்பட்ட
பெண்ணின் வாழ்க்கைக்கு
தீர்வு, கெடுக்கபட்டவனால்
கொடுக்கும் வாழ்க்கை...
வாழ்க்கை கொடுக்கும் வள்ளல்
நவீன ராமனா என்ன?
ஏதோ ஒரு சூழலில்
நிகழும் எந்த பெண்ணின்
மரணமும் - அவள்
கற்பின் மீதான சந்தேகத்தில்
மட்டுமே தன் முதல்
விசாரணையை துவங்குகிறது!
ஒரு முறை இறந்தவள்
பல முறை கொல்லப்படுகிறாள்
இவர்களால்...
எல்லா குற்றங்களும்
இங்கே பெண்களால்
மட்டுமே!
ஆண்கள் அனைவரும்
அவ்வளவு அப்பாவிகளா என்ன?????????????
No comments:
Post a Comment