Thursday 16 November 2017

வெற்று விளம்பரம்

இரண்டு நாட்களுக்கு முன்பு லஸ்ஸிருந்து மந்தைவெளி சிக்னலை அடைய முக்கால்மணிநேரமும், அங்கிருந்து சிக்னலுக்காக அரைமணிநேரமும் காத்திருக்க வேண்டியிருந்தது, சிக்னலை கடக்க நேரமும் இடமும் கிடைத்தப்போது, அங்கே காவல்துறைக்குப் பதில் பொதுமக்களில் இருவர் போக்குவரத்தைச் சீர்செய்துக் கொண்டிருந்தார்கள், நேரே போக முடியாது, "லெப்ட்டுக்கா போங்க" என்று விடாப்பிடியாய் திருப்பிவிட, அங்கிருந்து இடதுபுறம் சென்று, செட்டிநாடு பள்ளிக்கடக்க மீண்டும் ஒரு மணிநேரம் ஆனது, அட என்னதான் ஆச்சு இன்னைக்கு என்று சிக்கித்திணறி வாகனத்தில் நீந்த, சற்றுத்தொலைவில் பல்லவன் ஒன்று ப்ரேக் டவுனாகி நின்றிருந்தது, அதையும் தாண்டி இயல் இசைக்கல்லூரியைக் கடக்க மீண்டும் அரைமணிநேரமானது, அந்த நெரிசலிலும், புகையிலும், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வரும்போல் தோன்ற, எங்கேயும் வாகனத்தை ஓரம் கட்டவும் முடியாமல் மேலும் முன்னேற, ஒரு வழியாய் அந்தக்காட்சி கண்ணில் பட்டது, எம்ஜிஆர் கல்லூரிக்கு முன்பு சாலைப் பழுதுப்பட்டிருக்க, காவல்துறை, சில ஆட்களைக் கொண்டு பள்ளங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர், காவல்துறை அதிகாரிகள் சிலர் குனிந்து செப்பனிட்ட பாதையை தொட்டுப்பார்க்க மும்முரமாக ஒருவர் (அதேத்துறையைச் சார்ந்தவர்) அதை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார், இதே போல வேறொரு இடத்திலும் காவல்துறை, ஆட்களை வைத்து சாலையைச் சீர்செய்ய அதையும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர், ஏற்கனவே "மழையில் சாலையைச் சீர்செய்த காவல்துறை" என்ற புகைப்படத்தைக் வாட்ஸ் ஆப்பிலும் ஃபேஸ்புக்கிலும் கண்டது நினைவுக்கு வந்தது! 

எந்தத்துறையாய் இருந்தாலும் மனிதர்கள்தானே, புகழை விரும்பாத மனிதரில்லை, எனினும் இதுபோல் அசாதரண வேலைகளை செய்யும் காவல்துறையை பாராட்டும் வேளையில், தம் துறைச்சார்ந்த கடமையை சரியாக செய்தாலே, (அதாவது ஒரு சாதாரணனைக்கூட பயமில்லாமல் காவல்துறையை நம்பிக்கையுடன் நாடச்செய்யும் அளவுக்கு) பெரும் அசாதாரண பெருமை காவல்துறைக்கு வந்து சேருமே என்ற எண்ணம் எழுந்தது!

முதல்வர் வருகிறார், பிரதமர் வருகிறார் எனும்போது மொத்த போக்குவரத்து காவல்துறையும் தெருவில் நிற்கிறது, ஓட்டுப்போட்ட பொதுஜனம் எத்தனை நெரிசலில் சிக்கினாலும், பெரும்பாலான நேரங்களில் அதை சரிசெய்வது அதே பொதுஜனமே, போக்குவரத்துத்துறை இல்லை! பல வருடங்களாக இராயப்பேட்டை சிக்னல் இயங்குவதில்லை, அப்படியே சரிசெய்யப்பட்டாலும் அது நிலைப்பதில்லை, பெரும்பாலான நேரங்களில் காவல்துறையும் இல்லை, இதுபோல சாலைகள் சென்னையில் ஏராளம்!
சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள், விதிகளைப் புறந்தள்ளி மிதிக்கும் மக்கள் கூட்டம், நேரத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சில விதிமீறல்களை மட்டும் பாய்ந்து பிடிக்கும் காவல்துறை!

எது எப்படியோ வெற்று புகழ் விரும்பும் அரசியல்வாதிகளைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கும் துறை, உண்மையில் மக்களின் துறையாக மாறினால் அதை நிச்சயம் உலகெங்கும் பரப்பிக் கொண்டாடுவோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!