Tuesday 18 September 2012

நீர் வழிப் பயணமும், நினைவுகளின் சாரலும்

பத்து வருடங்களுக்கு முன் ஒரு நீர் மகள், நில மகளுக்கு சொன்ன சற்றே பெரிய க(வி)தை
----------------------------------------------------------------------------------------------
நீர் வழிப் பயணமும், நினைவுகளின் சாரலும்
----------------------------------------------------------------------------------------

சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

வெட்டியாய் இருப்பதால்
வெட்டி விடலாம் - இன

்னும்
இரண்டு கைகள் கொண்டு,
குப்பனும் சுப்பனும் பேசிச் சென்றனர்...

அவர்களின் கைகளுக்கு
கைகள் கிடைக்கும்வரை
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

சின்ன நடை நடந்து
என் அருகினில் அமர்ந்து - நீ
என்ன மொழி கூறினாய்?
யான் அறியேன் - ஆனால்
நீ எறிந்த கல் என்
நெஞ்சில் தைத்ததை
நீ அறிவாயோ? - நான்
சொன்ன மொழியின் பொருள்
நீ உணர்ந்தயோ?

என் வேதனையின்
வெளிப்பாடுகள் நொடிப்பொழுதில் - உன்
பிள்ளை சிரிப்பொலியை
கேட்டு மறைந்தபோது
நீ அதை ரசித்தாயே - நான்
சொன்ன மொழியின் பொருள்
நீ உணர்ந்தயோ?

ஒரு தென்றலை போல்
நீ வந்து சென்றாய்
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

இரண்டு கைகளை எதிர்பார்த்து
சென்ற தோழர்கள்
திரும்பி வந்தனர்
தத்தமக்கே இரு கைகள்
இருப்பதை உணர்ந்து!

என் வீடு விசாலமானது!
இருந்தும்,
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

அழகிய நடையுடன்
நீ ஓடோடி வந்தாய் - இப்போது
என் மீது பூக்களை எறிந்தாய்

உன்னை வாரி அணைத்திட
நினைத்தேன் - என்
பாச வெள்ளம் உன்னை
முழ்கடித்திடும் என்றெண்ணி
ஒதுங்கினேன்!

ஆயிரம் கதைகள் பேசினாய்
உன் மகிழ்ச்சியை நானறிந்தேன்
நான் சொன்னதை
நீ உணர்ந்தயோ?

கால சக்கரம் சுழன்றோடிட
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

பட்டங்கள் பல பெற்று
நீ பறந்து சென்றாய்
உன்னை காண விரும்பி
நான் தவித்து நின்றேன்
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
இரண்டு கைகள் கிடைத்தன
வகுப்புவாத கைகளால்
என் தவத்தை கலைத்தனர்
என்னை துண்டாட நினைத்து
என் அழகிய வீட்டை (கரையை) உடைத்தனர்!

என் பெண்மையை காப்பாற்றி
உன்னைத் தேடி ஊரை விட்டு வந்தேன்
பல வழிகளை கடந்து சென்றேன்
காணாமல் பொங்கி எழுந்தேன்
மலையின் உச்சியில் வந்து நின்றேன்
உன்னை கண்டேன் - மகிழ்ந்து வீழ்ந்தேன்!
உன் காலடி தழுவி நின்றேன்

துள்ளல் நடையுடன் இப்போதும்
நீ ஆயிரம் கதைகள் சொன்னாய்
உன் காதல் உலகைப் பற்றி...

என்னுள் எதுவோ உடைந்தது
நீர்க்குமிழி என நகைத்தாய்
ஐயகோ! பதைத்தேன்
உன் உள்ளம் புரிந்தது
நான் சொல்ல நினைத்தது புரிந்ததா?

என் பாதையை நான் தொடர்ந்தேன்
உன் மகிழ்ச்சிக்காக வேண்டினேன்!
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

ஓய்ந்த நடையுடன் நீ
ஒருநாள் என் எதிர் வந்தமார்ந்தாய்
அப்போதும் நீ ஆயிரம் பேசினாய்
வார்த்தைகளால் அல்ல - உன்
கண்ணீரால்!

உன் வாடிய முகம் கண்டு
நான் கண்ணீர் சிந்தினேன்
அணையிட்டு தடுத்தாலும்
கற்கள் கொண்டு பாதையை மறித்தாலும்
என் பரந்த கைகளால்
மறுபடி மறுபடி உன்னை வருடிச் சென்றேன்!

உன் சோகம் நான் உணர்ந்தேன்
நான் உணர்த்தியதை நீ உணர்ந்தயோ?

உன் கண்ணீரை என்னில்
கலந்து விட்டு விலகிச் சென்றாய்
தன்னம்பிக்கை நடையோடு வருவாய்
என்றே.....
சுவரில்லாத இந்த மாளிகையில்
நான் தனியே காத்திருந்தேன்!

என் வாசலில் காலத்தின்
கால் சுவடுகள்
உன் தன்னம்பிக்கை சுவடுகள் எங்கே?

சின்ன நடைகள்
அழகிய நடைகள்
துள்ளல் நடைகள்
தளர்ந்த நடைகள்....
உன் தன்னம்பிக்கை நடையை
எதிர்பார்த்து,
என் மாளிகையில் நான்
காத்திருந்த வேளை......

நினைவுகள் சிதறின
என் மீது ஏதோ பாரம்
ஒரு மனிதனின் உடல் - ஐயோ
என் நண்பனே!?

இந்த கிணற்றில் முதலில் நீ
கல்லேறிந்தாய் - என்
உடலில் கண நேர மாற்றங்கள்
வாழ்வில் துன்பமும் இன்பமும்
கண நேரம்தான்...
அறிந்தே மகிழ்ந்தாய் என நான் நினைத்திருந்தேன்

நல்லவர்களின் பார்வை பதிந்து
என் வீடு விசாலமானது
புல்லுக்கும் நெல்லுக்கும் நான் நண்பனானேன்
சுப்பனின் வயலுக்கும்
சுப்ரமணியின் தென்னைகளுக்கும்
பேதமின்றி பாய்ந்தேன்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதமில்லை
நல்லவரின் செய்கையில் சூதுமில்லை
புரிந்தே படித்தாய்
என நான் நினைத்திருந்தேன்!

கற்புடன் கரை தாண்டி
ஓடையாகி, நதியாகி
ஓடோடி வந்தேன்
தடைகளை தாண்டி!
சிந்தனையில் ஒழுக்கமும்
முயற்சியில் நேர்மையும்
வார்த்தைகளில் சத்தியமும்
பழக்கத்தின் கண்ணியமும்
நிறைந்தே நின்றாய்
என நான் நினைத்திருந்தேன்!

அருவியாகி ஆனந்தத்தில் எழுந்தேன்
பின்பு வீழ்ந்தேன்
ஏற்றமும் தாழ்வும் உண்டு
மறுபடி மறுபடி உன் கால்களை வருடி
சென்றேன் அலைகளாக
விடா முயற்சி கொண்டு

அறிந்தே நகைத்தாய்
என நான் நினைத்திருந்தேன்!

உனக்காக எனக்குள் அழுது
உப்பாக நான்!
அழிவிலும் ஆக்கம் வேண்டும்
புரிந்தே விலகினாய்
என நான் நினைத்திருந்தேன்!

நினைத்திருந்து நினைத்திருந்து
சுவரில்லாத என் மாளிகையில்
நான் தனியே காத்திருக்கையில்,..
நண்பனே,
நட்பை எதிர்பார்த்த என்னிடம்
ஏன் உரமில்லாத உன் இதயத்தை
நம்பிக்கை இல்லா உன் வாழ்க்கையை
சுமந்த இந்த உடலை தருகிறாய்?

தோல்விகள் வாழ்க்கையை
முடித்து விடுமோ?
தோல்விகள் முன்பு நீ தோற்று போனாயோ?

ஏன் வயிற்றினில்
நத்தைகள் உண்டு
நத்தைகளில் முத்துக்கள் உண்டு
பவள மலைகள் உண்டு
உன் போன்ற மானுடர்கள்
உருவாக்கி விட்டு சென்ற
அறிவியல் அதிசயங்கள் உண்டு
அணுகுண்டுகளும் உண்டு

இத்தனையும் நான் சுமக்கையில்
நீ தோல்வியை மட்டும் ஏன் சுமந்தாய்
என் பாடங்களை ஏன் மறந்தாய்?

என்னை சுட்டெரிக்கும் சூரியன்
என் போராட்ட மேகங்களை
என்னிடமே தருகிறது மழையாக!

உன்னை சுட்டெரித்தது யார்?

உன் வெற்றியின் விருட்ச விதைகளை
அந்த தோல்வியே உன் போரட்ட குணமறிந்து
தூவி விட்டுச் செல்லும்!

உன்னுள் விதை உண்டு
விதைக்குள் விருட்சம் உண்டு
விருட்ச மொட்டில் விவேகம் உண்டு
உணர்த்தினேன் நீ உணரவில்லையோ?

உன் கண்ணீர் நாளைய
விருட்சத்திற்கு உரமாகட்டும்!

துயரங்கள் உனக்கு
சொந்தமானாலும்
துணிவுகளை மட்டும் விதைத்து விடு
நட்பே இதனை நினைவில் நிறுத்திவிடு!

அதுவரை...

உன்னை கொடுத்து
என்னை சிறுமைப்படுத்தாதே!

போ..
ஒரு முத்தையேனும் விதைத்து விட்டு வா!

என் சுதந்திர காற்றை
நான் சுவாசிக்க வேண்டும்!
சுவரில்லாத என் மாளிகையில்
நான் தனியே தவமிருக்கவேண்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!