Thursday 16 November 2017

Original_license

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாளில், தரமணியின் உள்ளே ஒரு அலுவலகத்தில் இருந்து உடன் பணிபுரியும் சகோதரியுடன் பிரதானச் சாலையை அடைந்தபோது, ஒரு முதியப் பெண்மணி, நடுவே இருக்கும் சாலைதடுப்பில் ஏறி சாலையைக்கடக்க முயன்றதில் தடுக்கி கீழே விழ, அந்தப்பக்கம் வந்த கார் மோதியதில் உடல் நசுங்கி இறந்து கிடந்தார்! இப்போதும் கூட ஓஎம்ஆர், ஈசிர், சோழிங்கநல்லூர் போன்ற பிரதான சாலைகளில் மக்கள் உயரமான தடுப்புச்சுவரில் குழந்தைகளுடன் ஏறி நின்று குதிக்கிறார்கள், இரவுகளில் பல பகுதிகளில் விளக்குகள் எரிவதில்லை, இருட்டில் விபத்துகள் சர்வசாதாரணம்! பாதசாரிகள் கடப்பதற்கு உயரமான மேடைகளை அமைத்திருக்கிறார்கள், இளைஞர்கள் அதை தவிர்த்து கைபேசியுடன் சாலையை கடக்கும்போது, முதியவர்கள் எப்படி ஏறிக்கடப்பார்கள்?

இசபெல்லா மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை பல வருடங்களாக ஒரு வழிப்பாதையாக மாற்றி வைத்திருக்கிறது காவல்துறை, இன்று வரை அதை யாரும் மதிப்பதில்லை, காவல்துறையும் கண்டுகொள்ளவதில்லை!
நீண்ட காலமாக அதிமுக அலுவலகம் அமைந்திருக்கும் நான்குவழிச் சாலைகளில் சிக்னலே நிறுவப்படவேயில்லை, அதன் ரகசியமும் தெரியவில்லை!

சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நுழையும் பகுதிகளும், சாலையில் சில பகுதிகளும் குண்டும் குழியுமாய் இருக்கிறது, "அதுதான் காசு வாங்குறீங்களே இந்த இடத்தில் உள்ள பள்ளங்களை அடைக்கமாட்டீர்களா", என்று கேட்டால் "செய்யணும், சொல்லியிருக்கோம்" என்ற பொதுவான பதில் மட்டுமே! பைக்குகளுக்கு சுங்கக்கட்டணம் இல்லையென்றாலும் மொகமத் சதக் கல்லூரி மாணவர்கள் யு டர்னை தவிர்க்க, பேருந்து வரும் சாலையில் நேரெதிரே பயணிக்கிறார்கள்! காவல்துறை கண்டுகொள்வதில்லை, அவர்களுக்கு மெரீனாவில் கூட்டம் கூடாமல் இருந்தால் போதும்!
ஜாம்பஜார், மீர்சாகிப்பேட்டை, மைலாப்பூர்,திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் நடைபாதைகள் கடைகளாகவும், பாதையோரங்கள் வாகன நிறுத்தங்களாகவும் மாறி மக்களை நட்டநடுச் சாலையில் பதைக்க வைக்கிறார்கள், பல்லவன்கள் சிக்கித் திணறுகிறார்கள்!
புரசைவாக்கம், வடபழனி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் கடைகளுக்கும், மால்களுக்கும் என வாகனங்கள் பிதுங்கி வழிகிறது, ஒரு வழிப்பாதையா, இருவழிப்பாதையா என்பதெல்லாம் பெரும்பாலான சென்னையின் சாலைகளில் புரியாத புதிர்தான்!

இதற்கெல்லாம் தீர்வு ஒன்றே ஒன்றுதான், "அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர, பிரதமரோ, முதலமைச்சரோ, ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த அமைச்சர்கள் என்றாலும் அதிகாரிகள் என்றாலும், வெளிநாட்டு அதிபர்கள் என்றாலும், எந்த மட்டத்து ஆளுமை என்றாலும் யாருக்காகவும் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது! போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையிலும்,விமானத்திலும் பறக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு விபத்தும் அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமும் புரிவதேயில்லை! அதன் விளைவுதான் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக்கொண்டால் விபத்துகள் குறைந்துவிடும் என்பதும், தெர்மாக்கோல் போட்டால் தண்ணீர் ஆவியாகாது என்றதும்!

ஓட்டுப்போடும் மக்களிடம் வாக்குச் சேகரிக்க திறந்தவெளி வாகனத்தில் வரும்போது இல்லாத பயம், அமைச்சரானதும் வந்துவிடுகிறது, போக்குவரத்தை நிறுத்தி, பல கார்கள் புடைசூழ எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? அல்லது அத்தனை அவசரமாய் அலுவலகம் சென்று மக்களுக்காக இவர்கள் சாதித்தது என்ன?

மக்களோடு மக்களாய் இவர்கள் பயணம் செய்யாதவரை விபத்துகள் குறையப்போவதில்லை, இவர்களுக்கு சலுகைகளை துண்டித்து, மற்ற எல்லோரையும் போல் உன் அலுவலகம் சென்று உன் அமைச்சர் பதவியை கவனி என்று சொன்னால், மக்கள் உயிரை எண்ணிக்கையாக பார்க்கும் இவர்களுக்கு தங்கள் உயிர் வெல்லம் என்பதால், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் சிறிது புல்லுக்கு பாய்ந்தது போல, அமைச்சர்களுக்காக சீரமைக்கப்படும் போக்குவரத்து மக்களுக்கு கொஞ்சம் உதவி செய்யும்!
இதையெல்லாம் செய்யாமல் வெறுமனெ சூழல் விளக்குகளை கழட்டிவிட்டோம் என்று குறளி வித்தைக்காட்டாதீர்கள் மக்களுக்கு!
#Original_license #Roadsafety #Tamilnadu #Chennai

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!