Thursday, 16 November 2017

காயப்படுத்தாதீர்கள்

பிள்ளைகளுடன் வகுப்பாசிரியரை பார்க்க, ஏழாம் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறேன், நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்! எனக்கு முன்னே ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் வந்தமர்ந்தனர், மகன், மகள், கணவன் மற்றும் மனைவி! வந்தமர்ந்தவுடன் அந்தப்பெண் சப்பென்று அத்தனை பேர் முன்னிலையில் மகன் கன்னத்தில் அறைந்தார்! ஒரு நொடி அந்தப்பிள்ளை சுற்றிலும் எல்லோரையும் பார்த்துவிட்டு தலைகுனிந்துகொண்டான்!

தாங்க முடியாமல், "ஏம்மா இப்படி பொதுவெளியில் அடிக்கலாமா? " என்று கேட்க, "வாயத்திறந்தா பொய் பேசுறான்" என்று சொல்ல, மீண்டும் அவன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டான்! "சின்ன குழந்தைங்க பொய் சொன்னாலும், அதை நல்லவிதமா சொல்லி திருத்தலாம்மா, இப்படி அடிச்சா எதுவும் மாறாது" என்று சொல்ல, அந்த பெண் வெடுக்கென்று தலையைத் திருப்பிக்கொண்டார்! 

எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள் ஒர் சிறுவயது இஸ்லாமியப் பெண், கையில் ஒரு வயது குழந்தையை வைத்துக்கொண்டு, படியில் அமர்ந்திருந்த இரண்டு வயது குழந்தையை அடித்துக்கொண்டிருந்தார், "அட ஏம்மா சின்னகுழந்தைய அடிக்குற" என்றால், "தம்பிக்கு விட்டுக்கொடுக்கணும் தெரியல, பெரியவன்தானே (!) விட்டுக்கொடுத்தா என்ன?", ஒரு வயதுக்குழந்தையின் பொம்மைக்காக இரண்டு வயது குழந்தையை அடித்தவளைக் கண்டதும் தாங்ககொணா கோபமே வந்தது, "உன் வயசுக்கு, இரண்டு வயசு குழந்தையும் குழந்தைதான்னு தெரியலையே, அப்புறம் அதுக்கு எப்படி ஒரு வயசு குழந்தைன்னு தெரியும்" என்று அடிக்கவேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன்!

அது ஏன் மதத்தை சொல்லவேண்டும் என்றால், இதற்குதான், குறைந்த கல்வியும், சிறு வயதிலேயே திருமணமும் அதிக அளவில் இன்னமும் இஸ்லாமிய மதத்தில் நிகழ்கிறது! எல்லா மதங்களிலும், சுயசிந்தனைத்தூண்டாத வெற்று கல்வியையோ, அல்லது அடிப்படைக் கல்வியைக்கூட பெறாத பெண்கள், தங்கள் ஆற்றாமையை, ஆத்திரத்தை, இயலாமையை குழந்தைகளிடத்தில் தான் காட்டுவார்கள் இதுபோல!
அன்பையும் கருணையையும் மரியாதையையும் நல்லக்கல்வியையும் இந்தச் சமூகம் பெண்களுக்கு நிறைய வழங்க வேண்டும், அப்போதுதான் வருங்காலத்தில் நாளைய ஆண்களும் பெண்களும் வன்முறைத்தவிர்த்து, சுயச்சிந்தனையுடன் ஒருவரையொருவர் மதிக்கத்தொடங்குவர்!
இப்போது அந்தப்பெண்ணிடம் பேசவே முடியவில்லை, அவர் அந்தப்பிள்ளையை வைதுக்கொண்டே இருந்தார், ஆசிரியையின் காதில் அந்தப்பிள்ளைக்காக அந்தப்பெண்ணிடம் பேசுமாறு கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தேன்!

பிள்ளைகளின் சுயத்தை உங்கள் வன்முறையில் காயப்படுத்தாதீர்கள் பெற்றவர்களே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!