Tuesday 18 September 2012

உயிர்

தனக்காய் தன்
குழந்தைக்காய்,
ஒரு சிறிய தெருவில்
உணவு சேகரித்து
கொண்டிருந்த
ஒரு குருவி - அந்த
அதிகாலை நேரத்தில்
கண்மூடித்தனமான வேகத்தில்
வந்த ஒருவனது இரு
சக்கர வாகனத்தில் அடிபட்டு

உயிர் துறந்தது!

தனக்கான வழித்தடத்தை
மனிதன் அழித்துவிட்டதால்
தடம் மாறி வந்த
யானை ஒன்று
மனிதன் அமைத்த மின்சார வேலியில்
கால் வைத்து உயிர் துடித்து அடங்கியது!

பாலாய் தோலாய் என்ன
தந்தாலும், தனக்கு
போதிய உணவு அளிக்காத
மனிதனை நொந்தபடி
சுவரொட்டியை உண்ண
விழைந்த மாடு, சாலை
கடக்கையில் கனரக
வாகனம் மோதி கூழானது!

தோல் வற்றி
எலும்பு துருத்தி
வாடிய நாய் ஒன்று
எதற்கோ வேகமாய்
ஓடி இரக்கமில்லாமல்
நசுக்கப்பட்டது!

பஞ்சு பொதி போல்
ஒரு அழகான பூனை
யாரோ ஒருவர் விரட்ட
கன நேரத்தில், சாலையில் ஓடி,
காற்றில் கலந்த பஞ்சனாது!

அழகாய் அணிவகுத்து
செல்லும் எறும்பு கூட்டம்
எங்கோ ஒருவரின் பதட்டத்தால்
தேடி வந்து நம்மை கடித்துவிடுமோ
என்ற பயத்தினால்,
தினம் தினம் தரையோடு
மொத்தமாய் செத்து வீழ்கிறது!

இத்தனை கொலைகளை
நாம் செய்தாலும் - மெத்தனமாய்
தினம் அதை கடந்து செல்கிறோம்!

ஒரு அடி ஆனாலும்
ஆறடி ஆனாலும்
ஒரு மனித உயிர் வாகனத்தில்
அடிபட்டு இறக்கும் போது
மொத்தமாய் கடவுளை
சபிக்கிறோம் - அவரோ
சத்தமில்லாமல்
சிரிக்கிறார்
அன்றாவது இந்த சின்னஞ் சிறு
உயிர்களின் உயிர் வலி
உணர்ந்தீர்களா முட்டாள்களே
என்று!

நம்மை சார்ந்த உயிர்களின்
கொன்றொழிப்பு..நம்மையும்
கொல்லும் நாளடைவில்
வெவ்வேறு வடிவில்
வெவ்வேறு நேரங்களில்
விழித்து கொள்ளுங்கள் இன்றாவது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!