Monday, 29 February 2016

வாழ்க்கை

சில தவறுகளுக்கான
தண்டனை
வாழ்க்கை என்றாகி விடுகிறது!

ஈகை என்பது பிறவிக்கடன்!

உதவி என்று கேட்டு வந்தவர் யாராய் இருந்தாலும் என் தந்தையும் தாயும் இல்லையென்று மறுத்ததேயில்லை, தமக்குரிய எல்லா சொத்தையும் உறவுகளுக்காக வேண்டாமென மறுத்து, வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள், 'உன்னால முடியும் போது இல்லைன்னு சொல்லாதே, கொடுக்க முடிஞ்சா கொடுத்துட்டு, போய்கிட்டே இரு, ஒரு வார்த்தையைக் கூட எதிர்பார்த்து தேங்கி நிக்காதே, நாம எது செஞ்சாலும் சந்தோஷமா செய்யணும், மனசில்லாம எந்தக் காரியத்தையும் செய்யாதே, இந்த உலகம் தேவைகளுக்காக ஓடிக்கிட்டே இருக்கும், யார் தருவாங்களோ அவங்க பின்னாடி இந்த உலகம் ஓடும், ஒருநாள் கொடுக்க முடியாம போய்ட்டா, போற்றின வாய்கள் தூற்றும், ஒருத்தருக்கு உன்னால உதவி பண்ண முடியும்னா, அதுதான் உனக்கு கடவுள் கொடுத்த வேலை, அவ்வளவுதான், புகழ்ச்சிக்காக தேங்கி நின்னா முடியாத காலத்திலே திட்டறதையும் கேக்க வேண்டி வரும்'

இங்கே வெள்ள மீட்பு , நிவாரணப் பணிகளுக்குப்பிறகு, மனிதாபிமான செயல்களுக்குச் சென்று சேர்ந்து மனங்களுக்கு புத்துணர்வு தர வேண்டிய வெளிச்சம், வெற்று விளம்பரமாய் புகழ் என்னும் போதைக்கு ஊறுகாயாகிக் கொண்டிருக்கிறது!

ஒருவருக்கு உதவி செய்வதென்பது மனித நேயம், இதில் விளம்பரங்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

இருப்பினும் குழுவாய் சேர்ந்தோ, தனிப்பட்ட முறையிலோ செய்யும் நல்ல காரியங்களை வெளிச்சம் இட்டு காட்டுவதால் பிறருக்கு ஒரு தூண்டுதலாய் அது இருக்கும்
என்றால், அதை நிச்சயம் நாம் செய்யலாம். ஆனால் எந்த இடத்திலும் செயலை மட்டும் சொல்லி நகர்ந்து விட வேண்டும், உதவிப் பெறுபவரின் விவரங்களை, அதை வெளியிடுவதால் அவருக்கு நன்மைப் பயக்குமெனில், அவர் அனுமதியளித்தால் மட்டுமே பகிர்தல் வேண்டும்!

இடது கைக் கொடுப்பதை வலது கை அறியாமல் செய்ய வேண்டும் என்ற கூற்றை முழுதும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், மேற்கூறிய வகையிலேனும் பின்பற்றலாம்!

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும்
மனிதர்கள் கொடுப்பது, பெறுவது என்ற இரண்டையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டிய நிலையை காலம் கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்கும், ஆகையால் கொடுப்பதால் நாம் கடவுளர்கள் அல்ல, பெறுவதால் நாம் பிச்சைக்காரர்களும் அல்ல, எந்த நிலையில் இருந்தாலும் நாம் மனிதர்கள் மட்டுமே!

ஈகை என்பது பிறவிக்கடன்!

ஆங்கிலம்

பெங்களூர், ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், மற்ற பிற வடமாநிலங்களிலும், பெரும்பான்மையான எல்லா அரசு, தனியார் அலுவலகங்களிலும், வணிக இடங்களிலும், இந்தி இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் அவர்களின் தாய் மொழி இருக்கும், இந்தி இருக்கும் இடத்தில் அவர்கள் மொழியும் அறிவிப்புப் பலகைகளில் இருக்கும், தமிழகத்தின் தலைநகரில் இயங்கும் பல்வேறு வணிக இடங்களில், தனியார் வங்கிகளின் மக்கள் புழங்கும் இடங்களில், இந்தியும் ஆங்கிலமும் இருக்கிறதே தவிரத் தமிழ் என்பது இல்லை, இந்தி எதிர்ப்பை விட நாம் தமிழ் ஒழிப்பு நிலைக்கே முதலில் வேதனைப் பட வேண்டும்!
பிற மாநிலங்களில் இந்தியை எதிர்க்கிறார்களோ இல்லையோ, தங்கள் மொழியைக் கட்டிக் காக்கிறார்கள், இங்கே தமிழன் ஆண்டாலும் சுரண்டல், தமிழர் அல்லாதவர் ஆண்டாலும் சுரண்டல்!
நமக்கு ஆங்கிலம் என்பது தமிழை மறப்பதற்கு அல்ல!

உண்மை

எதில் உண்மை இருக்கிறதோ
அது உடன் இருக்கும்,
சூழ்நிலைகளைக் கடந்து!
மற்றவைகள்
காலத்தில் நீர்த்துப்போகும்!

எதிரி‬

அந்த சொல்லிற்கு இணையாய்
அதைவிடக் கடுமையாய்
வேறொரு சொல்லை
என்னால் சொல்லிவிட முடியும்
அந்தக் கல்லிற்கு இணையாய்
அதைவிட வலிமையாய்
வேறொருக் கல்லை
என்னால் வீசிவிட முடியும்
அந்த வாளிற்கு இணையாய்
அதைவிடக் கூர்மையாய்
வேறொரு வாளை
என்னால் கூர்த்தீட்டிவிட முடியும்
உன்னால் முடியும் அனைத்தும்
என்னால் முடியுமெனும் பொழுதும்
என்னுள் நிரம்பியிருக்கும்
கருணையையும் காதலையும்
நீயும் கற்றுக் கைக்கொள்ளும்
காலம் வருமென்ற நம்பிக்கையில்
எதிர்விளைவாற்றாதிருக்கிறேன்
அமைதியாக
இந்த அன்புசார் உலகில்!
‪#‎எதிரி‬

சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், சாராய ஆறு, பெண்களைத் தொடரும் வக்கிரப் பத்திரிக்கைகள், அடிப்படை உரிமைக்கும் கூட மக்களின் போராட்டம், தினம் நடக்கும் அரசியல் கூத்தில் சிக்கலாகும் சாலைப் பயணங்கள், பல்வேறு நகரங்களிலிருந்து வந்தேறும் குற்றங்கள்......இப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது தலைநகரம், நம்பிக்கை நகரமாய்!
‪#‎சென்னை_என்றொரு_நம்பிக்கை‬!

முடியும், விடியும்!

ஆங்கிலயர் ஆண்ட காலத்தில் அவர் தரும் பதவிக்காக, தம்முடைய சுயநலத்துக்காக, தம் ஆண்ட நிலத்தின் பாதுகாப்பிற்காக என்று பல காரணங்களுக்காக அவருடன் சேர்ந்து இயைந்து வாழ்ந்த இந்தியர்கள் உண்டு, அவர்கள் நீக்கமற எல்லாச் சாதியிலும் நிறைந்திருந்தனர்!

அதைப்போலவே எதிர்ப்பவர்களும் நிறைந்திருந்தனர், சுய ஆட்சிக்காக எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, சுரண்டிக் கொண்டிருந்த பரங்கியரைத் துரத்தியப்போது, துதிப் பாடியவர்களுக்கும் சேர்த்தே சுதந்திரம் கிடைத்தது!

அதுபோல, தொடரும் ஊழல், சாராய ஆறு, சீரழியும் கல்வி, மக்களின் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் கடன், ஆபத்தான அணுவுலைகள், மக்களின் பாதுகாப்பு மீதான அலட்சியம் ...என்று சகட்டுமேனிக்குக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது, மழை வெள்ளத்தில் ஏற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு இந்த விஷயங்களில் தொடரும் என்றால் அது எல்லோருக்கும் ஒரு விடிவாய் அமையும், அதற்கு நடுவில் பீப் பாடல்களும்...திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற ரீதியில் கொண்டாட்டங்களும், மலிவு விலை இலவசங்களும் மூழ்கடிக்காமல் இருக்க வேண்டும்! 

நமக்கு நாமே என்று எழுந்தால் மட்டுமே, முடியும், விடியும்! இல்லையென்றால் இன்னொரு சுனாமியோ, பூகம்போ வந்து மொத்தமாய்ப் புரட்டிப் போடும்! மெதுவாய் விலங்கினங்கள் இந்த இயற்கையைக் கட்டமைத்து இந்தப் பூமியைப் புனரமைக்கும்!

மனிதர்கூட்டம்

பசி தீர்ந்த பிறகு
சுவையைப் பற்றியும்
தேவை தீர்ந்த பிறகு
மனிதரைப் பற்றியும்
தேர்தல் முடிந்தபிறகு
வாக்குரிமைப் பற்றியும்
வெட்டிய பிறகு
வலியைப் பற்றியும்
வார்த்தைகளை
கோபத்தில் கொட்டியபிறகு
மௌனத்தில் மீன்பிடிப்பது பற்றியும்
சுடுகாட்டில் எரித்த பிறகு
மறந்துவிட்ட அன்பைப் பற்றியும்
இப்படியே பற்றிப் பற்றி
வாழ வேண்டிய தருணங்களையும்
பற்றாது விட்ட மனிதர்களின் மனங்களையும்
அலட்சியமாய்க் கடந்த வாழ்க்கையில்
பேசிப் பேசி சிலாக்கிறோம்
நாம்
வீணாய்ப் போன
பெரும் மனிதர்கூட்டம்!

நிகழ்வுகள்!,

பிள்ளைகளின் அருமைப் பெருமைகளைப் பற்றிக் கேட்பதற்காக, இன்று பள்ளிச் சென்றேன், இன்னமும் கொஞ்சம் நேரமிருந்தது, பஞ்சயத்துக்காக அடிக்கடிச் செல்லாததால் எழும்பி நிற்கும் கட்டிடங்களில் எந்தக் கட்டிடத்தில் அவன் வகுப்பு இருக்கிறது என்று ஒரு சிறு குழப்பம் வந்துவிட்டது. அப்படியே வெளியில் நின்ற சில மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம், பிப்த் ஸ்டாண்டர்ட் ஈ செக்க்ஷன் எந்தப் பக்கம் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது,
இரண்டு பேர், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான தனிப் பயிற்சி வகுப்பு விளம்பரத் துண்டுச் சீட்டுக்களைக் கொடுத்தனர், சரி இதெல்லாம் நமக்கெதுக்கு என்று தள்ளிப் போகும் போது, "ஹலோ எக்ஸ்குயுஸ், நீங்க எந்தக் குரூப்? நாங்க எல்லாக் குரூப்புக்கும் எடுப்போம்"
நான் "....ஹி ஹி ஹி" என்று திரும்பிப் பார்த்தேன், நல்லவேளை மம்மிஈஈஈஈஈஈஈஈஈஈ என்று மகனோ மகளோ ஓடி வரவில்லை! tongue emoticon

‪#‎தட்‬ அல்ப சந்தோஷ மொமென்ட்

மகன்‬

மகனின் வகுப்புக்கு வந்தாயிற்று,
"டீச்சர் என் பையன் ....?"
"ரொம்ப நாட்டி உங்க பையன், எந்நேரமும் சிரிச்சுக்கிட்டே இருக்கான், எல்லாரையும் சிரிக்க வெச்சுடுறான், வந்து ஒரு பாயிண்ட் சொல்லுடான்னா, சொல்லிட்டே அவனே சிரிச்சுக்குறான்....அப்புறம் தினம் லேட்"
டீச்சர் பேசாம அவனுக்கு இம்போசிஷன் கொடுங்க, வீட்டேலேயும் ரொம்பக் கலாட்டா, நீங்கதான் கண்டிக்கனும்"
ஐயோ, நீங்க வேற, உங்க பையனைக் கூப்பிட்டு எது கேட்டாலும், ரொம்ப ஸ்வீட்டா ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாருங்க, யாருன்னாலும் மயங்கிடுவாங்க..."
டீச்சர் சொன்னதும் மறுபடியும் அதே சிரிப்பு....
டீச்சர் அவனிடம் திரும்பி, பிரசன்னா இனிமே சிரிக்கக் கூடாது...
நான் இருக்கட்டும் டீச்சர், சிரிக்கட்டும், அதுல என்ன தப்பு, பட் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு ஸ்மைல் பண்ணட்டும்
டீச்சர் சிரித்தார்.....நல்ல அம்மா நல்ல பையன்....அவர் மைண்ட் வாய்ஸ்! tongue emoticon

மக்களிடம் இருந்து

ஒட்டுக் கேட்க
மக்களைக் காணும் வகையில்
திறந்தவெளி வாகனத்தில் வருகிறார்கள்,
வென்றப் பிறகு,
யாரும் பார்க்க முடியாத
கறுப்புத் திரை போட்ட கார்களில்
பவனி வருகிறார்கள்
அமைச்சர்கள்......

வித விதமாய்க்
கொடிகள் பறக்கிறது
கார்களின் முகப்புகளில்....
வேகமாய்ப் பாய்கிறார்
போக்குவரத்து காவல் அதிகாரி,
மக்களின் வாகனங்களை
ஓரங்கட்டி
நீதியை நிலைநாட்ட!
விடாமல் வசூலிக்கப் படுகிறது
அபராதம்
மக்களிடம் இருந்து மட்டும்

அணு_விபத்து


#அணுக்கதை:

எல்லாப் பணத்தையும் சுவிஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்லி, பாதுகாப்பு உபகரணங்களுக்கும் கமிஷன் வாங்கி, அனுவுலைக்குக் கையெழுத்திட்டத் தலைவர் நாகப்பனின் கைகள் கடைசியாய் உருக ஆரம்பித்தது!

#அணு_விபத்து

பணவீக்கம்


#அணுக்கதை:
வீதியெங்கும் போராடும் மக்களின் முகங்களைக் கடந்த ஆளுநர், வண்டியை விட்டு இறங்கும்போது வரிசையாய் மந்திரிகளின் வளைந்த முதுகுகளை மட்டும் கண்டதால், திருப்தியாய்ச் சொன்னார் நாட்டில் சமத்துவமும் அமைதியும் நிலவுகிறது என்று!

#பணவீக்கம்

நவீன_அவதாரம்


#அணுக்கதை:
புதுப்பட வாய்ப்புத் தேடிவந்த பெண்ணை அப்போதுதான் கசக்கிக் களைத்த அவன், ஏழைக் காதலியின் மானத்தைக் காப்பாற்றி உயிர் விடும் காட்சிக்கு, கோலம் மாற்றிக்கொண்டு நடிக்கப் புறப்பட்டான் கதாநாயகனாக!

#நவீன_அவதாரம்

பண_நீதி!


#அணுக்கதை;

வேலையில்லா நண்பனின் காதலை முறித்துவிட்டு, வேறொரு பணக்கார மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டிய நண்பனின் காதலியை திட்டித் தீர்த்தான் சேகர், வீட்டில் அவனுடன் ஒரு சாராயப் குடுவையைப் பகிர்ந்தபடி!
குடித்துக்கொண்டிருந்த நண்பன் கேட்டான், "எங்கடா மாப்ள தங்கச்சி?",
"அட சொத்தோட வரான்னு அந்தக் கமலாவை கழட்டிவிட்டேன், சொன்னபடி வரதட்சணை வராததால அவ அப்பன் வீட்டுக்கு அனுப்பியிருக்கேன் மாப்ள" சலித்துக் கொண்டான் சேகர்!

#பண_நீதி!

மறந்த_புன்னகை‬!

#‎அணுக்கதை‬:
கோவிலில், பிரகாரத்தின் முன் நின்றுகொண்டு சிவலிங்கத்தை பார்த்து, சத்தமாய் சிரித்த தன் ஐந்து வயது மகனை, சாமி கும்பிட வந்தவர்கள் தொந்தரவாய் பார்க்க, அவனைக் கண்டித்தான் மணி, "ப்பா, நீதானேப்பா சொன்னே சாமிக்கு குழந்தையைப் புடிக்கும்னு, இங்க யாருமே யாரைப் பார்த்தும் சிரிக்கலே, சாமியப் பார்த்தும் சிரிக்கலே, அதாம்ப்பா நா ஒரு ஜோக் சொல்லி சாமிய சிரிக்க வக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்த மகனை அவஸ்தையாய் நோக்க, கோவிலுக்கு வந்த மனிதர்கள், ஒருவருக்கோர் விழி நோக்கி இப்போது புன்னகைக்க தொடங்கினர், மணிக்கும் அப்போது சிவலிங்கம் சிரிப்பது போல் தோன்றியது!
‪#‎மறந்த_புன்னகை‬!

என்றாகிலும் விடியும்

மகாமகத்தில் உயிர்கள்
போனபோது வாய்மூடி
இருக்கச் சொன்னார்கள்

பத்திரிக்கை அலுவலகம்
கொளுத்தப்பட்டு ஊழியர்கள்
பிணமானபோதும்
பேருந்துகள் எரிக்கப்பட்டு
மாணவிகள் சவமானபோதும்
கண்மூடி நகரப் பணித்தார்கள்


பள்ளியில் பிஞ்சுகள் கருகியபோதும்
போலி மருந்துகளில்
ஏழைகளின் உயிர்கள்
சோதனைக்கூட எலிகளாக்கப்படும்போதும்
காதுகள் மூடி ஊமைகளைப்போல
விதிர்க்கச் செய்தார்கள்

உயிர் காக்கும் மழைநீர்
ஆழி வெள்ளமாய் அணையை
விட்டு வெளியேறி
உயிர்களை விழுங்கியபோதும்
சாராயப் போதையில்
மந்தைகளாய் மனிதர்கள் ஆனப்பின்பும்
இது இயற்கை என்று
வாய்ப் பேசி மரணங்களின்
எண்ணிக்கைக்கும் விலை நிர்ணயித்தார்கள்

இன்னமும் மிச்சமிருக்கிறது மீதேன்,
மரபணு மாற்றம்
அணுக்கழிவு
இன்னப் பிற திட்டங்கள்
கையெழுத்திட்டும் இடாமலும்,
எதையும் கேட்காமல்
புலன்கள் அறுத்து
வாழப் பழக்கினார்கள்

ஓட்டுக்கு மட்டுமே உயிர்
மிஞ்சட்டும் என்று பன்நெடுங்காலமாய்
விட்டு வைத்திருக்கிறார்கள்
மரங்கள் கொன்று காடழித்தாலும்
கஞ்சா செடிகள் மட்டும்
திடீரென்று முளைக்கும்
அதிசய நாட்டில்
வாழ்வது நம் கடன் வாழ்வோம்
என்றாகிலும் விடியும் என்ற
நம்பிக்கை ஒளியோடு!

நமக்கு அரசியல் வேண்டாம்!

உணவுப் பொருட்களில்
கலப்படம்
புற்றுநோய்களின் பிறப்பிடம்
நமக்கு அரசியல் வேண்டாம்

பாலில் ரசாயனம்
மழலைகளின் மரணம்
நமக்கு அரசியல் வேண்டாம்

கல்வித் தேர்வுகளில் நடுக்கம்
சாதியின் பெயரில் ஒடுக்கம்
நமக்கு அரசியல் வேண்டாம்

நுகர்வோர் வாணிபத்தில்
பெண்னெனும் பொருள் மயக்கும்
பெண்களே தவறுகளின் மூலம்
நமக்கு அரசியல் வேண்டாம்

கேடிகளின் விடுதலைக்கு
கோடிப் பணம்
ஏழைகளின் வறுமைக்கோடு
முப்பது ரூபாய்களில் ஆறிடும் ரணம்
நமக்கு அரசியல் வேண்டாம்

குற்றவாளிகளுக்கு
மதுவொரு கவசம்
அதன் வருமானமே
அரசின் சுவாசம்
நமக்கு அரசியல் வேண்டாம்

முப்பது சதவிகித வரி கணக்கு
ஊதியமென வாங்கும்
நூறு ரூபாய்க்கும்
சில ஆயிர சம்பள ஆட்சியாளர்களின்
பெருகும் சொத்துக்கு மட்டும்
இல்லை
எந்தவொரு கணக்கும்
நமக்கு அரசியல் வேண்டாம்

எதுவோ எரியட்டும்
யாரோ சாகட்டும்
நமக்கு அரசியல் வேண்டாம்

ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை
ஏமாற்றப்படலாம்
ஓட்டுப்போடும் நாளில் மட்டும்
மதிக்கப்படலாம்
போதும்
நமக்கு அரசியல் வேண்டாம்!

மரணம்‬

இங்கே நாம் தூக்கத்திலிருந்து
எழுவதற்கும்
ஞானம் வந்து போதனை
செய்வதற்கும்
மறந்து விட்ட நீதியை
தேடுவதற்கும்
யாரோ ஒருவரின் மரணம்
தேவைப்படுகிறது!
********
விபத்தென்றால்
கண்ணீர்த்துளிகளும்
தற்கொலையென்றால்
ஆற்றாமைக் குமுறல்களும்
கொலையென்றால்
தற்காலிக கோபக் கனல்களும்
வடிகாலாகிறது நமக்கு
மற்றொரு மரணம் நேரும் வரை!
********
மனைவிக்குப் பின் மனைவியும்
கணவனுக்குப் பின் கணவனும்
பிள்ளைக்குப் பின் பிள்ளையும்
காதலுக்குப் பின் காதலும்
இப்படியே மரணங்களுக்குப் பின்
மரணங்களும் மரணிக்கின்றன
எஞ்சியிருக்கும் ஒவ்வொரு
வாழ்க்கையிலும்!
*********
அழைத்தாலும் வராதவரை
அழைத்து வரும்
சட்டென்று நிகழும்
ஒரு மரணம்!
*********
வாழ்வதற்கான
நூறு வருடங்களில்
இறப்பையெண்ணி
இறக்கப் போகும்
ஒரு நாளில்
வாழயெண்ணும்
உணர்வைத் தரும்
மரணம்!
************
மரணம் என்பது
மரணம் மட்டும்தான்
வாழ்க்கையல்ல!
*********
‪#‎மரணம்‬

அவன் அவள் அது

அவனோ அவளோ
ஒருவருக்கொருவர்
கைபேசியில்
அழைப்பைத் தவறவிடலாம்
ரயில் முனையத்தில்
கால்கடுக்க
காத்திருக்க வைக்கலாம்
வேறொரு அழகை
பார்த்து ரசிக்கலாம்
பிறிதொரு அண்மையை
லயித்துப் போற்றலாம்
காத்திருப்பை
இரக்கமின்றி அலட்சியப்படுத்தலாம்
முக்கிய நாட்களை
சட்டென்று மறந்தும் போகலாம்
எது முடியாமல் போனாலும்
முறிந்துப் போகாத
முழுமையானதொரு
அன்பு வசப்பட்ட இதயம்
காத்திருக்கும்,
காயப்படும்
பொறுத்துக் கொள்ளும்
சுயம் என்ற ஒன்று
கரைந்துப் போகாத வரையில்

அன்பால்_சூழ்ந்ததென்_உலகு‬!


யாருமற்ற வேளையில்
நானுமற்று இருந்தேன்
கற்கள் தேவையில்லை
காயங்கள் போதும்
உதிர்ந்த தாழம்பூவில்
உதிராத மணம் போல
அன்போடிருக்கிறது மனம்
எத்தனை தந்தாலும்
குறையாமல்,
வேண்டும்போது வா
ஏந்திக்கொள்கிறேன்
உன் தாயாக!

தெய்வத்தின்_ஆட்சி‬

#‎அணுக்_கதை‬:
ஆளும் கட்சி அலுவலகம் இருக்கும் சாலையும், அதன் அருகில் இருக்கும் சாலைகள் முழுதையும்,இருபுறமும், மந்திரிகளின், கட்சி உறுப்பினர்களின் கார்கள் ஆக்கிரமித்து இருந்தது, கொளுத்தும் வெயிலில் பள்ளிக் குழந்தைகள் நெரிசலில் சிக்கிப் பரிதவிக்க, போக்குவரத்து அதிகாரிகள் ஓர் ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்க்க, சொகுசுக் கார்களில் கறுப்புக் கண்ணாடி ஏற்றப்பட்டு உள்ளிருந்த உறுப்பினர்கள் ஒருவரும் வெளியே பார்வையைத் திருப்பவில்லை!
ஒரு சாலையைக் கடக்க ஒரு மணிநேரம் மேல் ஆகிக் கொண்டிருந்தபோது,
ஆளுங்கட்சியின் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தான் ஒருவன், மக்கள் குறைதீர்க்க வந்த தெய்வம், சமூக விஞ்ஞானி.......வருக வருக என்று!

கழைக்கூத்து

யாரோ ஒருவரின்
கண்ணீர் மறைக்கும்
கழைக்கூத்தில்
பலரின் புன்னகை
சாத்தியப்படுகிறது!

கோணங்கிகளின்_தேர்தல்_கோடுகள்‬!

#‎அணுக்_கதை‬:
மாபெரும் ஊழல்கள் செய்து நான்கு தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்த்த எதிர்க்கட்சித் தலைவர் வரும் தேர்தலில் நம் ஆட்சிதான் என்று உறுதிப்படக் கூறியதைக் கேட்டு குழம்பிய அவரின் வாரிசு, "எப்படி?" என வினவ, "டேய் மகனே, ஆளுங் காட்சி நாம போட்ட கோட்டுக்குப் பக்கத்துல அதைவிட பெரியக் கோடுப் போட்டிருக்காங்க, ஐனங்க கண்ணுக்கு நாம கோடுதான் காட்டப் போறோம், கூட்டிக் கழிச்சுப்பாரு, கணக்கு சரியா வரும்" என்றார்!
"சேர்த்த சொத்துக்கே எத்தனை வாரிசுன்னு தெரியல்ல, இதுல இந்த கணக்கு வேறயா?, நீங்க புதுசா எந்தக் கணக்கும் பண்ணாம இருந்தா சரி" என முனங்கி விட்டு சென்றான் மகன்!

வஞ்சப்புகழ்ச்சி‬

#‎அணுக்கதை‬
"நீ புத்திசாலி!" என்று அவ்வப்போது சிலாகித்த கணவனின் வஞ்சப் புகழ்ச்சிக்கு தினந்தோறும் உப்பில்லாத உப்புமாவை உணவாகத் தந்து, "எங்க வீட்டுக்காரரைப் போல அன்பான பொறுமைசாலி புருஷன் யாருக்குமே இருக்க முடியாது" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தன் கணவன் காதுப்பட சொல்லி சிரித்தாள் மனைவி!
‪#‎வஞ்சப்புகழ்ச்சி‬"

தெரிவு‬

அதே சில நொடிகள்தான்
அதே மனம்தான்
அதே உதடுகள்தான்
வார்த்தைகள் மட்டுமே
மலர்களாய் இல்லை
செந்தழல் கங்குகளாய்!
கனியிருப்ப
காய் கவர்வதின்
நோக்கம்
அன்பின் வறட்சியாகவோ
அன்பின் மிகுதியாகவோ
இருக்கலாம் உறவுகளில்
குளத்தில் விழும் கல்லாய்
விழுங்கிக் கொண்டால் போதும்!

குளமாய் நானில்லை
நதியாய் ஓடி
கடலில் சேரும்
நேரம் வரை
அன்பை தெரிவு
செய்கிறேன் - ஆதலால்
காதலே
நீ எப்போதும்
தெளிந்த நீரைக் காண்கிறாய்
காயங்களைத் தானே
ஆற்றிக்கொண்டு
நேசம் மட்டும்
நிஜமாய் வாழ்கிறது
ஆழ்மனக் கடலில்
நீந்தலாம் வா!
‪#‎தெரிவு‬

காதல்‬!

உருகி வழிவதல்ல
நம்மை உருக்காமல் இருப்பதே
காதல்
அடித்துச் சாய்ப்பதல்ல
நம்மை அரவணைப்பதே
காதல்
வார்த்தைகளில் கொல்வதல்ல
நம்மை மௌனத்திலும் ஆட்கொள்வதே
காதல்
எளிதாய் அலட்சியப்படுத்துவதல்ல
நம்மை ஆராதிப்பதே
காதல்
எந்திரமாய் உணர்வுகளற்றதல்ல
நம்மை உயிர்ப்புடன் வைப்பதே
‪#‎காதல்‬!

கல்வி

நாங்கள் குடியிருக்கும் தெருவில், காவல்காரராய் பணியாற்றும் ஒரு தாத்தாவிடம் அவ்வப்போது பேசுவேன், சமீபத்தில் தன் ஏழு வயது பேத்தியுடன் வந்திருந்தார், பள்ளிக்கு அனுப்பாமல் உங்களுடன் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது,
"எங்கம்மா?! பள்ளிகோடத்துக்கு அனுப்புனா, அது கிளாஸ்லேயே ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் போய்டுதுன்னு அனுப்பிடறாங்க, அதுவும் இருக்க மாட்டேங்குது" என்றார்,
"டாக்டர் கிட்டே போய்க் காமிக்க வேண்டியதுதானே, சொந்தத்தில் கல்யாணம் பண்ணீங்களா" என்று கேட்ட போது,
அவருடைய முதல் மகளை உறவில் திருமணம் செய்து கொடுத்ததாகவும், முதல் மகளுக்கு மகன் பிறந்தவுடன், அவருடைய மாப்பிள்ளை இரண்டாவது மகளையும் இழுத்துக் (!) கொண்டு ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்டு, அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்திருக்கின்றது என்றும், அதில் இரண்டாமவள் தான் இந்தக் குழந்தை, அவர்கள் அனைவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகவும், பணம் சம்பாதிப்பதே குறியாய் இருப்பதாகவும், இந்தக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை என்று கூறினார்

அந்தக் குழந்தை என் கையைப் பிடித்து "அக்கா விளையாடலாம் வா" என்று அழைத்தாள், மகனுடன் மற்றும் அவன் நண்பர்களுடன் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து விளையாட வைத்தப்போது, அவளுக்கு உடம்பு முழுக்க உதறிக் கொண்டிருந்தது, நரம்புக் குறைபாடோ, டிஸ்லெக்ஸ்க்ஷியாவோ இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவளின் பாட்டியிடம் சிறிது பணம் தந்து முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினேன், அவர்கள் அம்மாவை அழைத்து வாருங்கள் என்று சொல்லி இருக்கிறேன், இதுவரை வரவில்லை ......

இது ஓர் உதாரணமே, இது போல் எத்தனையோ குழந்தைகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள், படித்தவர்களிடமே கொஞ்சம் கொஞ்சமாய் இப்போதுதான் விழிப்புணர்வு வந்திருக்கிறது, படிக்காதவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு போதவில்லை!

ஒரு குழந்தைத் தன் இயல்பை மீறி வகுப்பறையில் நடந்து கொள்கிறது என்றால், அது ஏன் என்று தனியார் பள்ளிகளும் யோசிப்பதில்லை, அரசாங்கப் பள்ளிகளும் யோசிப்பதில்லை, பிள்ளைகளைக் கவனிக்க அவர்களுக்கு நேரமில்லை, சிரத்தையெடுத்துப் பெற்றோரிடம் பேசி, சரியான ஆலோசனை வழங்க அவர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை, பிள்ளையைப் பள்ளியை விட்டு அனுப்பவதே ஒரே தீர்வாக இருக்கிறது!

சிகிச்சைக்குப் பணம் இருக்கிறதா இல்லையா என்பதை விட முதலில் விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்றே நாம் பார்க்க வேண்டி உள்ளது!
சொந்தத்தில் திருமணம் செய்வது தவறு என்று எத்தனை மருத்துவர்கள் கூறினாலும், இன்னமும் அது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் இருப்பது, அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து வைப்பது என்று எல்லாமே ஒரு பலகீனமான சந்ததிகளின் காரணிகள் தான்!

ஆணோ பெண்ணோ, அவர்களைப் படிக்க வையுங்கள், சிறந்த கல்வி, குறைந்தபட்சம் அவர்களுக்கு எது சரி எது தவறு, எதை எப்படி அணுகுவது, சரியான துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, யாரைத் தேர்ந்தெடுப்பது, குழந்தைகளை எப்படிக் கவனித்துக் கொள்வது, எது சரியான மருத்துவம், எது சரியான உணவு (இன்னமும் நிறையப் பேர் தம் குழந்தைகளுக்கு வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும், துரித உணவு வகைகளையும் வாங்கியே வயிற்றை நிரப்புகின்றனர், வீட்டில் அரைக்கச் சோம்பல்பட்டு, வண்ணக் கலவை நிறைந்த மசாலாக்களையும் வாங்கிச் சமைத்துத் சாதாரண உணவையும் விஷமாக்கும் வேலைகள்தான் நடக்கிறது பெரும்பாலும்) போன்ற இன்ன பிற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது தரட்டும்!

ஒரு பெண் பிள்ளையைப் படிக்க வைத்தால் அந்தக் குடும்பமே வாழும், எதிர்காலச் சந்ததிகளும் ஆரோக்கியமாய் வளரும்!

கலப்படம்

மைலாப்பூர் நோக்கிச் செல்லும் வி.எம். சாலையில் அமைந்திருக்கும் ஆர்கானிக் கடை ஒன்றில், ஆர்கானிக் ப்ரவுன் சுகர் (சர்க்கரை) என்று ஒரு கிலோ வாங்கினேன், வீட்டிற்கு வந்து, ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு, சிறிது நேரம்
கழித்து, தண்ணீரை வடித்தப்போது, ப்ரவுன் நிறம் தண்ணீரில் கலந்து, சர்க்கரை சாதா சர்க்கரையாய் வெள்ளையாய் தனியே நின்றது!

புகழ்ப்பெற்ற பெருங்காயத் தூள் டப்பாவில், 80 சதவீகிதம் மைதா என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது!

சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல பழரச பானங்களிலும் இருப்பது பெருமளவு தண்ணீரும், சர்க்கரையும், 5 சதவீகிதத்துக்கும்
குறைவான சிறிதளவு எஸன்ஸ் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது!
இந்த மாவை நீங்கள் அப்படியே கலந்து சிக்கனை சேர்த்து சிக்கன் 65 செய்யலாம் என்று புதிதாய் விளம்பரம் ஓடுகிறது!

ப்ரைட் ரைஸ் செய்ய ரெடிமேட் மசாலா, குழம்பு தாளிக்க, கூட்டு வைக்க, சாம்பார் வைக்க, மிளகையும், மஞ்சளையும் கூட பாக்கெட் செய்தாகி விட்டது!
வீட்டில் கிரைண்டர் இருந்தாலும் கடையில் ரெடிமேட் இட்லி மாவு வாங்குகின்றனர்!

தனியே இருக்கும் இளைஞர்களுக்காக இருந்த இந்தச் சந்தை மாறி இப்போது இல்லத்தரசிகள் அல்லது அரசர்கள் இருக்கும் வீட்டிலும் இதுதான் நிலை என்றாகி விட்டது!

மாத தொடக்கத்தில் பட்ஜெட் போட்டு, வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டிலேயே அரைத்து, வரவில் மிச்சம் பிடித்து, குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பேணிய தலைமுறைப் பழக்கம் தொடர்ந்தால் வீட்டிற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது!
நம்மைச் சுற்றி கலப்படங்கள் மனிதர்களில் மட்டுமல்ல, பொருட்களிலும் நிறைந்திருக்கிறது!

எதற்கெடுத்தாலும் மக்களே போராட்டம் செய்து வாழ்வே போர்களமாகிப் போன நாட்டில், குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக நாம் கொஞ்சம் பழைய உணவு முறைகளுக்கு உயிர் கொடுத்து வியர்வை சிந்தலாம், முடிந்த வரை பொருட்களை சரியாய் தேர்ந்தெடுத்து வாங்குவோம்!

இருப்பினும் எல்லாவற்றிலும் கலப்படம் செய்பவர்களுக்கு ஒருநாள் இழப்பு மிகப் பெரிதாய் இருக்கும்!

மருத்துவமனையில்

மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறேன், பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர் அமர்ந்திருக்கிறார், சத்தமாக கைபேசியில், "ம்ம் சொல்லு, எந்த ஊரு பொண்ணு?
...
கோயம்புத்தூரா? எவ்வளவு தேறும்?
....
நிலம் இருக்கா ?
...
அப்பா என்ன பண்றாரு?...

இப்படியே ஓடுகிறது, பொண்ணு
என்ன படிச்சிருக்கு, குணம் எப்படி...ஹ்ஹூம் இதெல்லாம் கேக்கவேயில்ல
பொண்ணு வீட்டுக்காரங்களும் இப்படித்தான்!
சில வருஷங்களுக்கு முன்னாடி என் மாமாவும் தன் மகனுக்கு இப்படித்தான் பொண்ணுப் பார்த்தார், சில மாதங்களுக்கு பிறகு, கிளி ஜோடியோடு ஆத்தை விட்டு பறந்துப் போய்டுச்சு, மதம் மாறி காதல் திருமணம் செய்த இரண்டாவது மகனின் மனைவி, அவர்களுடன் அன்போடு இயைந்து வாழ்கிறார்!
இதுனால காதல் திருமணம்தான் சிறந்ததுன்னு சொல்ல வரலே பெரியவங்களே, நீங்க முதியோர் இல்லம் போறது, உங்களுக்கு அமைஞ்ச பிள்ளைகளைப் பொறுத்த விதி! அவ்வளவுதான்!

அரசு_ஊழியர்கள்‬!

#‎அரசு_ஊழியர்கள்‬!
சம்பளம் கேட்டு, பல வித கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது அரசு ஊழியர்கள் போராடுகின்றனர், இது போன்ற எந்த போராட்டத்திற்கும் மக்களின் ஆதரவு இல்லை, ஏன் என்று இனியாவது இவர்கள் சிந்திக்க வேண்டும்.

வோட்டு வாங்கி ஓடிப்போகும் அரசியல்வாதியை விட, தினந்தோறும் பல்வேறு வேலைகளுக்காக பல லட்சம் மக்கள் இவர்களைத்தான் நாடுகிறார்கள், வங்கிகளில், தபால் தந்தி அலுவலகத்தில்,
மாநாகராட்சி அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் அலுவலகங்களில், பதிவுத்துறை அலுவலகங்களில், மின் வாரியத்தில், பேருந்துகளில், இரயில் நிலையங்களில் என்று பல்வேறு இடங்களில் பரிவர்த்தனைகள் இவர்கள் மூலமே நடைப்பெறுகிறது!

இப்படி தினம் தினம் மக்களை சந்திக்கும் இவர்கள் மக்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்?

படிக்காதவர்களிடம் ஆணவமாக, படித்தவர்களிடம், உன்னோடு பேசுவதே நான் உனக்கு செய்யும் உதவி என்ற ரீதியில்தான் பணி நடக்கிறது!
"இங்கே போ, அங்கே போ, நாளைக்கு வா, இன்னைக்கு முடியாது" இப்படி யாரையும் ஏக வசனத்தில் பலர் பேசி விடுகிறார்கள், "தன்மை" என்பதே வார்த்தைகளில் இருப்பதில்லை! கடமையை கண்ணும் கருத்துமாக செய்து, மக்களிடம் மரியாதையோடு பேசுகிற எத்தனையோ நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படிப்பட்டவர்களால் தான் இன்னமும் நம் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது!

எல்லா துறைகளிலும் உள்ள கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரை நேர்மையாய் இருக்க முடிவெடுத்துவிட்டால், எந்த அரசியல்வாதிகளும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, இவர்களின் கூட்டமைப்பு ஒன்று பட்டு தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டம் செய்வது போல், மக்களின் நலனுக்காகவும் தங்கள் துறை சார்ந்தேனும் இவர்கள் குரல் எழுப்ப வேண்டும்! தங்களை நாடி வரும் மக்களை மனிதர்களாக மதித்து நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்த சுணக்கமும் காட்டாமல் நிறைவேற்ற வேண்டும்!

அப்படி செய்யத் தொடங்கும் நாளில், மக்கள் கூட்டமும் உங்களுக்காக உடன் வரும், இல்லையென்றால் நடு ரோட்டில் உங்களுக்கே அரசியல்வாதிகளால் தீங்கு நேர்ந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாய் மக்கள் மந்தைகளைப் போல் வேடிக்கைதான் பார்ப்பர்! ஏனெனில் இவர்களை மந்தைகளைப் போல் ஆக்கியதும், நடத்துவதும் நீங்கள்தானே?!

‎நடிகர்களும்_நடிகைகளும்‬

#‎நடிகர்களும்_நடிகைகளும்‬
நக்மா ஏதோ கருத்து சொன்னார் என்பதற்காக, கருத்துக்கு எதிர்கருத்துக் கூறி வாதிடாமல், நக்மா நடிகை என்ற ஒரே காரணத்திற்காக, அவர் நடித்த படங்களில் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தார் என்று தனிப்பட்ட அவர் நடிப்பை, அவரின் அரசியல் சார்ந்த கருத்துக்குப் பதிலாக நடத்தையாக, திரைக் காட்சியின் புகைப்படங்களைப் போட்டு, விமர்சித்து இருந்தார் ஓர் இளைஞர், நக்மா என்றில்லை, குஷ்பூவுக்கும் இதே நிலைமைதான்!

ஒருவேளை இவர்கள் நடிகைகள் இல்லை என்றாலும், பெண் என்ற ரீதியில் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தே தாக்குதல் செய்வார்கள்! அவர்களை அவ்வளவு கேவலமாக விமர்சித்தாலும், எந்த நடிகை எந்தக் கடைத் திறப்புக்கு வந்தாலும், முண்டியடித்து வெட்கம் கெட்டுப் போய் முதலில் ஓடிச் சென்று அவர்களின் புற அழகை ரசிப்பதும் இப்படிப்பட்ட உத்தமர்கள்தான்.

ஊருக்கே தெரிந்து, கமல் தன் வாழ்க்கைத் துணைகளை மாற்றியிருக்கிறார், தன் திரைப்படம் வெளிவரும்போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி, போக்குக் காட்டியிருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த் அடித்த அரசியல் பல்டிகளுக்கு, ரசிகர்களுக்குக் கொடுத்த பல்புகளுக்கு யாரும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யவில்லை, விஜய் கோக் எடு கொண்டாடு என்றார், பின் குளிர்பான ஆலைகளுக்கு எதிராகத் திரையில் விமர்சனம் செய்து நடித்தார், பிரபுதேவா தன் மனைவியைப் பிரிந்து நயன்தாராவுடன் வாழ்ந்தார், ஊரே நயன்தாராவை மட்டும் திட்டியது, நகைச்சுவை என்ற பெயரில் எல்லா நடிகர்களும், சக மனிதனை, அவனின் வெளிப்புற உடல் அழகை விமர்சித்து நடிப்பதே நகைச்சுவை என்கிறார்கள், யாரும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அவர்களின் நடத்தையை விமர்சிக்கவில்லை!

இந்த நடிகர்கள் யாரும் திரையில் நாயகிகளைத் தொட்டு நடிப்பதில்லையா? திரையில் தெரியும் பிம்பங்களைத் தாண்டி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது நமக்கு அவசியமில்லை, அவர்கள் மட்டுமல்ல எந்த மனிதராய் இருந்தாலும் ஒரு கருத்துக்கு எதிர் கருத்து என்பது ஆக்கபூர்வமாய் இருத்தல் வேண்டும், எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை என்றால், குடும்பத்தையே வீதிக்குக் கொண்டு வந்து அசிங்கப்படுத்துவது ஒரு மோசமான மனநிலையே ஆகும்

அதிலும் பொது வெளியில் வரும் பெண்களுக்கே அச்சுறுத்தல்கள் அதிகம், அதுவும் நடிகைகள் என்றாகி விட்டால், கேலியும் கிண்டலும் அதிகம்!
சமூகம் வகுத்த, சட்டம் வகுத்த ஒழுக்க விதிகள் அனைவரைக்கும் பொதுவானது, தனிமனிதத் தாக்குதல் நடத்துபவர் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும், அவரை மிகவும் பலகீனமானவராய் நாம் கருதுதல் வேண்டும்!

வார்த்தைகளில், நடத்தையில் ஒருவரின் நடத்தையை "விமர்சிப்பவர் நடத்தையும்" கேள்விக்குரியதே!

காதலை ஏற்றுக் கொள்ளவிட்டால் ஆசிட் ஊற்றுவது, வக்கிரமான படங்களைப் பகிர்வது, வக்கிரமான முறையில் தனிமனிதத் தாக்குதல் நடத்துவது, பெண் என்றாலே படுக்கைக்குதான் என்று நினைப்பது, பெண் தன் சதையை விற்றே சாதிக்கிறார் என்று ஆழ்மனதில் நம்பி காழ்ப்புக் கொள்வது, பெண் துரோகம் செய்தாள் என்று கொலை செய்வது, எந்தத் தோல்விக்கும் குடியே மருந்து என்று குடித்துச் சீரழிவது என்று பெரும்பாலும் இதுபோன்ற காரியங்களை ஆண்களே செய்வதால், ஆண்களின் வளர்ப்புமுறை என்பது கவலைக்குரியதாகிறது!

இவள் பெண், அவன் ஆண், என்று வளர்ப்பதைக் காட்டிலும், உன்னைப் போல அவளும் ஒரு மானிடப் பிறவி, அவளைப் போல நீயும் ஒரு மானிடப் பிறவி, உணர்வுகள் என்பது பொதுவுடைமை, அதில் ஒழுக்கம் என்பதும் பொதுவுடைமை, நீ செய்யும் தவறுகளை எல்லாம் அவளும் செய்வாள் என்றும்,
தவறு செய்யாமல், தோல்வியில் துவண்டு, சாராயத்தில் மூழ்காமல், தன் தோல்விகளுக்கு, தவறுகளுக்குத் தனிமனிதத் தாக்குதல் நடத்தி யாரையும் விமர்சிக்காமல் உன் அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, பிற உறவுகள் இருப்பது போன்றே நீயும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்த்தல் வேண்டும்!

ஆண்மை, பெண்மை என்று ஒரு மையும் இல்லை, உருவங்களைக் கடந்து தன்னைப்போல் பிறரையும் நேசித்தால் இங்கே பிரச்சனைகளுக்கே இடமில்லை!

உயிரின் உறவு!

வீடு முழுக்க உறவுகள்
இருந்தாலும்
சாப்பிடுகையில்
கண்களில் நீர் வழிய
சட்டென்று
புரையேறும் போது
ஓடி வந்து தண்ணீர் தருவார்
அம்மா! 


கீழே விழுந்த போது
அலட்சியமென்று
பரிகசிக்காமல்
எழுந்து நின்ற போது
ஆணவமென்று
முதுகில் குத்தாமல்
கோபத்தில் விழும்
வார்த்தைகளில்
வன்மம் இல்லை
அன்பும்
ஆற்றாமையும் மட்டுமே
என்று
எப்போதும் உணர்வார்
அப்பா!

எத்தனை உருவங்களில்
அன்பு வந்தாலும்
பெண்ணின் கண்களில்
உள்ளத்தின்
உணர்வுகளைக் காண்பது
தந்தையோ தாயோயன்றி
மேலோட்டமான
வேறொரு உறவோ
அன்போ இல்லை!

"என்னமா இப்படி பண்றீங்களேமா?

அப்போது அம்மா ஆட்சி;
பள்ளி முடித்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன், ஏதோ ஒரு வேலையை முடித்து விட்டு, பல்கலைக்கழகத்தைத் தாண்டி, சாலையைக் கடந்து, கடற்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி 'நடைபாதையில்' (கவனிக்க பிளாட்பார்மில்) நடந்துக் கொண்டிருந்தேன், நல்ல உச்சி வெயில் நேரம், மே மாதம்!
எனக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடைக்கும் நான்கடி இடைவெளி மட்டுமே, நடைபாதையில் நின்றிருந்த ஒரு காவலர் என்னை நடக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார், ஒரு இரண்டு எட்டில் நிழற்குடையின் கீழே நின்று கொள்கிறேன் என்று சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை, என்னைப் போலவே பல மாணவ மாணவியர் கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அப்படியே நிற்க வைக்கப்பட்டோம், முதல்வர் நான்கு மணி நேரம் கழித்தே சாலையைக் கடந்தார், உடல் முழுதும் தீய்ந்து கொப்புளங்கள் ஏற்பட்டது!
அப்போது அய்யாவின் ஆட்சி;
நந்தனம் சிக்னல் தாண்டி, ஏதோ ஒரு அலுவலகத்தைத் தேடி, நடைபாதையில் (கவனிக்க இங்கும் நடைபாதைதான்) ஓர் ஓரமாய் நடந்துக் கொண்டிருந்தேன், அப்போது அங்கே ஏதோ ஒரு கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த காவலர், மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நிற்க சொன்னார், ஏன் என்ற கேள்விக்கு, முதல்வரின் பாதுகாப்பு வண்டிகள் முதலில் செல்லும் அப்போது நடந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக 'சுட்டு விடுவார்கள்' என்று சொன்னதுதான் ஜனநாயகத்தின் உச்சம், இங்கே முதல்வர் ஒரு மணி நேரம் கழித்து சாலையில் விரைந்தார்!
ஓட்டுக் கேட்க வரும்போது மக்களுக்கு அருகிலும், ஆட்சி அமைத்தப் பின் மக்களை கொலைகாரர்களாக, வேண்டாதப் பொருட்களைப் போல தள்ளி வைத்துப் பார்ப்பது எல்லா கட்சிகளும்தான், உண்மையில் உங்கள் எல்லோரையும் பார்த்து மக்கள்தான் கேட்க வேண்டும், "என்னமா இப்படி பண்றீங்களேமா?

சாதி_மத_அரசியல்‬

ஒரு கெயில் குழாய் வெடித்தால் நஷ்டம் என்பது அந்த விவசாயிக்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கு!
ஓர் அணுவுலை வெடித்தால் அங்கே சாகப்போவது அங்குள்ள மனிதர்கள் மட்டுமல்ல, சில தலைமுறைகள்!
ஆய்வுக்கென்று ஒரு மலை வளம் அழிக்கப்பட்டால் பாதிப்பு அங்கு மட்டுமல்ல, ஒரு மழைப் பருவம் நமக்கும் பொய்த்துப் போகும்!
ஊழல் எங்கு நடந்தாலும், பாதிப்பு எங்கு நிகழ்ந்தாலும் அதன் தாக்கம் நிச்சயம் ஒருநாள் நம்மையும் தாக்கும்!
இதைப் புரிந்து கொள்ளாமல், "அவங்க என்ன ஊழல் செஞ்சாலும் என்ன, நம்ம சாதிக்காரங்க" என்றும், "ஆபத்து அங்கேதானே இங்கில்லையே?" என்றும் நீங்கள் நினைத்தால், அதைப் போல முட்டாள்தனம் வேறு இல்லை, பதவியே இல்லையென்றாலும், "பணம்" என்ற ஒன்று இல்லாவிட்டால் உங்கள் சாதியினன் கூட உங்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடப்போவதில்லை!
உங்கள் சாதி என்பதால் ஓர் ஆபத்தான திட்டத்திற்கு யாரோ ஒரு மந்திரி பணம் ஒன்றே பிரதானம் என்று இடும் கையெழுத்து ஏற்படுத்தும் ஆபத்து, சாதி பார்த்து விலகி நிற்காது! (உதாரணம்: அதிகரித்து வரும் புற்றுநோய், குடியால் பாதிக்கப்படும் குடும்பங்கள், கட்டிடங்களாக மாறிக் கொண்டிருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் சமீபத்து மழை)
ஹிந்து என்று மதத்தின் அடிப்படையில் கட்சியைப் போற்றினாலும், நாளை அதே கட்சிதான் கீழ் சாதி ஹிந்துக்களை வேரறுக்க முனையும், மக்களைப் பிளவுப் படுத்தும்! எந்த மதச் சாயமும் வெளுத்துப் போகும் ஒன்றே!
"சாதியும் மதமும் வெறும் மனித முக அடையாளங்களைத் தாண்டி, நட்பு, காதல், கட்சி, அரசியல், வியாபாரம் என்று எல்லாவற்றிற்கும் ஒரு கொண்டாடப்படும் அகத்தின் அடையாளமாய் மாறிப்போய்க் கொண்டிருக்கிறது"
நம் அரசியல் கட்சியின் நிலைபாட்டைக் கொஞ்சம் இந்த அடையாளங்களைத் தாண்டி "எவன் அதிகபட்சம் (இன்றைய காலகட்டத்தில்) நல்லவன் என்று உறங்கிக் கிடக்கும் மனசாட்சியைத் தட்டிக் கேட்டுப் பின் ஓட்டுப் போடுதல் நமக்கும் நாளைய தலைமுறைக்கும் நலம்!
‪#‎சாதி_மத_அரசியல்‬

இறுக்கம்

மரத்தை
கோடாரியால்
வெட்டிக் கொண்டேயிருந்தான்
அவன் கால்களைத் தாங்கி
மண்ணைப் பிணைத்திருந்த
வேர்களிலோ இப்போது
வைரம் பாய்ந்துக் கொண்டிருந்தது!

விபத்து_மரணம்_அழுகை‬!

#‎விபத்து_மரணம்_அழுகை‬!
இப்போது ஒரு விபத்தைக் கடந்து வந்திருக்கிறேன், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை! சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சிக்னல் அருகே நான் பயணம் செய்த கால் டாக்ஸி வந்து நின்றது, நின்ற பொழுதில் "டொம்" என்று ஒரு பெரிய சத்தம், அதிர்ந்து போய்ப் பார்த்தால் வெறும் மயிரிழை வித்தியாசத்தில், நின்ற கால் டாக்ஸியின் இடது பக்கத்தில் வந்து நின்ற ஒரு ஹுண்டாய் வெர்னா காரின் பின்புறம் நசுங்கி, ஓர் இரண்டடி முன்னே சென்று நின்றது, அதிர்ஷ்ட வசமாக அந்த நேரம் எந்த ஒரு மனிதனும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சீறிப்பாயவில்லை, பாய்ந்திருந்தால் அங்கே உயிருக்கு நிச்சயம் உத்திரவாதம் இருந்திருக்காது!
"அரசாங்கப் பணியில்" என்று வாசகம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய லாரியின் முகப்பு, ஓட்டுனரின் அலட்சியத்தால் முன்னின்ற காரின் பின்பகுதியை நொறுக்கி இருந்தது!
பதைப்பதைப்புடன் கீழே இறங்கி, பார்த்தப் போது, லாரி இடித்த வேகத்தில், காரின் உள்ளே அமர்ந்திருந்த குடும்பத்தில் என் மகன் வயதையொத்த சிறுவர்கள் ஒன்று போல இருவர் இருந்தனர், முன் சீட்டில் இருந்த குழந்தை இடித்துக் கொண்டதில் கையில் அடி, உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், மற்ற எல்லாவற்றையும் விட அந்தச் சிறுவன் வலியில் அழுதது இப்போதும் மனதை அழுத்துகிறது!
இன்றுவரை, பல்வேறு அரசியல் வன்முறைகளை, விபத்துக்கள் என்று நிகழும் கொலைகளைப் பார்த்துக் கடந்து வருகிறோம், பள்ளிக்குப் போகும் குழந்தைகள், பணிக்குச் செல்லும் தகப்பன்கள், அம்மாக்கள், வெளியே செல்லும் முதியவர்கள், சாலையைக் கடக்கும் விலங்குகள் என்று விபத்து யாரையும் எதையும் விட்டு வைப்பதில்லை!
பெரிதாய் வேண்டாம் சிறிதாய் ஓர் இடி இடித்து விழுந்தால் கூட மண்டையில் அடிபடும், மண்டையில் அடிபடுவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று எல்லா மகன்களுக்கும், தகப்பன்களுக்கு, கணவன்களுக்கு, காதலர்களுக்கும் தெரியும், இருந்தும் தலைக்கவசம் அணிவது அவர்களின் கௌரவத்துக்கு இழுக்கு, மண்டையில் உள்ள முடிக் கொட்டிப் போகும், மயிரா உயிரா என்று வரும்போது, அவர்களுக்கு மயிரே பெரிதாகத் தோன்றுகிறது, மயிர் இல்லையென்றாலும் கூட, தலைக்கவசம் அணிவதில் அவர்களுக்கு ஏதோ சங்கடம், சட்டென்று இவர்களின் தவறினால் சாலையில் விழுந்து மரணிக்க நேர்ந்தால், பழிக்கு ஆளானவன் மனநிலையையோ, இறந்தவனின் குடும்பத்தாரின் மனநிலையையும் சொல்லி மாளாது!
பணிக்குச் சென்ற உறவினர் ஒருவரின் மகனை அரசுப் பேருந்து மோதியதில் அவன் iஇறந்து போனான், அவன் அந்த ஒருநாளில் இறந்து விட்டான், எனினும் அந்தத் தகப்பன் என் மகன் இங்கே நடப்பான், இப்படித்தான் சிரிப்பான், அவனுக்கு இதுதான் பிடிக்கும் என்று ஆண்டுகள் பல கடந்தும் குழந்தையில் இருந்து அவன் இறப்புவரை நடந்த நிகழ்வுகளை மனதில் சுமந்து கலங்கும் கொடுமை நமக்குப் புரியாது!
சமீபத்தில் கூட, ஈரோட்டில் இருந்து வியாபாரத்துக்காகச் சென்னை வந்த இருவர், குடித்து விட்டு வாகனத்தைத் தவறான பாதையில் ஒட்டி, ஹோட்டலில் இரவு பணி முடித்து வந்த இளைஞன் ஒருவனை விபத்தில் கொலை செய்தனர், பணம் இருக்கும் அவர்கள் வழக்கில் இருந்து வெளியே வருவது எளிது, ஆனால் இறந்துப் போன இளைஞனின் தாயும் தந்தையும் ஆயுள் முழுக்க நினைவுகளின் சுமையில் கரைந்துதானே போவார்கள்? அந்தத் தாயின் அழுகையும் கண்முன்னே நிற்கிறது!
அழுகை வேதனையின் வெளிப்பாடு, எனினும் அது ஒருபோதும் வேதனையைத் தீர்ப்பதில்லை, இயற்கையின் முன்பு நாம் தோற்றுப்போகிறோம், ஆனால் நம்முடைய அலட்சியத்தினால், ஆணவத்தினால், நடத்தையினால், கவனக்குறைவினால் இயற்கைக்கு மாறாய் யாரோ ஒருவருடைய மரணத்திற்குக் காரணமாகிறோம், அல்லது மரணித்துப் போகிறோம், நாம் அழுகிறோம் அல்லது யாரையோ அழ வைக்கிறோம்!
ஒருவனுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தால் தான் தர்மம் என்றில்லை, நீங்கள் கவனமாய்ச் சாலையில் செல்வதும் கூட இன்றைய காலகட்டத்தில் மாபெரும் அறம் அல்லது தர்மம் என்று கூடச் சொல்லலாம்!
சாலையில் விரையும்போது;
1. இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் அளவில் மட்டுமே பயணம் செய்யுங்கள்!
2. ஓட்டுபவரும் பின்னிருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள்!
3. உலகில் சிறந்த வாகன ஒட்டி நீங்களாகவே இருக்கக் கூடும், மற்றவர்கள் இல்லை, ஆதலால் கவனம்!
4. வேகம் விவேகம் அல்ல, நேரம் கழித்துப் போகலாம், வாழ்நாளில் மீதி நாட்கள் இருக்கும், விரைந்து சென்று நம்முடைய வாழ்க்கையையோ பிறருடைய வாழ்க்கையோ முடிக்க வேண்டாம்!
5. குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அவசியம், உங்கள் தலைகளை விட அவர்களின் தலைகள் மென்மையானவை!
6. பேருந்திலோ, ரயிலிலோ, ஆட்டோவிலோ பயணம் செய்தால் காசு விரையம் என்று, ஒரே பைக்கில் குடும்பத்தையே ஊர்வலம் போல நெருக்கி அழைத்துச் செல்லும் கணவன்கள் உண்மையில் கொலைகாரர்கள்! பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம், உயிர் போனால் மீட்க முடியாது!
7. எட்டுப் போட்டு, பத்துப் போட்டு லைசென்ஸ் வாங்கினால் போதாது, ரியர் வியு கண்ணாடி என்பது தலைவாரிக் கொள்ள அல்ல, பின்னே வரும் வாகனங்களைப் பார்த்து, சாலையைக் கடப்பதற்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
8. நீங்கள் உலக அழகனாகவோ அழகியாகவோ இருக்கலாம், இரண்டு பேருந்துகளின் இடையில், மற்ற வாகனங்களின் இண்டு இடுக்குகளில் புகுந்து உங்கள் சாகசத்தைச் சாலையில் காட்டாதீர்கள், மேடையில் காட்டுங்கள்!
9. உறங்கும் பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பயணிக்காதீர்கள்!
10. இரவு பத்து மணிக்கு மேல் சிக்னலைப் பார்க்காமல் செல்லலாம் என்று கண்மூடித்தனமாக முன்னே செல்லாதீர்கள், ஏனெனில் முட்டாள்களின் உறவினர் பலர் உண்டு, அந்தப் பக்கம் இருந்தும் உங்களைப் போலவே மற்றொருவன் வரலாம், கவனம்!
11. வெறுமனே கால்களைத் தரையில் வைத்துக் கொண்டு ஆக்சிலேட்டரை அழுத்தினால் போதும் என்று மட்டும் தெரிந்து கொண்டு சாலையில் கடக்கும் பெண்களும் ஆண்களும் பயங்கரவாதிகளே, எப்படி வருவார்கள், எங்கே பிரேக் பிடிப்பார்கள் என்றே தெரியாது! இவர்களிடம் கருணைக் கொண்டு ஒதுங்கிச் செல்லுங்கள்!
12, சாலையின் ஓரத்தில் கோவிலைப் பார்த்தால் பக்திப் பரவசத்தில் அப்படியே பிரேக் போட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள், கடவுளுக்கே உங்கள் செயல் பிடித்தம் இல்லை, பின்னே வரும் யாரோ ஒருவர் உங்கள் மண்டையில் போடலாம்!
13. பிரேக் பிடிக்காத லாரிகள், அலட்சியமான பேருந்துகள், யாரையும் மதிக்காத ஆட்டோக்கள், பைக்கில் விரையும் ஹீரோக்கள், பார்களில் குடித்து விட்டுக் கார்களில் விரையும் மைனர்கள் மாநகரில் அதிகம், சீட் பெல்ட் அணியுங்கள், நமக்கு நாமே துணை, சாலையில்!
இறுதியாக, யாரோ ஒருவரின் அழுகையை நினைத்துப் பாருங்கள், ஏதோ ஒரு மரணத்தால் அல்லது இழப்பினால் கண்ணீர் துடைக்கக் கூட ஒரு கரமின்றி அனாதைகளாக மாறும் குழந்தைகள், புத்திர சோகத்தில் பித்தாகும் மனிதர்கள் அதிகம், கொஞ்சம் கருணைக் காட்டுங்களேன்!
‪#‎சாலை_பாதுகாப்பு‬

புதைகுழி‬

#‎அணுக்கதை‬:
இருபத்துரெண்டாயிரம் கோடிகளுக்கு மேல் டாஸ்மாக்கில் மட்டும் வருமானம் வந்தும், இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் இருக்கிறது என்று, வாழ்த்தொலி முழக்கங்களுக்குப் நடுவே பட்ஜெட் உரையைக் கேட்ட, கடைநிலை கட்சி அபிமானி ஆறுமுகம், இனி குடும்பத்தோடு குடித்து வருமானம் அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதென்று முடிவு செய்தான், அவன் தலைக்கு மேல் அரசு ஏற்றி வைத்த நான்காயிரம் ரூபாய் கடனைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல்!
‪#‎புதைகுழி‬

வரலாறு‬!

#‎அணுக்கதை‬;
பவானி சங்கரின் திருமண ஆல்பத்தை அவர்களின் பத்து வயது மகள் அகல்யா பார்த்துக்கொண்டிருந்தாள்!
"அம்மா"
"ஏம்மா?"
"இந்த கல்யாண போட்டோவில் உங்க நெத்தியிலே என்னம்மா போட்டு இருக்கீங்க?"
"செல்லம், அது ஸ்டிக்கர்டா!"
"ஓ, யாரோடது? யாரு இவங்க?"
"அவங்க ஸ்டிக்கர் கடவுள்!"
"ஓ, இந்த கடவுள் கேட்டதெல்லாம் தருவாங்களா?"
"ஹ்ஹூம், ஸ்டிக்கர் மட்டும் தருவாங்க"
"......அப்போ ஸ்டிக்கர் மட்டும் எதுக்கு, நாம கோவிலுக்கு போனா நெத்தியில போட்டுக்கற நாமம் மாதிரியா?"
"ம்ம் .. அப்படியும் சொல்லலாம்"

குறை‬

‪#‎அணுக்கதை‬:
"என்னங்க நாம வேணும்னா இன்னொரு டாக்டரைப் பார்க்கலாம்" என்று கணவனையும் மாமியாரையும் பார்த்துக் கூறினாள் விமலா!
"இத்தனை வருஷம் பார்த்தது பத்தாதா? என் பையனுக்கும் வயசாயிட்டே போகுதுல்ல, அந்தத் திருச்சிப் பொண்ணு சரியா வரும்ன்னு தோணுது, பேசமா அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிவைக்க ஒத்துகிட்டினா இரு, இல்லைனா விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுப் போயிட்டே இரு" என்றார் மாமியார்!
"என்னங்க, அத்தை இப்படிச் சொல்றாங்களே, நீங்க சொல்லுங்க, நாம வேற ஒரு டாக்டரைப் பார்க்கலாம், இல்லைனா நாம ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம், இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாம போய்டுங்க...ப்ளீஸ்!"
கெஞ்சினாள் விமலா
"போதும் விமலா, இந்தக் குறையோட இன்னும் உன்னோட அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போக முடியாது, வேணும்னா, பிறக்கப் போற குழந்தைக்குப் பெரியம்மாவா இங்கேயே இரு!" என்று இளித்தான் சேகர்!
"அப்போ இந்தாங்க, இந்தப் பேப்பரையெல்லாம் படிச்சுப் பாருங்க, அத்தை நீங்களும், உடனே திருச்சிப் பொண்ணு இல்லே, திருச்சிப் பையனையோ இல்லை வேற ஒரு நல்ல பையனையோ பாருங்க, கூடிய சீக்கிரம் உங்களைப் பெரியப்பா ஆக்குறேன்" என்று சொல்லி சிரித்தாள் விமலா!
இறைந்து கிடந்த தாள்கள் எல்லாம் சேகரைப் பார்த்துப் பல்லிளித்துக் கொண்டிருந்தது!
‪#‎குறை‬

புள்ளிவிவரம்‬

#‎அணுக்கதை‬
செந்திலுடன் கவுண்டமணி;
செந்தில்; "அண்ணே நம்ம நாட்டுல எத்தனை ஏழைங்க இருக்காங்கண்ணே?"
கவுண்டமணி; "அந்த கருமம் எல்லாம் நமக்கெதுக்குடா?"
"இல்லன்ணே, இந்த சென்ட்ரல இருக்கிற எம்.பி ஒருத்தர் ஒரு காலேஜ் படிக்குறப் பையனா உள்ளத் தூக்கிப்போட்டுட்டு, அந்த காலேஜ்ல, 4000 பீடித்துண்டு, 10000 சிகரெட் துண்டு அப்புறம் மேற்படி சமாச்சாரமெல்லாம் இருக்குதுன்னு எல்லாத்துக்கும் கணக்கு சொல்றார்னே, எப்படின்னே இதையெல்லாம் எண்ணி சொல்றாங்க?"
"அடேய் மங்கா மடையா, இந்த வானத்துல சுமாரா இரண்டு கோடியே நாப்பது லட்சத்து இரண்டாயிரத்து நூத்திப் பத்து நட்சத்திரம் இருக்கு தெரியுமாடா?"
"அண்ணே எப்டிணே, நீங்க நம்ம ஊரையே தாண்டலே, எப்படின்ணே இவ்வளவு சரியா சொல்றீங்க?"
"அடேய் கேணையா, சந்தேகமா இருந்தா நீயே போய் எண்ணிக்கோடா!"
"அண்ணே...கிர்ர்...ர்ர்... நான் ஒரு சந்தேகம் கேட்டா நீங்க வேற என்னத்தையோ சொன்னா எப்படின்ணே?"
"டேய் நாட்டுல பாதிப்பேர் இப்படித்தான்டா திரியுறான்! அப்பத்தா வெத்தலப் போட்டு புளிச் புளிச்சுன்னு துப்பற மாதிரி வாயில வந்ததை புள்ளி விவரம்ன்னு துப்பிட்டுப் போறான், கேட்டா நீயே போய் எண்ணிக்கோடான்னு சொல்வான், டேய் இங்க பாரு, எலக்‌ஷன் முடிஞ்சுப்போச்சுன்னா இப்படித்தான் துப்பிட்டே இருப்பானுங்க, போய் பொழப்பப் பாருடா"
"ம்ம்ம்....."
"டேய் மங்கூஸ் மண்டயா, இவனுங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்ல முடியாத புள்ளி விவரம் ஒன்னு இருக்கு, அதை அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டானுங்க"
"அண்ணே என்னண்ணே அது... சீக்கிரம் சொல்லுங்கண்ணே"
"டேய் எல்லா கட்சிப் பயலுகளும் சுவிஸ் பேங்குல எவ்வளவு பணத்தை பதுக்கி வச்சிருக்காங்கன்னு ஒரு பயல சொல்லச் சொல்லு, ஊஹூம் ... சொல்ல மாட்டானுங்களே...
ஆளுக்கு பதினஞ்சு லட்சம் தாரேன்னானுங்க, அதையும் காணோம், இதெல்லாம் நாம கேக்கக் கூடாதுன்னுதான், கையில மாட்டுனவன் மேல புள்ளி விவரத்தை தெளிச்சு நம்மல தல தெறிச்சு ஓட விடுறானுங்க............
ஐய்யையோ....
டேய்ய்ய்........நம்ம ஏரியா கவுன்சிலர் வாராண்டோய், நம்ம பாக்கெட்டுல இருக்குற பத்து ரூபாய அவன் வந்து புடுங்கறதுக்குள்ளே ஓடிடுவோம் வாஆஆஆஆஆஆ"
‪#‎புள்ளிவிவரம்‬

சுழற்சி‬

#‎அணுக்கதை‬
சிறிது சிறிதாய் தன் விவசாய நிலங்களை விற்று, தன் மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்த கந்தசாமி, கடைசியாய் அவன் வெளிநாட்டில் சென்று சம்பளத்திற்கு வேலை செய்ய, ஏஜென்டிடம் கட்டுவதற்கு எஞ்சியிருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் விற்பதற்கு முடிவு செய்த போது, ஐ. டி கம்பெனியின் வேலையைத் துறந்த குமார், விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தை வாங்க முன்வந்தான்!

விளம்பர_நோய்மை

#‎அணுக்கதை‬
பரபரப்பான சாலையில், பாதையோரத்தில் கண்பார்வை மங்கி, ஒரு தீனக்குரலில் இரந்துக் கொண்டிருந்த யாரோ ஒரு மூதாட்டியை, விரைவாக அப்புறப்படுத்துமாறு காவலரிடம் கடுமையாக சொல்லிவிட்டு, கட்சித் தலைவியின் பிறந்தநாள் வாழ்த்துக்கொண்ட ஆளுயர விளம்பர பலகையை அங்கே வைக்குமாறு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான், வார்டு உறுப்பினர் நண்டு முருகன்!
உயர்த்திக் கட்டிய பலகையில் "தாய்மையைப் போற்றுவோம்!" என்ற கோஷம் நண்டு முருகனின் புகைப்படத்தோடு பளிச்சென்றிருந்தது!

பயம்‬

#‎அணுக்கதை‬;
எல்லையில் இறந்த வீரனின் இழவு வீட்டில் பணத்தைக் கொடுத்து, சவபெட்டியின் முன் ஸ்டிக்கரைக் காட்டி தன் கடமையை நிறைவேற்றிய அமைச்சர் ஏழரைச்சாமி, மீந்திருந்த ஸ்டிக்கருடன் திரும்பி வருகையில், வழியிலிருந்த சுடுகாட்டில் ஆனந்தமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பிணங்கள் அனைத்தும் சட்டென்று தத்தமது சவக்குழிக்குள் ஓடி ஒளிந்தன!
‪#‎பயம்‬

Wednesday, 10 February 2016

தெரிவு

 
 அதே சில நொடிகள்தான்
 அதே மனம்தான்
 அதே உதடுகள்தான்
 வார்த்தைகள் மட்டுமே
 மலர்களாய் இல்லை
 செந்தழல் கங்குகளாய்!

 கனியிருப்ப
 காய் கவர்வதின்
 நோக்கம்
 அன்பின் வறட்சியாகவோ
 அன்பின் மிகுதியாகவோ
 இருக்கலாம் உறவுகளில்
 குளத்தில் விழும் கல்லாய்
 விழுங்கிக் கொண்டால் போதும்!

குளமாய் நானில்லை
நதியாய் ஓடி
கடலில்  சேரும்
நேரம் வரை
அன்பை தெரிவு
செய்கிறேன் - ஆதலால்
காதலே
நீ எப்போதும்
தெளிந்த நீரைக் காண்கிறாய்
காயங்களைத் தானே
ஆற்றிக்கொண்டு
நேசம் மட்டும்
நிஜமாய் வாழ்கிறது
ஆழ்மனக் கடலில்
நீந்தலாம் வா!
 

சுயநலம்

 
அழகாய் ஆடிய மயில்தனை
தனக்காய் ஆடப் பூட்டி வைத்தான்
கானகத்தில் பாடியக் குயிலினை
எப்படியோ பிடித்துக் கூண்டிலிட்டான்
தனியாய்க் களித்திருந்த கிளிதனை
தனக்கொரு துணையென
சிறகை வெட்டி வைத்தான்
நான் நானென அவனாய்
மட்டும் இருந்த மனிதன்
அவன் பிடித்து வைத்த
எல்லா அழகியலும்
தான் விரும்பும்போது
விரும்பும் வகையில்
மட்டுமெனக் கட்டளையிட்டான்
அவன் அமைத்த கூண்டுகளில்
வெற்றுக் கூடுகள் மட்டுமே மிஞ்ச
இப்போது அவன்
பொம்மை தேசத்து அரசனான்!

Friday, 5 February 2016

முடியும் முடியாது




ஒரு மாங்கனியின் விதையை நட்டு வைத்து, அதற்கு நீருற்றி, பாதுகாத்து வரும்போது, அது ஒராயிரம் மாங்கனிகளை நமக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் தருகிறது, விதைத்தது ஒன்றுதான் எனினும் விளைந்தது பல்லாயிரம். விதை என்பதை 'முடியும்' 'முடியாது' என்ற நிலைப்பாடாக வைத்துப் பார்க்கலாம். முடியும் என்ற விதை நிலம் பாதுகாப்பு போன்ற திட்டமிடுதலில், நீரூற்றுதல் என்ற தொடர்ந்த செயல் எண்ணங்களால் கனிகளை ஈன்று நமக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் ‘முடியும்’ என்னும் பலனைத் தருகிறது. முடியாது என்ற விதை கட்டமைப்பில்லா நிலத்தில் தளர்ந்த எண்ணங்களையே நீராய் ஊற்றுகிறது அதன்படி எல்லாம் முடியாமல் போகிறது!

தனிப்பட்ட எண்ணங்கள், தனிப்பட்டவரின் வாழ்க்கையைச் செதுக்கும். ஒன்று சேர்ந்த சமுகத்தின் எண்ணங்கள் சமுகத்தைச் செதுக்கும்! ஒரு நாய்க்கு நீங்கள் ஒருமுறை உணவிட்டாலும் அதன் வாழ்நாள் வரை உங்களை மறக்காது. செய்த செயல் சிறிதே எனினும், அதன் தாக்கம் வாழ்நாள் முழுமைக்கும் உடன் வரும்.

சில வார்த்தைகளோ, ஓர் அழுத்தமான உறுதி தரும் கைக்குலுக்குதலோ அல்லது சிறு அரவணைப்போ, அது, "நிச்சயம் முடியும்" என்ற விதையை அங்கே விட்டுச் செல்லும்!

ஒரு முகச்சுளிப்போ, ஒரு பாராமுகமோ, உங்களவில் நீங்கள் செய்யும் சிறு அலட்சியமோ, அவமானமோ, அங்கே "முடியாது" என்ற விதையை ஊன்றும்!

"முடியும்" என்ற விருட்சத்தைப் பிறப்பிலேயோ, வளர்ப்பிலேயோ இயற்கையாய் பெற்றவர்கள் அல்லது பெற்றவர்களால் சூழல் அமையப் பெற்றவர்கள் மட்டுமே "முடியாது" என்ற விதைகளை ஏற்றுக்கொள்வதே இல்லை!

தாமஸ் ஆல்வா எடிசன் முடியாது என்ற விதையை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த விருட்சத்தின் பலன்களை நாம் அனுபவிக்கிறோம்!

பலவீனமானவர்களை "அச்சச்சோ", "அவ்வளவுதான்", "போச்சா?" என்ற நம் வார்த்தைகள் மேலும் பலவீனமாக்குகிறது! 

மதிப்பெண் போனதென்று குழந்தைகள் தற்கொலைச் செய்து கொள்வதில்லை. இந்தப் பலவீனமான சமூகத்தின், பலவீனமான கேள்விகளை எதிர் கொள்ள   முடியாமல் வீசும் புயல் காற்றில் துவண்டு விழும் கொடி போல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள்!  மெல்லிய தளிர்களுக்கு வேலியைப்போன்றும் கொழுக்கொம்பைப் போன்றவர்களே பெற்றோர்கள். அவை இல்லாத போதோ பலவீனப்படும் போதோ தளிர்கள் மடிகின்றன தற்கொலை என்ற பெயரில்!

அது இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளி. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தேர்வாகி, அவரவர் விருப்பப் பாடங்களை எடுத்து ஆர்வமாய்ப் பிள்ளைகள் பதினோறாம் வகுப்பில் முதல் நாள் ஒன்றாய் அமர்ந்திருக்கின்றனர்! 

45 பேர் எடுத்திருக்கும் 4 விருப்பப் பாடங்களில் மூன்று வெவ்வேறாய் இருந்தாலும் அந்தப் பள்ளி வரலாற்றில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோரின் விருப்பப் பாடங்களில் ஒன்று கணிதம் என்று இருக்கிறது.  கணித ஆசிரியர் மிகுந்த திறமைசாலி அவரை நம்பியே அத்தனைப்பேரும் கணிதத்தை எடுத்திருந்தனர். ஆசிரியர் ஆச்சரியப்பட்டார்! 

மாணவ மாணவியர்க்கு காலை வணக்கம் தெரிவித்து ஒரு வாக்கியம் சொல்லிப் பின் பாடம் நடத்தினார். மறுநாள் அவர் வகுப்பில் 15 மாணவர்களும் 2 மாணவிகளும் மட்டுமே இருந்தனர். முதல் நாளே பள்ளித் தலைமை ஆசிரியையிடம் சென்று அவர்கள் கணிதம் அல்லாத வேறு ஒரு விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆசிரியருக்கு அதிர்ச்சி. ஆண்பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார். ‘நீங்கள் மட்டும் ஏன் மாற வில்லை?' 'சார் நான் இன்ஜினியரிங் படிக்கணும், கண்டிப்பா படிக்கணும்னு  அப்பா சொல்லிட்டார்', 'டியூசன் வெச்சுக்கிறோம்' என்று ஆண்கள் சொல்ல, அதே பதிலை ஒரு பெண்ணும் சொல்ல, இன்னொரு பெண் ஒன்றும் சொல்லவில்லை!

பள்ளியில் முதல் மாணவியாக அவள் இருந்த காரணத்தினால் மிகுந்த பரிவோடு ஆசிரியர் அதே கேள்வியைக் கேட்க, அந்த மாணவியும் சற்றும் தயங்காமல், 
"சார் நேத்து நீங்க மேத்ஸ் ரொம்ப ஃடப் அதனால, திங்க் பண்ணி டிசைட் பண்ண சொன்னீங்க, எல்லாரும் அந்த ஸ்டேட்மென்டையே யோசிச்சு பயந்து போய்ட்டாங்க, பட் நான், நீங்க நேத்து நடத்தின பாடத்தை மட்டும்தான் யோசிச்சேன்.  எனக்கு சேப்டரில் (பாடத்தில்) மட்டும்தான் டவுட் இருக்கு, நோ டவுட் இன் மை சாய்ஸ் சார்' என்றாள், அதன் பிறகு அந்த ஆசிரியர் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஆசிரியர் போன்று சமூகமும் உறவுகளும் இருக்கிறது! 

பெரும்பான்மையானோர் கட்டாயத்தால் கிடைத்ததைப் பற்றுகின்றனர் சிலர் தோல்வி பயத்தில் விரக்தி அடைந்து விலகுகின்றனர். அந்த மாணவியைப் போன்று ஒரு சிலர் மட்டுமே முடியும் என்ற விருட்சத்தைச் சுமந்து கொண்டு உலகத்தை மாற்றி அமைக்கின்றனர்!

நம்மை எதிர்மறை சிந்தனைக்குத் தள்ளக்கூடிய நையாண்டிகள் பல உள்ளன. அதில் ஒன்று ஒரு நண்டு ஏற்றுமதி கதை. ஒவ்வொரு நாட்டின் ஏற்றுமதி செய்யத் தயாராக வைக்கப் பட்டிருந்த நண்டுகள் நிறைந்த உருளைகளும் மூடப்பட்டிருக்க இந்தியாவில் இருந்து சென்ற உருளைகள் மட்டும் திறந்திருந்தனவாம், "ஏன்?" என்று ஒருவன் கேட்டபோது "அது இந்திய நண்டுகள், மற்ற நாடுகளின் நண்டுகள் மூடியிடாவிட்டால் மேலே ஏறி தப்பித்து விடும் ஆனால் இவை ன்றுக்கொன்று மேலே ஏற விடாமல் அவைகளே தடுத்து விடும்!" என்று சொன்னானாம்!

நேர்மறையாகக் கிணற்றில் விழுந்த இரு தவளைகளில் ஒன்று முடியாதென்ற மற்ற தவளைகளின் கோஷத்தைக் கேட்டு உயிரை விட காது கேட்காத மற்றொரு தவளையோ கோஷங்களில் வெளிப்பட்ட தவளைகளின் உடல் மொழியை உத்வேகமூட்டும் ஆரவாரமாக எண்ணி முயன்று தப்பித்ததைப் படித்திருப்பீர்கள்.

நேர்மறை எதிர்மறை என்று இங்கு கதைகளும் காவியங்களும் கொட்டிக் கிடக்கின்றன, நேர்மறைக்குள் எதிர்மறையும், எதிர்மறைக்குள் நேர்மறையும் காணும் நம் பார்வை சுழலைப் பொறுத்தே அமைகின்றன!

அது இந்தியப்  பெருநகரங்களின் ஒன்றின்  விமான நிலையம். சில வருடங்களுக்கு முன் லண்டனில் இருந்து அந்நகரத்தின் மார்க்கமாகச் சென்னை செல்லும் பயணிகளுடன் பல மணி நேரமாக நானும் வரிசையில் காத்திருக்கிறேன். இந்தி மொழியில் சில அடிமட்ட ஊழியர்களில் முதல் அங்கிருந்த சில அதிகாரிகள் வரை பணத்தின் மீதே குறியாய் இருந்து பயணிகளிடம் சலசலத்துக் கொண்டிருந்தனர். வரிசையில் நின்றவர்களில் ஒரு வெளிநாட்டுப் பயணியிடம் வெள்ளை உடுப்பில் இருந்த ஓர் அதிகாரி, குரல் உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட, பயணிகளிடையே தேவையில்லாத பீதியும் சலசலப்பும் ஏற்பட்டது. ஜெர்மனி மார்க்கமாக என்னுடன் அதே விமானத்தில் வந்த மூன்று இளைஞர்களின் பைகளில் இருந்து சில எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை வெளியில் எடுத்து மீண்டும் ஒரு வாக்குவாதம் தொடங்கியது. ஒரு வழியாய் அவர்கள் நகர்ந்து வர, இளைஞர்கள் தாங்கள் வாங்கிய உபகரணங்களுக்கு டயூட்டி (வரி) கட்டுவதாய்ச் சொன்னாலும், அதிகாரி வரி எதற்கு லஞ்சம் போதும் என்று சொல்ல, ஒரு வழியாய் அவர்கள் வரி மட்டும் கட்டி மீண்டு வந்ததாய் ஆர்வ மிகுதியால் கேட்ட என்னிடம் சொல்லி ரசீதைக் காட்டினார்கள்!

இங்கே நேர்மையாய் இருக்க இந்த இளைஞர்கள் முடியும் என்ற நம்பிக்கையில் போராடி வென்றிருக்கிறார்கள்!

"முடியும்" என்ற தாரக மந்திரத்தை, அந்த விருட்சத்தை எப்படிப்பட்ட மனிதர்கள் அதிகம் சுமக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் ஏற்ற தாழ்வு அமைகிறது!

இன்றைய சூழலில் பணபலம் கொண்டவர்களும், படைபலம் கொண்டவர்களும், பெரும் மந்தைக்கூட்டம் இந்த மக்கள் கூட்டம் என்று கருதி ஊழலில் ஈடுபட்டு  ஏமாற்ற முடியும், கேள்வி கேட்பவர்களை நசுக்க முடியும் என்று பலமாக நம்பிக்கைக் கொள்ளும்போது, அவர்களை எதிர்க்கொள்ளும் மனிதர்கள் முடியாதென்ற விதையைச் சுமப்பவர்களாய் இருக்கும்போது பொருளாதாரச் சூழ்நிலை, வன்முறைக்கான அச்சம் என்ற காரணிகளில் முடியாதென்று போதிக்கப்பட்டு, நமக்கென என்று வாழ்வது நல்லது என்ற அறிவுரைகளால் உண்மையில் மந்தைக்கூட்டம் போலவே ஆகுவர்! 

 பலகோடி மக்கள் தொகையின் மனம் எனும் வல்லமையான ஆயுதம் சுனங்கிப் போகும்போது, பொய்யை மூலதனமாய் கொள்ளும் மக்கள், பணமும் வன்முறையும் கொண்டு முடியும் என்று நினைப்பதை முடித்துக் கொள்கிறார்கள். சட்டமும் சமூகமும் கேள்வி கேட்க முடியாமல் முடங்கிப் போகிறது!

நல்லவர்களிடம் இருக்கும் மனம் எனும் நம்பிக்கை ஆயுதம் கூர் மழுங்கிக் கிடப்பதால் அல்லாதவர்களின் வன்முறை ஆயுதங்கள் உயிர் பெறுகின்றன!"

அன்றைய சூழலில் காந்தி என்ற மனிதர் கண்டறிந்த மனம் எனும் ஆயுதமே முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஆயுதமின்றி போராடச் செய்தது.  பல நூறு ஆயுதங்களை மண்டியிடச் செய்தது! 

காந்தி, நேதாஜி, .ஊ.சி, வல்லபாய் பட்டேல், காமராஜர், அம்பேத்கர் என்று வரிசையாய் தோன்றிய மனிதர்கள் கொண்ட நம்பிக்கைகளும், வழிமுறைகளும் வேறு வேறு என்றாலும் அனைவருக்கும் பொதுவாய் உறுதியாய் அவர்கள் பதித்தது நம் மனதில் முடியும் என்ற விதையைத்தான். அந்த விதைகளின் பலநூறு விருட்சங்கள், பலகோடி விதைகளைத் தூவி, நாட்டுச் சுதந்திரத்திற்கும், கருத்துரிமைச் சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது!

அடால்ப் ஹிட்லர் எந்தத் தீய பழக்கமும் இல்லாத ஒரு சர்வாதிகாரி. முடியும் என்ற விருட்சத்திற்கு அவர் விதையாய் விதைத்தது இன வேறுபாடு எனும் கொடிய வெறி.  பலகோடி மனிதர்களை அந்த ஒரு விதை வேரறுத்தது!

நம்முடைய இந்தியப் பாரம்பரியச் சமூகத்தில் "முடியும்" என்று ஒருவன் சொன்னால் முதலில் வரும் விமர்சனம், "வேலையைப் பாருடா", "பகலில் கனவு காணாதே", "கொஞ்சம் பூமியில் கண்ணை வெச்சு நட" என்பது போன்ற வாக்கியங்கள் தான்!  கையில் ஒரு காலணா இல்லாமல் வாயில் முழம் போடதே!" என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் கூறி வந்திருக்கிறார்கள். கனவு காண்பதும், முடியும் என்று நினைப்பதும் அதீத நம்பிக்கையோ ஆணவத்தின் அடையாளமோ அல்ல. தன்னடக்கம் என்பது கனவை மறுப்பதும் அல்ல அது கனவை தீர்க்கமாய்ப் பரிசீலிப்பது!

"நீ என்ன பெரிய புத்திசாலியா", "பொம்பளைப் புள்ளையா லட்சணமா இரு" என்று இன்னப் பிற வசவுகளும் அவ நம்பிக்கைகளும் பெண்கள் எதிர் கொள்ளும் விமர்சனங்கள், கனவு என்பது பொதுவுடைமை, சில இடங்களில் சூழல் "முடியும்" என்ற விதைகளை நட்டு வைக்கும். சில இடங்களில் விருட்சங்கள் சுயம்புவாய் எழும். நம்முடைய பணி அத்தகைய வளர்ச்சிக்கு சிறு துளி நீராய் இருக்க முடியாவிட்டாலும் வேரில் ஊற்றும் அமிலமாய் இல்லாதிருத்தலே போதுமானது!

சுயசரிதை எழுதும் மனிதர்கள் கடந்து வந்த பாதைகள் பலவாய் இருந்தாலும் வெற்றியையும் தோல்வியையும் அவர்தம் அனுபவமாய் எழுதினாலும் நமக்குரிய செய்தி என்பது அவர்களின் மனதில் சுமந்த விருட்சத்தின் வழி அவர்கள் பயணம் தொடர்ந்திருக்கிறது என்பதாகும்! 

எப்படி உங்கள் விருட்சத்தை வளர்ப்பது என்று வேண்டுமானால் சுயசரிதைகளைப் படித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்கள் விதைகளை நீங்கள் அங்கே தேடாதீர்கள். உங்களுக்குரிய விதையை நீங்களே தேர்வு செய்ய வேண்டும், நீங்களே பயிரிட வேண்டும், நீங்களே நீருற்ற வேண்டும். நீங்கள்தான் அந்த விருட்சத்தின் நிலம்!

முடியும் என்று நம்புகிறேன் என்று நம்பிக்கொண்டே இருந்தால் மட்டும் விதை முளைக்காது, உரமிடுதலைப் போலத் திட்டமிட வேண்டும். நீருற்றுதலைப் போலச் செயல்படுத்த வேண்டும். நாளை செய்கிறேன் என்று நீங்கள் முடிவு செய்யும் ஒன்றை அந்த நாளில் செய்ய வேண்டும், அந்த நாள் என்பது முடிவை மற்றுமொரு நாளுக்குத் தள்ளிபோடும் நாளாகத் தொடர்ந்தால் விதை காலப் போக்கில் பட்டுப் போகும்! 

விதையை ஊன்ற நீங்க முடிவு செய்துவிட்டால், உங்கள் உயரம் ஐந்தடி ஆறங்குலம் என்று உங்கள் விருட்சத்தை ஐந்தடிக்குள், உங்களின் வரம்புக்குள் கட்டி வைத்து உயரத்தை அளந்து வளர்க்காதீர்கள்! 

நீங்கள் எத்தனையடி உயரம் இருந்தாலும், எந்தப் பொருளாதாரச் சூழ்நிலையில் இருந்தாலும், எந்தப் பாலினத்தவராய் இருந்தாலும், உங்கள் விதைகளின் வளர்ச்சி உங்கள் மனத்தின் பலத்தைப் பொறுத்து அமைகிறது அது வரம் தரும் விருட்சமாய் வளரட்டும்! உங்கள் எல்லைகள் விரிவடையட்டும்.

நன்றி, அகல் மின்னிதழ், பிப்ரவரி 2016

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!