Tuesday 18 September 2012

அனுபவம்

கரும்புகை சூழும்வரை
மாசு கட்டுப்பாடு புரிவதில்லை!

மரங்களை வெட்டிச் சாய்க்கும்வரை
நிழலின் அருமை உணர்வதில்லை

மழைநீர் பொய்க்கும்வரை
குடிநீர் சிக்கனம் தெரிவதில்லை


துயரம் வந்து சேரும்வரை
உண்மை நட்பை அறிவதில்லை

மின்சாரத் தடை வரும்வரை
மெழுகுவர்த்தியின் அருமை புரிவதில்லை

காமம் தொலைந்து போகும்வரை
கற்பின் பெருமை உணர்வதில்லை

சிறகு முளைத்து வரும்வரை
தாயின் தாய்மை தெரிவதில்லை

வாழ்வில் நெறி தவறும்வரை
ஆசிரியரின் அறிவுரை புரிவதில்லை

யுத்தங்கள் இங்கே முடியும்வரை
இரத்தத்தின் மதிப்பு உணர்வதில்லை

சுவாசிக்கும் காற்று தடைபடும்வரை
சுதந்திரத்தின் வலிமை புரிவதில்லை

அந்நிய நாட்டில் தன்மானம் விற்கப்படும்வரை
சொந்த நாட்டின் சேற்று வயல் சுதந்திரம் நினைப்பதில்லை

தோல்விகளை சந்திக்க நேரும்வரை
வெற்றியின் கனி கிட்டுவதில்லை

இருப்பவற்றை எல்லாம் இழக்கும்வரை
இல்லாதவரின் வலி புரிவதில்லை

மவுனம் இங்கே கலையும்வரை
காதலின் மொழி புரிவதில்லை

நோய் வந்து தாக்கும்வரை
ஆரோக்கியத்தின் தேவை அறிவதில்லை

சொந்தங்கள் எல்லாம் கைவிடும்வரை
கடவுளின் கருணை உணர்வதில்லை

கரித்துண்டு வைரமாவதும்
சிப்பிக்குள் முத்து பிறப்பதும்
காலங்கள் பல கடந்துதான்!

அறிந்து அறிந்து சொன்னவற்றை
அனுபவத்தில் சந்திக்கும்வரை
அறிவுரையின் அர்த்தம் புரிவதில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!