Thursday, 16 November 2017

நோஞ்சான்_மனங்கள்!





"என்ன மாதிரி பையன்கள் பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" "நீ விரும்புறவனை விட உன்னை விரும்புறவனைக் கட்டிக்கோ" "பொண்ணுன்னா அடக்கம் வேணும்" இந்த வசனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒன்று ஏழ்மை, சரியான கல்வியில்லாமை, திரைப்படங்களைப் பார்த்து, தம் ஆதர்ச ஹீரோவை போன்ற "ஆணாதிக்க" திமிர்த்தனமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொன்று அளவுக்கதிகமான பணம், சுதந்திரம், பெற்றோர்களின் கவனிப்பு, கண்டிப்பு இல்லாத இளைஞர்கள், தான் நினைக்கும் எதுவும் தனக்கே கிடைத்திட வேண்டும் என்ற மனநிலை, இன்னொரு பக்கம், எது சரியாய் இருந்தாலும், பள்ளியிலும் கல்வியிலும், இதுபோன்ற பிள்ளைகளின் நட்பில் வழித்தவரும் பிள்ளைகள், சந்தோஷமாய் இருந்தாலும், துக்கமாய் இருந்தாலும், "வா மச்சி சரக்கடிக்கலாம்" இதுவே பொதுவில் அவர்களின் கொண்டாட்டமாய் இருக்கிறது, சரக்கில் ஆரம்பித்து, பின் மெதுவே வன்புணர்ச்சி, கட்டாயக் காதல், கொலை, விபத்து என்று முடிகிறது!

சில ஆண்டுகள் மணவாழ்க்கையில் காதலித்து மணந்த கணவன், குடியை விடாமல், தொடர்ந்து தன்னை துன்புறுத்தியதால், ராசிபுரத்தில் தன் நாலுவயது மகனுடன் பெண் தற்கொலைச் செய்துகொண்ட செய்தி படித்தேன், இப்போது அந்த அப்பன் என்ன செய்துக்கொண்டிருப்பான், ஒருவேளை மனசாட்சி உறுத்தினால் சிலநாட்கள் அழுது, பின் இந்தத் துக்கத்தை மறக்க என்று அதற்காகவும் குடித்துக்கொண்டிருப்பான், பின் வேறொரு பெண்ணை மணந்துக்கொண்டு இதையே தொடர்கதையாகச் செய்வான்!

ஓர் ஆணின் காதலை பெண் மறுப்பதை, ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே திரைப்படங்கள் அமைகின்றன, ஆணின் எல்லாக் கொண்டாட்டங்களுக்கு மதுவும், மாதுவும் தான் வேண்டும் எனும் கருத்தையே அவைகள் தூக்கிப்பிடிக்கின்றன, "ஆம்பளை டா" என்று சின்ன வயதில் தலையில் தூக்கி வைத்துச் செல்லம் கொஞ்சுவதில் ஆரம்பித்து, "மச்சி நீ ஆம்பளைடா" என்று உறவும் நட்பும் கொம்பு சீவுவதில் தொடர்ந்து இந்த "தோல்வியை" ஏற்றுக்கொள்ளாத மனநிலை தொடர்கிறது! அதுவும் கல்வியில் தோற்றால் கவலையில்லை, தொழிலில் தோற்றால் கவலையில்லை, எதில் தோற்றாலும் "குடி" இருக்கிறது, பெண்ணிடம் தோற்றால் மட்டும் அவளைப் பொம்மையைப் போல் பாவித்து, தன் உணர்வும், காதலும் பெரிதென்று அவளைக் கொல்லும் நிலைக்குச் செல்கிறது இந்த ஆம்பளை என்று சமூகம் வளர்த்துவிடும் மனோபாவம்!

அதிலும் பெண் துணிந்து காதலைச் சொல்லிவிடக்கூடாது,ஆணை விரும்பி அவனிடம் காதலைச் சொல்லத்துணியும் பெண்களைப் பெரும்பாலான திரைப்படங்கள் எப்படிக் காட்டுகிறது என்று யோசித்துப்பாருங்கள், ஒன்று அந்தப்பெண் கருப்பாய், பின்னல் தூக்கிக்கொண்டு, பற்கள் முன்னால் துருத்திக்கொண்டு, அல்லது அவளின் காதல் காமத்தில் மட்டுமே வருவதாகச் சித்தரிக்கப்பட்டுத் தான் வரும், இதில் உங்கள் சூப்பர் ஸ்டார் முதல் சில்வர் ஸ்டார் வரை விதிவிலக்கில்லை, அறுபதைக் கடந்தும் இன்னமும் தனக்குக் குழந்தையாக நடித்த பெண்களையும் கூடக் கதாநாயகிகளாக்கி ஓடும் முதிய இளைஞர்களின் படங்களில் கூடப் பெண்களின் சித்தரிப்புத் தரம் தாழ்ந்த இருக்கிறது! இதிலும் கருப்பான பெண், பற்கள் தூக்கியிருக்கும் பெண் எல்லாம் காதலிக்கக் கூடாதா என்ன? அது எப்படிப்பட்ட வக்கிரம், எப்படிப்பட்ட வக்கிரத்தை, பெண்ணினத்தின் மேல் கட்டமைக்கிறார்கள்? அதே ஹீரோ பார்க்க சகிக்காமல் இருந்தாலும், விக் வைத்துக்கொண்டு, நோஞ்சானாய்த் தெரிந்தாலும் கூட, அவர்களும் இதுபோன்ற பெண்களைக் கண்டாலே கிண்டலடிப்பது போலச் சித்தரித்திருப்பார்கள்.

எப்படிப்பட்ட உருவமும், ஒழுக்கமும், பொருளாதார மற்றும் கல்வி நிலை கொண்ட எந்த ஆணாய் இருந்தாலும், அவனுக்குப் பிடித்துவிட்டால் பெண்ணுக்குப் பிடிக்க வேண்டும், அவள் "நோ" என்றால் அது ஏன் அவள் விருப்பமாய் மதிக்கப்படாமல் ஆணின் தன்மான பிரச்சனையாக மாற்றப்படுகிறது?

அதிலும் "முடியாது" என்று சொல்லிவிட்டால், முதலில் பெண்ணின் ஒழுக்கம் கொச்சைப்படுத்தப்படுகிறது, "ச்சீ அந்தப் பழம் புளிக்கும்" என்பது போல, மார்பிங் செய்வது, கொச்சையாய் பேசுவது, சித்தரிப்பது எல்லாம் செய்வார்கள் பலகீனமான ஆண்கள்.
"முடியாது" என்றால் முடியாதுதான், அது என்னடா பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும், கருமம் உன்னைப் பிடிக்காது என்றால் பிடிக்காதுதான்" என்று ஏன் எந்தப் பெண்ணையும் நீங்கள் திரையில் சொல்ல விடுவதில்லை? நிதர்சனத்தில் வாழவிடுவதில்லை?

ஆட்டோ க்ராப் படம் பார்த்த உங்களுக்குப் பெண்ணின் ஆட்டோ க்ராப் படத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பதே சந்தேகம்தான், பெண்ணின் ஆட்டோ க்ராப் போன்ற படத்தையேனும் விமர்சனம் இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆண் பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம், நானும் எத்தனையோ பட விமர்சனங்களைக் கடக்கிறேன், பெரும்பாலும் எந்தப் படங்களையும் நான் பார்ப்பது கிடையாது, எனினும் எப்படிப்பட்ட கதையெனினும், "பெண்ணின்" கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், ஒழுக்கமும் பேசப்படுகிறது, ஏன் உங்களால் ஆணின் ஒழுக்கத்தை வரையறுக்க முடியவில்லை?

சட்டையில்லாமல் ஆண் திரிந்தால் பரவாயில்லை, குடித்துவிட்டு ஆண் திரிந்தால் பரவாயில்லை, ஒரு பெண்ணின் காதலை ஆண் மறுத்தால் பரவாயில்லை, ஒருத்தியை திருமணம் செய்வதாய் வாக்களித்து ஆண் ஏமாற்றினால் பரவாயில்லை, மனைவி இறந்ததும் மறுநாளே ஆண் மறுமணம் செய்தால் பரவாயில்லை, ஊதாரியாய் உழைப்பின்றித் திரிந்தால் பரவாயில்லை, வேளைக்கு ஒருத்தியை காதலித்தால் பரவாயில்லை, ஊருக்கு ஒருத்தியை கல்யாணம் செய்தால் பரவாயில்லை, ஆட்டோகிராப் கள் வந்தால் பரவாயில்லை, இதில் ஒன்றை பெண் செய்தால், அந்தப் பெண்ணை, அவள் குடும்பத்தை எத்தனை கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப்படுத்துவீர்கள்!

ஒழுக்க விதிகளை இருவருக்கும் பொதுவில் வைக்காமல், பெண்ணுக்குக் கோட்பாடுகள் விதிக்கும் இந்தச் சமூகத்தில் சுவாதிகள், நவீனாக்கள், விநோதினிகள், சுப்ரஜாக்கள், ஹாசினிகள், விஷ்ணுப்ரியாக்கள், இன்னமும் பெயர் தெரியாத அனாமிக்காக்கள் என்று விதவிதமாய்ப் பெண்கள் சீண்டப்பட்டுக் கொல்லப்படுவார்கள், கடுமையான சட்டத்தை இயற்றாத, செயலாற்றாத, ஆண் பிள்ளைகளை வழிபடுத்ததா இந்தச் சமூகமும், சட்டங்களும், ஆட்சியாளர்களும், விதைத்ததை ஒருநாள் அறுவடை செய்வார்கள், அப்போது இங்கே மாற்றம் ஏற்படலாம்!

அப்படியேதான் இருக்கிறது

ஒரு திரைப்படத்தால்
அரசியல் கொதிக்கிறது
ஒரு திரைப்படத்தால்
கலாச்சாரம் பொங்குகிறது
ஒரு திரைப்படத்தால்
கட்சிகள் ஆக்ரோஷமடைகிறது
ஒரு திரைப்படத்தால்
மதங்கள் கலவரங்கள்
செய்கிறது
விடியலில் தொடங்கி
பொழுது சாயும்வரையில்
எத்தனைப் பார்த்தாலும்
சமுதாயம் என்னவோ
அப்படியேதான் இருக்கிறது
ஒருவேளை திரைப்படங்களை
பார்க்காததால்
வந்த விளைவோ?! 🤔

போராட்டம் சூழ் உலகு

Image may contain: 1 person, swimming

விழுந்த ஒவ்வொரு
கல்லிலும்
ஒருத்தி மூழ்கிப்போனாள்
விழுந்த ஒவ்வொரு
கல்லையும்
படிக்கட்டுக்களாக்கி
ஒருத்தி நீர்மேலெழும்பி
மூச்சுவிட்டாள்
எல்லா களத்திலும்
முயல்பவளே
மூச்சுவிடுகிறாள்
போதுமென்பவள்
முடிந்து போகிறாள்
போராட்டம் சூழ்
உலகில்!

லயிப்பு

Image may contain: sky, bird, nature and outdoor

கூண்டிலிருந்து
விடுபட்ட பறவையின்
இறகொன்று
நெடுநேரம்
காற்றில்
மிதந்துக்கொண்டிருந்தது!

#லயிப்பு

வெற்று விளம்பரம்

இரண்டு நாட்களுக்கு முன்பு லஸ்ஸிருந்து மந்தைவெளி சிக்னலை அடைய முக்கால்மணிநேரமும், அங்கிருந்து சிக்னலுக்காக அரைமணிநேரமும் காத்திருக்க வேண்டியிருந்தது, சிக்னலை கடக்க நேரமும் இடமும் கிடைத்தப்போது, அங்கே காவல்துறைக்குப் பதில் பொதுமக்களில் இருவர் போக்குவரத்தைச் சீர்செய்துக் கொண்டிருந்தார்கள், நேரே போக முடியாது, "லெப்ட்டுக்கா போங்க" என்று விடாப்பிடியாய் திருப்பிவிட, அங்கிருந்து இடதுபுறம் சென்று, செட்டிநாடு பள்ளிக்கடக்க மீண்டும் ஒரு மணிநேரம் ஆனது, அட என்னதான் ஆச்சு இன்னைக்கு என்று சிக்கித்திணறி வாகனத்தில் நீந்த, சற்றுத்தொலைவில் பல்லவன் ஒன்று ப்ரேக் டவுனாகி நின்றிருந்தது, அதையும் தாண்டி இயல் இசைக்கல்லூரியைக் கடக்க மீண்டும் அரைமணிநேரமானது, அந்த நெரிசலிலும், புகையிலும், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வரும்போல் தோன்ற, எங்கேயும் வாகனத்தை ஓரம் கட்டவும் முடியாமல் மேலும் முன்னேற, ஒரு வழியாய் அந்தக்காட்சி கண்ணில் பட்டது, எம்ஜிஆர் கல்லூரிக்கு முன்பு சாலைப் பழுதுப்பட்டிருக்க, காவல்துறை, சில ஆட்களைக் கொண்டு பள்ளங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர், காவல்துறை அதிகாரிகள் சிலர் குனிந்து செப்பனிட்ட பாதையை தொட்டுப்பார்க்க மும்முரமாக ஒருவர் (அதேத்துறையைச் சார்ந்தவர்) அதை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார், இதே போல வேறொரு இடத்திலும் காவல்துறை, ஆட்களை வைத்து சாலையைச் சீர்செய்ய அதையும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர், ஏற்கனவே "மழையில் சாலையைச் சீர்செய்த காவல்துறை" என்ற புகைப்படத்தைக் வாட்ஸ் ஆப்பிலும் ஃபேஸ்புக்கிலும் கண்டது நினைவுக்கு வந்தது! 

எந்தத்துறையாய் இருந்தாலும் மனிதர்கள்தானே, புகழை விரும்பாத மனிதரில்லை, எனினும் இதுபோல் அசாதரண வேலைகளை செய்யும் காவல்துறையை பாராட்டும் வேளையில், தம் துறைச்சார்ந்த கடமையை சரியாக செய்தாலே, (அதாவது ஒரு சாதாரணனைக்கூட பயமில்லாமல் காவல்துறையை நம்பிக்கையுடன் நாடச்செய்யும் அளவுக்கு) பெரும் அசாதாரண பெருமை காவல்துறைக்கு வந்து சேருமே என்ற எண்ணம் எழுந்தது!

முதல்வர் வருகிறார், பிரதமர் வருகிறார் எனும்போது மொத்த போக்குவரத்து காவல்துறையும் தெருவில் நிற்கிறது, ஓட்டுப்போட்ட பொதுஜனம் எத்தனை நெரிசலில் சிக்கினாலும், பெரும்பாலான நேரங்களில் அதை சரிசெய்வது அதே பொதுஜனமே, போக்குவரத்துத்துறை இல்லை! பல வருடங்களாக இராயப்பேட்டை சிக்னல் இயங்குவதில்லை, அப்படியே சரிசெய்யப்பட்டாலும் அது நிலைப்பதில்லை, பெரும்பாலான நேரங்களில் காவல்துறையும் இல்லை, இதுபோல சாலைகள் சென்னையில் ஏராளம்!
சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள், விதிகளைப் புறந்தள்ளி மிதிக்கும் மக்கள் கூட்டம், நேரத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சில விதிமீறல்களை மட்டும் பாய்ந்து பிடிக்கும் காவல்துறை!

எது எப்படியோ வெற்று புகழ் விரும்பும் அரசியல்வாதிகளைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கும் துறை, உண்மையில் மக்களின் துறையாக மாறினால் அதை நிச்சயம் உலகெங்கும் பரப்பிக் கொண்டாடுவோம்!

பூமி

சில நேரங்களில் சில நாய்களுக்கும், பூனைகளுக்கும் இரக்கப்படும்போது, "மனுஷனுக்கே ஒன்னுமில்ல, இதுங்களுக்கு இரக்கப்பட்டு என்னவாகப் போகுது?" என்ற விட்டேத்தியான பதில்களை கடந்ததுண்டு, மாட்டுக்கறி பிரச்சனை வந்தபோது, உணவு என்ற அடிப்படையை மீறி, வீம்புக்காக, சில மனிதர்கள் மாடுகளை, கன்றுகளை வெட்டிய செய்திகளைக் கடந்ததுண்டு! மனிதர்களையும் கூட சிலமனிதர்கள் சாதிய அடிப்படையில் மிருகங்களைப் போல நடத்துவதும், கொல்வதும் உண்டு, உண்மையில் யோசித்துப் பார்த்தால் இந்த உலகம் மனிதர்களுக்கானதல்ல, இது பிற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனவைகளுக்கும், நீந்துபவைக்குமானது!
இந்த உலகத்தின் இயக்கம், பிற உயிர்கள் அழிந்துப்போனால் நின்றுபோகும், மனித உயிர்கள் அழிந்துப்போனால் இந்தப் பூமிக்கு கேடு வராது, ஏனேனில் மனித உயிரினத்தைப் போன்று எந்த உயிரினமும் வாழும் பூமிக்கு கேடு விளைவித்ததில்லை, மனித இனத்தைப் போன்று கண்மூடித்தனமாக உணவுச்
சங்கிலியை அழித்ததில்லை, ஆதலால் இந்த உலகம் பிற உயிர்களால் இயங்குகிறது, உணவுச்சங்கிலியை மதித்து, உயிர்களை வாழவிட வேண்டும், உணவு தவிர்த்து, அலங்காரத்துக்காகவும், அழகுக்காகவும், வீம்புக்காகவும் அதை வெறிப்பிடித்த மனிதர்களாய் வேட்டையாடுதல் தவிர்த்து வாழ்ந்தால், இந்தப்பூமி இன்னும் பல தலைமுறைகளுக்கு மிச்சமிருக்கும்!
#பூமி #Earth

த்தூஊஊஊஊ_வென_தூவும்_மழை

No automatic alt text available.


இந்தத் தேசத்தில்
மக்கள்
தண்ணீரில் மூழ்கி
மடிகிறார்கள்
வறட்சியில் வாடி
மறைகிறார்கள்

சில்லறை கடன்களுக்காக
வங்கியின் பிடியில்
சாகிறார்கள்
விவசாயத்தை நம்பி
மண்ணில்
சாய்கிறார்கள்

மேடு பள்ளங்களான
சாலைகளில்
சிக்கி உடல்
சிதறுகிறார்கள்
கந்து வட்டிக்கொடுமையால்
தீக்குளித்து
எரிகிறார்கள்

கல்விக்கனவு கலைந்து
தூக்கில் தொங்குகிறார்கள்
பேருந்து ஓட்டையில்
மின்தூக்கியில்
நீச்சல் குளத்தில்
ஆழ்துளை கிணறுகளில்
டெங்கு காய்ச்சலில்
பிள்ளைகள்
பலியிடப்படுகிறார்கள்
கட்டிடங்கள் இடிந்து
சமாதியாடைகிறார்கள்

விசாரணை கைதிகளாக
சாமன்யர்கள்
மாண்டுபோகிறார்கள்
சிறைச்சாலைகளை
ஊழல் குற்றவாளிகள்
ஏமாற்றித் திரிகிறார்கள்

போலி மருந்துகளில்
உயிர் துறக்கிறார்கள்
கலப்பட உணவில்
கண்மூடுகிறார்கள்
சாதிமத பூசல்களில்
மண்டையுடைக்கப்படுகிறார்கள்

எதிர்த்துப்பேசுபவர்கள்
காணாமல் போகிறார்கள்
பிள்ளைகளும் பெண்களும்
புணரப்படுகிறார்கள்

யாரோ குழந்தைகள்
தெருவில்
பிச்சைக்காரர்களாக்கப்படுகிறார்கள்
சாராயக்கடைகளில்
பல அப்பன்கள்
சாந்தியடைகிறார்கள்
கொத்தடிமைகள்
நகரெங்கும் விரவிக்கிடக்கிறார்கள்

உழைத்தப்பணம் மாற்ற
வங்கியின் வாசலில்
ஏழைகள் சுருண்டுவிழுகிறார்கள்
கோடியில் கொள்றையடித்தவனின்
கணக்குகளை கைகழுவுகிறார்கள்

இத்தனையும்
நிகழும் நாட்டில்
வெள்ளைவேட்டிகளும்
அதிகாரச்சீருடைகளும்
குர்தாக்களும் பைஜாமக்களும்
கொஞ்சமும் கூச்சக்கறையின்றி
பற்களைக் காட்டிக்கொண்டு
வீதியுலா வருகிறது
"கர்ர் த்தூஊஊஊஊ"
என்று பெருமழை
ஆர்ப்பரிக்கிறது!

கீச்சுக்கள்

பல காலம் களத்தில் போராடிய
டிராபிக் #ராமசாமிகளைவிட
#திரையில் போராடிய நாயகர்களே
நாட்டுக்கு நம்பிக்கை நாயகர்களாக
தெரிவது
தமிழகத்தின் சாபம்!

---------------

ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை ஒப்படைத்துவிட்டு, ஆட்டிக்குட்டியிடம் நலம் விசாரிக்கும் உலகம்! 
-------------

பிறரின் துயரங்கள் எல்லாமும் வெறும் காட்சிகள்தான் பார்வையாளர்களுக்கு, அந்தப் பார்வையாளர்களாக உறவுகளும், நட்புகளும் அமைந்துவிடும்போது, அதுவே ஆறாத துயரமாகலாம், எனினும் மரணம் வரை வாழ்ந்து கடக்க முடிவெடுத்துவிட்டால், நம்முடைய துயரங்களுக்கு நாமும் கூட பார்வையாளராக மாறிவிடலாம்!
--------------

டிடிவி தினகரன் முக்கியமான செய்தி சொல்லியிருக்கிறார், "இந்த ஊழல், ரெய்டு, அமலாக்க நடவடிக்கை இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம், என்ன செய்ய முடியும், தூக்குலயா போடுவாங்க?" இப்படி நீள்கிறது வசனம், பட்டவர்த்தனமான உண்மை, மக்கள் பணத்தைச்
சுரண்டி, ஆட்சி அலங்கோலங்கள் செய்து, ஊழல் செய்து, மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டி, உயிர்களைக்கொன்று, இன்னும் எத்தனையோ கொடுமைகளை கட்சிகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்தாலும், எதற்காகவும் எந்த ஒரு அரசியல்வாதியும், அதிகாரியும் உடனடியாக தண்டிக்கப்படவில்லை, தூக்குமேடைக்கு அனுப்படவில்லை, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை, அதிகாரம், ஆட்சியில் நிரந்தர தடை பெற்றதில்லை, நாடு கடத்தப்பட்டதும் கூட இல்லை, இத்தனை இல்லைகள் இருக்கும்போது, ரெய்டுகளும், வழக்குகளும், எந்தவொரு அரசியல்வாதியையும் எதுவும் செய்திடப்போவதில்லை, இதில் சட்டமாற்றம் ஏற்படும் வரை, கில்லித்தண்டு விளையாட்டுதான் ரெய்டுகள் என்னும் கண்ணாமூச்சிகள்!
அவர்கள் விளையாடுகிறார்கள், நாம் வேடிக்கைப்பார்க்கிறோம்!
-----------

ஜல்லிக்கட்டுக்கு, நீட் டை நீக்குவதற்கு, மழைநீர் வடிகாலுக்கு, காவிரி மேலாண்மைக்கு, கூடங்குளத்துக்கு, மீத்தேன் தடைகளுக்கு என எதற்கும் போராடாமல், சாராயக் கடைகளை நெடுஞ்சாலைகளில் திறக்க போராடும் ஓர் அரசை, போராடி வெற்றிப்பெற்ற ஓர் அரசை இந்தத் தலைமுறை பெற்றிருக்கிறது!
இனி விளிம்பு நிலையில் உள்ள பிள்ளைகளின் கல்விக்கனவுகள், நாள்தோறும் குடிகார அப்பன்களிடம் மிதிப்பட்டு, கூலிவேலை செய்து பள்ளிக்கு அனுப்பும் அம்மைகளை பொறுத்தே எப்போதும் போல தொடரும், அல்லது தேயும், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் இன்னமும் அதிகரிக்கும்!
குடிக்கொடுத்து, மக்களின் வாழ்க்கையை அழித்தே தீருவோம் என்பதுதான் தமிழகத்தின் குடியாட்சி! வாழ்க "குடி" மக்கள், வாழ்க "குடி"யரசு!
--------------

பாரத் மாதா கீ ஜெ என்றும், தேசிய கீதத்துக்கு திரையரங்குகளில் எழுந்து நின்றும், சீனப்பொருட்களை தவிர்த்தும் 120 கோடி இந்திய ஜனத்தொகை தேசப்பற்றை காட்டுவதை விட, பாரளுமன்றத்தில் உள்ள அந்த 250 ம், 545 ம், அந்தந்த மாநில சட்டமன்றங்களில் உள்ள "எண்களும்" குறைந்தபட்ச தேசப்பற்றை மனதில் உணர்ந்தாலே இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்!

ஏழை உயிர்

போகும் உயிர்
அத்தனையும்
ஏழை உயிர் என்பதால்
மாற்றம் ஆமையாய்
நடைபயில்கிறது!

பிச்சை

#அணுக்கதை
அந்த இராயப்பேட்டை சிக்னலில், விபத்தில் கையிழந்த தன் தந்தை பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தியதை, அந்தச் சிறுவன் அவமானமாய் கருதினான், சத்துணவு சோறு இல்லையெனினும் கல்விக்காக பள்ளிக்கூடம் சென்று படித்து, தட்டுத்தடுமாறி பள்ளிக்கல்வி முடித்தவன், அப்பனின் பிச்சைத்தடுத்து, ஒரு சிறுமுதலில், பலகாரக்கடையொன்றை ஆரம்பிக்க, அங்கே சில வெள்ளை வேட்டிகளும், படித்து பணிக்கு வந்த காக்கிகளும், அவனிடம் வந்து இலவச பிச்சைக் கேட்டது, பிச்சை என்பது அழுக்குடையில் மட்டுமல்ல, மாசடைந்த மனதிலுமுண்டு என்று உணர்ந்துக்கொண்டான்!
#பிச்சை

வாய்க்கரிசியிடும் ஆட்சி

மழைப்பெயரைச் சொல்லி
ஒதுக்கப்படும் நிதியெல்லாம்
எங்கோ கரை ஒதுங்குகின்றது
வருடா வருடம்
பிஸ்கெட்டில் மகிழும்
மக்களுக்கு
வாய்க்கரிசியிடும்
ஆட்சிதானே
வரம்?!

காணும் தூரம்தான்

காணா தூரம்
இருந்தாலும்
காணும்
தூரம்தான்
மனதில்
காதலுக்கு!

கீச்சுக்கள்

"இந்தியா போன்ற நாட்டில் ஊழலை ஒழிக்கமுடியாது, 120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் மாற்றம் சாத்தியமில்லை", இதெல்லாம் கேட்க கிடைக்கும் கூற்றுக்கள், யோசித்துப்பார்க்கிறேன், மக்கள் தொகையில் முப்பது கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியா, பிரிட்டிஷின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது, வேலூர் புரட்சித்தொடங்கி, ஜாலியன் வாலாபாக் படுகொலை வரை முப்பது கோடி ஜனத்தொகை பீரங்கிகளுக்கு எப்படி பதில் சொல்லும் என்று யோசித்து வியாக்கியனங்கள் பேசவில்லை, எனினும் முப்பது கோடியில் மக்கள் தொகையாக இருந்த இந்தியா, இன்று 120 கோடியில் புழுக்களின் தொகையாக மாறியிருப்பதால், ஊழலை ஒழிக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்புகிறது! எதை விரும்புகிறோமோ அதை நம்புகிறோம், எதை நம்புகிறமோ, அது நடக்கிறது! மாற்றத்தை சர்வ நிச்சயமாக விரும்பி, நம்பும்போது, இந்தியா போன்ற நாடு, மனிதர்களின் நாடாக மாறும்!
--------------

பெரும்பான்மையான வட இந்தியர்கள் அபார தேசியமொழிப்பற்றுடையவர்கள், அவர்கள் ஆங்கிலத்தைக் கூட இந்தியில்தான் பேசுகிறார்கள்! 😜
---------------

பெரிய ஐடி நிறுவனங்களுக்கு தமிழகம் நிலம் தந்து, வளம் தந்து, குறிப்பிட்ட காலம் வருமான வரி விலக்கு தந்து, வேலை வாய்ப்பு பெருக்குவதாய் நினைத்துக்கொள்ள, நிறுவனங்களோ 90% சதவீதம் வட இந்தியர்களை பணிக்கமர்த்தும், எங்கு திரும்பினாலும் வந்தாரை மட்டுமே வாழ வைக்கிறது தமிழகம்!
----------------
எங்கும்
எதிலும்
எப்போதும்
எவனோ / எவளோ -வின்
கேள்வி தீக்குச்சியில்
மட்டுமே
எந்தவொரு மாற்றமும்
பிறக்கிறது!

--------------------

ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது, ஒவ்வொரு வருடமும் மழைநீர் மேலாண்மையில் பணிகள் செய்தோம் என்று பொய்கள் சொல்லப்படுகிறது, ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது, ஒருநாள் இரண்டுநாள் அரசு இயந்திரம் மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சையிடுகிறது! பிஸ்கெட்டுக்கு ஒரு நிதி, பிரட்டுக்கு ஒரு நிதி என்று கணக்கெழுதிவிட்டுச் செல்லும் அரசிடம், மழைமேலாண்மை நிதி பற்றி யாரும் கேட்டுவிடக்கூடாது, மழையில் இறங்கி நடந்து வந்து பிஸ்கெட் தருவதே பெரிது என்பார்கள் சாதிச்சார்பு, கட்சிசார்பு சென்ட்ராயன்ஸ்!
"ஏ தாழ்ந்த தமிழகமே!" நூல் நினைவுக்கு வருகிறது!

சென்னை

சில நாட்களில்
பாலைவனமாகவும்
சில நாட்களில்
தனித்தீவாகவும்
சில நாட்களில்
இளவேனில்
சோலையாகவும்
நீ காட்சித்தருகிறாய்
யாரோ வருகிறார்கள்
யாரோ பழிக்கிறார்கள்
யாரோ வீழ்த்துகிறார்கள்
யாரோ வாழ்த்துகிறார்கள்
நீ சலனமில்லாமலிருக்கிறாய்
உன்னில்
காய்தலும்
வாழ்தலும் போல
மூழ்குதலும் நலமே
சென்னை நகரமே
பிறந்த மண்ணும்
தாய்தான் அன்றோ
உனைப்பிரிதலும்
துயர்தான் அன்றோ?!

இந்திய_மக்களும்_சோதனைக்கூட_எலிகளும்

Image may contain: one or more people

 ஸ்பெயினில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியால் உடலில் பயங்கரமான மாறுதல்கள் ஏற்பட்டு ஒருவர் மரணம், அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியால் என்றும், அதில் இருந்த மருந்து எதிர்ப்பணுக்கள், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்! நம் நாட்டில் என்றோ இதை விவசாயிகளும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூட கணித்துவிட்டிருக்கலாம், இருந்தாலும் உணவுத்துறையில், மருத்துவத்துறையில் விளையாடும் பெரும் அரசியல் இந்த உண்மைகளை மூடி மறைக்கிறது, மறுக்கிறது!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கேவிண்டிஷ் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படும்போது, அது ஏன் விற்கப்படுகிறது? சீனப் பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு, அதை இறக்குமதி செய்வதற்கு எந்த தடையுமில்லாததை போலவே இதுவும்!

பெருகி வரும் மக்கள் தொகையை காரணம் காட்டி இரசாயன உரங்களைக் கொண்டு விளைச்சலை அதிகப்படுத்தி வியாதிகளையும் அதிகப்படுத்தினர், பின் மருந்துகளை புதிதுப்புதிதாக அறிமுகப்படுத்தினர், பின் மருத்துவமனைகளை, பின் மருத்துவத்தை ஒரு கவர்ச்சியான பணம் செய்யும் துறையாக மாற்றினர், பின் உயிர்களை காப்பாற்றத் துடிக்கும் எளியவர்கள் தேர்ந்தெடுத்தத் துறையை, அவர்களின் வரவை குலைக்கும் விதமாக நீட் என்ற தேர்வை நுழைத்து, மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்!

பற்பசையில் பழைய முறையை பழித்து, பின் அதையே கலந்து இயற்கை பற்பசை என்று ஆரம்பித்து, கடலையெண்ணையில் கைவைத்து, ரீபைண்ட் எண்ணெய் என்று அறிமுகப்படுத்தி, இப்போது செக்கு எண்ணெய் என்று அதையே சந்தைப்படுத்தி, கேழ்வரகை பழித்து, பின் அதையே ஃப்ளேக்ஸ் என்று அறிமுகப்படுத்தி, ஓட்ஸை முதன்மைப்படுத்தி, மஞ்சளை அழகுக்கு எதிரானதாக முரண்படுத்தி, அதையே க்ரீம்களாக கொண்டு வந்து, இப்படி இயற்கைக்கு முரணாக ஒவ்வொன்றையும் செய்து, இறுதியில் தோற்றுக்கொண்டிருக்கிறோம், வேர்க்கடலைக்கு
பின்னே இருந்த பன்னாட்டு வியாபரத்தைப்போல ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஏதோ ஒரு விஞ்ஞானியின் ஆர்வக்கோளாறும், சுயநலமும், பன்னாட்டு அரசியல் அழுத்தமும் இருந்துக்கொண்டே வந்திருக்கிறது!

உணவுதான் இப்படியென்றால் மருந்துகள் எப்படி? ஒரு ஆங்கில மருந்து, சந்தையில் கண்டுப்பிடித்தவுடனே வந்துவிடுவதில்லை, அது பல்வேறு சோதனைகளைக் கடந்து, அரசாங்க அனுமதிப்பெற்று, எல்லாவற்றையும் கடந்து (கவனித்துவிட்டு?!) வருகிறது, அப்படி வந்து, அறிமுகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து பின் திடீரென அது அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது, பின் சிலநாளில்/மாதங்களில் விற்பனைக்கு வருகிறது, ஏன்? முதலில் அனுமதிக்கொடுத்தது அரசாங்கத்தில் விஞ்ஞானிகள் பற்றாக்குறையாலா? (நம் தமிழ்நாட்டு மந்திரிசபையில் இல்லாத விஞ்ஞானிகளாக?!) பின் தடைசெய்தது வரவேண்டிய நிதி பற்றாக்குறையாலா? மருந்தே தவறென்றால், அதனால் எத்தனை உயிர்கள் போனது, அதற்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை??

விவசாயத்துக்காக போராடும் விவசாயிகளே மரபணு மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு என்ன காரணம்? ஒன்று அறியாமை இல்லையென்றால் பேராசை, இல்லையென்றால் அழுத்தம்!

உயிர்காக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவத்தை வியாபாரமாக்கியது ஏன், அதுவும் அரசியல் மற்றும் வியாபார அழுத்தம்தான்!

காய்களை, கனிகளை, உணவுச்சங்கிலியை, நிலப்பரப்பை, இயற்கைச்சார்ந்த உணவுப்பழக்கத்தை, வீட்டைப்பேணும், உடல்நலத்தை பேணும் நடைமுறையை என எல்லாவற்றையும் நம் இயற்கைச் சரியாகவே வைத்திருந்தது, உலக மயமாக்கலில், இன்னமும் கல்வியை எல்லோருக்கும் பொதுவுடைமைச் சொத்தாக மாற்றாத அரசால், இன்னமும் தங்கள் சக்தியை உணராத மக்களால், எதற்கு ஒன்றுதிரண்டாலும், சாதி என்னும் புள்ளியில் சிதறிவிடும் கூட்டத்தால், அதைச் சரியாக புரிந்துகொண்டு அரசியலாக்கி, மக்களை பிரித்து வைத்து, மருந்துகளிலும், உணவுகளிலும் கலப்படம் செய்ய, மரபணு மாற்றம் செய்ய, குழந்தைகளிடம், ஏழைகளிடம் அதைச் சோதனை
செய்ய, அணுக்கழிவில் நிலப்பரப்பை நாசம் செய்ய, எல்லாவற்றிலும் பணம் செய்ய, கற்று வைத்திருக்கும் ஆட்சி, அதிகாரம், நம்மையும், வருங்காலத்தையும் சிதைத்துக்கொண்டுருக்கிறது! நல்ல மனசாட்சி கொண்ட விஞ்ஞானமும், முன்னோர்கள் கண்ட இயற்கை ஞானமும், பேராசைத்துறந்த மெய்ஞானமும் மட்டுமே வருங்காலத்தில் உயிர்களை காக்கமுடியும்! இதைப்படிக்கும்போது இதெல்லாம் நடக்கற காரியமா என்று தோன்றினால் இன்னமும் தெளிவற்ற துணிவற்ற மக்கள் கூட்டத்தில் நாமும் ஓர் அங்கமே!

உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், அணுவீச்சால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்ட ஜப்பான், உண்மையான மக்கள் சக்தியால் எழுந்துவிட்டது, எனினும் இந்தியா என்னும் மாபெரும் நாட்டில் பணத்துக்கு விலைபோகும் ஆட்சியாளர்களால், அதிகாரிகளால், தெளிவற்ற, துணிவற்ற மக்களால், ஒரு மறைமுக உள்நாட்டுப்போர் மக்களின் உடலில், உணர்வில் நாள்தோறும்
நிகழ்ந்துக்கொண்டேயிருக்கிறது!

பெண்_நம்பிக்கை

ஒரே ஒரு தேவதூதனை
தேடி
பல சாத்தான்களிடம்
சிக்குவதே
தேவதைகளின் இயல்பு!

எண்

இரண்டு வருடங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து கொண்ட ஒரு இந்திய-அமெரிக்க தம்பதி, சமீபத்தில் இரவு மூன்று மணிக்கு அந்தக்குழந்தை (ஐந்து வயது) சரியாக பால் குடிக்கவில்லை என அதற்கு தண்டனையாக வீட்டு வாசலில் நிற்க வைக்க அந்தக்குழந்தை காணாமல் போய், இப்போது வீட்டை விட்டு சற்றுத்தள்ளி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்திருப்பதாய் செய்தி,
குஜராத் கலவரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் தொடுத்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைப் பெற்ற காவல்துறையினர் இன்னமும் பணியில் நீடிப்பதாக மேல் முறையீட்டு வழக்கு
சென்னையில், குடிசை மாற்று வாரியத்தின் அலட்சியத்தால், வீடு பறிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட எழுபது வயது மூதாட்டி, சமீபத்தில் வீடு ஒதுக்கப்பட்டும், அதை நகராட்சி அதிகாரிகள் வழங்காததால், வீடின்றி, சாலையில் கிடந்து நலிந்துப்போய் இறந்திருக்கிறார்
இந்தியச் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில், ஏறக்குறைய ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒருவரும், தினமும் 16 குழந்தைகளும், டெல்லியில் தினமும் 5 பேரும் சாலை விபத்துகளால் இறந்துப்போகிறார்கள்
35 பேருக்கும் மேற்பட்டோர் இந்தக் குறுகிய காலத்திற்குள் டெங்குவால் இறந்திருக்கிறார்கள்

பல்வேறு விதங்களில் பல்வேறு வழிகளில், வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில், மருந்துவமனைகளில் (உபி) குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

நெல்லையில் உச்சகட்டமாக கந்துவட்டிக்கொடுமையால், காவல்துறையின், ஆட்சியரின் அலட்சியத்தால், ஒரு குடும்பமே தீயில் எரிந்திருக்கிறது!
சரி இதெல்லாம் என்ன, இத்தனை செய்திகளும் இனி மாறிவிடுமா? இல்லை, விஜய் மல்லையாக்கள் வெட்கமின்றி பணம் திருடும் நாட்டில், கல்விக்காக பிள்ளைகள் தற்கொலை செய்துக்கொள்ளும் நாட்டில், பண்டமாற்று போல் குழந்தைகளை விற்கும், சோதனை எலிகளாக்கும் நாட்டில், ஆட்சிக்காக வெட்கமின்றி காலில் விழும் தேசத்தில், மரணங்கள் எல்லாம் புள்ளி விவர கணக்குகளே!

ஒருபக்கம் மக்கள் எரிய, மறுபக்கம் ஆட்சி அதிகாரம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது, மத்திய அரசு வருமானத்துறை ரெய்டுகளையும், மாநில அரசு விழாக்களையும் தாண்டி சாதித்தது என்ன என்று நாம் கேட்டுவிடக்கூடாது, சுதந்திரம் அடைந்த நேரத்தில் 36 கோடியாக இருந்த மக்கள்தொகை இன்று 134 கோடி, ஆதலால் சதவீத கணக்குப்படி பார்த்தால் 134 கோடியில் நிமிடத்திற்கு நால்வர் சாவதும், கோடியில் சில குடும்பங்கள் தீ வைத்துக்கொளுத்திக்கொள்வதும், 250 குழந்தைகள் மூச்சுத்திணறி சாவதும், நூற்றுக்கணக்கில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் வெறும் செய்திகள் தாம், "இதுகளுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ தூக்கிப்போட்டா போதும்" என்று இவர்கள் திரும்பவும் ஓட்டுக்கேட்க வருவார்கள், இந்தப் புள்ளிவிவர கணக்குப்படி நாம் ஒவ்வொருவரும் வெறும் "எண்" தான் என்று மனதில் இருத்திக்கொள்ளுங்கள்! போதும்!

திண்ணை_அரசர்கள்

#அணுக்கதை
விடியலில் வெளியே வேலைக்குச் சென்று, வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு நள்ளிரவில் உறங்கச்செல்லும் அவளும், வீட்டில் அதிகாலையில் வேலைகள் தொடங்கி, பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு, குடும்பத்திற்காக வீட்டிலேயே தையல் இயந்திரத்தின் பிடியில் நள்ளிரவு வரை உழலும் அவளும் பால்ய தோழிகள்! அவர்கள் பல வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்டார்கள், பிள்ளைகள் சூழ அவர்கள் சமைத்துக்கொண்டே அளவளாவ, டிவியின் முன்னே கொறித்துக்கொண்டே கதைபேசி கொண்டிருந்த இருவரின் கணவர்களும், "இந்தப் பொம்பளைகளுக்கு வெட்டி கதை பேசுறதுதான் வேலையே!" என்று சத்தமாய் பேசி சிரித்துக்கொண்டார்கள்!
#திண்ணை_அரசர்கள்

காயப்படுத்தாதீர்கள்

பிள்ளைகளுடன் வகுப்பாசிரியரை பார்க்க, ஏழாம் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறேன், நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்! எனக்கு முன்னே ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் வந்தமர்ந்தனர், மகன், மகள், கணவன் மற்றும் மனைவி! வந்தமர்ந்தவுடன் அந்தப்பெண் சப்பென்று அத்தனை பேர் முன்னிலையில் மகன் கன்னத்தில் அறைந்தார்! ஒரு நொடி அந்தப்பிள்ளை சுற்றிலும் எல்லோரையும் பார்த்துவிட்டு தலைகுனிந்துகொண்டான்!

தாங்க முடியாமல், "ஏம்மா இப்படி பொதுவெளியில் அடிக்கலாமா? " என்று கேட்க, "வாயத்திறந்தா பொய் பேசுறான்" என்று சொல்ல, மீண்டும் அவன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டான்! "சின்ன குழந்தைங்க பொய் சொன்னாலும், அதை நல்லவிதமா சொல்லி திருத்தலாம்மா, இப்படி அடிச்சா எதுவும் மாறாது" என்று சொல்ல, அந்த பெண் வெடுக்கென்று தலையைத் திருப்பிக்கொண்டார்! 

எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள் ஒர் சிறுவயது இஸ்லாமியப் பெண், கையில் ஒரு வயது குழந்தையை வைத்துக்கொண்டு, படியில் அமர்ந்திருந்த இரண்டு வயது குழந்தையை அடித்துக்கொண்டிருந்தார், "அட ஏம்மா சின்னகுழந்தைய அடிக்குற" என்றால், "தம்பிக்கு விட்டுக்கொடுக்கணும் தெரியல, பெரியவன்தானே (!) விட்டுக்கொடுத்தா என்ன?", ஒரு வயதுக்குழந்தையின் பொம்மைக்காக இரண்டு வயது குழந்தையை அடித்தவளைக் கண்டதும் தாங்ககொணா கோபமே வந்தது, "உன் வயசுக்கு, இரண்டு வயசு குழந்தையும் குழந்தைதான்னு தெரியலையே, அப்புறம் அதுக்கு எப்படி ஒரு வயசு குழந்தைன்னு தெரியும்" என்று அடிக்கவேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன்!

அது ஏன் மதத்தை சொல்லவேண்டும் என்றால், இதற்குதான், குறைந்த கல்வியும், சிறு வயதிலேயே திருமணமும் அதிக அளவில் இன்னமும் இஸ்லாமிய மதத்தில் நிகழ்கிறது! எல்லா மதங்களிலும், சுயசிந்தனைத்தூண்டாத வெற்று கல்வியையோ, அல்லது அடிப்படைக் கல்வியைக்கூட பெறாத பெண்கள், தங்கள் ஆற்றாமையை, ஆத்திரத்தை, இயலாமையை குழந்தைகளிடத்தில் தான் காட்டுவார்கள் இதுபோல!
அன்பையும் கருணையையும் மரியாதையையும் நல்லக்கல்வியையும் இந்தச் சமூகம் பெண்களுக்கு நிறைய வழங்க வேண்டும், அப்போதுதான் வருங்காலத்தில் நாளைய ஆண்களும் பெண்களும் வன்முறைத்தவிர்த்து, சுயச்சிந்தனையுடன் ஒருவரையொருவர் மதிக்கத்தொடங்குவர்!
இப்போது அந்தப்பெண்ணிடம் பேசவே முடியவில்லை, அவர் அந்தப்பிள்ளையை வைதுக்கொண்டே இருந்தார், ஆசிரியையின் காதில் அந்தப்பிள்ளைக்காக அந்தப்பெண்ணிடம் பேசுமாறு கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தேன்!

பிள்ளைகளின் சுயத்தை உங்கள் வன்முறையில் காயப்படுத்தாதீர்கள் பெற்றவர்களே!

கீச்சுக்கள்

அடையார் பாலத்துக்கு முந்தைய சாலையின் திருப்பத்தில் முன்னே சென்றுக்கொண்டிருந்த டிவிஎஸ் 50 ஒன்று நடுநடுவே வேகம் குறைத்து நின்றது, அதன் ஓட்டுநர் எதற்கோ பின்னே வருபவர்களுக்கு ஒரு கையை உயர்த்திக் காட்டிக்கொண்டே சென்றார், அவர் முன்னே எந்த வாகனமும் இல்லை, அவரும் குறுக்கும் நெடுக்குமாய் செல்வதும், திடீரென நிற்பதும், கையை உயர்த்துவதுமாய் இருந்தார், கடவுளே என்று யோசித்த வேலையில், கொஞ்சம் முன்னே சென்ற லாரி, அவர் அருகில் சென்று கைநீட்டி ஏதோ திட்டிவிட்டு சென்றது, அதன் பிறகே மனிதர் ஓரங்கட்டினார்!
ஆனால் இந்தச் சமூகம் எப்படிப்பட்டது பாருங்கள், பெரிய வாகனங்கள் புடைசூழ, ஒருவர் சாலையை அடைத்து, எல்லோரையும் மணிக்கணக்கில் நிற்க வைத்து பின் சவகாசமாய் செல்லும்போது நமக்கு வராத கோபமெல்லாம், ஒரு எளிய டிவிஎஸ் பிப்டி மீது வந்துவிடுகிறது, பாவம் அந்த டிவிஎஸ் பிப்டி மனிதர், குனிந்து கும்பிட்டால் முதல்வராகும் கனவில் கையை நீட்டி காட்டி ஒரு கனவுலகில் சென்றவரை, லாரி டிரைவரின் வசவுகள் நிகழ்வுக்கு கொண்டுவந்துவிட்டது!
எச்சரிக்கை: இது அரசியல் பதிவு அல்ல!
--------------------
மனிதர்களின் துயரங்கள் மரணத்தில்தான் தெரிகிறது
அல்லது அப்போதுதான் தெரிந்தது போல் நடிக்கிறோம்!
-----------------------
முன்னாள் பிரதமர் பேசவில்லை என்று கிண்டல் செய்தோம், இன்னாள் பிரதமர் பேசவே வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறோம்! அவ்வளவு பயம்😜
----------------
சாமியார்கள் ஆட்சி செய்தால் என்னவாகும் என்று இந்தியா மற்றும் உபியைப் பார்த்தும், ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் ஆட்சிசெய்தால் என்னவாகும் என்று தமிழகத்தைப் பார்த்தும் தெரிந்துக்கொள்ளுங்கள்! 😏😜
-------------
இந்த விஞ்ஞானிகளின் ஆட்சியில் கொசுக்கள் கூட நட்டாமை செய்கிறது! 😜 
----------------
எத்தனை உறவுகள் இருந்தாலும், பொங்கி வெடிக்கும் எரிமலை போல, தாங்க முடியாதொரு நெருக்கடியை, சுமக்க முடியாமல் சுமந்து துவண்ட மனமொன்று, யாருமில்லை என்ற ஒரு கணத்தின் இருட்டில், "தற்கொலை" என்ற முடிவை எடுக்கிறது!
-----------------

நெடுஞ்சாலையில் வேகமாய் சென்றுகொண்டிருக்கும் ஒரு மகிழுந்தை, சட்டென்று ஒரு டிவிஎஸ் பிப்டியின் பின்னே நிற்க வைத்து, அதைத்தொடர வைக்கும் அந்த நிலைக்குப் பெயர்தான் ஜென்நிலை!
--------------

எந்த நம்பிக்கையையும் சிதைத்து விடாமல் வாழும் வாழ்க்கை வரம், ஆனால் அதன் எதிர்பதம்தான் வாழ்க்கை பொதுவில்!
--------------
A proactive communication is much appreciated instead of a reactive outburst of emotion!
-----------------

தினந்தோறும் அரசு செய்ய வேண்டிய கட்டுமானப்பணிகள் குறித்தும், மந்தமாய் செயல்படும் அரசு எந்திரம் குறித்தும் மக்கள் எழுப்பும் குரல்கள் செய்தித்தாள்களை நிறைக்கிறது, அரசை எதிர்ப்பார்க்காமல், மக்களே இறங்கி ஏரிகளை, குளங்களைத் தூர்வாருவதும், சாலைகளை சரி செய்வதும் கூட நடக்கிறது, வரிகளை மட்டும் வாங்கிக்கொண்டு, பல வாகனங்கள் புடைசூழ பவனி வரும் முதலமைச்சர், "சிக்கனமாய் இருந்து சேமிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்று செய்தித்தந்திருக்கிறார்!
ஒருவேளை எந்தப்பணிகளையும் செய்யாமல் சிக்கனமாய் இருப்பதே உலகவங்கியில் பட்டக் கடனை அடைப்பதற்குத்தான் என்று நம்புவோம்!
இப்படிக்கு,
#தமிழக_நாசா_விஞ்ஞானிகள்_சபை!

டெங்கு

கொசு ஒழிப்பு பணிக்காக 16 கோடி ஒதுக்கீடு என்று சுகாதார துறை அமைச்சர் கூறியிருக்கிறார், இதில் நிலவேம்பு கஷாயம், மருத்துவக் காப்பீடு போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, குப்பைகள் மேலாண்மைப் பற்றி ஒன்றுமே காணோம்!

ஆட்சி தக்கவைக்கும் போராட்டத்தில் அரசு இருக்க, மாநகராட்சி எந்திரங்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது!

ஒர் இடத்தில் குப்பையை எடுக்கும் நகராட்சி வாகனங்கள், அதை வீதி முழுக்க இறைத்துப்போகும், ஒரு இடத்தில் இருந்து எடுத்து, வேறொரு இடத்தில் சேர்த்து வைக்கும், இன்னமும் கூட குப்பைகளில் மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து நடைமுறை கூட இல்லை, இவ்வளவுதான் குப்பை மேலாண்மை தமிழகத்தில்! 

இது மழைக்காலம், நேற்று பெய்த ஒன்றிரண்டு மணிநேர மழையில், பல வீதிகள் வெள்ளக்காடாய் ஆகின, சாலையில் விளக்குகள் எரியவில்லை, பல இடங்களில் இன்னமும் ஒயர்கள் அறுந்து தொங்குகின்றன, பெரும் பள்ளங்களும், மேடுகளுமாய் பல சாலைகள், மழைநீர் சேகரிப்போ, கழிவுநீர் மேலாண்மையோ, குப்பைகளின் மேலாண்மையோ, சாலைபாதுகாப்போ எதுவும் சரிவர இல்லை!

வருமுன் காப்பதை விட வந்தபின்னர் செலவழிக்கும் நடவடிக்கைகளே பெரும்பாலும் அரசின் "விருப்பமாக" இருக்கிறது!

இந்த 16 கோடியில், மதுரை கொசுக்களுக்கு சரியான பங்கீடு போகததால், அவைகள் வேறு, வாகனங்கள் ஏறி சென்னைக்கு வந்து டெங்கு பரப்புகின்றன என்று இத்தனைபேர் செத்தப்பிறகு, அதிகாரிகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள்! கொசுக்களின் இந்த நடவடிக்கையை வன்மையாய் கண்டிப்பதைத் தவிர வேறு ஏதும் வழி நமக்கிருப்பதாய் தெரியவில்லை! இஸ்ரேலின் யூத விஞ்ஞானிகளை விட, பெரும் தமிழக விஞ்ஞானிகளால் ஆளப்பட்டும், நாள்தோறும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் தமிழகம் முன்னிலைக்குச் சென்று கொண்டிருப்பது பெரும் வியப்பே!

--------------------

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 20 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்! - செய்தி
அப்படியே குப்பைகளை தரம் பிரிக்காமல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குவிக்கும், குப்பைகளை சரிவர அகற்றாமல் இருக்கும் நகராட்சிக்கு,
சாலைகள் தோறும் குழிகளைத்தோண்டி அதை சரிவர மூடாமல் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு,
நீர்நிலைகளை பட்டா போட்டுக்கொடுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு,
சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கும் நிறுவனங்களுக்கு, அதற்கு அனுமதி கொடுத்து, கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அரசுக்கு,

இப்படி டெங்கு முதல் மர்ம காய்ச்சல் வரை சுகாதாரம் கெட்டுப்போக, மெதுவாய் வேலைகள் செய்யும் சுகாதாரத்துறைக்கு,
இவர்களுக்கெல்லாம் எச்சரிக்கை நோட்டீஸ் தராமல், மக்களுக்கு நோட்டீஸ் தருவதற்கா அந்த 28 சதவீத ஜிஎஸ்டி வசூல்???
பட், அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலப்படி, அந்தக்கொசுக்களை ஏஸி பஸ்ஸில் ஏற்றிக்கூட்டி வந்த பஸ் ஓனர்களுக்கு இன்னமும் நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்பதை மென்மையாக எடுத்துக்கூறுகிறோம்! 😜😝
#டெங்கு


வேகம்

No automatic alt text available.

ஒரு விபத்து
குழந்தைகளின்
கல்வியை கானல்நீராக்கும்

ஒரு விபத்து
வயதான பெற்றோரை
வீதியில் முடக்கும்

ஒரு விபத்து
திருமணத்தை
அபசகுனமென நிறுத்திவிடும்

ஒரு விபத்து
மாளாத துயரத்தில்
இன்னொரு மரணத்தை
ஏற்படுத்தும்

ஒரு விபத்து
திருமணம் தவிர்த்து
தனித்து வாழச்செய்யும்

ஒரு விபத்து
பழியென வேறொர்
உயிர் பறிக்கும்

ஒரு விபத்து
உறுப்புகள் தந்து
உயிர்களை வாழ வைக்கும்

ஒரு விபத்து
மரணமென அறிவித்து
உறுப்புகள் திருடும்

ஒரு விபத்து
பணம் பறிக்க
வழிவகைச் செய்யும்

ஒரு விபத்து
இயல்பு பறித்து
பைத்தியமாக்கும்

ஒரு விபத்து
நம்பியப் பெண்ணை
விலைமகளாக்கும்

ஒரு விபத்து
மழலையின் தாய்ப்பால்
பறித்து அனாதையாக்கும்

ஒரு விபத்து
தாயின் பால்சுரப்பை
வேதனையாக்கும்

ஒரு விபத்து
யாரையோ முடித்து
யாரையோ முடக்குகிறது
யாரையோ காக்கிறது
எனினும்
காணாத கண்ணீரையெல்லாம்
விதிகளைப் போல புறந்தள்ளி
நாள்தோறும் சுயநலமாய்
"விரைந்துச் செல்கிறோம்"
யாரின் கனவுகளையோ
எளிதாய்
கொன்றுக் கடக்கிறோம்!


மும்பை

மும்பையின் நெரிசலில் மற்றுமொரு விபத்து, ஏராளமான உயிர்ப்பலிகள்! குறுகிய அந்த நடைமேடைக்கு மற்றொன்றை உருவாக்க 2015 ல் இருந்து யோசித்து, 2016 ல் இருந்து டெண்டர் விட்டு காத்திருக்கிறார்களாம், மக்கள் நலப்பணிகள் என்றால் இப்படித்தான் ஆற அமர மக்கள் சாகும்வரை செயல்படுத்த யோசித்துக்கொண்டேயிருப்பார்கள்!
சென்னையில் ஜிஎஸ்டி சாலையில், ராஜிவ் காந்தி சாலையில், கிட்டத்தட்ட பல இடங்களில் விளக்குகள் இல்லை, மக்கள் சாலையைக் கடக்க நடைமேடைகள் இல்லை, சீனப்பெருஞ்சுவர் போல சுவரை கட்டினாலொழிய மக்கள் சாலைதடுப்பின் மீதேறி நடுத்தெருவில் குதிப்பதை நிறுத்தப்போவதில்லை, மிகப்பெரும் அளவில் மக்களோ அல்லது மிக முக்கியப்புள்ளிகளோ அவர்களின் உறவுகளோ விபத்தில் சாகும்வரை இந்த அரசு நடவடிக்கை எடுக்காது, இதே போல் சாராயத்தால் மக்கள் மெதுவே சாகாமல், கொத்துக்கொத்தாய் சாகும்வரை இந்த அரசு சாராயம் விற்பதை நிறுத்தாது, ஒரு அனிதா என்றில்லாமல் ஓராயிரம் அனிதாக்கள் சாகாமல் இங்கு கல்வியில் மாற்றம் வராது, இந்த சில உதாரணங்களிலும் நீங்கள் தெளிவாய் புரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான், இத்தனை மரணங்கள் நிகழ்ந்தால் அரசு மாற்றத்தை கொண்டுவருமா என்றால், நிச்சயம் இல்லை, மக்கள் உயிர்கள் என்பது அரசுக்கு எண்ணிக்கை கணக்குதான், நிறைய உயிர்கள் போகும்போதே மக்களாகிய நமக்கு ஆற்றாமை பெருகும், கோபம் வரும், கொஞ்சமேனும் கொதிப்போம், அரசு போனால் போகிறதென்று செவிசாய்க்கும்!
மக்கள் எவ்வழி அரசும் அவ்வழி!

இல்லை

பள்ளிகள் இருக்கிறது கல்வி இல்லை
காவல்துறை இருக்கிறது காவல் இல்லை
மருத்துவமனைகள் இருக்கிறது மனிதம் இல்லை
வாகனங்கள் இருக்கிறது சாலைகள் இல்லை
சாலைகள் இருக்கிறது பாதுகாப்பு இல்லை
அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் நேர்மை இல்லை
மக்கள் இருக்கிறார்கள் தெளிவு இல்லை
பத்திரிக்கைகள் இருக்கிறது துணிச்சல் இல்லை
நீதிமன்றங்கள் இருக்கிறது நீதி நிதியின்றி இல்லை
வரிகள் இருக்கிறது வாழ்க்கை இல்லை
நாட்டில் அமைச்சர்கள் இருக்கிறார்கள்
ஆட்சி இல்லை!

விளம்பரம்

அரிதாக திரையரங்குச்
செல்லும்போதுதான்
தமிழகத்தில்
ஆட்சி "நடப்பதாக"
அறிய நேரிடுகிறது,
வெளியே வந்தால்
ஒரே இருட்டு!
#விளம்பரம்

ஓய்வெடுக்கும் ஆட்சி

ஒருபுறம்
சோற்றுக்கும்
நீருக்கும்
கல்விக்கும்
போராட
மறுபுறம்
வரிகளிலும்
சாராயத்திலும்
விலைவாசியிலும்
மக்கள்
அல்லாட,
ஊசலாடும்
ஆட்சியில்
ஓய்வெடுக்கிறார்கள்
ஆட்சியாளர்கள்!

எந்தவேளையிலும் கவிதை

Image may contain: 1 person
ஒரு மாமரத்தின் நிழல்
மடியில் மலர்ந்துகிடக்கும் குழந்தை
வேப்பமரத்தின் காற்று
தந்தையின் நம்பிக்கை
தாயின் பெருங்கருணை
காலைச்சுற்றும் பூனை
முகம் நக்கும் நாய்
பரந்தவெளி மைதானம்
வெளிறிய நீலவானம்
மழைச்சுமந்த கருமேகம்
ஊர் நனைக்கும் மழை
இரவு நேரத்து ஈரக்காற்று
யாருமற்ற மாலைநேரத்தின் பொழுது
மெல்லிய சாரல் நனைத்த மொட்டைமாடி
இமைக்காமல் பார்க்கும் பசு
நிபந்தனைகளற்ற ஒரு கரம்
துள்ளிக்குதிக்கும் கன்று
மனம் மயக்கும் நீங்காத இசை,
இது அத்தனையும்
அல்லது ஏதோ ஒன்றோ
போதுமானதாய் இருக்கிறது
கவிதையென்று
மனப்பக்கங்களை
நிரப்பிக்கொள்ள
எந்தவேளையிலும்!

திகட்டாத_பொழுதுகள்



Image may contain: one or more people
உண்மையான நேசம்
சுவையான உணவு
இனிமையான மழலை
அருமையான இசை
எப்போதும் திகட்டுவதில்லை
திகட்டாத பொழுதுகளில்
சிறகடிக்கின்றன
ஓராயிரம் பறவைகள்!

#திகட்டாத_பொழுதுகள்

பொய்களின்கூடு

Image may contain: 1 person



நீ வருவதாய் சொன்ன
ஏமாற்றங்கள் போதும்
தருவதாய் வைத்திருந்த
முத்தங்கள் போதும்
கோர்த்துக்கொண்டிருந்த
வார்த்தைகள் போதும்
பயன் கருதி பேசும்
நிமிடங்கள் போதும்
புகழுக்காக செய்யும்
நாடகங்கள் போதும்
நேரமில்லையெனும்
அலட்சியங்கள் போதும்
ஆணவமாய் நடத்தும்
அதிகாரங்கள் போதும்
அலைபாயும் மனம் மறைக்க
நீ கூறும் பொய்கள் போதும்,
போதும் போதும் போய் வா,
உன் புனைவுகளோடு!
விட்டு விடுதலையாகிறேன்
நான் சிட்டுக்குருவியாக,
சிறைப்படுத்தும் காதலிலிருந்து!!

புதிய_தெய்வங்கள்

Image may contain: one or more people

குடித்துவிட்டு
அம்மாவின் மண்டையுடைத்தவன்
மனைவியின் உழைப்பை
திருடித்தின்றவன்
பிள்ளையின் கல்விக்கனவை
கலைத்து
சோம்பலில் சுகம் கண்டவன்
பெண்களென்றாலே
பாலியல் சுகத்துக்கு
மட்டுமேயென்றவன்
பெண் கொலைகள் நடந்தாலும்
குற்றாவாளிகளைத்
தப்பவிடும் அதிகாரம் படைத்தவன்
மரங்களைவெட்டி
வனம் அழித்து
நதிநீருக்காக கண்ணீர் விட்டவன்
சாதிச்சொல்லி
காமம்தீர்க்க
எளியவர்களை கொன்றுபுசித்தவன்
இச்சை தீர்க்காத பெண்ணை
பரத்தையென்றுப் பழிக்கூறுபவன்
தளிர்குழந்தைகளின் யோனிகளில்
மோகவெறி தீர்த்துக்கொள்பவன்
சேற்றில் உழலும்
பன்றிகளைப் போல்
ஆடை அகன்று
சாலையில் போதையில் கிடப்பவன்
எந்த விதிகளையும் மதிக்காமல்
தன் வாகனத்தின் வேகத்தில்
உயிர்களைப் பறிப்பவன்
காசுப்பாக்கிக்காக
தளிர்களின் மூச்சை நிறுத்துபவன்
சாமியார் வேடம்பூண்டு
காமவேட்டையில் ஈடுபடுபவன்
பதவிக்காகப் பல்லிளித்து
முதுகு வளைத்து
கொலைகள் செய்து
பச்சோந்தியாய் வாழ்பவன்
பணியிடத்தில்
பெண்களைத் துன்புறுத்துபவன்
இன்னும் எத்தனையோ
செய்பவனென
ஆணென்று ஆண்கள் பிறழும்
தேசத்தில்
எப்போதும் பெண்களுக்கே
அறிவுரைகளும்
நல்லொழுக்க கதைகளும்!

ஆண்பிள்ளைகளின் வளர்ப்பில்
எங்கோ பிறழ்ந்துவிடும்
பெற்றவர்கள்,
முத்தாய்ப்பாக
"பெண்ணே தெய்வம்"
என்று சொல்லிவிடுகிறார்கள்,
பெண்குலமும்
மன்னித்துத்தொலைகிறது
புதிய தெய்வங்கள் உருவாகின்றன!

தேசப்பற்று_கிரிக்கெட்டும்_மத_ஊறுகாயும்

ஒரு இரயில் பயணத்தில், பல்வேறு தேசங்களில் வியாபாரம் செய்யும் ஒருவரும், வேறு இருவரும் மரணத்தண்டனைக் குறித்து காரசாரமாக விவாதித்துக்கொண்டார்கள்! அரபு நாடுகளைப்போன்று உடனடியாக பொதுவெளியில் வைத்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் சொல்ல, அப்படி நிறைவேற்றியும் குற்றங்கள் தொடர்கதைதான் என்று வியாபாரி சொல்ல, குற்றங்களுக்கு உடனடி தண்டனை எனும்போது, அந்தக்குற்றங்கள் குறையத்தானே செய்கிறது என்று இன்னொருவர் சொல்ல, அரபு நாடுகளில் ஆரம்பித்து, சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில், அரசு உத்தரவை உடனடியாக மதிக்கும் நிலையை, நடைமுறைச்சட்டங்களை அலசி, இறுதியில் ஜப்பானியர்களைப் போல சுய ஒழுக்கத்துடனும், சகமனிதர்களின் மீது காட்டும் மரியாதையுடனும், அபார நாட்டுப்பற்றுடன் இருப்பதே நல்லது என்று முடிந்தது!

என்னைப் பொறுத்தவரையில் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், பல்வேறு மொழிகளும், கலாச்சாரமும் நிறைந்த நாட்டில், வேற்றுமையிலும் ஒற்றுமை பாராட்டும் மக்களே போற்றுதலுக்குரியவர்கள்! 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் வன்முறையை நம்பாமல், நீதிமன்றத்தை நாடி வாழ்க்கை முழுதும் வழக்காடினாலும், சில நூறு ஊழல்வாதிகளை, பல ஆயிரம் ரவுடிகளை ஒன்றும் செய்யமுடியாமல் இருப்பதுதான் இங்கே கலையப்பட வேண்டிய முதல் விஷயம்! மன்னர்கள்
கையில் இருந்து ஆட்சியைப்பிடுங்கி, சில ஊழல்வாதிகளை மன்னராக்கி வைத்திருப்பதுதான் இந்த மண்ணின் சாதனை!

400 ஆண்டுகால ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்திலும், அதற்கு பிறகான ஆங்கிலேயே ஆட்சியிலும், பாலஸ்தீனத்தின் பகுதியைப்பிடுங்கி யூதர்களுக்குத்தந்து, 1947 ல் வரலாற்றுப்பிழையை செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், 1948 ல் கிட்டத்தட்ட 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் நாடிழந்தனர், வீடிழந்தனர்! அன்று தொடங்கி இன்றுவரை, யூதர்களுக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் தினம் தினம் போர்க்களமே! கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் தருகிறேன் என்று, இந்து முஸ்லீம் என்று பந்தாடி, 1947 ல் இருந்து 1948 வரை லட்சக்கணக்கான மக்களை, பிரிந்த இருநாடுகளின் எல்லைகளை நோக்கியும் துரத்தியதில், சில லட்சம் மக்கள் அகதிகளானர்கள், சில லட்சம் பேர் மாண்டுபோனார்கள்! பங்காளதேஷ் உருவாக்கி, காஷ்மீர் பதட்டம் வரை வரலாற்றுப்பிழைகள் ஏராளம்!

இத்தனை களேபரத்திலும், இந்தியர்கள் கிரிக்கெட் பார்த்து தேசப்பற்று வளர்ப்பதுதான் வேடிக்கை! பொது காரியங்களுக்கு வராமல் நடிகையை காண நகரமே நடுங்கும் வண்ணம் கூடுவதுதான் இவர்களின் அதிகப்பட்ச பொதுச்சேவை! மக்களின் அடிப்படை மனநிலையை, தேசப்பற்றை, கேள்விகள் கேட்கும் திறனை, துணிச்சலை சிறந்த கல்வியும் கலாச்சாரமும் கொண்டுவந்துவிடும்தான், ஆனால் அது நடந்துவிட்டால் ஊழல் அரசியல் பிசுபிசுத்துப் போய்விடுமே!?

இந்தியச் சுதந்திர வரலாறு தெரியாமல் ஆங்கிலேயன் பரவாயில்லை என்பதும், சமீபத்திய பெரும்பான்மையால் இந்துத்வா கொள்கையெடுக்கும் ஒரு அரசினால் இந்துக்கள் மோசம், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் பரவாயில்லை என்பதும், அட இந்த முஸ்லீம்களில் தான் கடத்தல்காரர்களும் தீவிரவாதிகளாலும் அதிகம் என்பதும், கிறிஸ்தவ மிஷினரிகளால் அந்த மதமே சிறந்தது என்றும், அவ்வப்போது குழம்பி, ஒருவரையொருவர் சாடிக்கொள்ளும், எளிதில் சாதிமத உணர்வில் தூண்டப்பட்டு அடித்துக்கொள்ளும் இந்த மக்கள்தான் அரசியல்வாதிகளின் பலம்!
தீவிரவாதத்தில், வன்முறையில் எல்லா மதங்களுமே குளிர்காய்கிறது, ரத்தம் தோய்ந்த வரலாறு எல்லா மதத்துக்கும் உண்டு! அரசியல்வாதிகளுக்கு மதமோ மனிதமோ கிடையாது, பணமே மதம், பதவியே சாதி, புகழே போதை, மக்களே பலியாடுகள்!

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் நாட்டுப்பற்றை எப்படி வளர்க்க வேண்டும் ?

சிறந்த கல்வியால்தான், அது எல்லோருக்கும் கிடைத்துவிடக்கூடாது, கிடைத்துவிட்டால் கலவரம் செய்ய, கல்லடிக்க, பெண்களை கடத்த, சாராயம் காய்ச்ச சூத்திரர்கள் கிடைக்க மாட்டார்கள், மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள், 60 ஆண்டுகள் கடந்த இந்தியாவில் இன்னும் 60 ஆண்டு காலம் கடந்தாலும் இதெல்லாம் மாறாது மக்கள் கேள்விகள் கேட்டு கல்விக்காக குரல் எழுப்பும்வரை! மாற்றங்களை போராடித்தான் பெற வேண்டும், மீண்டுமொரு சுதந்திரம் இந்தியாவுக்கு வேண்டும்! குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு தேசம் வேண்டும்!

அது கிடைக்கும்வரை நாம் என்ன செய்ய வேண்டும்? என் பன்னிரெண்டு வயது மகனிடமும், எட்டுவயது மகளிடமும் இதைத்தான் சொல்கிறேன், வரலாற்றை தெரிந்துக்கொள், (இல்லையென்றால் மோடியால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்கிடைத்தது என்று வருங்காலம் சொல்லக்கூடும்), ரௌத்திரம் பழகு, ஆரோக்கியம் பேணு, தெளியப்படி, அறிவு வளர கேள்விகள் கேள், பிற உயிர்களை நேசியென்று எல்லாம் சொல்லி, இறுதியில் இதையும் சொல்கிறேன், "ஸ்கூலுல டாய்லெட்டுக்கு தனியா போகாதே, தனியா இருக்காதே, வெளியே விளையாடப்போகும்போது யார் வீட்டுக்கும் தனியா போகாதே" மற்றபடி மனதுக்குள்,
"சிறுமியை எரித்தவனை நடுரோட்டில் எரித்து, சிறுவனை கொன்றவனை நடுரோட்டில் வெட்டிக்கொல்லும் சட்டம் வரும்வரை" என்று தொடர்புள்ளி வைக்கிறேன்!

முதலில் அரபுத்தண்டனைகள் தரட்டும், பிற்காலத்தில் இது ஜப்பானிய தேசமாகட்டும்!

ஹாசினி

#ஹாசினியைக் கொன்றவன் விடுதலை!
இந்தத்தேசத்தில் கொலை செய்பவன், கொள்ளையடிப்பவன், ஊழல் செய்பவன், லஞ்சம் வாங்குபவன், அடுத்துக்கெடுப்பவன், வன்புணர்ச்சி செய்பவன், பெண்களை கேலி செய்பவன், வழிப்பறிச்செய்பவன், கொள்கையை பறக்கவிட்டு காசுக்காக கட்சி விட்டு கட்சித்தாவுபவன் எல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணையின்றி, வீதிகளில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வலம் வர, பிள்ளைகளை, சொத்தை, உரிமையை பறிகொடுத்தவர்கள் எல்லாம் கூனிக்குறுகி ஏதும் செய்யமுடியாமல் போராடிக்களைத்து வீழ்வதுதான் ஜனநாயகமா???
யாரோ ஒரு அமைச்சனின், அதிகாரியின் வீட்டில் இழவு விழுந்தால்தான் மக்களின் வலி தெரியவருமா??

ஒரு பிள்ளையைப்பெற்றவள் தான் உயிரோடிருக்க, தன் பிள்ளை முதுமையடைந்தோ, இயற்கைமரணம் அடைந்தாலோ, அதை தாங்கவே முடியாமல் வாழ்நாள் முழுதும் கண்ணீர் சிந்துவாள், அப்படியிருக்க, "கணநேர விடைத்தவெறிக்காக யாரோ ஒரு அயோக்கியன் தன் பிள்ளையை புணர்ந்து, கொன்று, எரித்தும் இருக்கிறானே, ஈ, எறும்பும் கடித்தாலும் துடிக்கும் பிள்ளை எப்படி துடித்தாளோ, அம்மா என்று என்னை தேடினாளோ, அந்தக்குழந்தை தன்னுடைய கடைசிக்கணத்தில் எத்தனை வலியை அனுபவித்தாளோ" என்று எண்ணியெண்ணி மாய்ந்துபோவாளே? இந்த ஓட்டைச் சட்டமும், போராடும் பெண்களின் மூலைகள் மீது கைவைக்கும் ஈனத்துறையும், போராடும் மக்களின் மீதே குண்டர் சட்டம் போடும் கையாலாகாத ஒரு அரசும், பொறுக்கிச்சாமியார்களின் படுக்கை அறைக்கு பெண்களை பலியாக்கி அவர்களுக்கு தேவையற்ற விளம்பரம் தந்துத் துணைநிற்கும் அதிகாரமும் இந்தப்பூமிக்கு பெருத்த பாரம்!
அனிதா, சுவாதி, விஷ்ணுப்பிரியா, நளினா, ஹாசினி, ஜோதிசிங், இன்னும் எத்தனை எத்தனை பெண்களையும், குழந்தைகளையும் பலியாக்கிய கொலைகாரர்களையும், அதற்கு துணைநின்றவர்களையும் காலம் நிச்சயம் தண்டிக்கும்!

போ ஹாசினி, இந்தத்தேசம் மிக மோசமாய் மாறிக்கொண்டிருக்கிறது, உன் தந்தையைப்போல எல்லா வீட்டுத்தந்தைகளும் குமுறிக்குமுறி அழமட்டுமே செய்யமுடியும், உன் அன்னையைப்போல எல்லா அன்னைகளும் கையறு நிலையில் பரிதவிக்க மட்டுமே முடியும், இந்தத் தேசத்தில் ஆட்சியாளார்கள் முதல் நீதிபதிகள் வரை, காக்கிச்சட்டை முதல் கதராடை வரை எல்லோருமே ஆண்கள்தான் ஹாசினி, அவர்கள் யாருக்கும் குழந்தையென்றும், குமரியென்றும் தெரியாது ஹாசினி, அன்னையின் கர்ப்பபையிலிருந்து, அவளின் யோனி வழி வந்தப்பிள்ளைகள் தான் அவர்களும்! சில மிருகங்கள் அவரவர் அன்னையின் யோனியை மட்டுமே மிச்சம் வைத்திருக்கின்றனர், சட்டமும் அரசும் வேடிக்கை மட்டுமே பார்க்கும்! உன்னைப்போல் இன்னும் எத்தனைப்பிள்ளைகளோ தெரியாது! ஹாசினி, ஒருவேளை நீ கடவுளைக்கண்டால், காறி உமிழ்ந்துவிடு, ஏனேனில் இங்கே இவர்களைத்துப்பும் திரணியற்றவர்களாக நாங்கள் செத்தப்பிணங்களாக இருக்கிறோம் ஹாசினி, எங்களை மன்னிக்காதே!

#ஹாசினி #Hasini

--------------------

ஒரு கொடூரமான கொலை வழக்கில், குற்றப்பத்திரிக்கையை கூட தாக்கல் செய்யாத காவல்துறையையும், இதுபோன்ற காரணங்களுக்காக குற்றவாளியை வெளியே விடும் பலகீனமான சட்ட அமைப்புகளையும், யார் செத்தாலும் நிவாரணம் என்று வரிப்பணத்தை தூக்கி வீசி, புகைப்படம் எடுத்துப்போட்டுக்கொண்டு, ஆட்சியைப்பற்றி மட்டுமே கவலைக்கொள்ளும் அரசையும் யார்தான் கேள்வி கேட்பது??
அதர பழசான அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில் தங்களுக்கு வேண்டிய மாற்றத்தை மட்டும் 24 மணிநேரத்தில் செய்து கொள்ளும் அரசுகள், காலத்தின் மாற்றத்திற்கேற்ப மக்களுக்காக எதையும் மாற்றாமல் இருப்பது உண்மையில் சர்வாதிகாரமே!
கொல்லப்பட்டக் குழந்தை ஒரு உயர் காவல்துறையின் வீட்டுக்குழந்தையாகவோ, அரசியல்வாதிகளின் பிள்ளையாகவோ இருந்திருந்தால் இத்தகைய அலட்சியம் இருக்குமா? இந்நேரம் கொலையாளியின் கதை முடிந்திருக்கும்தானே? கொலையாளியை வெளியே விட்டு இன்னும் பல குழந்தைகளையும் கொல்ல அனுமதி வழங்கியிருக்கிறதா சட்டம்???
கொல்லப்பட்ட குழந்தைகளும், பெண்களும் பேயாக (?) வந்து கொன்றாலொழிய எந்தக் குற்றவாளிகளுக்கும் மரணத்தண்டனை கிடைக்கப்போவதில்லை, அதிகபட்சமாக அரசு குற்றவாளிகள் வாழ தையல் இயந்திரம் தரும்! ஆணாதிக்க நாடு!
#ஹாசினி #Hasini

சிக்னல்_சிந்தனை

தமிழகத்தின் சாலைகளில் செல்லும் நாய்களை வாகனங்கள் மோதிவிட்டால், அது எப்போதுமே நாய்களின் தவறில்லை!
ஒரே ஒரு தேர்தல்தான் நடந்தது, ஒருமுறைதான் ஓட்டுப் போட்டோம், 3 முதல்வர்கள், 5 வருட தண்டனை, இந்தி நாடாக, இந்துத்துவ மாநிலமாக மாறுகிறது தமிழகம்! இது நம்முடைய தவறா, இந்த அமைப்பின் தவறா தெரியவில்லை, எது எப்படியோ, அரசியல் தெரியவில்லை எனினும் முதல் பத்தியில் இருக்கும் செய்திப்பற்றி தெரியும், சாலை விதிகளை பெரும்பாலும் நாய்களே சரியாக மதிக்கிறது!
#சிக்னல்_சிந்தனை

கீச்சுக்கள்!

அம்மா என்பவர்கள் இரண்டுமுறை சிந்திக்கிறார்கள், முதலில் தனக்காக, பிறகு தம் பிள்ளைகளுக்காக, ஆதலால் தற்கொலையை தவிர்க்கிறார்கள்!!!

--------------
நாடெங்கும் டெங்கு, தினம் தினம் மரணம், ஆனால் ஒர் "ஊழல்" அரசியல்வாதி பெயர் கூட இல்லை, கொசுக்களும் மக்கள் இரத்தத்தை பெரும் தொகைக்கு காண்ட்ரக்ட் எடுத்திருக்கலாம், யார் கண்டது, கேடு கெட்ட "கொசுக்கள்" 😏😜
----------------------

பிற மாநிலங்கள் மறுக்கும் எல்லாத்திட்டத்தையும், தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் நிலையை பற்றிய பேச்சில், "காசு கொடுத்தா, அம்மாவ கூட உங்க ஊர் ஆளுக வித்துடுவாங்க" ஒரு நண்பர் சொன்னது! :(((
---------------

#Flipkart #ப்ளிப்கார்ட் விளம்பரம், விலை "குரையுமாம்", தமிழ்நாடுதானே சின்ன "ர" போதும் என்று நினைத்திருப்பார்கள்!
-------------
மலையின் வளங்களை அழித்து, காட்டை ஆசிரமமாக்கிய ஜக்கி, நதிநீர் இணைப்பைப் பற்றி பேசுமுன், தன் ஆசிரமத்தை அகற்றி, வெட்டிய அளவுக்கு மரங்களை நட்டுவிட்டு, காடுப்போற்றி பின் நடிகர்கள், அரசியல்வாதிகள் புடைசூழ "சொகுசு" கார்களில் வலம் வரலாம்!
அரசியல்வாதிகள் மக்களுக்காக கண்ணீர் விடுவதும், இதுபோன்ற சாமியார்கள் இயற்கைக்காக கண்ணீர் விடுவதும் ஒன்றுதான், இரண்டுமே நம்புவதற்கில்லை!
--------------------

ராஜஸ்தானில் நகரமெங்கும், மிகச்சில இடங்களைத்தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்தி மட்டுமே இருந்தது, ஏன் இப்படி என்று கேட்டதற்கு, காரோட்டியும், அங்கு இருந்த சில பூர்வகுடிகளும் வருத்தப்பட்டு சொன்னது, "ஆரம்பத்தில் இந்தி மட்டுமில்ல, உங்க தாய்மொழியும் இருக்கும்ன்னு சொன்னாங்க, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் அழிச்சிட்டு, இப்போ இந்தி மட்டும்தான் எங்கேயும்"
வெறும் உத்திரபிரதேசத்திலும், மத்தியப்பிரதேசத்திலும் இருந்த மொழியை, சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளப்படாத மொழியை, பல்வேறு அரசியல் செய்து திணித்த மொழியை நாடு முழுக்க பரப்பியிருக்கிறார்கள், மொழியிலேனும் தனித்தன்மையோடு இருந்த தமிழ்நாடு, முதலாளிகளின் பேராசையால், அரசியல்வாதிகளால், வந்திறங்கும் வடநாட்டவருக்கு ஏற்ற வகையில் இந்திநாடாக மாறிக்கொண்டிருக்கிறது! நாற்காலி மட்டும் போதும், மற்றதை நீ (மத்திய அரசு) எடுத்துக்கொள் என்று பெருந்தன்மையாய் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!
இவர்களின் உள்மனதின் இருட்டை மறைக்கத்தானோ வெள்ளை வேட்டியும், சட்டையும்???
---------------------

இன்னும் இரண்டு வருடத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மிஞ்சுமா?! ஏதாவது ஒரு தெருவில் சாராயம் இல்லாமல் இருக்குமா? அரசாங்கப்பள்ளிகள் இருக்குமா? ஏதாவது ஏழைப்பிள்ளை கல்லூரி வாசல் மிதிக்குமா?
வரலாற்றுப் பிழையான ஆட்சி!
----------------------------
ஒரு பெண்ணின் / ஆணின் அகால மரணம்
இந்தியர்களின் மனதை உலுக்க
அவள்/ அவன் அங்கமங்கமாய் வெட்டிப்புணரப்படவோ
படுகொலைச் செய்யப்படவோ
அல்லது உயர்ந்த சாதியாய் இருக்கவோ
தலைகுனிந்து நாணத்தோடு வாழ்ந்தவளாகவோ / வீழ்ந்தவனாகவோ
இருக்க வேண்டியிருக்கிறது!

-------------------
உலக மன்னிப்புத்தினமாம், நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லா தேர்தலும் மன்னிப்பு தினம்தானே? 😜
-------------------
யாரோ நீரூற்ற துளிர்க்கும் நம்பிக்கையே வாழ்க்கை!
---------------------
கதிரொளியில் மலரும் கதிர்களைப்போல்
தாயைக்கண்டு துள்ளும்
சேயைப்போல்
இருக்கவேண்டும் காதல்!

--------------------

ஒரு பெண்ணின் முதல் காதல் அவள் தகப்பனிடம், அவனின் அன்பை பெரும்பாலும் வேறு யாரிடமும் அவள் காண்பதில்லை, பெரும்பாலான அப்பன்களும் தம் பெண்ணைத்தாண்டி, உண்மையான அன்பை வேறொரு பெண்ணுக்கும் தருவதில்லை! எனினும் உண்மை எதுவெனில் "அன்பு" என்பது யாரிடம் என்றாலும், எந்தப்பெயரில் என்றாலும் அது அம்மையின் அன்பைப்போல, அப்பனின் பரிவைப்போல உண்மையானதாக, கருணையுடையதாக, உரிமைக்கொண்டதாக, உணர்வுகளை மதிப்பதாக, நினைவுகளைச் சுமந்ததாக, விட்டுக்கொடுக்கும் தன்மை உடையதாக, சுயத்தைக் காயப்படுத்தாததாக இருக்க வேண்டும்!
அத்தகைய அன்பைப்போல இருக்க வேண்டும் காதலும் நேசமும்! அது இந்த பிரபஞ்சத்தில் நம்மைச்சுற்றியுள்ள இயற்கையிடமும், மிருகங்களிடமும் நிறைந்திருக்கிறது, ஒருவேளை நீங்கள் தேடும் மனிதர்களிடமும்!
-------------------
Design of democracy states that Irresponsible people will be ruled by irresponsible politicians!

உணர்வுகள்

நேற்று பார்த்த அதே சிறுவர்களில் இப்போது இரண்டுபேர், புன்சிரிப்புடன் நடந்து வந்துக்கொண்டிருந்தார்கள், வழக்கமான நலவிசாரிப்பாய், "என்னடா சாப்பிட்டிங்களா?" என்றேன்! பகீரென்ற பதிலை சொன்னார்கள், "இல்லேக்கா, அம்மாவுக்கு கூலி நைட்டுதான், சமைக்கலக்கா, நைட்டுதான் சாப்பாடு" அபத்தம் என்றாலும், கேட்டேன், "ஏண்டா இட்லிக்கடையில டிபன் வாங்கிக்கறதுதானே?"
"காசு இல்லேன்னு சொல்லிட்டாங்கக்கா" என்று சொல்லிவிட்டு, தலைகுனிந்து நகர்ந்தார்கள்!
அப்பா குடிக்க, அம்மாவின் கூலிவரும்வரை, பசியை விரட்ட இந்தப்பிள்ளைகள், வீதியில் விளையாடுகிறார்கள், கால்போன போக்கில் நடக்கிறார்கள், என்னால் இவர்களின் வறுமையை விரட்ட முடியுமா, தெரியவில்லை, அந்தநேரத்து பசியை விரட்டலாமென்று, அவர்களை அழைத்து, ஆளுக்குக்கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்கள் அம்மாவிடம் கொடுத்து, மளிகைச்சாமான்களும், அவர்களின் பசிக்கு ஏதேனும் வாங்கிக்கொள்ள சொல்லி வீட்டை நோக்கி அனுப்பிவைத்தேன்! குடிகார அப்பன்களிடம் சிக்காமல், அவர்களின் அம்மாவின் கைகளில் காசு கொடுப்பது இனி அவர்களின் சமர்த்து!
இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான் #அனிதா என்ற மாணவி இறந்தது, அல்லது கொல்லப்பட்டது! அரசாங்கப்பள்ளியில் படிக்கும் இந்தப்பிள்ளைகளுக்கு கல்வி மட்டுமே கடைத்தேறும் வழி, அதை அடைத்துவிட்டு, #நீட் வகையாறாக்களை உள்நுழைத்து, வாய்ப்பு மறுத்து, #சாராயக்கடைகளை திறந்து ஆட்சிசெய்கிறார்கள் படித்த, அல்லது படித்ததாய் சொல்லிக்கொள்ளும் தமிழக ஜாம்பவான்கள்!?

தெய்வம் நின்று கொல்லும்

மகளின் நடனவகுப்பு முடிய அந்தத்தெருவில் காத்துக்கொண்டிருந்தேன், நான்கு சிறுவர்கள், மிகவும் எளிய வீட்டுப்பிள்ளைகள் என்று உடையில் தெரிந்தது, ஒருவன் நொண்டிக்கொண்டே வர, மற்ற மூவரும் அவனையொட்டி நான் அமர்ந்திருந்த வாயிற்படியில் வந்து உடன் அமர்ந்தனர்!
"என்னடா ஆச்சு?"
"அக்கா இவன் காலில் முள்ளூ குத்திடுச்சுக்கா" என்று நொண்டியவனை கைக்காட்ட,
"எங்கே பார்க்கலாம்", என்று அவன் பாதத்தில் குத்தியிருந்த சிறு கண்ணாடித்துகளை நகங்களின் மூலம் எடுத்துவிட்டேன். "ஏண்டா செருப்பு போட்டு நடக்கக்கூடாது", என்று கேட்டுவிட்டு அவர்களின் எளிய கோலத்தை பார்த்துவிட்டு மிக அபத்தமான கேள்வியாய் உணர்ந்தேன்!

சிறிது நேரம் அவர்கள் அமர்ந்திருக்க, பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு வடநாட்டுச் சிறுவன் ஒரு ஐஸ்கிரீம் வண்டியைத் தள்ளிக்கொண்டு போக, சும்மா இருந்த சிறுவர்களில் ஒருவன் அவனை நோக்கி "ஏய்" என்று குரலெழுப்ப, அந்தச்சிறுவன் வண்டியை அப்படியே விட்டுவிட்டு முஷ்டியை மடக்கிக்கொண்டு இவர்களை அடிக்கவர, பிறகு நான் நடுவே குரல் கொடுத்து இருவரையும் அதட்ட பிறகு விலகினார்கள், இதற்குள் இரண்டு இளைஞர்கள் வேண்டுமென்று அருகில் வந்து என்ன பிரச்சனையென்று கேட்க, சிறுவர்கள் சட்டென்று, "ஒன்னுமில்ல, எங்கால்ல முள்ளூ குத்திடிச்சி, அக்கா எடுத்துவுட்டாங்க, நீ கெளம்புண்ணா" என்று சமர்த்தாய் அவர்களை கழட்டிவிட்டு இவர்களும் விலகிப்போனார்கள்!

இளைஞர்களை அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு மறுபுறம் சென்ற பிள்ளைகள் ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் என்புறம் வந்து அமர்ந்தார்கள். "அக்கா சாரிக்கா, அவனுங்க சரியில்ல, ஏரியாவுல குடிச்சிட்டு கலாட்டா பண்ணுவானுங்க, அதான் போயிட்டோம்" என்று காலில் முள் தைத்துக்கொண்டவன் கூற, பிறகு பொதுவாக அவர்கள் படிப்பைப் பற்றி விசாரிக்க, அவர்களுக்கு முறையே ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வயதென்றார்கள், அவர்களையெல்லாம் ஏழு, எட்டு வயதுக்குமேல் இருப்பார்கள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை, "ஏண்டா, ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா, என்று அவர்களிடம் மேலும் பேச்சை வளர்க்க, அவர்கள் சொன்னது எல்லாம் இன்னமும் மனதுக்குள் ரீங்காரிமிட்டுக்கொண்டிருக்கிறது!

"அக்கா, இவன் (காலில் முள் தைத்துக்கொண்டவன், ஒன்பது வயது) இவங்கப்பா குடிக்குறத விட்டா தீ மதிக்கிறேன்னு வேண்டிட்டு இருக்கான்கா லூசு"
"ஆமாங்க்கா, அம்மாவே போட்டு அடிக்கிறாரு, குடிச்சிட்டு வாந்தியெடுக்குறாருகா, படிக்கவே முடியலக்கா"
"அக்கா, இவன் வெறும் சோத்தை தின்றாங்கா, அவங்க குழப்பு வைக்கலன்னா அவங்க சித்திக்கிட்ட கேட்டு சாப்பிடலாம் இல்லக்கா"
"என் சித்திப்பையனுக்கு ஆறு வயசுதான்கா, அவனுக்கும் அவங்கப்பா சாராயம் குடுக்குறாருக்கா"
"சித்திக்கிட்ட சொன்னா கண்டுக்கவேயில்லக்கா, அவங்க நாயிக்குகூட சாராயம் ஊத்துறாங்க, அவங்ககிட்ட எப்படிக்கா கொழம்பு கேக்குறது?"
"அக்கா எங்கண்ணனுக்கு 12 வயசுக்கா, ஸ்கூலுக்கு வராம பாக்கு போடறான்க்கா"
"அக்கா இவன் குளிக்கறதே இல்லகா, சும்மா படிக்காம பீச்சுக்கு போலான்னு கூப்புடுட்டே இருக்கான்கா"
"அக்கா குடிச்சா, பாக்கு போட்டா இன்னக்கா ஆகும்?"
எளியப்பிள்ளைகளுக்கு என்னால் முடிந்ததை, தெரிந்ததைச் சொன்னேன், அறிவியல் ரீதியாக நிறைய கேள்விக்கேட்டார்கள், குடியை வெறுத்து, மனதை திசைத்திருப்பாமல், கல்வியை விரும்பும்படி சொன்னேன், இந்தக்குழந்தைகள் வளர்வதற்குள், சாராயத்தில் தமிழகத்தை மூழ்கடித்த, மூழ்கடிக்கும் இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகள் செத்துவிட வேண்டும், எப்போதும் தம் ஊதியத்துக்காக மட்டும் போராடும் ஆசியர்களாய் இல்லாமல், எளியப்பிள்ளைகளுக்கும் புரியும் வண்ணம், அறிவார்ந்த, அன்பு நிறைந்த ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டேன்!

தமிழகத்தில் ஆண்ட, ஆளும் ஊழல் அரசியல்வாதிகள், சாராயத்தை எளிமையாக்கி, கல்வியை எட்டாக்கனியாக மாற்றியிருக்கின்றனர், குடியால் தம் பிள்ளை, மனைவி, பிள்ளைகளை செய்த கொடுமை தாங்காமல், பெற்ற தாயே மகனை கொன்று, மடியில் போட்டு அழுத செய்திக்கண்டேன், மனம் கனத்துப்போனது! தினம் தினம் குடும்பங்கள் சாக, புதிதுப்புதிதாய் மதுக்கடைகள் திறப்புவிழா, அரசு கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா, இவர்கள் பணத்தை மட்டும் சேர்க்கவில்லை, பெரும் பாவத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள், பாவத்தில் பங்கு உள்ள யாருக்கும் மரணம் அத்தனை இலகுவாய் இருக்கப்போவதில்லை! தெய்வம் நின்று கொல்லுமாம், கொல்லட்டும்!

சுவையற்ற_தொடர்கதைகள்

Image may contain: one or more people and people sitting


அவனுக்குச் சரியான படிப்பில்லை,
குடிகார அப்பனுக்கும் அதில்
அக்கறையில்லை!
அரசாங்கப் பள்ளியில் படிக்கவைக்கவும்
அண்டை அயலாருக்கு நேரமில்லை!

முதலில் அவன் புகைத்தான்
வான் மண்டலத்தில் விழும் ஓட்டைக்கு
இரண்டு சதவீதப் பங்கு
இந்தப் புகைக்கும் உண்டென்று
யாரும் அவனிடம் சொல்லவில்லை
இந்தப்புகை உன் மூச்சுக்குழாயில்
ஓட்டைகள் போட்டுவிடும்
என்ற எச்சரிக்கை விளம்பரங்களை
அவனும் கண்டுகொள்ளவில்லை!

அடுத்த வீட்டில்
ஒழுங்காய் படித்துக்கொண்டிருந்தவனும்
அவனுடன் புகைத்தான்
தறுதலைகள் என்ற ஆசிரியர்கள்
கண்டிக்கவில்லை!

புகைத்தவனும்
நன்கு படித்தவனும்
சினிமாவின் பக்கம் போய்
எடுபிடி வேலைகள் செய்தார்கள்
யாரும் தடுக்கவில்லை!
சாதிக்கட்சியின் தலைவரிடம்
அடிமையானார்கள்
உற்றார் உறவினர் விடுவிக்கவில்லை!

அவனும் இன்னொருவனும்
புகைத்தலில் தொடங்கிக் கடத்தலில்
வந்து நின்றார்கள்
காவல்துறை கைதுசெய்யவில்லை!
சாதியக் கட்சித்தாண்டி
பல கட்சித்தலைவர்களுக்கு அவன்
பரிச்சயம் ஆனான்
தலைவருக்காக ஒருவனைக் கொளுத்தி
தீக்குளித்த செய்தியாக்கினான்
சதியை ஊடங்கங்கள் கண்டுகொள்ளவில்லை!

புகைத்தலில் தடம் மாறிய அவனும்
அவனால் தடம் மாறிய அவனும்
இப்படியே வளர்ந்து
சாராயக்கடை அதிபர்கள் ஆனார்கள்
குடும்பத்தினர் நியாயம் கற்பிக்கவில்லை!

வருடங்கள் கரைந்து
அவர்கள் கல்வித்தந்தையானார்கள்
கல்வியாளர்கள் கேள்வி கேட்கவில்லை
வேடந்தரித்த சாமியார்களிடம்
கைகோர்த்தார்கள்
பின் அரசியலில் நுழைந்து தேர்தலில்
நின்றார்கள்
மக்கள் பின்புலம் பார்க்கவில்லை!
அவர்கள் ஜெயித்து மந்திரிகளும்
ஆனார்கள்
நாடும் நாசமாய்ப் போனது
யாரும் அதைபற்றிக் கவலைகொள்ளவில்லை!

முடிவேயில்லாத இந்த நிதர்சனங்களை
எந்த நீதித்துறையும் மாற்றியமைப்பதில்லை
நிதியொன்றே போதுமென்ற மனநிலையில்
ஜனநாயக சதிகளைப்பற்றியோ
பறிபோகும் உரிமைகளைப்பற்றியோ
மக்களும் வருத்தப்படுவதில்லை!

அட போகட்டுமே
இதுவெல்லாம் சுவையற்ற தொடர்கதை
முடிக்கும்வரை முடிவில்லை!!!

Original_license

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாளில், தரமணியின் உள்ளே ஒரு அலுவலகத்தில் இருந்து உடன் பணிபுரியும் சகோதரியுடன் பிரதானச் சாலையை அடைந்தபோது, ஒரு முதியப் பெண்மணி, நடுவே இருக்கும் சாலைதடுப்பில் ஏறி சாலையைக்கடக்க முயன்றதில் தடுக்கி கீழே விழ, அந்தப்பக்கம் வந்த கார் மோதியதில் உடல் நசுங்கி இறந்து கிடந்தார்! இப்போதும் கூட ஓஎம்ஆர், ஈசிர், சோழிங்கநல்லூர் போன்ற பிரதான சாலைகளில் மக்கள் உயரமான தடுப்புச்சுவரில் குழந்தைகளுடன் ஏறி நின்று குதிக்கிறார்கள், இரவுகளில் பல பகுதிகளில் விளக்குகள் எரிவதில்லை, இருட்டில் விபத்துகள் சர்வசாதாரணம்! பாதசாரிகள் கடப்பதற்கு உயரமான மேடைகளை அமைத்திருக்கிறார்கள், இளைஞர்கள் அதை தவிர்த்து கைபேசியுடன் சாலையை கடக்கும்போது, முதியவர்கள் எப்படி ஏறிக்கடப்பார்கள்?

இசபெல்லா மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை பல வருடங்களாக ஒரு வழிப்பாதையாக மாற்றி வைத்திருக்கிறது காவல்துறை, இன்று வரை அதை யாரும் மதிப்பதில்லை, காவல்துறையும் கண்டுகொள்ளவதில்லை!
நீண்ட காலமாக அதிமுக அலுவலகம் அமைந்திருக்கும் நான்குவழிச் சாலைகளில் சிக்னலே நிறுவப்படவேயில்லை, அதன் ரகசியமும் தெரியவில்லை!

சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நுழையும் பகுதிகளும், சாலையில் சில பகுதிகளும் குண்டும் குழியுமாய் இருக்கிறது, "அதுதான் காசு வாங்குறீங்களே இந்த இடத்தில் உள்ள பள்ளங்களை அடைக்கமாட்டீர்களா", என்று கேட்டால் "செய்யணும், சொல்லியிருக்கோம்" என்ற பொதுவான பதில் மட்டுமே! பைக்குகளுக்கு சுங்கக்கட்டணம் இல்லையென்றாலும் மொகமத் சதக் கல்லூரி மாணவர்கள் யு டர்னை தவிர்க்க, பேருந்து வரும் சாலையில் நேரெதிரே பயணிக்கிறார்கள்! காவல்துறை கண்டுகொள்வதில்லை, அவர்களுக்கு மெரீனாவில் கூட்டம் கூடாமல் இருந்தால் போதும்!
ஜாம்பஜார், மீர்சாகிப்பேட்டை, மைலாப்பூர்,திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் நடைபாதைகள் கடைகளாகவும், பாதையோரங்கள் வாகன நிறுத்தங்களாகவும் மாறி மக்களை நட்டநடுச் சாலையில் பதைக்க வைக்கிறார்கள், பல்லவன்கள் சிக்கித் திணறுகிறார்கள்!
புரசைவாக்கம், வடபழனி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் கடைகளுக்கும், மால்களுக்கும் என வாகனங்கள் பிதுங்கி வழிகிறது, ஒரு வழிப்பாதையா, இருவழிப்பாதையா என்பதெல்லாம் பெரும்பாலான சென்னையின் சாலைகளில் புரியாத புதிர்தான்!

இதற்கெல்லாம் தீர்வு ஒன்றே ஒன்றுதான், "அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர, பிரதமரோ, முதலமைச்சரோ, ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த அமைச்சர்கள் என்றாலும் அதிகாரிகள் என்றாலும், வெளிநாட்டு அதிபர்கள் என்றாலும், எந்த மட்டத்து ஆளுமை என்றாலும் யாருக்காகவும் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது! போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையிலும்,விமானத்திலும் பறக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு விபத்தும் அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமும் புரிவதேயில்லை! அதன் விளைவுதான் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக்கொண்டால் விபத்துகள் குறைந்துவிடும் என்பதும், தெர்மாக்கோல் போட்டால் தண்ணீர் ஆவியாகாது என்றதும்!

ஓட்டுப்போடும் மக்களிடம் வாக்குச் சேகரிக்க திறந்தவெளி வாகனத்தில் வரும்போது இல்லாத பயம், அமைச்சரானதும் வந்துவிடுகிறது, போக்குவரத்தை நிறுத்தி, பல கார்கள் புடைசூழ எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? அல்லது அத்தனை அவசரமாய் அலுவலகம் சென்று மக்களுக்காக இவர்கள் சாதித்தது என்ன?

மக்களோடு மக்களாய் இவர்கள் பயணம் செய்யாதவரை விபத்துகள் குறையப்போவதில்லை, இவர்களுக்கு சலுகைகளை துண்டித்து, மற்ற எல்லோரையும் போல் உன் அலுவலகம் சென்று உன் அமைச்சர் பதவியை கவனி என்று சொன்னால், மக்கள் உயிரை எண்ணிக்கையாக பார்க்கும் இவர்களுக்கு தங்கள் உயிர் வெல்லம் என்பதால், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் சிறிது புல்லுக்கு பாய்ந்தது போல, அமைச்சர்களுக்காக சீரமைக்கப்படும் போக்குவரத்து மக்களுக்கு கொஞ்சம் உதவி செய்யும்!
இதையெல்லாம் செய்யாமல் வெறுமனெ சூழல் விளக்குகளை கழட்டிவிட்டோம் என்று குறளி வித்தைக்காட்டாதீர்கள் மக்களுக்கு!
#Original_license #Roadsafety #Tamilnadu #Chennai

அவர்களும்_நாங்களும்

No automatic alt text available. 
அவர்கள்
சுவாதியைக்
கொல்லப்பட்ட பெண்
என்றார்கள்
அனிதாவை
செத்துப்போன கோழை
தலித்
என்கிறார்கள்

அவர்கள்
முஸ்லீம்களை
தீவிரவாதிகள்
என்றார்கள்
இந்துத்வா போர்வையில்
சகமனிதர்களை
கொல்பவனை
போராளி
என்கிறார்கள்

அவர்கள்
இந்தியைத்
திணிப்பது அவசியம்
என்றார்கள்
தமிழை நேசிக்கிறோம்
நீலிக்கண்ணீரை
நம்புங்கள்
என்கிறார்கள்

அவர்கள்
வன்புணர்ச்சிக்கு
ஆட்படும் பெண்கள்
கொலையைத் தவிர்க்க
எதிர்க்கக்கூடாது
என்றார்கள்
மக்களை இகழ்ந்த
பெண்ணை மந்திரியாக்கி
சமூகநிதி காக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
மாடுகள்
கடவுளுக்கு சமம்
என்றார்கள்
சகமனிதனின்
குருதியை
வெட்டிச் சுவைத்து
ஒன்றுப்பட்ட
தேசம்
என்கிறார்கள்

அவர்கள்
கிரிக்கெட்
தோல்வியில்
கொதிப்படைந்து
வேதனை
என்றார்கள்
மூச்சுக்குத் தவித்து
மாயும் குழந்தைகளின்
சடலங்களைக் கடந்து
இது சாதாரணம்
என்கிறார்கள்

அவர்கள்
அதானிகளிடமும்
அம்பானிகளிடமும்
கருணைக்காட்டி
தொழில் முன்னேற்றம்
என்றார்கள்
போராடிக் காயும்
விவசாயிகளின்
கண்களையும் பார்க்க
மறுத்து
வயிற்றுவலி தற்கொலைகள்
என்கிறார்கள்

அவர்கள்
ஒரே தேசம்
ஒரே வரி
என்றார்கள்
பெட்ரோலையும்
டீசலையும்
பிரித்து
அபரிதமான வரிகளால்
விலையேற்றி
விலைவாசிகளை
குறைக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
சுத்தமான இந்தியா
என்றார்கள்
கங்கையையும்
யமுனையையும்
சாமியார்களிடம்
தந்து
அசுத்தப்படுத்தி
புண்ணியம்
என்கிறார்கள்

அவர்கள்
கல்வியைத்
தரமாக்குவோம்
என்றார்கள்
ஏழைகளை ஒதுக்கி
மேல்மட்டம் மட்டும்
பயிலும் வகையில்
தேர்வுமுறை உருவாக்கி
தரம் தராதரம்
என்கிறார்கள்

அவர்கள்
கருத்துச்சுதந்திரத்தின்
பிரதிநிதிகள் நாங்கள்
என்றார்கள்
மற்றவர்களின்
கருத்துச்சுதந்திரத்தின்
நெஞ்சுகளுக்கு
குண்டுகளே பரிசு
என்கிறார்கள்

கட்சிகளுக்குள்
பயணம் செய்து
அரசியலில் எதிரியில்லை
என்பார்கள்
அத்தனையும் சகித்துக்கொண்டு
ஓட்டுப்போடும் வாக்களார்களுக்கு
அதே இத்துப்போன வாக்குறுதிகளை
அடுத்த தேர்தலிலும் தருவார்கள்

இப்படி அவர்கள்
எத்தனையோ
சொல்கிறார்கள்
வேறு எதையோ
செய்கிறார்கள்
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றிவிட்டு
மக்கள்பணியே கடமையென்று
கண்துடைப்பு நாடகம்
நடத்திவிட்டு
பின்
கும்பிட்டு நகர்கிறார்கள்!


ஒரிஜினல்_லைசென்ஸ்

சாலையில் இன்னின்ன போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவலர்கள் பிடிப்பார்கள், தண்டனை வாங்கித்தருவார்கள், இதெல்லாம் சரி,
"சிக்னல் இயங்காத, எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லாத, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறக்கும் சாலையில், விதிமீறல்கள் செய்யும் சில நூறு வாகனங்களை, அவைகளில் பெரும்பாலும் விர்ரென பறக்கும் இருசாக்கர வாகனங்களும், "எந்த ரூலும் எங்கள ஒன்னும் செய்யாது" என்று செல்லும் பல்லவன் பேருந்துகளும், "சார் முந்தின நிறுத்தத்திலேயே அவர கவனிச்சுட்டேன்" என்று கடந்துச்செல்லும் லாரிகளுமென நிறைந்திருக்கும் நெடுஞ்சாலையில்,
சிக்னலின் ஒர் ஓரமாக அமர்ந்திருக்கும் அல்லது நடுவே நின்றிருக்கும் ஒன்றிரண்டு காவல்துறை அதிகாரிகள், அல்லது மூன்று நான்கு பேராக ஒர் ஓரத்தில் குழுமியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி ஒருவரைக்கூட விடாமல் பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள்? ஓவர் ஸ்பீட் என்றும், ஹெல்மெட் இல்லையென்றும், விதிமீறல்களை எப்படி நிரூபிப்பார்கள்? கட்சிக்கொடிகளை பறக்க விட்டுக்கொண்டு சீறும் வாகனங்களை எப்படி துணிச்சலாய் மடக்குவார்கள்? டாஸ்மாக் கடைகளில் வாகன நிறுத்தத்தோடு கூடிய பார்களில் இருந்து வரும் வாகனங்களையெல்லாம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்து, பல்லாயிரக்கணக்கான வாகனங்களை எங்கே நிறுத்துவார்கள்? இப்படி எழும் எந்தக் கேள்விகளுக்கும் எந்த அடிப்படை ஆராய்தலும் இல்லாமல், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், ஒரே இரவில் காவல்துறையை சூப்பர்மேன்களாக்கி, ஒரிஜினல் லைசென்ஸ் மூலம் விபத்துகள் எல்லாம் குறைந்து போகும்போது, இந்த அரும்பெரும் யோசனையை எப்படி காப்பீடு பதிவு செய்து காப்பாற்றப்போகிறார்கள் என்பதே பெருத்த யோசனையாக இருக்கிறது!

#ஒரிஜினல்_லைசென்ஸ்

-------------------

சாலைகளின் தரமோ, ஆட்சியாளர்களின் மனமோ மாறும் வழிக்காணோம், இந்த லைசென்ஸ் எடுக்கும் நடைமுறையில், வாகன ஓட்டிகளுக்கு சில தொகுக்கப்பட்ட பிரசவ காட்சிகளையும், விபத்தினால் உறுப்பு இழந்தவர்களின் அனுபவத்தையும், மரணம் ஏற்படுத்திய விபத்துக்காட்சிகளையும், இறந்தவர்கள் குடும்பங்கள் அடைந்த மனவேதனையையும், இழப்புகளையும் தொகுத்து அதையெல்லாம் பார்க்க வைத்து பின் பிற நடைமுறைகளையும் முடித்து லைசென்ஸ் கொடுத்தால் என்ன? அப்படியாவது அவர்களுக்கு உயிர்களின் மதிப்புத்தெரியட்டுமே?!

குருதியின் சாயலே!

பிரிட்டிஷ் தோட்டாக்கள்
இன்னும் உயிரோடு இருக்கிறது
இந்தியாவில்
கருத்துச்சுதந்திரத்தின்
நெஞ்சுத்துளைக்க!
பிரிட்டிஷின் சிவப்பிலும்
மத்தியின் காவியிலும்
எப்போதும் குருதியின்
சாயலே!

தகுதியில்லாத தலைவர்கள்

லஸ் சர்ச் சிக்னலில், அஜாந்தாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிக்னல் விழ, பல்லவன் விரைய, பல்லவன் பின் ஒரு வரிசையில் நானும், திடீரென ஒரு சைக்கிளோட்டி பல்லவனுக்கும் காருக்கும் குறுக்கே வர, வழிவிட்டு நிற்க, வலதுபுறத்தில் இருந்து தவறான வழியில் வந்து ஒரு ஆட்டோ காரையொட்டி இடித்துக்கொண்டு நிற்க, சாலையில் பிரச்சனை வேண்டாமென்று சைக்கிள் சென்றபின் முன்னோக்கி நகர, முழுபோதையில் ஒரு பெரியவர் மீடியனைத் தாண்டி குறுக்கே குதிக்க, அவருக்காகவும் நான் வண்டியை நிறுத்த, சைடில் இருந்த ஆட்டோ ஓட்டி இப்போது வாகனத்தின் பின்னே இடிக்க, அப்போதும் பொறுமை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு நகர, அதன்பின் அந்த ஆட்டோ ஓட்டுநர் (அவரும் போதையில்) சொன்னதுதான் கொடுமை, "குறுக்கே ஆள் வந்தா வண்டிய நிறுத்திடுவியா, போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே?" ஒருவேளை எனக்கு முன் அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்றிருந்தால் அந்த குடிகார பெரியவரும், சிக்னலை மதிக்காத சைக்கிளோட்டியும் பரலோகம் சென்றிருப்பார்கள், அவ்வளவு குடி, அத்தனை வேகம், அத்தனை அலட்சியம், வார்த்தைகளில் பெருத்த மரியாதை! கண்ணுக்கெட்டியவரை காவல்துறையைக் காணவில்லை!

சாலையில் முதலில் அமைச்சர்கள் விதிகளைப் புறக்கணித்து, போக்குவரத்தை நிறுத்தி விரைந்தார்கள், பின்பு பல்லவன் போக்குவரத்து ஓட்டுநர்கள் சில நிறுத்தங்களிலும் பல சிக்னல்களிலும் நிற்காமல் ஓட்டினார்கள், இப்போதும் அப்படியே, பிறகு நிறைய மினி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள் எல்லாம் யாருடைய பினாமி சொத்தாக மாறிய தெம்பில், அல்லது தினமும் நான் மாமூல் கொடுக்கிறேன் என்று சிலர் எதையும் மதிக்காமல், யார் எப்படி போனால் என்ன என்று இருசக்கர வாகனங்கள் மற்றவர்களுக்கு உயிர்பயம் காட்டி எல்லாத்திசைகளிலும் விரைகின்றனர், மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றின் மேலே மட்டும்தான் அவர்கள் வாகனம் ஓட்டவில்லை!

விநாயகர் ஊர்வலம், வேளாங்கண்ணி ஊர்வலம், ஏதோ ஒரு சவ ஊர்வலம், திருமண ஊர்வலம், கட்சி மீட்டிங் என்று எதற்கெதற்கோ சாலை முடக்கப்படுகிறது, உடல்நிலை சரியில்லாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, மருத்துமனைக்குச் செல்லும் சாலை மறிக்கப்பட்டதால், நண்பர் ஒருவரை, இரவு நேரத்தில் எத்தனை கெஞ்சியும் இரண்டு கிலோமீட்டர்கள் சுற்ற வைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்!

ஒரு சவ ஊர்வலத்தில், ராயப்பேட்டையின் மேம்பாலத்தின் கீழே, சாலை முடக்கப்பட காத்திருந்த நேரத்தில், நேரெதிரே வந்த ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன், அந்தப்பக்கம் கணவனோடு பின்னே அமர்ந்திருந்த நடுத்தர மார்வாடிப் பெண்ணின் மீது பட்டாசைத் தூக்கி எறிந்தான், உடன் வந்த ஒற்றைக்காவலர் ஒன்றும் கேட்கவில்லை!
குடித்துவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது என்னும் அரசு மதுக்கடைகளையும், அதனுடன் பார்களையும், பார்க்கிங் வசதியுடன் நடத்துகிறது, நீட் டுக்கு அனுமதியளித்ததைப் போல அறிவார்ந்த செயல்தான் இது!

நாட்டில் இப்போதெல்லாம் குற்றங்களுக்கு பஞ்சமில்லை, விபத்துக்களுக்கும் பஞ்சமில்லை, பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும் பஞ்சமில்லை! தவறு செய்பவன் எல்லாம் "பணம்" கொடுத்தால் போதும் என்ற மனநிலையை நோக்கி நகர்ந்து ஆண்டுகள் பலவாயிற்று!

பதவி, பணம் என்ற குறிக்கோளில் நகரும் ஆட்சியாளார்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் செயல்திறன் எல்லாம் வேறு எதிலோ இருக்கிறது, அதே பணம் கொடுத்தால் ஓட்டும், தப்பு செய்தால் பணம் கொடுத்துத் தப்பிக்கலாம் என்ற மனநிலையில் பெரும்பான்மையான மக்களும் வந்து நாளாயிற்று!

சாராயம், பணம் என்ற புள்ளிகளில் உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன!
தகுதியில்லாத தலைவர்களால் நாடு என்ன ஆகும் என்பதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம்!
#நீட், #Roadsafety #Chennai_Traffic

பிணவாடை




No automatic alt text available.


அரசியல் முழுக்க
பிணவாடை!
வெட்டியான்களே
தொண்டர்கள்
கொலைகாரர்களே
தலைவர்கள்!
பிணவாடை தாளாமல்
அழுகிக்கொண்டிருக்கிறது
பணம்
அவர்தம் உறக்கத்தை
பறித்தப்படி!
அவர்களோ
ஒருவரையொருவர்
குற்றஞ்சாட்டிக்கொண்டு
தமக்கான கல்லறைகளை
ஆழத் தோண்டியபடி!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!