ஒரு மாங்கனியின் விதையை நட்டு வைத்து, அதற்கு நீருற்றி, பாதுகாத்து வரும்போது, அது ஒராயிரம் மாங்கனிகளை நமக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் தருகிறது, விதைத்தது ஒன்றுதான் எனினும் விளைந்தது பல்லாயிரம். விதை என்பதை 'முடியும்' 'முடியாது' என்ற நிலைப்பாடாக வைத்துப் பார்க்கலாம். முடியும் என்ற விதை நிலம் பாதுகாப்பு போன்ற திட்டமிடுதலில், நீரூற்றுதல் என்ற தொடர்ந்த செயல் எண்ணங்களால் கனிகளை ஈன்று நமக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் ‘முடியும்’ என்னும் பலனைத் தருகிறது. முடியாது என்ற விதை கட்டமைப்பில்லா நிலத்தில்
தளர்ந்த
எண்ணங்களையே நீராய் ஊற்றுகிறது அதன்படி எல்லாம் முடியாமல் போகிறது!
தனிப்பட்ட எண்ணங்கள், தனிப்பட்டவரின் வாழ்க்கையைச் செதுக்கும். ஒன்று சேர்ந்த சமுகத்தின் எண்ணங்கள் சமுகத்தைச் செதுக்கும்! ஒரு நாய்க்கு நீங்கள் ஒருமுறை
உணவிட்டாலும் அதன் வாழ்நாள் வரை உங்களை மறக்காது. செய்த செயல் சிறிதே எனினும், அதன் தாக்கம்
வாழ்நாள் முழுமைக்கும் உடன் வரும்.
சில வார்த்தைகளோ, ஓர் அழுத்தமான உறுதி தரும் கைக்குலுக்குதலோ அல்லது சிறு அரவணைப்போ, அது, "நிச்சயம் முடியும்" என்ற விதையை அங்கே
விட்டுச் செல்லும்!
ஒரு முகச்சுளிப்போ, ஒரு பாராமுகமோ, உங்களவில் நீங்கள் செய்யும் சிறு
அலட்சியமோ, அவமானமோ, அங்கே "முடியாது" என்ற விதையை ஊன்றும்!
"முடியும்" என்ற விருட்சத்தைப் பிறப்பிலேயோ, வளர்ப்பிலேயோ இயற்கையாய் பெற்றவர்கள் அல்லது பெற்றவர்களால் சூழல் அமையப் பெற்றவர்கள் மட்டுமே
"முடியாது" என்ற விதைகளை ஏற்றுக்கொள்வதே இல்லை!
தாமஸ் ஆல்வா எடிசன் முடியாது என்ற விதையை
ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த விருட்சத்தின் பலன்களை நாம்
அனுபவிக்கிறோம்!
பலவீனமானவர்களை "அச்சச்சோ", "அவ்வளவுதான்", "போச்சா?" என்ற நம் வார்த்தைகள் மேலும் பலவீனமாக்குகிறது!
மதிப்பெண் போனதென்று குழந்தைகள் தற்கொலைச்
செய்து கொள்வதில்லை. இந்தப் பலவீனமான சமூகத்தின், பலவீனமான கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் வீசும் புயல் காற்றில் துவண்டு விழும் கொடி போல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள்! மெல்லிய தளிர்களுக்கு வேலியைப்போன்றும்
கொழுக்கொம்பைப் போன்றவர்களே பெற்றோர்கள். அவை இல்லாத போதோ பலவீனப்படும் போதோ தளிர்கள் மடிகின்றன தற்கொலை என்ற
பெயரில்!
அது இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளி. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தேர்வாகி, அவரவர் விருப்பப் பாடங்களை எடுத்து ஆர்வமாய்ப் பிள்ளைகள் பதினோறாம் வகுப்பில் முதல் நாள் ஒன்றாய் அமர்ந்திருக்கின்றனர்!
45 பேர் எடுத்திருக்கும் 4
விருப்பப்
பாடங்களில் மூன்று வெவ்வேறாய் இருந்தாலும் அந்தப் பள்ளி வரலாற்றில்
ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோரின் விருப்பப் பாடங்களில் ஒன்று கணிதம் என்று
இருக்கிறது. கணித ஆசிரியர் மிகுந்த திறமைசாலி அவரை நம்பியே அத்தனைப்பேரும் கணிதத்தை எடுத்திருந்தனர். ஆசிரியர் ஆச்சரியப்பட்டார்!
மாணவ மாணவியர்க்கு காலை வணக்கம் தெரிவித்து ஒரு வாக்கியம் சொல்லிப் பின் பாடம்
நடத்தினார். மறுநாள் அவர் வகுப்பில் 15 மாணவர்களும் 2 மாணவிகளும் மட்டுமே இருந்தனர். முதல் நாளே பள்ளித் தலைமை ஆசிரியையிடம்
சென்று அவர்கள் கணிதம் அல்லாத வேறு ஒரு விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
ஆசிரியருக்கு அதிர்ச்சி. ஆண்பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார். ‘நீங்கள் மட்டும் ஏன் மாற வில்லை?' 'சார் நான் இன்ஜினியரிங் படிக்கணும், கண்டிப்பா படிக்கணும்னு
அப்பா சொல்லிட்டார்', 'டியூசன் வெச்சுக்கிறோம்' என்று ஆண்கள் சொல்ல, அதே பதிலை ஒரு பெண்ணும் சொல்ல, இன்னொரு பெண் ஒன்றும் சொல்லவில்லை!
பள்ளியில் முதல் மாணவியாக அவள் இருந்த
காரணத்தினால் மிகுந்த பரிவோடு ஆசிரியர் அதே கேள்வியைக் கேட்க, அந்த மாணவியும் சற்றும் தயங்காமல்,
"சார் நேத்து நீங்க மேத்ஸ் ரொம்ப ஃடப் அதனால, திங்க் பண்ணி டிசைட் பண்ண சொன்னீங்க, எல்லாரும் அந்த ஸ்டேட்மென்டையே யோசிச்சு பயந்து போய்ட்டாங்க, பட் நான், நீங்க நேத்து நடத்தின பாடத்தை மட்டும்தான்
யோசிச்சேன். எனக்கு சேப்டரில்
(பாடத்தில்) மட்டும்தான் டவுட் இருக்கு, நோ டவுட் இன் மை
சாய்ஸ் சார்' என்றாள், அதன் பிறகு அந்த ஆசிரியர் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஆசிரியர் போன்று சமூகமும் உறவுகளும்
இருக்கிறது!
பெரும்பான்மையானோர் கட்டாயத்தால் கிடைத்ததைப் பற்றுகின்றனர் சிலர் தோல்வி பயத்தில்
விரக்தி அடைந்து
விலகுகின்றனர். அந்த மாணவியைப் போன்று ஒரு சிலர் மட்டுமே
முடியும் என்ற விருட்சத்தைச் சுமந்து கொண்டு உலகத்தை மாற்றி அமைக்கின்றனர்!
நம்மை எதிர்மறை சிந்தனைக்குத் தள்ளக்கூடிய
நையாண்டிகள் பல உள்ளன. அதில் ஒன்று ஒரு நண்டு ஏற்றுமதி கதை. ஒவ்வொரு நாட்டின் ஏற்றுமதி செய்யத் தயாராக வைக்கப்
பட்டிருந்த நண்டுகள் நிறைந்த
உருளைகளும் மூடப்பட்டிருக்க
இந்தியாவில் இருந்து சென்ற உருளைகள் மட்டும் திறந்திருந்தனவாம், "ஏன்?" என்று ஒருவன் கேட்டபோது "அது இந்திய நண்டுகள், மற்ற நாடுகளின் நண்டுகள் மூடியிடாவிட்டால் மேலே ஏறி தப்பித்து விடும் ஆனால் இவை ஒன்றுக்கொன்று மேலே ஏற விடாமல் அவைகளே தடுத்து விடும்!" என்று
சொன்னானாம்!
நேர்மறையாகக் கிணற்றில் விழுந்த இரு
தவளைகளில் ஒன்று முடியாதென்ற மற்ற தவளைகளின்
கோஷத்தைக் கேட்டு உயிரை விட காது கேட்காத மற்றொரு தவளையோ கோஷங்களில்
வெளிப்பட்ட தவளைகளின் உடல் மொழியை உத்வேகமூட்டும் ஆரவாரமாக எண்ணி முயன்று தப்பித்ததைப்
படித்திருப்பீர்கள்.
நேர்மறை எதிர்மறை என்று இங்கு கதைகளும்
காவியங்களும் கொட்டிக் கிடக்கின்றன, நேர்மறைக்குள் எதிர்மறையும், எதிர்மறைக்குள் நேர்மறையும் காணும் நம் பார்வை சுழலைப் பொறுத்தே
அமைகின்றன!
அது இந்தியப் பெருநகரங்களின் ஒன்றின்
விமான நிலையம். சில வருடங்களுக்கு முன்
லண்டனில் இருந்து
அந்நகரத்தின் மார்க்கமாகச் சென்னை செல்லும் பயணிகளுடன் பல மணி நேரமாக நானும்
வரிசையில் காத்திருக்கிறேன். இந்தி மொழியில் சில அடிமட்ட ஊழியர்களில் முதல் அங்கிருந்த சில அதிகாரிகள் வரை பணத்தின்
மீதே குறியாய் இருந்து பயணிகளிடம் சலசலத்துக் கொண்டிருந்தனர். வரிசையில் நின்றவர்களில் ஒரு வெளிநாட்டுப் பயணியிடம் வெள்ளை உடுப்பில் இருந்த ஓர் அதிகாரி, குரல் உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட, பயணிகளிடையே தேவையில்லாத பீதியும் சலசலப்பும் ஏற்பட்டது. ஜெர்மனி மார்க்கமாக என்னுடன் அதே விமானத்தில் வந்த மூன்று இளைஞர்களின்
பைகளில் இருந்து சில எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை வெளியில் எடுத்து மீண்டும் ஒரு
வாக்குவாதம் தொடங்கியது. ஒரு வழியாய் அவர்கள் நகர்ந்து வர, இளைஞர்கள் தாங்கள் வாங்கிய உபகரணங்களுக்கு டயூட்டி (வரி) கட்டுவதாய்ச்
சொன்னாலும், அதிகாரி வரி எதற்கு லஞ்சம் போதும் என்று சொல்ல, ஒரு வழியாய் அவர்கள் வரி மட்டும் கட்டி மீண்டு வந்ததாய் ஆர்வ மிகுதியால்
கேட்ட என்னிடம் சொல்லி ரசீதைக் காட்டினார்கள்!
இங்கே நேர்மையாய் இருக்க இந்த இளைஞர்கள்
முடியும் என்ற நம்பிக்கையில் போராடி வென்றிருக்கிறார்கள்!
"முடியும்" என்ற தாரக மந்திரத்தை, அந்த விருட்சத்தை எப்படிப்பட்ட மனிதர்கள் அதிகம் சுமக்கிறார்கள் என்பதைப்
பொறுத்தே ஒரு சமூகத்தின் ஏற்ற தாழ்வு அமைகிறது!
இன்றைய சூழலில் பணபலம் கொண்டவர்களும்,
படைபலம்
கொண்டவர்களும், பெரும் மந்தைக்கூட்டம் இந்த மக்கள்
கூட்டம் என்று கருதி ஊழலில் ஈடுபட்டு ஏமாற்ற முடியும், கேள்வி கேட்பவர்களை நசுக்க முடியும் என்று பலமாக நம்பிக்கைக் கொள்ளும்போது, அவர்களை எதிர்க்கொள்ளும்
மனிதர்கள் முடியாதென்ற விதையைச் சுமப்பவர்களாய் இருக்கும்போது பொருளாதாரச் சூழ்நிலை,
வன்முறைக்கான
அச்சம் என்ற காரணிகளில் முடியாதென்று போதிக்கப்பட்டு, நமக்கென என்று வாழ்வது நல்லது என்ற அறிவுரைகளால் உண்மையில் மந்தைக்கூட்டம் போலவே ஆகுவர்!
பலகோடி மக்கள் தொகையின் மனம் எனும் வல்லமையான ஆயுதம் சுனங்கிப்
போகும்போது, பொய்யை மூலதனமாய்
கொள்ளும் மக்கள், பணமும் வன்முறையும் கொண்டு முடியும் என்று நினைப்பதை முடித்துக்
கொள்கிறார்கள். சட்டமும் சமூகமும் கேள்வி கேட்க முடியாமல் முடங்கிப் போகிறது!
“நல்லவர்களிடம் இருக்கும் மனம் எனும் நம்பிக்கை ஆயுதம் கூர் மழுங்கிக் கிடப்பதால் அல்லாதவர்களின் வன்முறை ஆயுதங்கள் உயிர் பெறுகின்றன!"
அன்றைய சூழலில் காந்தி என்ற மனிதர் கண்டறிந்த மனம் எனும் ஆயுதமே முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஆயுதமின்றி போராடச் செய்தது. பல நூறு ஆயுதங்களை மண்டியிடச் செய்தது!
காந்தி, நேதாஜி, வ.ஊ.சி, வல்லபாய் பட்டேல், காமராஜர், அம்பேத்கர் என்று வரிசையாய் தோன்றிய
மனிதர்கள் கொண்ட நம்பிக்கைகளும்,
வழிமுறைகளும் வேறு
வேறு என்றாலும் அனைவருக்கும் பொதுவாய் உறுதியாய் அவர்கள் பதித்தது நம் மனதில் முடியும் என்ற விதையைத்தான். அந்த விதைகளின் பலநூறு விருட்சங்கள், பலகோடி விதைகளைத் தூவி,
நாட்டுச்
சுதந்திரத்திற்கும், கருத்துரிமைச் சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது!
அடால்ப் ஹிட்லர் எந்தத் தீய பழக்கமும் இல்லாத ஒரு சர்வாதிகாரி. முடியும் என்ற விருட்சத்திற்கு அவர் விதையாய் விதைத்தது இன வேறுபாடு எனும் கொடிய வெறி. பலகோடி மனிதர்களை அந்த ஒரு விதை
வேரறுத்தது!
நம்முடைய இந்தியப் பாரம்பரியச் சமூகத்தில் "முடியும்" என்று ஒருவன் சொன்னால்
முதலில் வரும் விமர்சனம்,
"வேலையைப்
பாருடா", "பகலில் கனவு காணாதே", "கொஞ்சம் பூமியில் கண்ணை வெச்சு நட"
என்பது போன்ற வாக்கியங்கள் தான்!
“கையில் ஒரு காலணா இல்லாமல்
வாயில் முழம் போடதே!" என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் கூறி
வந்திருக்கிறார்கள். கனவு காண்பதும், முடியும் என்று நினைப்பதும் அதீத நம்பிக்கையோ ஆணவத்தின் அடையாளமோ அல்ல. தன்னடக்கம் என்பது கனவை மறுப்பதும் அல்ல அது கனவை தீர்க்கமாய்ப் பரிசீலிப்பது!
"நீ என்ன பெரிய புத்திசாலியா", "பொம்பளைப் புள்ளையா லட்சணமா இரு" என்று இன்னப் பிற வசவுகளும் அவ நம்பிக்கைகளும் பெண்கள் எதிர் கொள்ளும் விமர்சனங்கள், கனவு என்பது பொதுவுடைமை,
சில இடங்களில் சூழல் "முடியும்" என்ற விதைகளை நட்டு வைக்கும். சில இடங்களில் விருட்சங்கள் சுயம்புவாய் எழும். நம்முடைய பணி அத்தகைய வளர்ச்சிக்கு சிறு துளி நீராய் இருக்க முடியாவிட்டாலும் வேரில் ஊற்றும் அமிலமாய்
இல்லாதிருத்தலே போதுமானது!
சுயசரிதை எழுதும் மனிதர்கள் கடந்து வந்த
பாதைகள் பலவாய் இருந்தாலும் வெற்றியையும் தோல்வியையும் அவர்தம்
அனுபவமாய் எழுதினாலும் நமக்குரிய செய்தி என்பது அவர்களின் மனதில் சுமந்த விருட்சத்தின் வழி அவர்கள் பயணம்
தொடர்ந்திருக்கிறது என்பதாகும்!
எப்படி உங்கள் விருட்சத்தை வளர்ப்பது
என்று வேண்டுமானால் சுயசரிதைகளைப் படித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்கள் விதைகளை நீங்கள் அங்கே தேடாதீர்கள். உங்களுக்குரிய விதையை நீங்களே தேர்வு செய்ய வேண்டும், நீங்களே பயிரிட வேண்டும்,
நீங்களே நீருற்ற
வேண்டும். நீங்கள்தான் அந்த விருட்சத்தின் நிலம்!
“முடியும்” என்று நம்புகிறேன் என்று நம்பிக்கொண்டே
இருந்தால் மட்டும் விதை முளைக்காது,
உரமிடுதலைப் போலத்
திட்டமிட வேண்டும். நீருற்றுதலைப் போலச் செயல்படுத்த வேண்டும். நாளை செய்கிறேன் என்று நீங்கள் முடிவு செய்யும் ஒன்றை அந்த நாளில் செய்ய
வேண்டும், அந்த நாள் என்பது முடிவை மற்றுமொரு
நாளுக்குத் தள்ளிபோடும் நாளாகத் தொடர்ந்தால் விதை காலப் போக்கில் பட்டுப் போகும்!
விதையை ஊன்ற நீங்க முடிவு செய்துவிட்டால், உங்கள் உயரம் ஐந்தடி ஆறங்குலம் என்று உங்கள் விருட்சத்தை ஐந்தடிக்குள், உங்களின் வரம்புக்குள் கட்டி வைத்து உயரத்தை அளந்து வளர்க்காதீர்கள்!
நீங்கள் எத்தனையடி உயரம் இருந்தாலும், எந்தப் பொருளாதாரச் சூழ்நிலையில் இருந்தாலும், எந்தப் பாலினத்தவராய் இருந்தாலும், உங்கள் விதைகளின் வளர்ச்சி உங்கள் மனத்தின் பலத்தைப் பொறுத்து அமைகிறது அது வரம் தரும் விருட்சமாய் வளரட்டும்! உங்கள் எல்லைகள் விரிவடையட்டும்.
நன்றி, அகல் மின்னிதழ், பிப்ரவரி 2016
No comments:
Post a Comment