Thursday, 16 November 2017

நோஞ்சான்_மனங்கள்!





"என்ன மாதிரி பையன்கள் பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" "நீ விரும்புறவனை விட உன்னை விரும்புறவனைக் கட்டிக்கோ" "பொண்ணுன்னா அடக்கம் வேணும்" இந்த வசனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒன்று ஏழ்மை, சரியான கல்வியில்லாமை, திரைப்படங்களைப் பார்த்து, தம் ஆதர்ச ஹீரோவை போன்ற "ஆணாதிக்க" திமிர்த்தனமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொன்று அளவுக்கதிகமான பணம், சுதந்திரம், பெற்றோர்களின் கவனிப்பு, கண்டிப்பு இல்லாத இளைஞர்கள், தான் நினைக்கும் எதுவும் தனக்கே கிடைத்திட வேண்டும் என்ற மனநிலை, இன்னொரு பக்கம், எது சரியாய் இருந்தாலும், பள்ளியிலும் கல்வியிலும், இதுபோன்ற பிள்ளைகளின் நட்பில் வழித்தவரும் பிள்ளைகள், சந்தோஷமாய் இருந்தாலும், துக்கமாய் இருந்தாலும், "வா மச்சி சரக்கடிக்கலாம்" இதுவே பொதுவில் அவர்களின் கொண்டாட்டமாய் இருக்கிறது, சரக்கில் ஆரம்பித்து, பின் மெதுவே வன்புணர்ச்சி, கட்டாயக் காதல், கொலை, விபத்து என்று முடிகிறது!

சில ஆண்டுகள் மணவாழ்க்கையில் காதலித்து மணந்த கணவன், குடியை விடாமல், தொடர்ந்து தன்னை துன்புறுத்தியதால், ராசிபுரத்தில் தன் நாலுவயது மகனுடன் பெண் தற்கொலைச் செய்துகொண்ட செய்தி படித்தேன், இப்போது அந்த அப்பன் என்ன செய்துக்கொண்டிருப்பான், ஒருவேளை மனசாட்சி உறுத்தினால் சிலநாட்கள் அழுது, பின் இந்தத் துக்கத்தை மறக்க என்று அதற்காகவும் குடித்துக்கொண்டிருப்பான், பின் வேறொரு பெண்ணை மணந்துக்கொண்டு இதையே தொடர்கதையாகச் செய்வான்!

ஓர் ஆணின் காதலை பெண் மறுப்பதை, ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே திரைப்படங்கள் அமைகின்றன, ஆணின் எல்லாக் கொண்டாட்டங்களுக்கு மதுவும், மாதுவும் தான் வேண்டும் எனும் கருத்தையே அவைகள் தூக்கிப்பிடிக்கின்றன, "ஆம்பளை டா" என்று சின்ன வயதில் தலையில் தூக்கி வைத்துச் செல்லம் கொஞ்சுவதில் ஆரம்பித்து, "மச்சி நீ ஆம்பளைடா" என்று உறவும் நட்பும் கொம்பு சீவுவதில் தொடர்ந்து இந்த "தோல்வியை" ஏற்றுக்கொள்ளாத மனநிலை தொடர்கிறது! அதுவும் கல்வியில் தோற்றால் கவலையில்லை, தொழிலில் தோற்றால் கவலையில்லை, எதில் தோற்றாலும் "குடி" இருக்கிறது, பெண்ணிடம் தோற்றால் மட்டும் அவளைப் பொம்மையைப் போல் பாவித்து, தன் உணர்வும், காதலும் பெரிதென்று அவளைக் கொல்லும் நிலைக்குச் செல்கிறது இந்த ஆம்பளை என்று சமூகம் வளர்த்துவிடும் மனோபாவம்!

அதிலும் பெண் துணிந்து காதலைச் சொல்லிவிடக்கூடாது,ஆணை விரும்பி அவனிடம் காதலைச் சொல்லத்துணியும் பெண்களைப் பெரும்பாலான திரைப்படங்கள் எப்படிக் காட்டுகிறது என்று யோசித்துப்பாருங்கள், ஒன்று அந்தப்பெண் கருப்பாய், பின்னல் தூக்கிக்கொண்டு, பற்கள் முன்னால் துருத்திக்கொண்டு, அல்லது அவளின் காதல் காமத்தில் மட்டுமே வருவதாகச் சித்தரிக்கப்பட்டுத் தான் வரும், இதில் உங்கள் சூப்பர் ஸ்டார் முதல் சில்வர் ஸ்டார் வரை விதிவிலக்கில்லை, அறுபதைக் கடந்தும் இன்னமும் தனக்குக் குழந்தையாக நடித்த பெண்களையும் கூடக் கதாநாயகிகளாக்கி ஓடும் முதிய இளைஞர்களின் படங்களில் கூடப் பெண்களின் சித்தரிப்புத் தரம் தாழ்ந்த இருக்கிறது! இதிலும் கருப்பான பெண், பற்கள் தூக்கியிருக்கும் பெண் எல்லாம் காதலிக்கக் கூடாதா என்ன? அது எப்படிப்பட்ட வக்கிரம், எப்படிப்பட்ட வக்கிரத்தை, பெண்ணினத்தின் மேல் கட்டமைக்கிறார்கள்? அதே ஹீரோ பார்க்க சகிக்காமல் இருந்தாலும், விக் வைத்துக்கொண்டு, நோஞ்சானாய்த் தெரிந்தாலும் கூட, அவர்களும் இதுபோன்ற பெண்களைக் கண்டாலே கிண்டலடிப்பது போலச் சித்தரித்திருப்பார்கள்.

எப்படிப்பட்ட உருவமும், ஒழுக்கமும், பொருளாதார மற்றும் கல்வி நிலை கொண்ட எந்த ஆணாய் இருந்தாலும், அவனுக்குப் பிடித்துவிட்டால் பெண்ணுக்குப் பிடிக்க வேண்டும், அவள் "நோ" என்றால் அது ஏன் அவள் விருப்பமாய் மதிக்கப்படாமல் ஆணின் தன்மான பிரச்சனையாக மாற்றப்படுகிறது?

அதிலும் "முடியாது" என்று சொல்லிவிட்டால், முதலில் பெண்ணின் ஒழுக்கம் கொச்சைப்படுத்தப்படுகிறது, "ச்சீ அந்தப் பழம் புளிக்கும்" என்பது போல, மார்பிங் செய்வது, கொச்சையாய் பேசுவது, சித்தரிப்பது எல்லாம் செய்வார்கள் பலகீனமான ஆண்கள்.
"முடியாது" என்றால் முடியாதுதான், அது என்னடா பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும், கருமம் உன்னைப் பிடிக்காது என்றால் பிடிக்காதுதான்" என்று ஏன் எந்தப் பெண்ணையும் நீங்கள் திரையில் சொல்ல விடுவதில்லை? நிதர்சனத்தில் வாழவிடுவதில்லை?

ஆட்டோ க்ராப் படம் பார்த்த உங்களுக்குப் பெண்ணின் ஆட்டோ க்ராப் படத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பதே சந்தேகம்தான், பெண்ணின் ஆட்டோ க்ராப் போன்ற படத்தையேனும் விமர்சனம் இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆண் பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம், நானும் எத்தனையோ பட விமர்சனங்களைக் கடக்கிறேன், பெரும்பாலும் எந்தப் படங்களையும் நான் பார்ப்பது கிடையாது, எனினும் எப்படிப்பட்ட கதையெனினும், "பெண்ணின்" கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், ஒழுக்கமும் பேசப்படுகிறது, ஏன் உங்களால் ஆணின் ஒழுக்கத்தை வரையறுக்க முடியவில்லை?

சட்டையில்லாமல் ஆண் திரிந்தால் பரவாயில்லை, குடித்துவிட்டு ஆண் திரிந்தால் பரவாயில்லை, ஒரு பெண்ணின் காதலை ஆண் மறுத்தால் பரவாயில்லை, ஒருத்தியை திருமணம் செய்வதாய் வாக்களித்து ஆண் ஏமாற்றினால் பரவாயில்லை, மனைவி இறந்ததும் மறுநாளே ஆண் மறுமணம் செய்தால் பரவாயில்லை, ஊதாரியாய் உழைப்பின்றித் திரிந்தால் பரவாயில்லை, வேளைக்கு ஒருத்தியை காதலித்தால் பரவாயில்லை, ஊருக்கு ஒருத்தியை கல்யாணம் செய்தால் பரவாயில்லை, ஆட்டோகிராப் கள் வந்தால் பரவாயில்லை, இதில் ஒன்றை பெண் செய்தால், அந்தப் பெண்ணை, அவள் குடும்பத்தை எத்தனை கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப்படுத்துவீர்கள்!

ஒழுக்க விதிகளை இருவருக்கும் பொதுவில் வைக்காமல், பெண்ணுக்குக் கோட்பாடுகள் விதிக்கும் இந்தச் சமூகத்தில் சுவாதிகள், நவீனாக்கள், விநோதினிகள், சுப்ரஜாக்கள், ஹாசினிகள், விஷ்ணுப்ரியாக்கள், இன்னமும் பெயர் தெரியாத அனாமிக்காக்கள் என்று விதவிதமாய்ப் பெண்கள் சீண்டப்பட்டுக் கொல்லப்படுவார்கள், கடுமையான சட்டத்தை இயற்றாத, செயலாற்றாத, ஆண் பிள்ளைகளை வழிபடுத்ததா இந்தச் சமூகமும், சட்டங்களும், ஆட்சியாளர்களும், விதைத்ததை ஒருநாள் அறுவடை செய்வார்கள், அப்போது இங்கே மாற்றம் ஏற்படலாம்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...