Thursday, 16 November 2017

ஹாசினி

#ஹாசினியைக் கொன்றவன் விடுதலை!
இந்தத்தேசத்தில் கொலை செய்பவன், கொள்ளையடிப்பவன், ஊழல் செய்பவன், லஞ்சம் வாங்குபவன், அடுத்துக்கெடுப்பவன், வன்புணர்ச்சி செய்பவன், பெண்களை கேலி செய்பவன், வழிப்பறிச்செய்பவன், கொள்கையை பறக்கவிட்டு காசுக்காக கட்சி விட்டு கட்சித்தாவுபவன் எல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணையின்றி, வீதிகளில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வலம் வர, பிள்ளைகளை, சொத்தை, உரிமையை பறிகொடுத்தவர்கள் எல்லாம் கூனிக்குறுகி ஏதும் செய்யமுடியாமல் போராடிக்களைத்து வீழ்வதுதான் ஜனநாயகமா???
யாரோ ஒரு அமைச்சனின், அதிகாரியின் வீட்டில் இழவு விழுந்தால்தான் மக்களின் வலி தெரியவருமா??

ஒரு பிள்ளையைப்பெற்றவள் தான் உயிரோடிருக்க, தன் பிள்ளை முதுமையடைந்தோ, இயற்கைமரணம் அடைந்தாலோ, அதை தாங்கவே முடியாமல் வாழ்நாள் முழுதும் கண்ணீர் சிந்துவாள், அப்படியிருக்க, "கணநேர விடைத்தவெறிக்காக யாரோ ஒரு அயோக்கியன் தன் பிள்ளையை புணர்ந்து, கொன்று, எரித்தும் இருக்கிறானே, ஈ, எறும்பும் கடித்தாலும் துடிக்கும் பிள்ளை எப்படி துடித்தாளோ, அம்மா என்று என்னை தேடினாளோ, அந்தக்குழந்தை தன்னுடைய கடைசிக்கணத்தில் எத்தனை வலியை அனுபவித்தாளோ" என்று எண்ணியெண்ணி மாய்ந்துபோவாளே? இந்த ஓட்டைச் சட்டமும், போராடும் பெண்களின் மூலைகள் மீது கைவைக்கும் ஈனத்துறையும், போராடும் மக்களின் மீதே குண்டர் சட்டம் போடும் கையாலாகாத ஒரு அரசும், பொறுக்கிச்சாமியார்களின் படுக்கை அறைக்கு பெண்களை பலியாக்கி அவர்களுக்கு தேவையற்ற விளம்பரம் தந்துத் துணைநிற்கும் அதிகாரமும் இந்தப்பூமிக்கு பெருத்த பாரம்!
அனிதா, சுவாதி, விஷ்ணுப்பிரியா, நளினா, ஹாசினி, ஜோதிசிங், இன்னும் எத்தனை எத்தனை பெண்களையும், குழந்தைகளையும் பலியாக்கிய கொலைகாரர்களையும், அதற்கு துணைநின்றவர்களையும் காலம் நிச்சயம் தண்டிக்கும்!

போ ஹாசினி, இந்தத்தேசம் மிக மோசமாய் மாறிக்கொண்டிருக்கிறது, உன் தந்தையைப்போல எல்லா வீட்டுத்தந்தைகளும் குமுறிக்குமுறி அழமட்டுமே செய்யமுடியும், உன் அன்னையைப்போல எல்லா அன்னைகளும் கையறு நிலையில் பரிதவிக்க மட்டுமே முடியும், இந்தத் தேசத்தில் ஆட்சியாளார்கள் முதல் நீதிபதிகள் வரை, காக்கிச்சட்டை முதல் கதராடை வரை எல்லோருமே ஆண்கள்தான் ஹாசினி, அவர்கள் யாருக்கும் குழந்தையென்றும், குமரியென்றும் தெரியாது ஹாசினி, அன்னையின் கர்ப்பபையிலிருந்து, அவளின் யோனி வழி வந்தப்பிள்ளைகள் தான் அவர்களும்! சில மிருகங்கள் அவரவர் அன்னையின் யோனியை மட்டுமே மிச்சம் வைத்திருக்கின்றனர், சட்டமும் அரசும் வேடிக்கை மட்டுமே பார்க்கும்! உன்னைப்போல் இன்னும் எத்தனைப்பிள்ளைகளோ தெரியாது! ஹாசினி, ஒருவேளை நீ கடவுளைக்கண்டால், காறி உமிழ்ந்துவிடு, ஏனேனில் இங்கே இவர்களைத்துப்பும் திரணியற்றவர்களாக நாங்கள் செத்தப்பிணங்களாக இருக்கிறோம் ஹாசினி, எங்களை மன்னிக்காதே!

#ஹாசினி #Hasini

--------------------

ஒரு கொடூரமான கொலை வழக்கில், குற்றப்பத்திரிக்கையை கூட தாக்கல் செய்யாத காவல்துறையையும், இதுபோன்ற காரணங்களுக்காக குற்றவாளியை வெளியே விடும் பலகீனமான சட்ட அமைப்புகளையும், யார் செத்தாலும் நிவாரணம் என்று வரிப்பணத்தை தூக்கி வீசி, புகைப்படம் எடுத்துப்போட்டுக்கொண்டு, ஆட்சியைப்பற்றி மட்டுமே கவலைக்கொள்ளும் அரசையும் யார்தான் கேள்வி கேட்பது??
அதர பழசான அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில் தங்களுக்கு வேண்டிய மாற்றத்தை மட்டும் 24 மணிநேரத்தில் செய்து கொள்ளும் அரசுகள், காலத்தின் மாற்றத்திற்கேற்ப மக்களுக்காக எதையும் மாற்றாமல் இருப்பது உண்மையில் சர்வாதிகாரமே!
கொல்லப்பட்டக் குழந்தை ஒரு உயர் காவல்துறையின் வீட்டுக்குழந்தையாகவோ, அரசியல்வாதிகளின் பிள்ளையாகவோ இருந்திருந்தால் இத்தகைய அலட்சியம் இருக்குமா? இந்நேரம் கொலையாளியின் கதை முடிந்திருக்கும்தானே? கொலையாளியை வெளியே விட்டு இன்னும் பல குழந்தைகளையும் கொல்ல அனுமதி வழங்கியிருக்கிறதா சட்டம்???
கொல்லப்பட்ட குழந்தைகளும், பெண்களும் பேயாக (?) வந்து கொன்றாலொழிய எந்தக் குற்றவாளிகளுக்கும் மரணத்தண்டனை கிடைக்கப்போவதில்லை, அதிகபட்சமாக அரசு குற்றவாளிகள் வாழ தையல் இயந்திரம் தரும்! ஆணாதிக்க நாடு!
#ஹாசினி #Hasini

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!